வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, December 10, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 9

நாம் சிறு வயதில் படித்த கதை தான். 

நூறு பறவைகள் கூட்டமாக வானில் பறந்துக் கொண்டு இருக்கும் போது கீழே தானியங்கள் பரவி கிடப்பதைப் பார்க்கிறது. தானியங்களை உண்ணும் போது, வேடனின் வலை அவர்களை சிறைப்படுத்துகிறது. வேடன் வருவதை பார்த்த பறவைகள் ஆளுக்கு ஒரு பக்கம் பறக்க முற்படுகிறது. ஆனால், யாராலும் பறக்கமுடியவில்லை.

அப்போது, ஒரு பறவை தலைமை ஏற்று, “ நாம் அனைவரும் ஒரே சமயத்தில் ஒரே மாதிரியாக முழு பலத்தோடு பறக்க வேண்டும்” என்றது. 

அப்படியே, எல்லா பறவைகளும் பறக்க முயற்சிக்கும் போது வலையோடு சேர்ந்து வானத்தில் பறந்தது. பறவை தப்பித்ததோடு இல்லாமல் வேடன் தனது வலையை இழந்தான். 

”ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு” என்ற நீதிக்கு இந்த கதையை படித்திருப்போம். ஆனால், இந்த கதை இத்தோடு முடியவில்லை. 



வேடனிடம் இருந்து பறவைகள் தப்பித்தாலும், காலில் சிக்கிய வலையோடு முன்பு போல் சுதந்திரமாக பறக்க முடியவில்லை. தங்கள் காலில் மாட்டிய வலையை அருக்க யாருடைய உதவியை நாடலாம் என்று பறந்தப்படி பறவையின் தலைவன் கேட்டான். 

“எலியின் உதவியை நாட்டலாம்” என்று ஒரு பறவைக் கூறியது. 

ஒரு சில பறவை அந்த கருத்தை ஆதரித்தாலும், “நாம் கூட்டமாக வருவதை பார்த்து எலி பார்த்து பயந்து ஓடிவிடும். இது சாத்தியமாகாது” என்றது. 

“சிங்கம், நரி போன்ற பெரிய மிருகங்களிடம் உதவிக் கேட்கலாம்.” என்று இன்னொரு பறவைக் கூறியது. 

இந்த கருத்தை ஒரு சில பறவைகள் ஆதரித்தாலும், “வேடனிடம் மாட்டியிருந்தால் ஒரு சிலராவது தப்பித்திருக்க முடியும். சிங்கம், நரி போன்ற கொடிய மிருகத்திடம் இருந்து யாரும் உயிருடன் தப்பிக்க முடியாது” என்றது.

பறவைகளின் தலைவன், “நம்மால் நீண்ட நேரம் இப்படியே பறக்க முடியாது. அதனால், முதலில் எலியிடம் உதவிக் கேட்போம்” என்றது. 

 ஆனால், 30 பறவைகள் அந்த கருத்தை ஏற்கவில்லை. சிங்கத்தின் உதவி பெறலாம் என்பதில் முடிவாக இருந்தார்கள். தங்கள் கருத்துக்கு அதிக பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும், அவர்களின் கருத்தில் பிடிவாதமாக இருந்தார்கள். 

நேரமாக ஒவ்வொரு பறவைகளின் காலில் வலு குறைந்துக் கொண்டே வந்தது. “தறையில் இறங்கிய பிறகு, யாருடைய உதவிப் பெறலாம்” என்று தலைமை பறவை கூறியது. 

 “முடிவெடுத்த பிறகு தரையில் இறங்கலாம்” என்று இன்னொரு 20 பறவைகள் கூறியது. 

இப்படியே பறந்தப்படி பேசிக் கொண்டு வரும் போது கடல் மத்தியில் பறந்துக் கொண்டு இருந்தது. ஒரு சில பறவையால் பறக்க முடியவில்லை. வலையில் இருந்த பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக கீழ இறங்கி கடலில் விழுந்தது. 

தப்பிக்கும் போது இருந்த ஒற்றுமை தங்களை விடுவித்துக் கொள்ளும் போது இல்லாததால் எல்லா பறவைகளும் மடிந்தது. 

 Management நீதி : 

 ஒரு குழு (Team) ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருப்பது பெரிய விஷயமில்லை. அந்த ஒற்றுமையை கடைசி வரைக்கும் தக்க வைத்துக் கொண்டால் தான் எடுத்த வேலையை சரியாக முடிக்க முடியும்.

Tuesday, December 8, 2015

பலரின் உழைப்பை உரிந்த சென்னை மழை !

நேற்று மாலை, மழையில் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவர் வீட்டு செல்லும் போது அவருக்கு உதவியாக ஏதாவது பொருள் வாங்க நினைத்தேன். ஐந்து நாட்களாக தனது வீட்டில் மின்சாரம் இல்லை என்று சொன்னதால், ஒரு Emergency Lamp வாங்கலாம் என்று ஒரு எலக்ட்ரானிக் கடைக்கு சென்றேன்.

அங்கும் மின்சாரம் இல்லை. 

மாலை 6 மணி என்றாலும் இரவு 8 மணிக்காக இருள் இருந்தது. ஒரு சிறிய விளக்கில் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார். Emergency Lamp கேட்டப் போது, மூன்று, நான்கு விளக்குகளை எடுத்துக்காட்டினார். ஒன்று பார்ப்பதற்காக நன்றாக இருந்தது, விலையை கேட்டேன்.

“ரூ.500” என்றார். 

ரூ.300 இருக்கும் என்று நினைத்தேன். அதிகப்படியாக ரூ.400 கொடுக்கலாம்.


“இந்த விலை மழைக்கும் சேர்த்தா ?” என்றேன். 


“சார் ! இது முப்பது வருஷம் கடை. அதிக லாபம் வச்சு வீக்கிறதில்ல.” என்று சொல்லி மழையில் அழிந்த எலக்டிரிக் பொருட்களை தூக்கி வீசிக் கொண்டு இருந்தார். இந்த இருட்டில் தன் உழைப்பை தொலைத்தவரின் குரல் என்னை எதோ செய்தது. 

நான் பேரம் பேசினால் ரூ.100 குறைக்கலாம். ஏனோ ரூ.500 கொடுத்து பொருளை வாங்கி, பலர் உழைத்து வாங்கிய பொருட்கள் குப்பையாக கொட்டி வைத்த தெருவில் நடந்து வந்தேன். 



இறந்தவர்களின் உயிரை எப்படி மீட்டுத்தர முடியாதோ, அதேப் போல் இழந்த அவர்களின் உழைப்பை திருப்பி கொடுக்க முடியாது. 

இந்த மழை… 
எத்தனை பேரை வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்திற்கு தள்ளியிருக்கிறதோ ? எத்தனைப் பேர் தங்கள் வாழ்க்கையை தொலைத்தார்களோ ? 
இதில் இருந்து எத்தனை பேர் மீண்டு வரப்போகிறார்களோ ? 
தெரியவில்லை. 

உணவு, பொருள், உடை என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கலாம். அன்பு காட்டலாம். இழந்த அவர்களின் உழைப்பை எப்படி கொடுப்பது ? விடையில்லை. 

இந்த மழை… பல பணக்காரர்களை ஒரு பாட்டில் தண்ணீரை கையேந்தி வாங்க வைத்தது. எதுவும் நிறந்தரம்மல்ல என்ற உண்மை உணர்த்தியது. மனித நேயத்துக்கு உயிர் கொடுத்தது. அதேப் போல் பலரின் உழைப்பை உரிந்திருக்கிறது. 

’எல்லாம் கடந்து போகும்’ என்ற நம்பிக்கையில், எல்லாவற்றையும் மனதில் சுமந்துக் கொண்டு வாழும் வாழ்க்கையை தான் நாம் வாழ வேண்டியதாக இருக்கிறது.

Monday, December 7, 2015

காமராசர்

லட்சக்கணக்கான
புகழ்ப் பெற்ற பணக்காரர்கள் 
வாழும் நாட்டில்
புகழ்ப் பெற்ற ஏழை
காமராசர் ! 

சமான்யனாக பிறந்து
சாம்ராஜ்ஜியத்தை அமைத்த 
முதல்வர்களுக்கு மத்தியில்
ஏழையாக பிறந்து
ஏழையாக இறந்தவர் !


வரும் தலைமுறையினருக்கு
வழிக் காட்டியாய் இருந்து
வழி வகுத்து
முதல் அமைச்சர் பதவியில்
விளகியவர் !

எடுத்த காரியங்களை
கர்மமென முடித்ததால்
“கர்மவீரர்”
என்ற பெயருக்கு
சொந்தக்காரர் !

காந்தியின் பிறந்த நாள் அன்று
காந்தியின் திருவடி அடைந்தவர் !

முதல்வர்கள்
எப்படி இருக்க வேண்டும் 
என்பதற்கு
பல்கலைக்கழகமாக
வாழ்ந்த
எங்கள் காமராசர் !

Wednesday, November 25, 2015

இரண்டு கவிதை : மழை, புகைப்படம்

மழை
----------

வானம் மழை சிந்தினால்
விவசாயி கண்ணீர் சிந்த தேவையில்லை !

வீட்டுக்கு மழைநீர் சேகரித்தால்
குடம் ஏந்தி சாலையில் நிற்க தேவையில்லை !

கடலுக்குள் கலக்கும் முன் மழைநீரை சேமித்தால்
 தண்ணீருக்கு அண்டை மாநிலத்தை நம்ப வேண்டியதில்லை !

பண சேமிப்பு எதிர்காலத்திற்கு நல்லது
மழைநீர் சேமிப்பு பூமிக்கு நல்லது !!

மழை
நம் வாழ்க்கைக்கு தேவையானது மட்டுமல்ல
நமக்கு சொல்லிக்கொடுக்கும் வாழ்க்கை !

**

புகைப்படம் 
------------------- 

நரைத்த முடி
தோல்வியடைந்த கனவுகள்.

நிகழ்கால வலி
இறந்தக்கால நினைவுகள்.

நட்பின் கொண்டாட்டம்
நட்பின் சுயநலம்.

ஆறு வித்தியாசங்களை
கடந்து செல்கிறது
கல்லூரிக்கால புகைப்படத்திற்கும்
தற்போதிய புகைப்படத்திற்கும் !!

Tuesday, November 3, 2015

குற்றம் கடிதல் - திரை விமர்சனம்

எத்தனையோ நல்ல படங்கள் வந்ததும் தெரியாமல் தோல்வியடைந்து பெட்டிக்கு போன பிறகு ’தேசிய விருது’ என்று அறிவிப்பு வரும். படத்தின் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். சென்ற வருடம் வரை ‘தேசிய விருது’என்பது தோல்வியடைந்த படங்களுக்கு ஊக்க மருந்தாகவும், ஆறுதலாகவும் இருந்து வந்தது. ஆனால், இந்த வருடம் தான் ‘தேசிய விருது’ ஊக்க மருந்தாக இருந்ததோடு இல்லாமல் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. 

’காக்கமுட்டை’ படத்தை அடுத்து தேசிய விருதால் அதிக எதிர்ப்பார்ப்போடு வெளியாகி பலரது பாராட்டைப் பெற்றப்படம் ’குற்றம் கடிதல்’. 



இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு செக்ஸ் கல்விமுறையின் அவசியத்தை பிரச்சார நெடியில்லாமல் சொல்லும் படம். ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாணவர்களை தங்கள் பிள்ளைகளாக நினைக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. 

ஆறாம் வகுப்பு மாணவன் செழியன் சக மாணவியை பிறந்த நாள் வாழ்த்து சொல்வதாக நினைத்து முத்தம் கொடுக்கிறான். அந்த மாணவனை ஆசிரியர் மெர்லின் கேள்விக் கேட்க, அதற்கு ‘உங்கள் பிறந்தநாளுக்கும் முத்தம் கொடுப்பேன்’ என்று சொல்ல, ஆசிரியர் மெர்லின் கோபத்தில் அடிக்கிறார். அதிர்ச்சியில் மயங்கி விழும் மாணவன் செழியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறான். 

ஒரு பக்கம் குற்றவுணர்ச்சியில் இருக்கும் ஆசிரியர் மெர்லினை காப்பாற்ற அவளது கணவன் மணி வெளியூருக்கு அழைத்துச் செல்கிறான். இன்னொரு பக்கம் அடித்த ஆசிரியர் தண்டிக்க வேண்டும் என்று செழியனின் மாமா மெர்லினை தேடுகிறார். இதற்கிடையில் செழியனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பள்ளி முதல்வர் போராடுகிறார். மகனுக்கு இப்படியானதில் அதிர்ச்சியில் உறைந்து போய் செழியனின் அம்மா இருக்கிறார். 

அவரவர் தங்கள் பிரச்சனை குறித்து கவலைப்பட்டுக் கொண்டு இருக்க, ஊடகங்கள் இந்த பிரச்சனையை வைத்து விவாத நிகழ்ச்சி, கருத்துக் கேட்பது, என்று ஒளிப்பரப்புகிறார்கள். தங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்யை ஏற்றிக் கொள்கிறார்கள். 

மருந்துக்கூட தெரிந்த நடிகரோ, நடிகையோ இந்த படத்தில் இல்லை. பிரபலங்கள் நடிக்காதப்படம். அதுவே இந்த படத்தின் பலமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு நடிகர்களும் அந்த கதாப்பாத்திரமாகவே நமக்கு தெரிகிறார்கள். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் தன்மை நமக்கு மிக எளியக்காட்சிகளில் இயக்குனர் பிரம்மா உணர்த்தியிருக்கிறார். 

’காக்கமுட்டை’ அடுத்து தமிழ் சினிமா ‘உலக சினிமா’ நோக்கி செல்கிறது என்பதை ’குற்றம் கடிதல்’ நிருப்பித்திருக்கிறது.

LinkWithin

Related Posts with Thumbnails