நேற்று மாலை, மழையில் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவர் வீட்டு செல்லும் போது அவருக்கு உதவியாக ஏதாவது பொருள் வாங்க நினைத்தேன். ஐந்து நாட்களாக தனது வீட்டில் மின்சாரம் இல்லை என்று சொன்னதால், ஒரு Emergency Lamp வாங்கலாம் என்று ஒரு எலக்ட்ரானிக் கடைக்கு சென்றேன்.
அங்கும் மின்சாரம் இல்லை.
மாலை 6 மணி என்றாலும் இரவு 8 மணிக்காக இருள் இருந்தது. ஒரு சிறிய விளக்கில் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்.
Emergency Lamp கேட்டப் போது, மூன்று, நான்கு விளக்குகளை எடுத்துக்காட்டினார். ஒன்று பார்ப்பதற்காக நன்றாக இருந்தது, விலையை கேட்டேன்.
“ரூ.500” என்றார்.
ரூ.300 இருக்கும் என்று நினைத்தேன். அதிகப்படியாக ரூ.400 கொடுக்கலாம்.
“இந்த விலை மழைக்கும் சேர்த்தா ?” என்றேன்.
“சார் ! இது முப்பது வருஷம் கடை. அதிக லாபம் வச்சு வீக்கிறதில்ல.” என்று சொல்லி மழையில் அழிந்த எலக்டிரிக் பொருட்களை தூக்கி வீசிக் கொண்டு இருந்தார். இந்த இருட்டில் தன் உழைப்பை தொலைத்தவரின் குரல் என்னை எதோ செய்தது.
நான் பேரம் பேசினால் ரூ.100 குறைக்கலாம். ஏனோ ரூ.500 கொடுத்து பொருளை வாங்கி, பலர் உழைத்து வாங்கிய பொருட்கள் குப்பையாக கொட்டி வைத்த தெருவில் நடந்து வந்தேன்.
இறந்தவர்களின் உயிரை எப்படி மீட்டுத்தர முடியாதோ, அதேப் போல் இழந்த அவர்களின் உழைப்பை திருப்பி கொடுக்க முடியாது.
இந்த மழை…
எத்தனை பேரை வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்திற்கு தள்ளியிருக்கிறதோ ?
எத்தனைப் பேர் தங்கள் வாழ்க்கையை தொலைத்தார்களோ ?
இதில் இருந்து எத்தனை பேர் மீண்டு வரப்போகிறார்களோ ?
தெரியவில்லை.
உணவு, பொருள், உடை என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கலாம். அன்பு காட்டலாம். இழந்த அவர்களின் உழைப்பை எப்படி கொடுப்பது ? விடையில்லை.
இந்த மழை… பல பணக்காரர்களை ஒரு பாட்டில் தண்ணீரை கையேந்தி வாங்க வைத்தது. எதுவும் நிறந்தரம்மல்ல என்ற உண்மை உணர்த்தியது. மனித நேயத்துக்கு உயிர் கொடுத்தது. அதேப் போல் பலரின் உழைப்பை உரிந்திருக்கிறது.
’எல்லாம் கடந்து போகும்’ என்ற நம்பிக்கையில், எல்லாவற்றையும் மனதில் சுமந்துக் கொண்டு வாழும் வாழ்க்கையை தான் நாம் வாழ வேண்டியதாக இருக்கிறது.
No comments:
Post a Comment