வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label புனைவுகள். Show all posts
Showing posts with label புனைவுகள். Show all posts

Wednesday, March 17, 2010

மொழியற்றவள்

விடுயற்காலை 5.45 மணி. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் எட்டி பார்க்கும் வேளை. இயற்கை அழகை ரசிக்க நேரமில்லாமல் ஆட்டோவில் இருந்து அவசரமாக தியாகு இறங்கினான்.



"பயணிகள் கனிவான கவனத்திற்கு... பெங்களூர் வரை செல்லும் சகாப்தி எக்ஸ்பர்ஸ் இன்னும் பத்து நிமிடத்தில் இரண்டாவது ப்ளாட்பாரத்தில் இருந்து புரப்படும்" என்று சென்ட்ரல் ரயில் அறிவிப்பை கேட்டது விரைந்தான்.

தன் பெட்டியை தூக்கிக் கொண்டு அவர அவசரமாக ஒடினான். பல பேரை இடித்து, அவர்களிடம் மின்னிப்பு கேட்க கூட அவனுக்கு நேரமில்லை. இடிப்பட்டவர்கள் திட்டியதை காதில் கேட்காதவாரு விரைந்தான்.

வேகமாக வந்ததில் இரண்டு நிமிடம் முன்னதாகே வந்தான். தன் இறுக்கை பார்த்து அமர்வதற்கும், ட்ரெயின் எடுப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். தன் டிக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு ரயில் பெட்டி 'C4' வை தேடினான்.

'C1...C2...C3........C4'

"அப்பாடா வந்தாச்சு" என்று உள்ளூர நினைத்துக் கொண்டு பெட்டிக்குள் எறினான்.

ரயில் பெட்டி முழுக்க ஏ.சி. இடது பக்கம் மூன்று பேரும், வலது பக்கம் இரண்டு பேரும் அமர சீடு வரிசையாக இருந்தது. வலது பக்கம் இருந்த தனது சீட் எண்.19 நெருங்கும் போது பக்கத்து சீட்டில் ஒரு பெண் ஆறு மாத குழுந்தையோடு இருப்பதை பார்த்தான். அவள் பார்க்க வட இந்திய பெண் போல் தெரிந்தாள். கை குழந்தை சிவப்பாக அம்மாவின் நிறத்தில் இருந்தது.

தன் பெட்டியை மேலே வைத்து விட்டு, பக்கத்தில் இருந்த பெண்ணை பார்த்தும் பார்க்காதது போல் ஒரு புத்தகத்தை எடுத்து படித்தான்.

தன் முன் இறுக்கையில் இருந்து ஒரு பாட்டியிடம் இந்தியில் எதோ பேசினாள். தியாகுவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இந்தியில் இரண்டு, மூன்று வார்த்தை மட்டும் தெரியும். அந்த வார்த்தைகள் அவள் பாட்டியிடம் பேசியதில் இல்லை.

கொஞ்ச நேரத்தில் அந்த வட இந்திய பெண் எழுந்தாள். தியாகு எழுந்து அவளுக்கு வழி விட்டான். அந்த பெண் முன் இறுக்கையில் பாட்டி பக்கத்தில் அமர்ந்தாள். கை குழந்தையோடு ஒரு ஆடவர் பக்கத்தில் அமர அவளுக்கு பல சங்கடங்கள் இருப்பதை தியாகுவால் உணர முடிந்தது. அந்த பெண் செல்ல, பாட்டி பக்கத்தில் அமர்ந்து இருந்த பதினாறு வயது தக்க ஒரு யூவதி எழுந்து தியாகு பக்கத்தில் அமர்ந்தாள். அவள் சற்று நடுங்கிய படி தான் தியாகு சீட்டுக்கு வந்தாள். அவளுக்கு அதில் விருப்பமில்லை என்பது அவள் கண்கள் காட்டிக்கொடுத்தது.

கல்லூரி படித்த காலத்தில் இது போல நடந்திருந்தால் தியாகு அந்த யூவதியை பேசிய அருத்திருப்பான். அவன் ஜோல் மழையால் ரயில் பெட்டியே நனைந்திருக்கும். இப்போது, திருமணம், குழந்தை என்று வந்த பிறகு வேலை, பணம் போன்ற விஷயத்தில் தியாகு கவனம் இருந்தது. நேரம் கிடைக்கும் கடைத்த புத்தகத்தை படிப்பான். அந்த யூவதியை கண்டுக் கொள்ளாமல் இருந்தால் தான் அவள் நடுக்கம் குறையும் என்று அவளை கவனிக்காத மாதிரி இருந்தான்.

ட்ரெயின் புறப்பட்டு ஐந்து நிமிடத்தில் ஒரு ஆண்ணும், பெண்ணும் தியாகு முன் பக்கத்தில் இருந்த பாட்டியிடம் காலை வணங்கி சிரித்து பேசினார்கள். பார்க்க இருவரும் புத்திதாக திருமணமானவர்கள் போல் இருந்தனர். தங்களை சுற்றி இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நினைக்காமல் பாட்டி காலை தொட்டு வணங்க அவர்கள் யோசிக்கவில்லை. ஒருவருக்கு மரியாதை கொடுக்க, ‘இடம்’ அவர்களுக்கு தடையாக தெரியவில்லை. அந்த தம்பதியர்கள் இருவரும் பாட்டியின் இடது பக்கத்து இறுக்கையில் அமர்ந்து, கை குழந்தை வைத்திருக்கும் பெண்ணிடம் சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர். அந்த ஆண் தன் பக்கத்தில் அமர்வான் என்று தியாகு எதிர்பார்த்தான். ஆனால், அவன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.

தியாகு புத்தகத்தை படித்துக் கொண்டு அப்படியே தூங்கினான். அப்போது தான் அவனுக்கு தூங்கியது போல் இருந்தது, அதற்குள் ஒருவர் அவனை எழுப்ப காலை சிற்றூண்டி கொடுத்தனர். சிற்றூண்டியை தன் கையில் வாங்கிக் கொண்டு தன் கடிகாரத்தை பார்த்தான். கடிகாரம் ஒரு மணி நேரம் கடந்திருந்தது. தன் பக்கத்து இறுக்கையில் இருக்கு யூவதி குழந்தைக்கு விளையாட்டு காட்டிக் கொண்டு இருந்தாள். அந்த குழந்தையின் அம்மா சிரித்து பேசி சாப்பிட்டு கொண்டு இருந்தாள். அந்த புதுமண தம்பதியர்கள் முன்பே சாப்பிட்டு முடித்திருந்தனர். புது தம்பதியர்களுக்கு அந்த யூவதியிடம் இருந்து குழந்தை வாங்கவில்லை. கொஞ்ச நேரத்தில் குழந்தையின் அம்மா சாப்பிட்ட பிறகு ஒரு பால்பூட்டியை யூவதியிடம் கொடுத்தாள்.

பசி முகத்துடன் அந்த யூவதி பால்பூட்டி கழுவ எடுத்து சென்றாள். கழுவிய பூட்டியை குழந்தையின் அம்மாவிடம் கொடுத்த போது சரியாக கழுவாததிற்கு திட்டினாள். அப்போது தான் தியாகுவுக்கு தெரிந்தது அந்த யூவதி வேலை செய்யும் ‘வேலைக்கார பெண்’ என்று !

இவர்கள் வீட்டு பெண்ணாக இருந்தால் ஒரு ஆடவன் பக்கத்தில் அமர ஏற்றுக் கொண்டு இருப்பார்களா ? எல்லோரும் சாப்பிடும் போது அவளை மட்டும் குழந்தையை பார்க்க சொல்லியிருப்பார்களா ? சின்ன விஷயத்துக்கு எல்லோருமுன் திட்டுவார்களா ? என்று பல கேள்விகளை தியாகு தன் மனதில் கேட்டுக் கொண்டான்.

பெங்களூர் வந்தது மேலே இருக்கும் அவன் பெட்டியை எடுக்கும் போது தெரியாமல் அவன் கை யூவதி மேல் பட்டது. அச்சத்தில் அவள் கை நடுங்கியது. இவ்வளவு நேரம் அவள் உள்ளூர நடுங்கி அமர்ந்ததை அந்த நோடியில் தியாகுவுக்கு தெரிந்தது. ரயிலில் இருந்து இறங்கியதும், குழந்தை பெற்ற தாய் எந்த சுமையும் இல்லாமல் தன் பாட்டியுனும், புதுமண தம்பதியர்களுடனும் பேசிக் கொண்டு நடந்தாள். அந்த யூவதி குழந்தையும், குழந்தையின் பையையும் சுமந்துக் கொண்டு செல்வதை தியாகு பரிதாபமாக பார்த்தான்.

Sunday, July 19, 2009

மொழியற்றவள்

விடுயற்காலை 5.45 மணி. சூரியன் கொஞ்சமாய் எட்டி பார்க்கும் வேளை. ஆட்டோவில் இருந்து அவசரமாக இறங்கினான் தியாகு.

"பயணிகளின் கனிவான கவனத்திற்கு... பெங்களூர் வரை செல்லும் சகாப்தி எக்ஸ்பர்ஸ் இன்னும் பத்து நிமிடத்தில் இரண்டாவது ப்ளாட்பாரத்தில் இருந்து புரப்படும்" என்று சென்ட்ரல் ரயில் அறிவிப்பை கேட்டதும் விரைந்தான்.

தன் பெட்டியை தூக்கிக் கொண்டு அவசர அவசரமாக பல பேரை இடித்துக் கொண்டு இரண்டாம் ப்ளாட்பாரத்திற்க்கு ஒடினான். இடித்தவர்களிடம் 'மன்னிப்பு' கேட்க கூட தியாகுவுக்கு நேரமில்லை. இடிப்பட்டவர்கள் திட்டியதை காதில் கேட்காதவாரு விரைந்து கொண்டு இருந்தான்.



வேகமாக ஒடிவந்ததில் இரண்டு நிமிடம் முன்னதாகே வந்தடைந்தான். தன் இறுக்கையை பார்த்து அமர்வதற்கும், ட்ரெயின் எடுப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். தன் டிக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு ரயில் பெட்டி 'C4'ஐ தேடினான்.

'C1...C2...C3........C4'

"அப்பாடா வந்தாச்சு" என்று உள்ளூர நினைத்துக் கொண்டு பெட்டிக்குள் எறினான்.

ரயில் பெட்டி முழுக்க ஏ.சி. இடது பக்கம் மூன்று பேரும், வலது பக்கம் இரண்டு பேரும் அமர சீட்டு வரிசையாக இருந்தது. வலது பக்கம் இருந்த தனது சீட் எண்.19 நெருங்கும் போது பக்கத்து சீட்டில் ஒரு பெண் குழுந்தையோடு இருப்பதை பார்த்தான். அவள் பார்க்க வட இந்திய பெண் போல் தெரிந்தாள். தன் பெட்டியை மேலே வைத்து விட்டு, ஒரு புத்தகத்தை எடுத்து படித்தான்.

என் முன் இறுக்கையில் இருந்து ஒரு பாட்டியிடம் இந்தியில் ஏதோ பேசினாள். தியாகுவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கொஞ்ச நேரத்தில் அந்த வட இந்திய பெண் எழுந்தாள். தியாகு எழுந்து அவளுக்கு வழி விட்டான். அந்த பெண் முன் இறுக்கையில் பாட்டி பக்கத்தில் அமர்ந்தாள். கை குழந்தையோடு ஒரு ஆடவர் பக்கத்தில் அமர அவளுக்கு பல சங்கடங்கள் இருப்பதை தியாகுவால் உணர முடிந்தது. அந்த பெண் செல்ல, பாட்டி பக்கத்தில் அமர்ந்து இருந்த பதினாறு வயது தக்க ஒரு யூவதி எழுந்து தியாகு பக்கத்தில் அமர்ந்தாள். அவள் சற்று நடுங்கிய படி தான் தியாகு சீட்டுக்கு வந்தாள். அவளுக்கு அதில் விருப்பமில்லை என்பது அவள் கண்கள் காட்டிக்கொடுத்தது.

ட்ரெயின் புறப்பட்டு ஐந்து நிமிடத்தில் ஒரு ஆணும், பெண்ணும் தியாகு முன் பக்கத்தில் இருந்த பாட்டியிடன் காலை வணங்கி சிரித்து பேசினார்கள். பார்க்க இருவரும் புதிதாக திருமணமானவர்கள் போல் இருந்தனர். தங்களை சுற்றி இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நினைக்காமல் பாட்டி காலை தொட்டு வணங்க அவர்கள் யோசிக்கவில்லை. ஒருவருக்கு மரியாதை கொடுக்க இடம் அவர்களுக்கு தடையாக தெரியவில்லை. அந்த தம்பதியர்கள் இருவரும் பாட்டியின் இடது பக்கத்து இறுக்கையில் அமர்ந்து, கை குழந்தை வைத்திருக்கும் பெண்ணிடம் சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர். அந்த ஆண் தன் பக்கத்தில் அமர்வான் என்று தியாகு எதிர்பார்த்தான். அவன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.

தியாகு புத்தகத்தை படித்துக் கொண்டு தூங்கிவிட்டான். அப்போது தான் அவனுக்கு தூங்கியது போல் இருந்தது, அதற்குள் ஒருவர் அவனை எழுப்பி காலை சிற்றூண்டி கொடுத்தார். சிற்றூண்டியை தன் கையில் வாங்கிக் கொண்டு தன் கடிகாரத்தை பார்த்தான். கடிகாரம் ஒரு மணி நேரம் கடந்திருந்தது. தன் பக்கத்து இறுக்கையில் இருக்கு யூவதி குழந்தைக்கு விளையாட்டு காட்டிக் கொண்டு இருந்தாள். அந்த குழந்தையிடம் சிரித்து பேசி சாப்பிட்டு கொண்டு இருந்தாள். அந்த புதுமண தம்பதியர்கள் முன்பே சாப்பிட்டு முடித்திருந்தனர். புது தம்பதியர்களுக்கு அந்த யூவதியிடம் இருந்து குழந்தையை வாங்கவில்லை. கொஞ்ச நேரத்தில் குழந்தையின் அம்மா சாப்பிட்ட பிறகு ஒரு பால்பூட்டியை யூவதியிடம் கொடுத்தாள்.

பசி முகத்துடன் அந்த யூவதி பால்புட்டி கழுவ எடுத்து சென்றாள். கழுவிய புட்டியை குழந்தையின் அம்மாவிடம் கொடுத்த போது சரியாக கழுவாததிற்கு திட்டினாள். அப்போது தான் தியாகுவுக்கு தெரிந்தது அந்த யூவதி வேலை செய்யும் வேலைக்கார பெண் என்று !

இவர்கள் வீட்டு பெண்ணாக இருந்தால் ஒரு ஆடவன் பக்கத்தில் அமர ஏற்றுக் கொண்டு இருப்பார்களா ? எல்லோரும் சாப்பிடும் போது அவளை மட்டும் குழந்தையை பார்க்க சொல்லியிருப்பார்களா ? சின்ன விஷயத்துக்கு எல்லோருமுன் திட்டுவார்களா ? என்று பல கேள்விகளை தியாகு தன் மனதில் நினைத்துக் கொண்டான்.

பெங்களூர் வந்ததும் மேலே இருக்கும் அவன் பெட்டியை எடுக்கும் போது தெரியாமல் அவன் கை யூவதி மேல் படுகிறது. அச்சத்தில் நடுங்கினாள். இவ்வளவு நேரம் அவள் உள்ளூர நடுங்கி அமர்ந்ததை அந்த நொடியில் தியாகுவுக்கு தெரிந்தது. ரயிலில் இருந்து இறங்கியதும் பரிதாபமாக அந்த யூவதியை பார்த்தான். குழந்தையும், குழந்தையின் பையையும் சமந்துக் கொண்டு அந்த யூவதி சென்றாள். குழந்தை பெற்ற தாய் எந்த சுமையும் இல்லாமல் தன் பாட்டியுடனும், புதுமண தம்பதியர்களுடனும் பேசிக் கொண்டு நடந்தாள்.

Wednesday, July 15, 2009

கணினி தேவதை

தந்தையின் கட்டாயத்திற்காக தான் கணினி கற்கும் இடத்திற்கு வந்தேன். கணினி வகுப்பு வரும் போது மனதில் எத்தனை முறை வெடித்துக் கொண்டேன் தெரியுமா..... தேவதை நீ அங்கு வந்து சேர்ந்த பிறகு தான் நான் அங்கு சேர்ந்ததற்கு அர்த்தம் பிறந்தது.

கணினி கற்க வந்த எனக்கு கன்னி மனதை கற்க ஆவல் வந்தது. கன்னி மனதை படிப்பதற்கு உலகத்திலே இதற்கு மட்டும் தான் எந்த கல்லூரிகளும் இல்லை, பல்கலைக்கழகங்களும் இல்லை. அவரவர் சொந்த முயற்சியில் கற்கிறார்கள். எந்த தேர்வில் தோல்வி அடைந்தாலும் வருந்தாத இளைஞர் படைகள் இதற்கு மட்டும் வருந்தும்.

ஐய்யோ...தோல்வியா ... இதில் மட்டும் தோல்வியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. எதிலும் தோற்றாலும் அடுத்த முயற்சியில் வென்று விடலாம் என்று மனதை தேற்றிக் கொள்ளலாம்..... காதலில் அடுத்த முயற்சி என்பது வெறோரு பெண்ணாகத் தான் இருக்கும்.... அவளை மறந்து வேறொரு பெண்ணா...? அப்படி நினைத்து கூட பார்க்க முடியவில்லை....

பெண்ணை காதலித்து தோல்வி அடைந்தால் காதலிக்க வேறொரு பெண்ணை தேடலாம். தேவதை காதலித்து தோற்றவன் வேறோரு தேவதையை எங்கு போய் தேடுவது. கிளியோபட்ரா அழகில் கூட மூக்கு நீளம் என்ற குறை உண்டு. உன் அழகில் நிறைகள் மட்டுமே உள்ளன. எனக்கு தெரிந்து இந்த மண்ணில் இருப்பது ஒரு தேவதை .... அதுவும் அவள் மட்டும் தான்.... இதில் தோல்வியே இருக்க கூடாது... தோற்றாலும் என் மரணத்திலே தான் முடிய வேண்டும்.



நீ தீண்டுவதற்கு அந்த Keyboard என்ன தவம் செய்ததோ.... உன் விரல் நுணி படுவதற்கு ஒவ்வொரு ஆங்கில எழுத்துக் கூட தமிழ் கற்குமடி.... உன்னிடம் பேசுவதற்காக... தமிழை வளர்க்க சங்கங்கள் தேவையில்லை. உன்னை போல் தேவதை போதும் தமிழ் வளர்ந்து விடும். உன்னால் எல்லோரும் கவிஞர்கள் ஆகிவிடுவார்கள்..... உலகம் முழக்க தமிழ் பறப்புவதற்கு உன்னை போன்ற தேவதைகளே மண்ணில் பிறக்க வேண்டும்.

வீட்டில் எலி என்றால் அஞ்சுவாய் என்று சொன்னாவளே.... ஆனால் கணினிப்பொறி முன் எலியைத் (Mouse) தான் பிடித்துக் கொண்டு இருக்கிறாய். உன்னை பயமுட்டிய எலி, பல்லி, பூச்சிகள் எல்லாம் தற்கொலை செய்து கொள்ளும்.... உன்னை பய முட்டியதற்காக ! அவைகள் எல்லாம் உன்னை தரிசிக்க வந்தது என்று உனக்கு புரியவில்லையா... எலி, பூச்சிகளுக்கு வாயில்லை உண்மையை சொல்வதற்கு.... அதற்கு வாய் இருந்தால் அது கூட உன்னை பற்றி கவிதை பாடும்...
இந்த கணினி கூட ஐந்து நிமிடத்தில் பதில் அளிக்கும். ஆனால் நீ ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவேளை விடுவது தான் என்னை பாதிக்கும். Sherlock நாவலில் கூட அடுத்தது என்ன நடக்கும் என்று கனித்து விடலாம். நீ அடுத்தது என்ன பேசுவாய் என்று கனிப்பதே மிகவும் கடினம். கணினி இயங்கும் வேகம் தெரியும். ஆனால், உன் இதயம் இயங்கும் வேகத்தை அறிய கணினிக் கூட தோற்கும்.

உன் அறிமுகம் கிடைத்தற்கே இத்தனை மகிழ்ச்சி என்றால்..... நீ எனக்கு கிடைத்தால்... உலகில் இருக்கும் அத்தனை ஆண்களின் பொறாமைக்கும் நான் தான் சொந்தக்காரனாக இருப்பேன். நீ எனக்கு கிடைத்த பிறகு மற்றவர் பொறாமை என்னை என்ன செய்யும்.

மானிடனாய் பிறத்தல் அறிது என்ற வாக்கியம் உண்மை என்று இன்று தான் புரிந்துக் கொண்டேன். இந்த பல்லி, எலிகளுக்கு இல்லாத பாக்கியம் எனக்கு கிடைத்தே.....!
பெண்ணைப்பார்த்தால் காதல் கவிதை தான் வரும்.... தேவதை உன்னை பார்த்தால் காதல் காவியமே வரும். உன்னை பார்த்த இக்கணம் தோன்றிய கவிதை இது...

246 தமிழ் எழுத்துக்கள் வாடுது....
'நீ' என்ற எழுத்து மட்டும்
புன்னகை சிந்தியது...
உன் பெயரை விட அதிகம்
உன்னிடம் உச்சரிப்பவர்கள்
அந்த எழுத்தை தானே ...

கவிதை எழுத கற்று தந்த உன் அழகு.... கொடுக்க தைரியத்திற்கும் தடைப் போட்டது. தடைகள் எல்லாம் தகர்க்கும் வரை உன்னை வர்ணிக்கும் என் கவிப்பணி தொடரும்.....

Tuesday, July 14, 2009

தேக்வாண்டோ

விளையாட்டுத்துறையில் முன்னேறி வரும் வீரர்களில் மிக முக்கியமானவர் இருபது வயதான தேக்வாண்டோ வீரர் 'ராம்போ' ரவி. தேசிய அளவில் நடந்த 'தேக்வாண்டோ' போட்டியில் தமிழ சார்பில் தங்கப்பதக்கம் வென்றவர். சமிபத்தில் 'தின சூரியன்' பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி.

வணக்கம் திரு.ரவி ! தமிழக சாற்பில தங்கப்பதக்கம் வாங்கின உங்களுக்கு... தேக்வாண்டோ மேல எப்படி இவ்வளவு ஆர்வம் வந்தது ?

என் பிரெண்ட்ஸ் நிறைய பேரு கிரிக்கெட், டென்னிஸ்னு அதில ஆர்வமா விளையாடுனாங்க. எனக்கு யாரும் ஆர்வம் செலுத்தாத விளையாட்ட விளையாடி என் மூலம் அந்த விளையாட்ட தமிழ் நாட்டுல நிறைய வேரு விளையாடனும். அதான் என் ஆசை. அதனால தான் நான் தேக்வாண்டோ மேல ஆர்வம் செலுத்தினேன்.



எங்க வாசகர் பல பேருக்கு தேக்வாண்டோ பத்தி தெரியாது. அத பத்தி கொஞ்சம் விளக்கம் சொன்னா நல்லாயிருக்கும் ?

1965ல் கொரியன் ஒட்டப் பந்தய அமைப்புடன் சேர்ந்த கொரியன் தேக்வாண்டோ அமைப்பு உருவாச்சு. தேக்வாண்டோனா 'கடினமான' அல்லது 'வெளிப்புற' நடை கொண்ட ஒரு வீரமிக்க கலைனு சொல்வோம். தசைச் சக்திய வர்ணிக்க இப்படி சொல்லுவாங்க ! எதிரே வரும் சக்தி நம் மேல தாக்காமல் அதன் திசையை மாற்று செய்வது இந்த கலையோட முக்கிய பண்பு !

தேக்வாண்டோ சண்டையில எது ரொம்ப முக்கியம் ?

ஸ்டான்ஸ் ரொம்ப முக்கியம். அடிக்கும் போது சரி. தடுக்கும் போது சரி. நாம வேண்டிய விளைவுகள உண்டாக்கனும்னா எதிரி கிட்டயிருந்து சரியான தூரத்துல இருக்கனும். தாமதம் இல்லாம பதிலடி கொடுக்கவும் ஸ்டான்ஸ் உதவும்.

எத்தன விதமானா ஸ்டான்ஸ் இருக்குனு தெரிஞ்சிக்கலாமா ?

அட்டென்சன் ஸ்டான்ஸ், பேரலல் ரெடி ஸ்டான்ஸ்னு இப்படி பல ஸ்டான்ஸ் இருக்கு. எல்லாருக்கும் சீரான ஒரே மாதிரி உயரம் கிடையாது. சிலரு உயரமா. ஒரு சிலரு குட்டையா இருப்பாங்க. ஸ்டான்ஸ்வோட தன்ம எடை பகிரது, உயரம், நீளம், அகலம் இதவச்சு தான் சரியா சொல்ல முடியும்.

உங்க விளக்கத்துக்கு நன்றி ரவி ! எங்களுக்காக தேக்வாண்டோ இருக்குற போஸ் கொடுத்தா... பத்திரிக்கையில படம் போட உதவியா இருக்கும்.

மலர்ந்த முகத்தோடு 'ராம்போ' ரவி தன் இருக்கையில் இருந்து எழுந்தார். இரு கால்களையும் இரு பக்கமும் நீளமாக அகற்றி முட்டிகளை மடங்காதவாறு நின்றார்.

புகைப்படக்காரர் ஒரு படம் எடுத்துக் கொண்டார்.

இருகால்களை பக்கவாட்டில் விரித்துத் தரையைத் தொடும்படி அமர்ந்தார்.

புகைப்படக்காரர் இன்னொரு படம் எடுத்துக் கொண்டார்.

செங்குத்தான உடம்பை முன் புறமாக வளைத்து இடது காலைத் தொடுமாறு காலைக் கைகளால் பிடித்தப்படி அழுத்தினார்.

ஸார் ! உங்களோட வருங்கால லட்சியம் பத்தி கொஞ்சம் சொல்லுங்க ?

இந்தியா சார்பில ஒலிம்பிக் போட்டியில கலந்திட்டு பதக்கம் வாங்குறது தான் என் லட்சியம். நல்ல ஸ்பான்ஸர் கிடைச்சா சிங்கப்பூர் போய் ட்ரெய்னிங் எடுத்துப்பேன்.

உங்களுக்கு ஸ்பான்ஸர் கிடைக்க எங்கள் வாழ்த்துக்கள் !!

'தின சூரியன்' பத்திரிக்கையில் பத்து ஆண்டு முன் தான் அளித்த பேட்டியை பார்த்தான் ரவி. பத்து வருடங்களாக அவன் பேட்டி வந்த பத்திரிக்கை அவனுடைய கண்ணீரை பார்த்துள்ளது. பழைய ஞாபகம் வரும் போதெல்லாம் பெட்டியில் இருந்து தன் பேட்டி வந்த பத்திரிக்கையை பார்ப்பான். படித்து முடித்த பிறகு கண்ணீர் சிந்துவான்.

அவனோடு விளையாட்டு துறையில் ஈடுப்பட்ட அவனது நண்பர்கள் கிரிக்கெட்டில் ஐ.சி.எல்., ஐ.பி.எல் என்று உலகம் சுற்றி சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள். இவனுக்கு சரியான ஊக்கமும், உதவியும் கிடைக்காததால் ஒரு பள்ளியில் பி.டி மாஸ்டராக வேலை செய்துக் கொண்டு இருக்கிறான்.

Monday, July 6, 2009

தேவதை தோழி

நான் கல்லூக்கு வருவதே உனக்காகத் தான் என்று யாருக்கும் தெரியாது. நான் உன்னை மற்ற பெண்களை போல் நினைத்ததில்லை. நம் வகுப்பில் இருக்கும் மற்ற பெண்களும் நீயும் ஒன்று என்று யாரும் சொல்லமுடியாது. நான் நம் வகுப்பில் இருக்கும் எல்லா பெண்களிடம் பேசியிருக்கிறேன்.... உன்னிடம் தவிர. காரணம், என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை. உன்னை பார்த்தா பிறகு உனக்காகவே வகுப்புக்கு வருகிறேன். உன்னிடம் பேச தொடங்கினால்...... என் வார்த்தைகள் உனக்காக மட்டும் தான் உயிர் வாழும்.

உனக்கு சொந்தமான வார்த்தைகளை எப்படி நான் எப்படி மற்றவர்களிடம் பேச முடியும். அப்படி பேச தொடங்கிவிட்டால் என் வார்த்தைகள் என்னோடு சண்டை போடாதா... தேவதை உனக்காக வாழ்ந்த வார்த்தைகள் மற்றவருக்கு பயன்பட்டால் யாருக்கு தான் கோபம் வராது.



நான் என் மீது நம்பிக்கை இல்லாததால் தான் உன்னிடம் பேசவில்லை. ஆனால், நீ என்னை சோதிப்பதற்காகவே என்னிடம் வந்து பேசுகிறாய். ஒவ்வொருவரும் உன்னிடம் பேச ஆசைப்படும் போது, நீயே என்னிடம் வந்து பேசினாய். என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் எல்லாம் தடுமாறி போய்விட்டது. விலகிச் செல்லத்தான் நினைக்கிறேன். உன் வலையில் விழுந்து விட வேண்டும் என்றே என்னிடம் பேச சூல்லுரைத்தாய்.

நீ என்னிடம் பேசுவதால் எத்தனை ஆண்களுக்ளின் பொறாமை சம்பாதித்தேன் தெரியுமா ? உன்னிடம் என்ன பேசினேன் என்று எத்தனை ஆண்கள் உன் தோழிகளிடம் விசாரித்தார்கள் தெரியுமா ? நாம் காதலர்களா என்று ஒரு தனிப்படை குழு நம் விசாரித்துக் கொண்டு இருப்பது நமக்கே தெரியாமல் போனது.

என் நண்பர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் உன்னை பற்றி கேட்கும் போது.... நீ என் தோழி மட்டுமே தான் என்று என் வாய் சொன்னது.... மனமோ போய் ஏன் சொல்கிறாய் ? என்று கேட்டது....

என் காதலை முதலில் உன்னிடம் தானே சொல்ல வேண்டும்.... மற்றவர்களிடம் சொன்னால் என்ன பயன் ? மூன்று ஆண்டுகள் காதலை சொல்லாமல் கழித்துவிட்டேன். நாட்கள் செல்ல செல்ல உன்னிடம் உள்ள காதல் வளர்ந்துக் கொண்டே இருந்தது. ஆனால், தைரியம் குறைந்துக் கொண்டே வந்தது.

ஒருவன் என்னிடம் வந்து உன்னை காதலிப்பதாக சொல்லி , அதற்கு தூதாக என்னை செல்ல சொல்கிறான். அவனை அடிக்க துடித்தது கைகள், ஆனால் ‘நட்பு’ என்று சொல்லிய வார்த்தை ‘காதல்’ என்று மாற்றிவிடும் கூட்டங்கள் என்னை சூழ்ந்து இருந்தது. அவனுக்கு உதவி செய்ய மறுத்த வந்துவிட்டேன். அவனோ தன் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்துக் கொண்டே இருந்தான்.

ஒரு முறை என் காதலை சொல்ல வந்த நேரத்தில் , அவனும் உன்னிடம் காதலை சொன்னான். எவ்வளவு நாள் தான் நான் சொல்வேன் என்று நீ எனக்காக காத்துக் கொண்டு இருப்பாய். நீ அவன் காதலை ஏற்கும் காட்சியை கண்டேன். என் மௌனத்திற்கு தண்டனை உன் காதலை இழந்ததை என் கண்ணில் கண்டேன். தோல்வி ஒன்றும் எனக்கு புதிதல்ல..... இது தண்டனை, என் மௌனத்திற்கு கிடைத்த தண்டனை. நட்பை கலங்க படுத்த கூடாது என்று நினைத்தற்கு தண்டனையாக உன் காதலை இழந்தேன். அது தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எண்ணிடம் பேச்சை குறைத்துக் கொண்டாய்.... அவனிடம் அதிகம் பேச தொடங்கிவிட்டாய்.... நானும் அதிகமாக பேசிக் கொண்டு இருக்கிறேன். உனக்காக நான் எழுதிய கவிதைகளுடன்.

Monday, June 22, 2009

Test tube தேவதை

வெள்ளை நிற தேவதை வெள்ளை நிற ஆடையில் Chemistry lab.... கையில் test tube ஏந்தி நின்று இரந்தாள்.

Test tube மூலம் குழந்தை பெறாலாம் கண்டு பிடித்தவன் கூட தன் ஆராய்ச்சி குறிப்புகளை அழித்துவிடுவான். காரணம், test tube ஏந்திய தேவதை அத்தனை அழகு.... Test tube குழந்தை கண்டு பிடித்த விஞ்ஞானி கூட அவனிடம் வாழ்ந்து குழந்தை பெற ஆசைப்படுவான். தன் தேசம் மறந்து இந்தியாவிலே தங்கி விடுவான். அவளிடம் பேசுவதற்காகவே தமிழை கற்றுக் கொள்வான்.



வேறு தேசத்தவன் கூட அவளுக்காக தமிழ் கற்ற வேண்டும் என்று சொல்லும் போது ..... தமிழ் தெரிந்த நான் சும்மாவா இருக்க முடியும்.... என் தோழர்கள் படையுகளுடன், test tube ஏந்திய தேவதையிடம் சென்றேன்.

Chemistry lab முழுக்க திரவம் நாற்றம்..... அங்கு நுழைந்ததற்காக என்னை தூற்றிய நண்பர்கள்.... நான் மட்டும் அந்த தேவதை குரல் கேட்கும் ஆவலில் கால்கள் நடந்தது. நண்பர்களில் வார்த்தைகளை கேட்க காதுகள் மறுத்தது.....

அவள் இருக்கும் இடத்தை அடைந்தேன். அங்கு மட்டும் மல்லிகை வாசம் தூக்கி வாரிப்பொட்டது. அவள் கைப்பட்டதால் திரவம் கூட மல்லிகை வாசம் விசுதோ என்ற சந்தேகம். ஒவ்வொரு bottle லும் ஒவ்வொரு திரவங்கள்..... sulphuric acid, hydrolic acid. Sodium chloride என்று திரவங்களின் பெயர்களை சொல்லி எல்லோருக்கும் விளக்கிக் கொண்டு இருந்தாள். திரவங்களின் பெயர் எனக்கு எதற்கு..... அந்த தேவதை பெயர் தெரிந்துக் கொள்ள தானே காத்துக் கொண்டு இருக்கிறேன். இத்தனை பெயர்களை சொன்னவள் அவள் பெயரை சொல்லவில்லை.

நண்பர்கள் என்று எண்ணி என் எதிரிகளை தான் அழைத்து சென்று இருக்கிறேன். அந்த தேவதை ரசிக்க விடாமல் அந்த இடத்தை விட்டு செல்ல உத்தரவிட்டார்கள். நான் மறுத்தும் என்னை இழுத்து சென்றார்கள். மனதில் நண்பர்களை திட்டிக் கொண்டு அந்த தேவதை இருக்கும் இடத்தை விட்டு சென்றேன்.

மறு நாள் அதே கல்லூரி பொருட்காட்சி..... மீண்டும் அந்த தேவதை சந்திக்க என் முழு எண்ணமாக இருந்தது. உடன் எந்த நண்பர்களையும் அழைத்து செல்லவில்லை. அவள் இருக்கும் Chemistry lab க்கு மனம் விரைந்து ஓடியது. அந்த தேவதை இருந்த இடத்தில் வேறொரு கோதை நின்றுக் கொண்டு இருந்தாள். எத்தனை கோதை அங்கு நின்றாலும் அந்த தேவதை போல் வருமா..... திரவத்துக்கு கூட வாசம் தரும் அவள் ஸ்பரிசம் கிடைக்குமா ? .... என்று மனதில் ஏக்கங்கள் மட்டுமே நிறம்பியது. கண்களில் வெருமை தெரிந்தது.

Test tube குழந்தையை கண்டு பிடித்தவன். cloning முறையில் அவளின் இன்னொரு உருவை செய்தால் எப்படி இருக்கும் என்ற யோசனை வந்தது. வானத்தில் ஒரு நிலவுக்கு தான் மதிப்புண்டு.... செயற்கை கோளுக்கு என்ன மதிப்பு ... தகவல் தருவதை தவிர செயற்கைகோளால் என்ன பயன்....? நிலவு மட்டுமே எல்லோராலும் ரசிக்க முடியும். இந்த பூமி ரசிக்க அந்த ஒரு தேவதை போதும்..... அவளை cloning முறையில் இன்னொரு உருவை உருவாக்கினாலும் அது செயற்கை தனமாக தான் இருக்கும்.... நிலவு பூமி கண்ணுக்கு தெரியாமலா போகும்.... அந்த தேவதை என்றோ ஒரு நாள் மீண்டும் சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் அந்த தேவதை நடந்த சுவடுகளை தேடி மனம் போனப் போக்கில் செல்கின்றேன்.

Thursday, June 11, 2009

இரா.முருகன் கதைகள்

ஒவ்வொரு புத்தக வாசிப்பும் வாசகனாகிய எனக்கு ஒரு அனுபவம். படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் கல்லூரி படிப்பு முடிந்தவுடனே மூட்டை கட்டி வைத்துவிட்டேன். இப்போது, புத்தகங்களில் என்னுடைய தேடல் சிந்தனையை தூண்டும் விஷ்யங்கள், தகவல்கள், எழுத்துக்களை வித்தியாசமாக கையாள வேண்டிய யூக்திகளை கற்பது தான்.

எப்படியும் மற்றவர்கள் பாராட்டும் படி நல்ல படைப்பு எழுத வேண்டும். நான் படிக்கும் ஒவ்வொரு நூலும் எனக்கு சொல்லி தரும் ஆசான். ஒரு நூலை படித்து முடித்து விட்ட பிறகு அதன் தாக்கத்தால் நான் எதுவும் எழுதவில்லை என்றால் அந்த நூல் படித்ததற்கு பயனில்லை என்று நினைப்பேன். இப்படி புத்தகம் படிக்கும் போது எனக்குளே சில நிபந்தனை வைத்து தான் படிப்பேன். அப்படி என்னுடைய தேடலுக்கும், உள் நிபந்தனைக்கும் சமிபத்தில் நான் படித்த புத்தகம் 'இரா.முருகன் கதைகள்'.



“சிறுகதை தொகுப்பு நூலை படிப்பதாக இருந்தால் எல்லா கதைகளும் ஒரே மூச்சில் படித்து விட கூடாது. கற்கண்டு மாதிரி இரண்டு, மூன்று கடித்து விட்டு, பிறகு தொடர வேண்டும். படித்து முடித்து விட்ட பிறகு அந்த கதையை பற்றி உணர வேண்டும்" என்று ஒரு மூத்த எழுத்தாளர் பேசியதை கேட்டுயிருக்கிறேன். காரணம், கதையில் வரும் பாத்திரம், சம்பவம் என்று எதுவும் நம் மனதில் தங்காமல் போய்விடும். இதை அனுபவ ரீதியாக 'இரா.முருகன் கதைகள்' படிக்கும் போது உணர்ந்தேன்.

பெரிய புத்தகம். 80 கதைகள். எவ்வளவு சீக்கிரம் படித்து முடிக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் நினைத்ததில் பாதி கதைகள் மனதில் ஒட்டாமல் இருந்தது. சில கதையின் முடிவில் என்ன சொல்ல வருகிறார் என்று கூட புரியாமல், மீண்டும் இன்னொரு முறை படிக்க வேண்டியதாக இருந்தது. எந்த புத்தகத்தை படிக்க காட்டாத அவசரத்தை இந்த புத்தகத்தை படிக்க ஏன் காட்டினேன் என்று புரியவில்லை.

‘இடப்பெயர்ச்சி’ என்ற கதையில்.... சீங்கப்பூரில் வேலை செய்யும் இளைஞனான அமுதனுக்கு அம்மாவிடம் இருந்து கடிதம் வருகிறது. அவன், அவன் தங்கள் வாழ்ந்து வளர்ந்த வாடகை வீட்டை இடைக்க போவதாக வருத்தப்பட்டு கூறுகிறார். அமுதனும் இடிக்கப் போவதை நினைத்து கவலைப்படும் வேலையில் சீன பெண் மூலம் 'நினைவு சின்னங்கள் சாப்பாடு போடாது' என்பதை உணர்கிறான். 'அம்மாவிடம் வேறு வீடு பார்க்கலாம்' என்று பதில் கடிதம் எழுதுவது போல் கதை முடிகிறது.

சிறுகதை நூல் விமர்சனத்தில் ஒரு கதையை குறிப்பிட்டதோடு நிறுத்துவது தான் சரி என்று நினைக்கிறேன். கதைகளை பற்றி விளக்கிவிட்டால், வாங்கி படிப்பவர்களுக்கு ஸ்வாரஸ்யம் இருக்காது. அதிக விமர்சனம் நூலை வாங்க விடாமல் செய்துவிடும். அந்த தவறை நான் செய்யவிரும்பவில்லை.

இந்த நூலை எழுதிய இரா.முருகன் அவர்கள் பெருமைக்குரிய 'கதா' விருது பெற்றவர். இவரது 'அரசூர் வம்சம்' நாவல், திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் பரிசைப் பெற்றது. அவருடைய எழுத்து நடை, சொல் நடை பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை என்பது அவர் பெற்ற விருதகளே சான்று.

அவருடைய எழுத்து நடையும், சொல் நடையும் சொல்லுவதை விட ஒரு வாசகனாக குறிப்பிட்டு சில குறைகளை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

'அவரது உரைநடையில் 'ஜம்ப் கட்' உத்தி வெற்றிகரமாக கையாளப்பட்டுருகிறது. இது நனவோடை அல்ல. ஆனால், திட்டமிட்ட, எத்தகவலும், அநாவசியனாகப் பயன் படுத்தாத சேர்க்கை கொண்ட நடை' என்று முன்னுரையில் அசோகமித்திரன் இந்த சிறுகதை தொகுப்பை பற்றி குறிப்பிடுகிறார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சில இடங்களில் 'ஜம்ப் கட்' உத்தி வெற்றிகரமாக இல்லை என்பதை சொல்லியாக வேண்டும்.

‘இடப்பெயர்ச்சி’ கதையில்

"குழந்தையை கீழே போட்டுடாதேடா. ஏற்கனவே பொறந்ததும் அப்பாவை முழுங்கியாச்சுன்னு பேரு வாங்கியிருக்கா. கை, கால் சரியில்லாட்டா நாளைக்கு அவளுக்கு ஒரு கல்யாணம் ஆக வேண்டாமா ? குழந்தையை அப்படி தூக்காதேடா ! எறக்கிவிடு காவேரிய"

இந்த வசனம் வந்த அடுத்த வரியில்...

"காவேரிக்கு அடுத்த மாதம் வளைகாப்பு. அம்மாவின் கடிதம் வந்தது"

இப்படி ஒரே கதையில் சில இடங்களில் வாசகனின் சிந்தனைக்கு விடுவதால் அவர் சொல்ல வரும் விஷயத்தை வாசகன் மாற்றி சிந்திக்க வாய்ப்புண்டு.

இரா.முருகன் சீங்கப்பூரில் இருந்தவர் என்பதால் பெரும்பாலான கதைகள் சீங்கப்பூரில் நிகழ்வது போல் அமைகின்றன. அதேப் போல், கதையில் வரும் பெருபாலான பாத்திரங்கள் பிராமணர்களாக இருக்கிறார்கள். பிராமண குடும்பத்தை சுற்றி கதை நகர்கிறது. கதையில் வரும் கதாபாத்திரங்கள் பதிய வேண்டுமே தவிர , கதாபாத்திரத்தின் மதம் பதிய கூடாது.

பார்ப்பன எதிர்பாளர்களுக்கு கண்டிப்பாக இந்த சிறுகதைகள் பிடிக்காது. ஆனால், பார்ப்பன ஆதரவாளர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.

மற்றப்படி பெரிதாக குறை இந்த புத்தகத்தில் ஏதுமில்லை."இரா.முருகன் கதைகள்" நன்றாக கதை சொல்கிறது.

நூலை வாங்க…

முகவரி :

கிழக்கு பதிப்பகம்
(An imprint of New Horizon Media Pvt. Ltd.,)
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

Thursday, May 21, 2009

ஆதவன் எழுதிய 'என் பெயர் ராமசேஷன்'

அதிகமான ஆங்கில வார்த்தைகளில் எழுதப்பட்ட தமிழ் நாவல். ஆங்கில அகராதி பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் இந்த தமிழ் நாவலை படிக்க வேண்டும். காரணம், கதை மேல்தட்டு மனிதர்கள் சுற்றி நகர்வதால் வாக்கியத்திற்கு 'நான்கு வார்த்தை ' ஆங்கிலம் பேசுவது போல் எழுதியிருக்கிறார் ஆதவன்.

1980ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வந்த 'என் பெயர் ராமசேஷன்' நாவல், உயிர்மை பதிப்பகத்தின் மூலம் இரண்டாம் பதிப்பு வெளிவந்திருக்கிறது. 30 வருடங்கள் முன்பு வந்திருந்தாலும், இந்த காலக்கட்டத்தின் இளைஞனின் மனநிலையை பிரதிபலிக்கும் அளவிற்கு 'ஆதவன்' அவர்கள் எழுத்துக்கள் இருக்கின்றன. இதை படிப்பவர்கள் யாரும் முப்பது வருடம் முன்பு எழுதிய நாவல் என்று சொன்னால் நிச்சயமாக நம்ப மாட்டார்கள். நாவலில் வரும் கதாபாத்திரமும், சம்பவமும் இந்த காலத்திற்கும் பொருந்துகின்றன.



சா.கந்தசாமியின் 'விசாரணை கம்மிஷன்', வண்ணநிலவனின் 'கடல்புறத்தில்', வைரமுத்துவின் 'கள்ளிகாட்டு இதிகாசம்' போன்ற நாவலில் வரும் வலிகளையும், மரணங்களையும் படித்து பழக்கப்பட்டவர்களுக்கு குளிர்ச்சியான நாவல் இது. முழுக்க முழுக்க மத்தியத்தர இளைஞனான ராமசேஷனை சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் கதை.

ராமசேஷன் கதாபாத்திரத்தின் காதல், காமம், நட்பு என்று உணர்வுகளை வெளிப்படுத்தும் இளமை மிக்க நாவல் என்று சொல்லலாம். நாவல் படிக்க தொடங்கும் போது எனக்கு Chetan Bhagat எழுதிய ‘Five Point Someone’ நாவல் நினைவுக்கு வந்தது. ( அந்த நாவலில் IITயில் மூன்று இளைஞர்கள் அறிமுகமாவது போல், இந்த நாவலிலும் மூன்று இளைஞர்கள் பொறியியல் கல்லூரியில் அறிமுகமாகுகிறார்கள்.) ஆனால், கதை செல்ல செல்ல ராமசேஷனின் ஆழ் மனதில் இருக்கும் வன்ம சிந்தனைகளையும், மன தடுமாற்றத்தையும் படம் பிடித்து காட்டுகிறார். குறிப்பாக, ராமசேஷன் தன் மனதில் " உலகமே 'ப்ராஸ்'களும், 'பிச்'களும் நிரம்பியதாகத்தான் தோன்றியது" என்று மாலாவை பார்க்கும் போது அவன் நினைத்துக் கொள்வதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

நண்பன் ராவின் தங்கயான மாலாவை அனுபவித்த ராமசேஷன், ராவ் காதலுக்கு அறிவுரை கூறு அளவிற்கு இறுதி ஆண்டில் காதல் மன்னனாக இருக்கிறான்.

"ஒரு பெண்ணை நேசிக்க வேண்டுமென்றால் நமக்கு எஸ்கிமோக்கள் பற்றியும், சூரியப் பொருட்டுகள் பற்றியும் தெரிய வேண்டுமென்று அவளிடம் நிரூபிக்க முயல்வதால் எந்த பிரயோஜனமுமில்லை. பேசாமல் ஒரு தனியிடத்துக்கு அவளை எப்படியோ அழைத்து சென்று எனக்கு உன்னை ரொம்பப் படித்திருக்கிறது என்று சொன்னால் போதும்" என்று அறிவுரை சொல்லுவது 'நச்' என்று உள்ளது.

நண்பனின் தங்கை மாலா தன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் போன் போட்டு ராமசேஷனை அழைப்பதும், நண்பன் காதலித்த பெண் ராமசேஷனிடம் ஹோட்டலில் ரூம் போட சொல்வதும், திருமண வயதில் பெண்ணுக்கு தாயானா மாமியை திருமணம் செய்து கொள்ள நினைப்பதும் என்று ஒரு இளைஞனின் ஆழ் மனதின் ஒலிந்து இருக்கும் வன்மமான சிந்தனைகள் எல்லாம், கல்லூரி முடிந்து தன் தங்கை வேறு ஒருவனுடன் பார்க்கும் போது ‘காதல் மன்னன்’ என்ற வட்டத்தில் இருந்து குடும்பஸ்தனுக்குரிய கோபம் அவனுக்கு வருகிறது.

தற்கால வாழ்ந்துக் கொண்டு இருக்கும் எழுத்தாளர்களின் நூல்களை படித்தே பழக்கப்பட்ட எனக்கு மறைந்த எழுத்தாளர் நூல்களை படிக்க தொடங்கி இருக்கிறேன். சாண்டில்யன், ஆதவன்..... தொடர்ந்து.... அடுத்து நான் படிக்க போகும் எழுத்தாளர் 'தேவன்'.


உயிர்மை பதிப்பகம்,
விலை.100
பக்கங்கள் : 198.

Friday, May 15, 2009

ஜெயமோகன் எழுதிய 'நிழல் வெளிக்கதைகள்'

'கடவுள் உண்டா ? இல்லையா ? என்ற வாதங்கள் இழுவையில் இருப்பது போல் 'பேய்கள் உண்டா ? இல்லையா' என்ற வாதமும் இழுவையில் உள்ளன. 'கடவுளை பார்த்தேன்' என்று ஒருவன் சொன்னால், அவனை பைத்தியக்காரனாக பார்ப்பவர்கள் கூட, 'இந்த இடத்தில் பேய் இருக்கிறது' என்று சொன்னால் உள்ளூர இருக்கும் பயத்தில் செல்லமாட்டார்கள். 'கடவுள் இல்லை' என்று சொல்பவர்கள் கூட மனதில் ஒரு இடத்தில் பேய் பயம் ஒழிந்துக் கொண்டு இருப்பதை தான் இது காட்டுகிறது. அப்படிப்பட்ட பேய்களை பற்றின பத்து சிறுகதைகள் தான் ஜெயமோகன் எழுதிய 'நிழல் வெளிக்கதைகள்'.

'Evil dead, Excorist போன்ற படங்களை நல்லிரவு 12 மணிக்கு கூட தனியாக பார்த்திருக்கிறேன். இரவில் பேய் கதைகள் படிக்கும் அனுபவம் இது தான் முதல் தடவை. 'இமையோன்' சிறுகதையை படித்தவுடன் கொஞ்ச நேரத்தில் பேய் உல்கத்திற்கு சென்று விட்டேன். அடுத்த சிறுகதையான 'பாதைகள்' படிக்கும் போது வீட்டில் கீழே விழுந்த பாத்திரம் எப்படி பயமுறுத்தும் என்று அப்போது தான் புரிந்துக் கொண்டேன்.



பேய் படமாக இருந்தாலும், புத்தகமாக இருந்தாலும் யாராவது நம்மை தொடாத வரை நாம் தைரியசாலியாக தான் இருக்கிறோம். அந்த சமயத்தில் ஒருவர் அழைக்கும் போது, சத்தம் கேட்கும் போதும் நமக்குள் ஒழிந்து இருக்கும் பயம் பிரீட்டு வெளிப்படுகிறன.

"தம்பி" சிறுகதை குறிபிட்டு சொல்ல வேண்டும். சுபமாக முடியும் என்று எதிர்பார்த்த கதை. ஆனால், பயத்தில் பேய்யை உதாசினம் செய்வதால் மேலும் பேய் விடாது என்பதை கதை உணர்த்துகிறது.பத்து சிறுகதைகளும் பேய்களால் மனிதன் ஆழ் மனதில் இருக்கும் பயமும், பீதியை காட்டுகிறது, 'பேய் இல்லை' என்று சொல்பவன் கூட தன் மனதில் ஒழிந்து இருக்கும் பேய் குணங்களோடு தான் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறான்.

ஜெயமோகன் அவர்கள் பீதியும், பரபரப்பும் உருவாகும் படி எழுதியிருக்கிறார். வரிவேலு பாணியில் சொல்வதென்றால் " நல்ல தான் கலப்புறாங்க பீதிய ?" என்று சொல்லும்படி இந்த சிறுகதைகள் இருக்கிறது.

உயிர்மை பதிப்பகம்,
பக்கங்கள் : 120, விலை.60

Thursday, April 23, 2009

'கடல் புறா' - மூன்றாம் பாகம் சுருக்கம்

கடல் புறா மூன்றாம் பாகம் இரண்டு பகுதியாக பார்ப்போம்.

அஷயமுனை கைது செய்யப்பட்ட பலவர்மனுடன் இளையபல்லவன் கடலில் பயணம் செய்துக் கொண்டு இருக்கிறான். அப்போது இரண்டு கலிங்கத்து மரகலத்துடன் போர் புரிந்து அவன் கைப்பற்றுகிறான். இளையபல்லவன் கைப்பற்றிய மரக்கலத்தில் காஞ்சனை, குணவர்மனும் கைதிகளாக இருப்பதை பார்த்து இருவரையும் விடுவிக்கிறான். கடல் புறா 'கடல் மோகினி' நோக்கி செல்வதை கேள்விப்பட்ட பலவர்மன் அஞ்சி நடுங்கிறான். கடல் புறாவை திருப்பவும் சொல்கிறான். ஆனால், அவன் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் 'கடல் மோகினி' நோக்கி செல்கிறான் இளையபல்லவன்.

தமிழர்கள் வசம் இருந்த கடல் மோகினி கங்கதேவன் என்னும் தலைவன் கலிங்கத்தை ஆதரிக்கும் ஸ்ரீ விஜயத்தின் கட்டுப்பாட்டில் வந்திருப்பதை தெரிந்துக் கொள்கிறான். உண்மை அறிந்த இளையபல்லவன் தன் மரக்கலங்களில் கலிங்கத்துக்கு கோடியை பறக்க விட்டு கடல் மோகினிக்கு செல்கிறான். குணவர்மனை ரகசிய அறையில் வைத்து விட்டு, காஞ்சனையை மஞ்சளழகி என்று கங்கதேவனிடம் அறிமுகம் செய்து வைக்கிறான். பலவர்மனை பார்த்தவுடன் கொன்று விட துடிக்கும் கங்கதேவன் அவர்கள் அரச காரியத்திற்காக அவர்களை எதுவும் செய்யாமல் தன் தீவில் தங்க வைக்கிறான்.

தன் தீவுக்கு வந்த இளையபல்லவனை, அவன் உபதளபதிகளையும் விருந்துக்கு அழைக்கிறான் கங்கதேவன். விருந்துக்கு வந்தவர்கள் உள்ளே நுழைந்ததும் கங்கதேவன் கைது செய்கிறான். கங்கதேவன் ஆபத்தான எதிரி என்று முன்பே யுகித்த இளையபல்லவம் தான் அகூதாவின் தளபதி என்று அறிமுகம் படுத்துகிறான். அதுமட்டுமல்லாமல் கடாரத்தை கொள்ளையடிக்க தன்னுடன் கூட்டனி சேரும்ப்படி ஆசை வார்த்தை காட்டுகிறான்.

இளையபல்லவனை ஒப்பந்ததை ஏற்றுக் கொள்ள மஞ்சளழகி என்று அறிமுகப்படுத்தப்பட்ட காஞ்சனையை கேட்கிறான். தன் ஆபத்தான நிலைமை உணர்ந்த இளையபல்லவன் காஞ்சனை மீது தனக்கு பற்று இல்லாதது போல் காட்டிக் கொள்கிறான். இதனால், இருவரும் கூட்டு சேர்கிறார்கள். அதே சமயம் கங்கதேவன் மாலுமிகளிடம் காஞ்சனையுடன் யார் தவறாக நடந்துக் கொண்டாலும் அவர்களை உயிருடன் விட மாட்டேன் என்று கூறுகிறான்.

இளையபல்லவன் குணவர்மனை கங்கதேவனிடம் ஒப்படைத்து சிறை வைக்கிறான்.இளையபல்லவன் சதி திட்டத்தை அறிந்த கடாரத்தின் இளவரசியான காஞ்சனை கோபம் கொள்கிறாள். காஞ்சனை இளையபல்லவனிடம் கோபமாக வாதம் செய்ய கங்கதேவன் அவளை கை பிடித்து தன் மாளிகை அழைத்து செல்ல பார்க்கிறான். இளையபல்லவன் கங்கதேவனிடம் காஞ்சனையை விடும் படி சொல்கிறான். அவன் மறுக்க, இருவரும் சண்டையிடுக்கின்றனர். இறுதியில் இளையபல்லவன் கங்கதேவனை கொன்று விட்டுகிறான். காட்டில் ஒலிந்திருந்த தமிழர்களுடம் இளையபல்லவனுக்கு ஆதரவாக வருகின்றனர்.



ஒன்பது மாதம் பிறகு....

கலிங்கத்துக்கு ஆதரவாக இருந்த ஸ்ரீ விஜய தீவுகளை கைபற்றிவிட்டு காஞ்சனையை பார்க்க கடாரத்துக்கு செல்கிறான் இளையபல்லவன். ஆனால், அவனுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி காத்துக் கொண்டு இருப்பதை அப்போது தான் தெரிந்துக் கொள்கிறான். தனது நண்பனான அநபாயன் வீரராஜேந்திர தேவர் ஆணைப்படி தன்னை கைது செய்ய வந்திருப்பதை ஒரு வீரன் தெரிவிக்கிறான்.

அதே சமயம் அநபாயன் கைது செய்து சிறையில் வைக்கும் போது அங்கு தப்பிக்கவும் திட்டம் கொடுக்கிறான். ஆனால், இளையபல்லவன் அதை செய்ய மறுக்கிறான். அதனால், அநபாயன் அமீரின் துணையோடு இளையபல்லவனை மயக்கடைய செய்து காஞ்சனையுடன் அஷயமுனைக்கு கடல் புறாவில் அனுப்புகிறான்.

மயக்க தெளிந்த இளையபல்லவன் கடல் புறாவில் தன் தலைமையை மதிப்பு இல்லை என்று உணர்கிறான். தன் தந்திரத்தால் அமீர், கண்டிதேவன் இருவரையும் கடல்புறாவை ஸ்ரீ விஜய்த்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 'மலையூர்' பக்கம் திருப்பிவிடுகிறான். முதலை வாயில் இருப்பதை உணர்ந்த அமீர், மீண்டும் இளையபல்லவனை தலைமை ஏற்க்கும்மாறு கூறுகிறான்.

கடல் புறா விஜயசந்திரன் என்னும் உபதளபதி தலைமையில் மலையூர் படைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தனர். விஜயசந்திரப் ஆபாரா போர் திறமை கடல் புறா ஒரளவு சேதமானது. ஆனால், இறுதியில் இளையபல்லவனே வெல்கிறான். கைது செய்யப்பட்ட விஜயசந்திரனிடன் அவன் தளபதிக்கு கடிதம் எழுத சொல்கிறான். அவனும் எழுதிக் கொடுக்கிறான். அந்த கடிதத்தை இளையபல்லவனே எடுத்துக் கொண்டு மலையூர் தளபதியை சந்திக்க செல்கிறான்.

அங்கு சென்றவுடன், அவனுக்கு பெரும் அதிர்ச்சி. மலையூருக்கு தலைவனல்ல.. தலைவி...அதுவும் 'மஞ்சளழகி' அந்த இடத்தில் அமர்ந்திருந்தாள். அதன் பிறகு ஜெயவர்மன் தன்னை மகளாக ஏற்றுக் கொண்டுவிட்டார் என்பதையும், அவளிடம் மலையூரை கட்டுப்பாட்டில் விட்டதையும் தெரிந்துக் கொள்கிறான்.

மஞ்சளழகி இளையபல்லவன் மீது இருந்த காதலால் அவனுடைய கடல்புறாவை அழிக்காமல் விட்டுவிடுகிறாள். தந்தை ஆணைப்படி கேட்கும் உபதளபதியின் கவனைத்தை திசை திருப்ப உதவுகிறாள். இதனால், எந்த பெரிய யுத்தமில்லாமல் மலையூரை இளையபல்லவன் கைப்பற்றுகிறான்.

மலையூர் கைப்பற்றிய கையோடு ஜெயவர்மனின் ஸ்ரீ விஜயத்தின் மீது போர் தொடுக்கிறான். போரில் வெற்றி பெற்ற இளையபல்லவனுக்கு பரிசாக வீரராஜேந்திர தேவர் வண்டை குறுநிலத்தை பரிசாக அளிக்கிறான். காஞ்சனை, மஞ்சளழகி இருவரையும் மணக்கிறான் இளையபல்லவன்.

மூன்றாம் இனிதே முடிவடைந்தது !!

Saturday, April 18, 2009

'கடல் புறா'- இரண்டாம் பாகம் சுருக்கம்

கடல் கொள்ளையரான இளையபல்லவன் தன் உப தளபதிகளான அமீர், கண்டிதேவனுடன் அஷயமுனை தீவை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கிறான். முதல் பாகத்தில் படைத்தலைவனாக வந்த இளையபல்லவன் எப்படி கடல் கொள்ளைக்காரனாக ஆனான் விளக்கத்தை தன் சொல்கிறான். கலிங்கத்துடன் நட்புறவு வைத்திருக்கும் ஸ்ரீ விஜயத்தின் கடற்படை பலத்தை சிதைக்கவே தான் கடல் கொள்ளையனான அகூதாவுடன் ஒராண்டு பயிற்சி எடுத்ததை சொல்கிறான். இப்போது தன் லட்சிய பாதையை நோக்கி தன் உபதளபதிகளுடன் அஷயமுனை தீவைக்கு வருகிறான்.

அஷயமுனை தீவு அதன் தலைவன் பலவர்மன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அஷயமுனை ஸ்ரீ விஜயத்துக்கு ஆதரவாக இருப்பதை தெரிந்தும் இளையபல்லவம் தன் உபதளபதிகள் உதவியில்லாமல் தனியாக தீவுக்குள் செல்கிறான். முதலில் அவனை கொல்ல நினைக்கும் பலவர்மன், இளையபல்லவன் அகூதாவின் பெயரை பற்றி சொன்னதும் அஞ்சுகிறான். தன்னுடன் நட்புறவு வைத்துக் கொண்டால் அஷயமுனை தீவு பாதுகாக்கப்படும் என்பதையும் இளையபல்லவன் சொல்கிறான். அப்போது பலவர்மனுடைய வளர்ப்பு மகள் மஞ்சளழகி அங்கு வருகிறாள்.



அந்த தீவில் பௌர்ணமி திருவிழா நடக்கும் சமயத்தில் இளையபல்லவன் வந்தால் அவனுக்கு புர்வகுடி தலைவனான வில்வலனால் ஆபத்து வருமா என்று பலவர்மனும், மஞ்சளழகியும் அஞ்சுகிறார்கள். மஞ்சளழகி அந்த திருவிழா வில்வலன் செய்யும் கொடுமைகளையும், கொலைகளையும் பற்றி சொல்கிறாள். ஒரு வேலை வில்வலன் இளையபல்லவனை கொன்றாலும் அஷயமுனைக்கு ஆபத்து இருப்பதை பலவர்மன் உணர்ந்தான். ஆனால், இளையபல்லவன் எதற்கும் அஞ்சாமல் அந்த விழாவில் தன் உபதளபதிகளுடன் கலந்துக் கொள்கிறான்.

திருவிழாவில் மஞ்சளழகி ஆடும் போது இளையபல்லவனை நோக்கி ஒருவன் குறுவாள் வீசும் போது உபதளபதி அமீர் தன் குறுவாள்ளால் கொல்கிறாள். இதை பார்த்த வில்வலன் கோபன் கொண்டு இளையபல்லவன் சண்டைக்கு அழைத்து தோல்வியும் அடைகிறான். தோல்வியுற்ற வில்வலன் பலவர்மனிடன் இன்னும் சிறு நாட்களில் அஷயமுனையை அழித்துவிடுவதாக சுழ்ழுரைத்து செல்கிறான்.

அஞ்சி நடுங்கிய பலவர்மன் ஒரு திட்டம் போடுகிறான். தன் மகளை இளையபல்லவனுக்கு திருமணம் செய்து வைத்தாள் தன் கோட்டை பாதுகாக்கும் தளபதி கிடைக்கிறான். அவன் திருமணத்துக்கு மறுத்தால் தன் மகளிடம் தவறாக நடந்து கொண்டான் என்று சொல்லி கொன்றுவிடலாம் என்று திட்டம். பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவனை யாராக இருந்தாலும் அகூதா மன்னிக்கமாட்டான் என்பதை அந்த தீவில் உள்ளவர்கள் அனைவருக்கு,ம் தெரிந்த உண்மை.

மஞ்சளழகி தன் தந்தையின் இந்த திட்டத்தை பற்றி சொல்கிறாள். ஒன்று திருமணம் அல்லது மரணம் என்ற நிலையில் இளையபல்லவன் தள்ளப்படுகிறான். அவளை திருமணம் செய்துக் கொள்ள இளையபல்லவன் சம்மதிக்கிறான். அதுமட்டுமல்லாமல், தன் கப்பலில் இருக்கும் செல்வத்தை எல்லாம் பலவர்மன் செல்வத்துடன் இணைத்து சேந்தனை பாதுக்காக்கும் படி சொல்கிறான். அஷயமுனை இருக்கும் மக்களுக்கு போர் வில்வலனை எதிர்க்கும் போர் பயிற்சியும் கொடுக்கிறான்.

இதற்கிடையில், மஞ்சளழகி வைத்து பலவர்மன் ஆடும் அரசியல் பகடையை பார்த்து இளையபல்லவன் மனதில் சந்தேகம் எழுகிறது. அவள் பலவர்மனின் வளர்ப்பு மகள் பிறகு தெரிந்துக் கொள்கிறான். தன் உபதளபதி கண்டிதேவனை தன் கப்பலை மாற்றியமைக்க சொல்கிறான். கண்டிதேவன் கொள்ளை கப்பலை புறாவடிவத்தில் மாற்றியமைக்கிறான். அதற்கு ஒரு மாதம் நேரமும் எடுத்துக் கொள்கிறான். மாற்றியமைத்த கப்பலுக்கு 'கடல் புறா' என்ற பெயர் வைக்கிறான் இளையபல்லவன்.

இளையபல்லவன் அஷயமுனையில் எல்லா வகை மதுக்களையும் சுவைத்து பார்க்கிறான். அவன் குடிப்பதை பார்த்து பலவர்மன் இளையபல்லவன் முழு குடிகாரனாக மாறிவிட்டதை நினைத்து சந்தோஷப்படுகிறான். என்னென்றால், பலவர்மன் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவை மறைமுக இளையபல்லவன் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறான் என்று தெரிந்துக் கொண்டான். வில்வலனை நேரம் பார்த்து தன் தீவை தாக்கும்படி பலவர்மனே யோசனை சொல்கிறான். மஞ்சளழகி மூலம் அஷயமுனையில் காவலை குறைக்க வைக்கிறான் பலவர்மன். இளையபல்லவன் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார் என்று பலர் வியந்தனர்.

இளையபல்லவன் குடிபழக்கத்துக்கு அதிகம் அடிமையாகிறான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலவர்மன் அவன் குடிக்கும் மதுவில் விஷம் கலக்கிறான். ஆனால், இளையபல்லவன் மது அறிந்திருந்தாலும் நிதானம் இழக்கவில்லை என்பது அப்போது தெரிந்தது. தன் உபதளபதிகளுக்கு ரகசிய உத்தரவுப்படி வில்வலனை தாக்குதலை எதிர்கொள்ள போருக்கு தயாராக இருந்தனர்.

வில்வலனை கொன்று அஷயமுனை பாதுக்காக்க படுகிறது. யுத்தம் முடிந்த பிறகு அகூதா வருகிறான். மஞ்சளழகி தன் சகோதரி மகள் என்று இளையபல்லவனிடம் கூறுகிறான். அதுமட்டுமல்ல.... தன் சகோதரியை பலவர்மனும், ஜெயவர்மனும் சேர்ந்து கடத்தி சென்றனர் என்றும், மஞ்சளழகியின் தந்தை ஜெயவர்மன் என்றும் உண்மையை சொல்கிறான். அகூதா பலவர்மனை கொல்ல நினைக்கும் போது இளையபல்லவன் அவனை தடுத்து தனக்கு உதவியாக கடல் பயணத்துக்கு அழைத்து செல்கிறான். மஞ்சளழகியிடம் அஷயமுனையை ஒப்படைத்து விட்டு கடல் புறாவில் பயணம் மேற்கொள்கிறான்.

இரண்டாம் பாகத்தில் நச் வசனங்கள்..

மஞ்சளழகி இளையபல்லவனை சந்தித்த போது....

மஞ்சளழகி : நீங்கள் மாவீரன்...!

இளையபல்லவன் : நன்றி

மஞ்சளழகி : உங்களுக்கு அடக்கமும் இருக்கிறது..

இளையபல்லவன் : நன்றி

மஞ்சளழகி : வெட்கமும் இருக்கிறது உங்களுக்கு..

இளையபல்லவன் : சில சமயங்களில் அந்தக் குணம் ஆண்களுக்கும் தேவையாயிருக்கிறது.

மஞ்சளழகி : உங்களுக்கு விஷமமும் இருக்கிறது..

இளையபல்லவன் : என்ன ?

மஞ்சளழகி : நீங்கள் மாவீரன் என்றேன் - அடக்கத்தை காட்டினீர்கள். உங்களுக்கு அடக்கமிருக்கிறதென்றேன் - வெட்கத்தை காட்டினீர்கள். வெட்கமிருக்கிறதென்றேன் -என்னை குத்திக் காட்டி உங்களுக்கு விஷமமும் உண்டு என்பதை நிரூபித்தீர்கள்.

இளையபல்லவன் : ஏன் ?

மஞ்சளழகி : அடக்கம் வீரத்துக்கு அடையாளம். வெட்கம் பண்பாட்டுக்கு அடையாளம். விஷமம் ரசிகத் தன்மைக்கு அடையாளம்.


காஞ்சனை மீது இளையபல்லவனுக்கு காதல் இருப்பதை பற்றி மஞ்சளழகி கேட்க.. அதற்கு இளையபல்லவன் "மனம் ஒன்றுதான். எனக்கு அது சிக்கி இருக்கும் சிறைகள் இரண்டு. அது எப்பக்கம் இழுபடுமோ தெரியாது".

இறுதியில் இளையபல்லவம் மஞ்சளழகியை விட்டு பிரியும் போது, " இந்த அலையை போல தான் நீங்களும் என்ற அன்றே சொன்னேனே..? அலையும் என்னைத் தொட்டுவிட்டுப் போகிறது. நீங்களும் அப்படித்தான் போகிறீர்கள்." என்கிறாள். இதே வார்த்தையை மூன்றாம் பாகத்திலும் இளையபல்லவன் நினைத்து மஞ்சளழகிகாக வருந்துவது வாசகர்களை இரண்டாம் பாகத்தை நினைவுப் படுத்த வைக்கிறார்.

Thursday, April 16, 2009

சாண்டில்யன் எழுதிய 'கடல் புறா' - முதல் பாகம் சுருக்கம்

சமிபத்தில் ஒரு நாவலை படிக்க நான் இத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டதில்லை. மூன்று பாகங்கள் கொண்ட இந்த சரித்திர நாவல் வீரராஜேந்திரன் காலத்தில் 'தமிழ் - கலிங்க' எல்லை விவகார சமயத்தில் நடக்கிறது. கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தில் புரிந்த அட்டூழியங்களுக்கு காரணம் ஏன் இருக்க கூடாது என்ற சிந்தனையில் இந்த நாவல் பிறந்ததுள்ளது. அநபாய குலோத்துங்கனின் ஸ்ரீ விஜயப் பயணத்தையும் இந்த நாவலில் சாண்டில்யன் சேர்த்துள்ளார்.

சரித்திர நிகழ்வுகளை வைத்து நாவலாக படிக்கும் அனுபவம் மிகவும் வித்தியாசமான ஒன்று. அதுவும் இந்த நாவலில் கப்பல் பயணத்தை பற்றி விபரிக்க போதும், போர் கப்பல் அமைப்புகளை பற்றி சொல்லும் போதும் நடுகடல் பயணத்தில் இருப்பது போல் இருந்தது.

இருபத்தியைந்து பதிப்பு அச்சான நாவலை பற்றி இதற்கு மேல் விளக்க எனக்கு தகுதியில்லை என்று தான் தோன்றுகிறது.



கதை சுருக்கத்துக்கு போவோம்.

புகார் நகரத்தில் இருந்து வீரராஜேந்திர சோழரின் சமாதான ஒலையுடன் பாலூர் பெருந்துறைக்கு சோழர்களில் படை தலைவனான இளையபல்லவன் என்று அழைக்கப்படும் கருணாகர பல்லவன் வருகிறார்.

அங்கு சுங்க அதிகாரியான சேந்தன் இளையபல்லவனை போகாமல் தடுத்து பாலூர் பெருந்துறையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விளக்குகிறார். சோழர் இளவரசர் அநபாயன் கைது செய்யப்பட்டதையும், அவர் அந்த சிறைசாலையில் இருந்து தப்பித்ததையும் கூறுகிறார். இளையபல்லவனை ஒரு ரகசிய அறையில் மறைத்து வைக்கிறார் சேந்தன்.

கலிங்க படை தன்னை வருவதை உணர்ந்த இளையபல்லவன் தப்பித்து விருந்தினர் விடுதிக்கு நுழைக்கிறார். அங்கு, கடாரத்து இளவரசியையும் காஞ்சனாதேவியையும், அவள் தந்தை குணவர்மனையும் சந்திக்கிறார். குணவர்மனை கொல்லும் சதி நடப்பதை பற்றி இளையபல்லவன் சொல்கிறார். ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை ஆழும் ஜெயவர்மன் குணவர்மனின் சகோதரன். ஜெயவர்மன் கலிங்கத்துடன் நட்புறவு வைத்திருப்பதால் , கலிங்கத்தின் பாலூரில் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை குணவர்மன் உணர்கிறார்.

குணவர்மனிடம் பேசிக் கொண்டு இருந்த போது 'வெண் புறா' அநபாயனின் செய்திக் கொண்டு அந்த அறைக்கு வருகிறது. புறா வந்த சில நாழிகளில் ஒரு காவலன் அநபாயன் அழைப்பதாய் சொல்லி அழைத்து செல்ல , அவனை கைது செய்ய தயார் நிலையில் கலிங்கத்து அரசன் பீமன் இருந்தான். சுங்க அதிகாரி போர்வையில் இருந்த சோழர் தூதன் சேந்தனும் கைது செய்யப்பட்டான்.

மறு நாள் மரணத்தை பற்றி நினைத்த சேந்தனை பார்த்து இளையபல்லவம் அநபாயன் நம்மை காப்பாற்ற வருவார் என்று நம்பிக்கை கொடுக்கிறார். இளையபல்லவனும், சேந்தனும் நீதிமன்றத்தில் அனந்தவர்மன் முன் நிறுத்தப்படுகின்றனர். அப்போது, அநபாயன் அனந்தவர்மன் முன் தோன்றி அவர்களை விடுவிக்க சொல்கிறார். காஞ்சனாதேவி அனந்தவர்மன் மார்ப்புக்கு குறிவைத்து வில்லோடு நின்றாள்.

தப்பித்து வந்த இளையபல்லவன் காஞ்சனை தன்னை காதலிப்பதை பற்றி தெரிந்துக் கொள்கிறார். பாலூரில் இருந்து தப்பிக்க அநபாயன் கடல் கொள்ளையரான அகூதா, அவன் சீடனான அமீர், கண்டிதேவன் உதவியை நாடுகிறார். அவர்களும் திட்டம் வகுத்து காஞ்சனையும், குணவர்மனையும் பாதுகாப்பாக தப்பிக்க வைக்கிறார்கள். ஆனால், அவர்கள் தப்பி செல்வதை பார்த்த பீமன் தன் படையோடு பின் தொடர்ந்து செல்கிறான். அவர்களை திசை திருப்ப இளையபல்லவன் அவர்களோடு சண்டை போடுகிறான். பலத்த காயங்களுடன் உயிரை துச்சமாக மதித்து இளையபல்லவன் சண்டை போட்டுக் கொண்டு இருக்க, இளையபல்லவன் நிலையை நினைத்து கடலில் காஞ்சனை பயணம் செய்வது போல் முதல் பாகம் முடிகிறது.

முதல் பாகத்தில் காட்சி விபரங்களை விட மிகவும் ரசித்தது வசனங்களை தான்.

காஞ்சனை அறையில் மறைந்திருந்த இளைபல்லவனை பார்த்து...
" நீ எதிரியா...?" காஞ்சனை.

"இல்லை"

" அப்படியானால் கள்வனாயிருக்க வேண்டும்"

"கள்வனுமல்ல..."

"அப்படியானால் தமிழனா ?"

இந்த கேள்வி மேலும் பிரபிப்பையே அளித்தது இளையபல்லவனுக்கு."கள்வனாயிராவிட்டால் தமிழனாயிருக்க வேண்டுமா ?" என்று வினவினான். தமிழர்களைத்தான் சில நாள்களாகக் கலிங்க அதிகாரிகள் சிறைக்குள் தள்ளி வருகிறார்கள்.


குணவர்மன் இளையபல்லவனிடம் தன் கதையை சொல்லும் போது, " இது உலக விசித்திரம். வேண்டாதவனிடம் பதவி ஒட்டிக் கொள்கிறது. வேண்டுபவனை வெட்டி விலக்கி தள்ளுகிறது." என்கிறார்.

நீதி மன்ற விசாரனையின் போது...

அனந்தவர்மன் " சோழர் வேறு இனம்; கலிங்கம் வேறு இனம்"
இளையபல்லவம் : மாந்தர் அனைவரும் ஒரே இனம் என்று தமிழர்கள் நினைக்கிறார்கள். தவிர இன்னொரு நாட்டவரின் அதிக்கத்தைவிட ஓர் இனம் தன் இனத்தின் மீதே நடத்தும் ஆதிக்கம் மிகக் கொடுமையானது. சரித்திரம் இதற்குச் சான்று.."
அனந்தவர்மன் : சரித்திரம் இதுவரை காணாத புதிய சான்றுகளை கலிங்கம் அளிக்கும்.


இந்த வசனத்தை படிக்கும் போது ஈழ பிரச்சனைக்கு கலிங்கம் முன் உதாரணமாக இருக்கின்றது என்று தான் தோன்றியது. பல இடங்களில் இப்படி பல ‘நச்’ வசனங்களும் உள்ளன.

பல ஆங்கில படத்தில் இருந்து கதை, வசனத்தை தழுவும் தமிழ் இயக்குநர்கள், இது போன்ற நாவல்களில் இருந்து கதை, வசனங்களை உரிமை வாங்கி எடுத்தால் எழுதுபவர்களுக்கு உத்வேகமாக இருக்கும்.

புத்தக வாசகர்கள் ‘கடல் புறா’ கண்டிப்பாக படிக்க வேண்டிய சரித்திர நாவல்.

LinkWithin

Related Posts with Thumbnails