வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, May 7, 2021

தலைவரின் மனைவி

எனது புத்தக அலமாறியில் நான் வாசிக்காமல், என் மனைவி வாசித்த ஒரே புத்தகம் துர்கா ஸ்டாலின் அவர்கள் எழுதிய “அவரும் நானும்” தான். 


என் மனைவி வாசித்து விட்டு அதிலிருக்கும் பல நிகழ்வுகளை சிலாகித்து கூறினார். Audio Bookஆக என் மனைவி மூலம் கேட்டுவிட்டதால், அந்த புத்தகம் படிக்கும் சுவாரசியம் எனக்கு குறைந்துவிட்டது. போதக்குறைக்கு Youtubeல் சரண்யா பொன்வண்ணன் இந்த புத்தகம் குறித்து பேசிய வீடியோ எனக்கு போட்டு காண்பித்தார். துர்கா ஸ்டாலினுக்கு பெரிய விசிறியாக என் மனைவி மாறிவிட்டார்.


அரசியல் தலைமைக்கு இந்திரா காந்தி, ஜெயலலிதாவையும், தொழிலதிபர்களுக்கு இந்திரா நூயி போன்ற பெண்களை முன் மாதிரியாக சொல்வார்கள். ஆனால், ஒரு குடும்ப தலைவியாக யாரையும் இங்கு முன் மாதிரியாக சொல்வதில்லை. அப்படி ஒருவரை சொல்ல வேண்டுமென்றால் நிச்சயம்  ’துர்கா ஸ்டாலின்’ அவர்களை சொல்லலாம்.


பகுத்தறிவு தலைவர் வீட்டில் கடவுள் நம்பிக்கையுள்ள மருமகளாக அடியெடுத்து வைத்து, தனது கடவுள் நம்பிக்கை சோதனைக்குள்ளாகும் என்று அஞ்சியிருப்பார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. கலைஞரும் சரி, ஸ்டாலினும் சரி தங்கள் கொள்கையை வீட்டில் சொல்லியிருப்பார்கள், திணிக்கவில்லை. மேடையில் மட்டும் பெண் உரிமையைப் பற்றி பேசாமல் தங்கள் வீட்டு பெண்களுக்கு முழு சுதந்திரத்தை கலைஞரும், ஸ்டாலினும் கொடுத்திருக்கிறார்கள். (தம் வீட்டு பெண்களை அடிமையாக நடத்தும் ஆணாதிக்க மனோபாவம் கொண்டவர்களுக்கு இது புரியாது.)




பல முறை தலைவரின் பகுத்தறிவும், தனது மனைவியின் கடவுள் நம்பிக்கையையும் விமர்சனத்திற்குள்ளாகும் போதுகூட தனது மனைவியை கோயிலுக்கு போக வேண்டாம் என்று சொன்னதில்லை. பலர் விமர்சிப்பார்கள் என்று தெரிந்தும், தனது மனைவியை அத்திவரதரைப் பார்க்க அனுமதித்தார். 


”நம் வீட்டு பெண்களை மனுஷியாக நடத்தினால், அவர்கள் நம்மை கோபுரத்தில் அமர வைப்பார்கள்” என்று ஒரு படத்தில் வசனம் வரும். அது இன்று ஸ்டாலின் பதவியேற்கும் போது துர்கா ஸ்டாலின் சிந்திய ஆனந்த கண்ணீரில் தெரியும்.


தி.மு.கவின் வெற்றிக்காக பலர் உழைத்திருக்கலாம். ஆனால், ஸ்டாலின் அவர்கள் பதவியேற்கும் நாளுக்காக பல வருடங்களாக பக்கபலமாக இருந்தவர் துர்கா ஸ்டாலின் அவர்கள்.


இன்று ஸ்டாலின் பதிவியேற்கும்போது துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் சிந்தும்போது எனது மனைவியின் ஆனந்தத்தை பார்த்தேன். ஒரு குடும்ப தலைவியின் வெற்றியை என் மனைவி கொண்டாடுவதை புரிந்தது. என் மனைவியைப் போல் சில பெண்கள் துர்கா ஸ்டாலின் அவரது புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்வதைப் பார்த்தேன்.


கலைஞரின் குடும்ப அரசியலை விமர்சனம் செய்யும் வேலையில் அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அழகியலை நீங்கள் ரசிக்க மறந்திருப்பீர்கள். குமுதம் youtubeக்காக துர்கா ஸ்டாலின் கொடுத்த பேட்டியைப் பார்க்கவும்.


பாகம் 1

பாகம் 2


Monday, May 25, 2020

Extreme Job (Korean – 2019)

திரில்லர் வகையான கோரியன் படம் பார்த்து போர் அடித்து கண்ணில்பட்டப் படம் Extreme Job. ஜாலியான அக்ஷேன் காமெடிப்படம்.



போதை தடுப்பு பிரிவில் எதற்கும் உதவாத ஐந்து பேர் கொண்ட குழு. அந்த போலீஸ் குழுவை கலைத்துவிடலாம் என்று மேல் அதிகாரி நினைக்கிறார். சக அதிகாரியின் உதவியோடு பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவனை பிடிக்க கடைசி வாய்ப்பாக வழங்கப்படுகிறது. அந்த தலைவனை பிடிக்க Undercover Operationல் ஒரு ஹோட்டல் தொடங்குகிறார்கள். அந்த ஹோட்டல் பெரிய ஹிட்டாக வாடிக்கையாளர் வந்து குவிகிறார்கள். வாடிக்கையாளர் அதிகமாக வரும் ஹோட்டலில் இருந்துகொண்டு, அவர்கள் எப்படி போதைப்பொருள் கடத்தல் தலைவனை பிடிக்கிறார்கள் என்பது மீதிக் கதை.

மே 2019 வரை, தென் கோரியா சினிமா வரலாற்றில் மக்கள் அதிகமாகப் பார்க்கப்பட்ட இரண்டாவது படம் இதுதான். 5.8 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் 120 மில்லியன் டாலர் வசூலிக்கப்பட்டது.

இந்தப்படம் தமிழில் கண்டிப்பாக வரும். ஆனால், உரிமம் வாங்கியா? வழக்கம்போல் Inspirationஆக வருமா? என்பது மட்டும்தெரியவில்லை.

Friday, May 15, 2020

Breaking Bad

வேகமாக செல்லும் திரைக்கதை கிடையாது. அதிகமான கதாப்பாத்திரங்கள் கிடையாது. ஒரு காட்சியை பார்க்காவிட்டால் கதை புரியவில்லை என்ற கவலை கிடையாது. பல இடங்கள் forward செய்து பார்க்கலாம். அந்த அளவுக்கு தேவையில்லாத நீளமாக காட்சிகள். சில இடங்களில் நம்மவூர் மெகா சீரியலை நினைவுப்படுதலாம். 

Game of Thrones, Prison Break, Money Heist அளவிற்குக்கு Breaking Bad எனக்கு பிடிக்கவில்லை. விறுவிறுப்பு இல்லாத திரைக்கதை என்பது ஒரு காரணம் என்று சொல்லலாம். Television / Web Series என்றாலே வேகமாக எடுப்பார்கள் என்ற பிம்பத்தில் இருந்தேன். ஐந்தாவது சீசன் மட்டும் கொஞ்சம் பிடித்திருந்தது.

   

பூற்றுநோய்யால் மரணத்தை நெருங்கும் நாயகன், மரணத்திற்குமுன் தன் குடும்பத்திற்கு பணத்தை சேர்த்து வைக்க பொருளை தயாரிக்கிறான். இறுதிக்காட்சியில், குடும்ப பொருளாதாரத்தை காக்கா போதைப் பொருள் தயாரிக்கிறேன் என்று கூறியவன், எனக்காகதான் செய்தேன் என்றேன் உண்மையை மனைவியிடம் ஒத்துகொள்கிறான். தன் வாழ்நாள் முழுக்க தோல்வியடைந்த வியாபாரியாக, ஒரு குடும்ப தலைவனாக மட்டும் இருந்துவிடக் கூடாது என்று மரணத்தை நெருங்கும்போது தோன்றுகிறது. அந்த எண்ணம் அவனது கட்டுப்பாட்டை தாண்டி, தனக்கான சம்ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்ற அளவுக்கு செல்கிறது. நாயகனின் கதாப்பாத்திரத்தின் உண்மையான உணர்வுகள் கடைசி சீசனில் புரிய வருகிறது. 

2013ல் அதிகப்பேரால் பாராட்டப்பட்ட தொடர் என்ற ரீதியில் Breaking Bad கின்னஸ் சாதனை பெற்றுயிருக்கிறது. 

அதற்கு பல முக்கியக் காரணங்கள் இருக்கிறது. ஆங்கில Seriesல் குடும்ப உறவுகளை, அதை தக்க வைத்துகொள்ளும் முயற்சிகள் பெரும்பாலும் கவனம் செலுத்துவதில்லை. அதை இந்த Series செய்கிறது. மகன் – தந்தை, கணவன் – மனைவி, சகளைகள் என்று நெருக்கடியான நேரங்கள் உதவும் உறவுகள், அவர்களே எதிரியாக மாறும் நிகழ்வுகள் என்று Sentiment இருக்கிறது. அடுத்து, பின்னனி இசை. Series தேவையான க்ரைம் நிகழ்வுகளும் இருக்கிறது. 

வேகம், விறுவிறுப்பு பிரியர்களாக இருந்தால், கண்டிப்பாக இந்த சீரியஸ் உங்களுக்கு பிடிக்காது. Drama விரும்பியாக இருந்தால், Breaking Bad உங்களுக்கு பிடிக்கும்.

Tuesday, May 12, 2020

Prison Break - Television series

ஆள் ஆளுக்கு Money Heist பற்றி புகழ்ந்துகொண்டிருக்கும் போது அதைவிட சிறந்த Series பல இருக்கிறது. அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை என்று குறைப்பட்டுகொண்டார்கள். அதில் முக்கியமான Series - Prison Break

இது Web series அல்ல. Television series.

அதனால் சீசனுக்கு 7-8 Episode கிடையாது. ஒவ்வொரு சீசனுக்கும் 22 Episodes மேல் இருக்கிறது. கடைசி சீசன் மட்டும் 9 Episode.

மொத்தம் 5 சீசன். 90 Episodes.




முதல் 10 Episodes பார்த்த போது இதபொய் ஏன் பெரிதாக சொல்கிறார்கள் என்று தோன்றியது. ஒரு நாளுக்கு 2-3 Episodes தான் பார்த்தேன். ஆனால், அதன்பிறகு இந்த series பிடித்த வேகம் அதிகம். ஒரு நாளுக்கு 9-10 Episodes பார்த்தேன்.

ஐந்து நாட்களில் நான்காவது சீசன் பாதிக்கு மேல் பார்த்துவிட்டேன்.

சீசன் 2, 3 Ultimate Jet வேகம். ஒவ்வொரு Episodeல் நாயகன் திட்டம் போட்டது நடக்கவில்லை. ஆனால், அதற்கு மாற்றாக இன்னொரு வழி கிடைக்கிறது. எதிரியும் பலமான எதிரி என்பதை விட நிழல் எதிரியாக இருக்கிறான். அதுவும் ஸ்வாரஸ்யம் அதிகமாகிறது. போன சீசனில் எலியும், பூனையுமாக இருந்தவர்கள் சேர்ந்து வேலைச் செய்ய வேண்டியதாக இருக்கிறது. துரோகம், கிரோதம், பேராசை, அதிகாரம் என்று எல்லாம் சேர்ந்த நட்பை பல இடங்களில் பார்க்க முடிகிறது.

இதில் வரும் ஒரு காட்சியை விளக்கினாலே Spoiler ஆக இருக்கும் அளவிற்கு திரைக்கதை. நம்ப ஆட்கள் இரண்டு மணி நேர படத்திற்கு திரைக்கதை அமைக்க திண்டாடிக்கொண்டிருக்கும்போது எப்படி 70 மணி நேர seriesக்கு நேர்த்தியான திரைக்கதை அமைக்க முடிகிறது என்று தெரியவில்லை.

சீசன் 4 – 14 Episodeக்கு மேல் கொஞ்சம் பரபரப்பு குறைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த சீசனுக்கான முக்கியமான நோக்கம் 13வது Episodeல் முடிவைந்துவிட்டால், தேவையில்லாமல் இழுத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். அல்லது எப்படி முடிக்க வேண்டும் என்று முடிக்கதெரியாமல் இருந்தார்கள் என்று சொல்லலாம். இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படி ஓட வேண்டும் என்று நாயகனுக்கு சலிப்பு வருவதுபோல் நமக்கு வருகிறது. எப்படியும் என்ன முடிவு என்பதை தெரிந்துகொள்ள மீதம் இருக்கும் Episode பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

சீசன் 5 ஒ.கே ரகம் தான். முந்தைய சீசன் 2,3ல் இருந்த பரப்பரப்பு அதிகமாக இல்லை. சீசன் 6 வரும் ஆரம்பத்தில் வரும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால், 20th Century Fox Television நிறுவனம் Prison Break, 24 – இரண்டு Television series அடுத்த சீசன் பணிகளை தொடங்கவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள்.

பார்க்க விரும்புபவர்கள் Disney Hotstarல் இருக்கிறது. பார்க்கலாம்

Thursday, April 30, 2020

இரண்டு கன்னட திரில்லர் படங்கள்

Low Budgetல் படம் நல்ல திரைக்கதை அமைக்கும் படங்களில் கன்னடப் படங்களில் பார்க்க முடிகிறது.

ஒரு காலத்தில் வேறு மொழி படங்களில் உரிமை வாங்கி ரீ-மேக் செய்த காலம் சென்று, தற்போது குறைந்த செலவில் Minimum Guarantee படங்களை கொடுத்திருக்கிறார்கள்.



Nanna Prakara

நம்ம ஊர் கிஷோர், பிரியாமணி நடித்தது. விஸ்மா என்ற பெண் காணவில்லை என்று அவள் நண்பர்கள் போலீஸில் புகார் கொடுக்கிறார்கள். கார் அவள் விபத்தில் இறந்ததாக போலீஸ் நம்புகிறது. பின்பு, அது கொலை இருக்குமோ என்று சந்தேகம் வர, அது விபத்தாக இருக்கும் என்று அவளுடைய காதலன் கூறுகிறான். அவளுடைய காதலன் விஸ்மா கற்பமாக இருந்ததாக கூறியிருக்கிறான். ஆனால், போஸ்ட்மார்டன் ரிப்போட்டில் அவள் கற்பமாக இல்லை. அப்படியென்றால், நடந்தது விபத்தா? கொலையா? இறந்தது யார்? என்று பல முடிச்சுகள் இறுதியில் தெரியும்.

Birbal Case No. 1: Finding Vajramuni

படம் வெளியிடும்போது இது மூன்று பாகத்திற்கான படம் என்று தலைப்பு சொல்கிறது. ஆரம்பக்காட்சியில் ஒரு கால் டாக்ஸி டிரைவர் கொல்லப்பட, அதை வழியில் செல்லும் சென்ற இளைஞன் போலீஸிடம் தெரிவிக்கிறான். போலீஸ் அந்த இளைஞனை குற்றவாளியாக்கி கைது செய்து எட்டு வருட தண்டனை பெற்று தருகிறார்கள். எட்டு வருட சிறை வாழ்க்கை முடிந்து அந்த இளைஞன் வெளியே வருகிறான். முடிந்துப்போன இந்த வழக்கை வழக்கறிஞர் மகேஷ் தாஸ் உண்மை கண்டுபிடிக்கிறார். ஒரு வாரம் முன்பு நடந்ததே பலருக்கு நினைவில் இல்லாமல் இருக்கும்போது, எட்டு வருட முன்பு இருந்த சம்பவங்களை நினைவில் வைத்து கூறுவது கொஞ்சம் Logic உதைக்கலாம். ஆனால், இறுதி வரை யார் குற்றவாளி என்று நீங்கள் கண்டுபிடித்திருக்க மாட்டீர்கள். New Trial கோரியன் படத்தில் காபி என்பது இந்த இடத்தில் சொல்ல வேண்டும்.

இரண்டு படங்களுமே ரொம்ப சிம்பிள் திரில்லர் படம். ஒரு முறை பார்க்கலாம்.

Wednesday, April 29, 2020

Inside Edge - Season 1 & 2

ஐ.பி.எலில் நடந்த உண்மை சம்பவங்களையும் சேர்த்து நல்ல திரைக்கதை அமைத்து web seriesaஆக வந்திருக்கிறது. விவேக் ஒப்ராய் தவிர தெரியாத முகங்களாக பலர் இருந்தாலும் மூன்று எபிசோட் பிறகு எல்லாப் பாத்திரங்களும் நமக்கு பழகிவிடுகிறது.


மைதானத்தில் பார்க்கும் விளையாட்டை விட அதன்பின்னால் இருக்கும் அரசியல், ஆய்வு, அலப்பரை எல்லாம் இந்த web seriesல் பார்க்க முடிகிறது. குறிப்பாக, ரோகினி ராகவன் என்கிற chief analyst பாத்திரம் கிரிக்கெட் சம்மந்தமான வந்த எந்தப் படங்களில் காட்டியதில்லை.

ஐ.பி.எல் பிரியர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

சில காட்சிகள், வசனங்கள் 18+ என்பதால் தனியாகப் பார்ப்பது நல்லது.

Tuesday, April 21, 2020

Helpless (2012 - Korean film)

வணக்கம் தலைவா” (2005) என்ற படம். சத்யராஜ், அப்பாஸ், விவேக் நடித்தது. ஆரம்பக் காட்சியில் அப்பாஸ் காதலிக்கும் பெண்ணை சத்யராஜ் கடத்துவார். பின்பு, அப்பாஸ் தனது காதலியை தேடி அலைவார். சத்யராஜ் விதவிதமான கெட்டப்பில் அப்பாஸ்யை ஏமாற்றி கொண்டே இருப்பார். அப்பாஸூக்கு உதவி செய்ய போலீஸ் அதிகாரியாக விவேக் வருகிறார். ஒரு கட்டத்தில் அப்பாஸ் தனது காதலியை கண்டுபிடித்து போலீஸூடன் வர, அப்பாஸின் காதலி தன்னை சத்யராஜின் மனைவி என்று அறிமுகப்படுத்தி கொள்வாள். அதுதான் Interval Block.

மீதி படத்தை Youbtubeல் பார்க்கலாம். நல்ல கதைக்கு மிக மொக்கையாக திரைக்கதை அமைத்து சொதப்பியிருப்பார்கள்.



Helpless படத்திற்கு வருவோம். படம் முழுக்க ”வணக்கம் தலைவா” படத்தில் முதல் பாதி கதைதான். ஆரம்பக்காட்சியில், தனது வருங்கால மனைவியை அப்பாவுக்கு அறிமுகப்படுத்த தனது சொந்த ஊருக்கு காரில் அழைத்து செல்கிறான். ஒரு உணவு விடுதியில், நாயகிக்கு போன் வருகிறது. ஹீரோ திரும்பி வரும்போது காரில் தனது காதலி இல்லை. அவளை பல இடங்களில் தேடுகிறான். அவனுக்கு உதவியாக ஒரு போலீஸ் வருகிறார். அவளை தேடும்போது தனது காதலியைப் பற்றி தெரியாத பல தகவல்கள் அவனுக்கு தெரிய வருகிறது.

மிக ஸ்வராஸ்யமான திரைக்கதை. அவசியம் பார்க்க வேண்டியப்படம்.

2005ல் தமிழில் வந்த மொக்கப்படத்திற்கு எப்படி கொரியன்காரன் அற்புதமாக திரைக்கதை அமைத்தார்கள் என்று யோசிக்க வேண்டாம். இந்தக் கதை “All She Was Worth” (1996) என்ற நாவலை மையமாக கொண்டப்படம். நம்ப ஆட்கள் மசாலா தடவி கதையை கெடுத்திருப்பார்கள். அவ்வளவுதான்.

Wednesday, March 4, 2020

Seven Years of Night (2018) - Korean Movie

தென் கொரிய எழுத்தாளரான Jung Yoo-jung எழுதிய Seven Years of Night என்ற நாவலை அடிப்படையாக கொண்டு அதே தலைப்பில் வெளியானப் படம்.

ஒரு ஊரையே விழும் ஏரியில் காட்சி தொடங்குகிறது. அந்த ஏரியில் குதிப்பவர்கள் அந்த ஏரி உயிரை வாங்கிவிடும் என்று பேசிக்கொள்கிறார்கள். அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ஒரு இளைஞன் ஏரியில் குதிக்கிறான். Seven Years of Night என்ற டைட்டில் கார்ட் வருகிறது.

பிரிந்து சென்ற தனது மனைவி மீது இருக்கும் கோபத்தை தனது மகளை மீது தினமும் அடித்து துன்புருத்துகிறான் மருத்துவர். தனது தந்தையை போல் இல்லாமல் தனது மகனுக்கு நல்ல அப்பாவாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து நடந்துகொள்கிறான் இன்ஜினியர்.



ஒரு நாள் இரவு சாலையில் இருவரும் ஒருவரை ஒருவர் கார் மூந்துவதில் அறிமுகம் தொடங்குகிறது. அந்த இரவின் நீட்சியில் ஒரு விபத்து நடக்க, மருத்துவரின் மகள் மீது இன்ஜினியர் கார் மோத அவள் இறக்கிறாள். பல நாள் தனது மகளை கொடுமைப்படுத்திய மருத்துவர் தனது மகளை கொன்றுருப்பார் என்று போலீஸ் சந்தேகப்படுகிறார்கள். அதனால், தனது மகளை கொன்றவனை தானே கண்டுபிடிப்பதாக மருத்துவர் முடிவெடுக்கிறார்.

ஒரு சிறுமியை கொன்ற குற்றவுணர்வில் இன்ஜினியர் தனது வழக்கத்துக்கு மாறான இயல்பில் நடந்துகொள்கிறான். இவர்கள் இருவருக்குள் நடக்கும் போராட்டத்தில் ஒரு கிராமமே அழிகிறது.

த்ரில்லர் வகைப் படமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் பார்வையாளனை கட்டிப்போடுகிறது. எதோ அமானுஷ்யம் ஒழிந்துகொண்டிருப்பது உணர்வைம் ஏற்படுத்துகிறது. ஆனால், அப்படியில்லாமல் இருவருக்குள் நடக்கும் பாசப் போராட்டமும், அதனால் விளையும் பழிவாங்கும் நடவடிக்கைதான் திரைக்கதையாக அமைகிறது. ஆரம்பக்காட்சியில் மனித உயிர்களை குடிக்கும் ஏரி சொன்னதற்கு இறுதி காட்சிக்கு முன் நடக்கும் சம்பவங்கள் விளக்குகிறது.

தனது மகளின் மரணத்திற்கு ஏழு வருடங்களாக காத்திருந்து பழிவாங்கும் போது நியாயம், தர்மம் எதுவும் உதவுவதில்லை. படித்த மருத்துவப் படிப்பு கூட உதவவில்லை என்பது மருத்துவர் பாத்திரம் காட்டுகிறது. மகளின் மரணத்திற்கு பழிவாங்கும் நினைக்கும் தந்தை ஒரு நாள் கூட மகளிடம் பாசமாக நடந்துகொள்ளவில்லை. தனது மனைவி மீது இருந்த கோபத்தைதான் காட்டுகிறான். அப்படிப்பட்டவன் ஏழு வருடங்களாக காத்திருந்து பழிவாங்கும் நடவடிக்கை கொஞ்சம் முரணாக தெரியலாம். இறுதுகாட்சியில், தன்னை வெறுக்கும் மனைவியை எவ்வளவு காதலிப்பதாக கூறும்போது அவன் மனதுக்குள் இருக்கும் அன்பு எப்படி பழிவாங்கும் உணர்வாக மாறியிருப்பது புரிகிறது.

ஏரியை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்க நினைக்கும் இயக்குனர்கள் கண்டிப்பாக இந்தப்படங்களை பார்க்க வேண்டும்.

Wednesday, February 26, 2020

The Forgetten Army - Web Series

ஐ.என்.ஏ குறித்து சொல்லும்போது நேதாஜியோடு தொடர்புடையாதாகவே படங்கள் வந்திருக்கிறது. அல்லது கதையில் ஐ.என்.ஏ ஒரு பகுதியாக வந்திருக்கிறது.

‘The Forgetten Army‘ ஐ.என்.ஏ தொடங்குவதற்கும், முடிந்தப் பிறகுமான படம்.

சிங்கப்பூரில் ஜப்பானியர்களால் கைதான இந்திய பிரிட்டிஷ் இராணுவத்தினர் ஐ.என்.ஏவில் சேர்கிறார்கள். பலருக்கு ஜப்பானியர்கள் தங்களை எப்படி நடத்துவார்கள், அவர்கள் தங்களை பயன்படுத்துகொள்வார்கள் என்ற அச்சமிருந்தது. ஆனால், நேதாஜியின் பேச்சை கேட்டு பலரும் ஆரம்பவமாக ஐ.என்.ஏவில் சேர்கிறார்கள்.



பர்மா வரை முன்னேறிய ஐ.என்.ஏ ஜப்பானின் தோல்வியால் போரில் முன்னேற முடியாமல் போகிறது. அனைவரையும் முடிந்த வரை பர்மாவுக்குள் தப்பி செல்லுங்கள் என்று அறிவுரைக் கூறப்படுகிறது. ஒரு சிலர் பிரிட்டிஷ் படையை எதிர்கொள்ள வேண்டும் என்று போரிட்டு இறக்கிறார்கள். 1996ல் பர்மாவில் யுத்தத்திற்காக நிலைமை மாறாமல் அப்படியே இருக்கிறது.

இரண்டு காலக்கட்டத்தில் கதை தொடர்புபடுத்திய திரைக்கதை அமைந்திருக்கிறது.

ஒரு காலத்தில் ஐ.என்.ஏ சமூக விரோதிகளாக பார்க்கப்பட்டார்கள் என்பதையும், இன்றைய போராளிகள் சமூக விரோதிகள் என்று முத்திரை குத்தப்படும் சூழ்நிலை மாறவேயில்லை.

சுதந்திர அடையும் போராட்டத்தை விட பெற்ற சுதந்திரத்தை தக்க வைத்துகொள்ளும் போராட்டம் மிகவும் கடினம் என்பதை ‘The Forgetten Army‘ web series உணர்த்துகிறது.

Monday, February 10, 2020

கலாவிக் ( அறிவியல் புனைவு)

சுஜாதா பிறகு தமிழில் அறிவியல் புனைவு இவ்வளவு ஜாலியாக யாரும் எழுதியில்லை.

இரண்டு மணி நேரத்தில் வாசித்து விடலாம்.ஆகஸ்ட், 2020 புவி கிரகத்தில் ஐந்து பேர் கொண்ட குழு அண்டார்டிக்காவில் ஆராய்ச்சி மேற்கொள்கிறார்கள். 2368 கி.பி ஆண்டில் கலாவிக் என்ற கிரகத்தில் இயந்திர மனிதனை டாக்டர் நீனா என்ற பெண் ஆராய்ச்சி செய்கிறாள். புவியில் இருக்கும் விஞ்ஞானியில் நினைவுகள் கலாவிக் கிரகத்தில் இருக்கும் இயந்திர மனிதனுக்கு வருகிறது. இயந்திர மனிதனுக்கு இருக்கும் நினைவுக்குள் புவி கிரகத்தில் இருக்கும் விஞ்ஞானிக்கு வருகிறது. இரண்டு நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் நடக்கிறது.

எதிர்காலத்தில் இருந்த ஒருவனுடைய நினைவு எப்படி நிகழ்காலத்தில் வாழும் மனிதனுக்கு வந்தது? நிகழ்காலத்தில் வாழும் மனிதனின் நினைவு எப்படி எதிர்காலத்தில் வாழும் இயந்திர மனிதனுக்கு வந்தது? டாக்டர் நீனா, விஞ்ஞானிகள் எல்லோரும் குழம்புகிறார்கள். அதன்பிறகு என்ன என்பதை நாவலை வாசிக்கவும்.

இலக்கிய நாவல், வரலாற்று நாவல், குடும்ப பெண்கள் நாவல் என்று அதற்காக தனி வாசகர் கூட்டம் இருக்கிறது. ஆனால், அறிவியல் புனைவுக்கு வாசகர்கள் இருந்தாலும் அவர்களுக்கான படைப்புகள் தொடர்ந்து வராமல் இருப்பது துரதிஷ்டம்தான். அந்த துரதிஷ்டத்தை போக்க “கலாவிக்” சரியான நாவலாக இருக்கும்.

நாவலின் குறை என்று சொன்னால் புத்தகத்திற்கு பயன்படுத்திய Fontம், பக்க வடிவமைப்பும் தான் சொல்ல வேண்டும். மிகவும் சுமார்.

ணையத்தில் வாங்க...

Thursday, March 14, 2019

தைரியமே ஸ்ரீ லட்சணம் !!

’பாபநாசம்’ படம் வெளிவந்த சமயம். 

ஒரு பெண் எழுத்தாளரிடம் பேசும் போது அவர் கூறியது, 

“பாபநாசம் தவறான கருத்த சொல்லுது. தான் குளிக்கிறத படம் எடுத்தவன நினைச்சு அந்த பொண்ணு எதுக்கு பயப்படனும். எதுக்காக கொலை செய்யனும்? தான் குளிக்கிறத அனுமதியில்லாம படம் எடுக்குற ஆண்ணுக்கு இல்லாத வெக்கமும் பயமும், பெண்ணுக்கு எதுக்கு வரனும்? இதுல அந்தப் பொண்ணு மேல என்ன தப்பு இருக்கு? தப்புயில்லாத போது எதுக்கு பயப்படனும்” 

“அந்த வீடியோ வந்தா தன் குடும்பத்துக்கு அவமானம் நினைக்கிறது இயல்பு தானே!” என்றேன். 

“அந்த அவமானத்த இன்னும் எத்தன நாளைக்கு இந்த சினிமா விதைக்கப் போகுது. அவள் அனுமதியில்லாம எடுக்குற வீடியோவுக்கு அவ எப்படி பொறுப்பாக முடியும். வீடியோ எடுத்தவன திட்டனும். போலீஸ் கம்ளைண்ட் கொடுக்கனும். அப்படிதான் படம் எடுக்கனும். அப்போதான் இந்த நிலமை மாறும்.” என்றார். 

ஒரு வேலை ’பாபநாசம்’ படத்தில் அந்தப் பெண் தைரியமாக இருந்திருந்தால்… 

”உனக்கு தெரியாம. நீ குளிக்கிறத வீடியோ எடுத்திருக்கேன். நான் சொன்னப்படி கேக்கலனா… நான் நெட்டுல போட்டுடுவேன்.” 

“போட்டுக்கோ போடா…” என்று அந்தப் பெண் தைரியமாக சொல்லி அவள் வேறு வேலை பார்க்க சென்றிருந்தால், அவன் இணையத்தில் வீடியோவை பகிர்ந்திருப்பான். தைரியமானப் பெண் கண்டிப்பாக காவல்துறைக்கு புகார் கொடுத்திருப்பாள். இன்னும் தைரியமானப் பெண்ணாக இருந்திருந்தால், அவன் இணையத்தில் ஏற்றும் முன்பே புகார் கொடுத்திருப்பாள். 

 வீடியோ எடுத்தவன் கைது செய்யப்பட்டிருப்பான். அவனுடைய குடும்பம் ஊர் முன்னால் அசிங்கப்பட்டிருக்கும். 

இணையத்தில் ஏற்றப்பட்ட குளிக்கும் வீடியோவை இரண்டு நாட்களில் நீக்கிவிடலாம். அதை எடுத்தவன் வாழ்நாள் முழுக்க பெற்றவர்களை கூட சந்திக்க முடியாமல் தவத்திருப்பான். 

அன்று அந்தப் பெண் எழுத்தாளர் சொன்னதை பொள்ளாச்சி கற்பழிப்பு சம்பவத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கிறேன். நான்கு பேர் கைதால் இந்தப் பிரச்சனை முடியப் போவதில்லை. இன்னும் நமக்கு தெரியாமல் எங்கோ ஒரு பெண்ணுக்கு அநீதி நடந்துகொண்டுதான் இருக்கிறது. 

பொள்ளாச்சி சம்பவத்தை ஒரு தந்தையாக எதோ ஒரு நாள் செய்தியாக இதை கடந்துப் போகமுடியாது. 

ஒரு வேலை காதலிக்கும் போது, அந்தப் பெண் அனுமதியோடு எடுத்த வீடியோவை வைத்து மிரட்டினால்… அந்தப் பெண் பயப்பட்டுதான் ஆக வேண்டுமே ! என்று நீங்கள் கேட்கலாம்.

அந்தப் பெண் காதலித்த நபர் தவறானவன். அந்த போலி காதலின் மிரட்டலுக்கு பயப்படுவதை விட பெற்றோர்களிடம் சொல்லி இரண்டு அடி வாங்கிகொள்வது நல்லது. அந்த பிரச்சனையில் மீண்டு வர வழி கிடைக்கும். 

போலீஸோ அல்லது அடியாளோ வைத்து மிரட்டினால் வீடியோ எடுத்தவனே தனது மொபைலிலிருந்து டெலிட் செய்வான். அதையும் மீறி அவன் வெளியிட்டால் என்ன செய்வது? சொந்த கணக்கில் tweet போட்டதை Admin போட்டதாக சொல்லும் உலகத்தில் வாழ்கிறோம். அந்த வீடியோவில் நீங்கள் இல்லை என்று மறுப்பது பெரிய விஷயமில்லை. 

Good Touch, Bad Touch சொல்லிக் கொடுப்பது போல் இந்த டிஜிட்டல் உலகத்தில் பெண் பிள்ளை தைரியத்தை அதிகமாக சொல்லி வளர்க்க வேண்டும். ஒரு முறை இதுப் போன்ற ஆட்களின் மிரட்டலுக்கு பயந்தால், உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தை அவன் தீர்மானிப்பான் என்பதை புரிய வைக்க வேண்டும். 

பெண்களுக்கு தெரியாமல் பெண்களை வீடியோ எடுத்ததில் அவர்களின் தவறேதுமில்லை. ஆனால், மோசடி ஆட்களின் மிரட்டலுக்கு அடிபணியும் போது தான் பெண்களின் வாழ்க்கைக்கான தவறுகள் தொடர்கிறது. இதை பெண் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். 

”உன் அனுமதியில்லாம இல்ல அனுமதியோட… உன்ன போட்டோ, வீடியோ எடுத்தா அதுக்கு நீ பொறுப்பு இல்ல. தைரியமா இரு. எங்க கிட்ட வந்து சொல்லு.” என்று பெண் பிள்ளைகளுக்கு தைரியம் கொடுப்பது பெற்றோர்களின் கடமை. 

”ஒரு பெண்ணை அவள் அனுமதியில்லாமல் வீடியோ/போட்டோ எடுத்தால், உன்ன அரஸ்ட் பண்ணி ஜெய்யில போடுவாங்க. உன் வாழ்க்கையே பொய்விடும்” என்று ஆண் பிள்ளைகளுக்கு பயமுறித்து வளர்க்க வேண்டும். 

தைரியமாக வளர்க்க பெண் பிள்ளைகளை பயமுறுத்தி வளர்ப்பதும், தவறு செய்ய பய முறுத்தாமல் ஆண் பிள்ளைகளை தைரியமா வளர்க்கும் வரை இந்தப் பிரச்சனைகள் தொடரும்.

Wednesday, November 28, 2018

We Can Books இரண்டாம் ஆண்டில்

நாளை (நவம்பர் 29) We Can Books முதல் வருடத்தை நிறைவு செய்து இரண்டம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 

ஒரு அலுவலகத்தில் பணிப்புரிந்து கொண்டு இதையெல்லாம் செய்கிறோமே என்ற சிறு உறுத்தல். ஒரே சமயத்தில் இரண்டு இன்னிங்ஸ் ஆடுபவன் மீது இந்த சமூகம் எப்போதும் பொறாமையை கண்ணோட்டத்தோடு பார்க்கும். இதையெல்லாம் மீறி புத்தகக் கடை எப்படி நடத்தப்போகிறோம் என்ற அச்சம் உள்ளூர இருந்தது. 





புத்தகக் கடை தொடங்கலாம் என்று யோசனை வரும் போது பலர் கூறியது கூட்டம் நடத்துவதற்கான இடமாக இருக்க வேண்டும். நூல் வெளியிட்டு விழா, விமர்சனக் கூட்டம் நடத்துங்கள். பிரபலங்களை அழையுங்கள். இன்று பல புத்தகக் கடை அப்படி தான் பிரபலமாகியிருக்கிறது. அப்ப்பப்பா.. எத்தனை யோசனைகள். அறிவுரைகள். 

முதலில் என்னால் புத்தகக் கடை நடத்த முடியுமா என்ற சந்தேகம் எனக்கே இருந்தது. மாத சம்பளத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட கடைக்கு செலவு செய்யக் கூடாது என்று எனக்கு நானே வைத்துகொண்ட நிபந்தனை. முதலில் என் மேல் எனக்கு இருக்கும் சந்தேகத்தை தன்னம்பிக்கையாக மாற்ற வேண்டும். இரண்டாவது, எனக்கு நான் வைத்துகொண்ட நிபந்தனையை நான் மீறக் கூடாது. 

புத்தகக் கடை என்றால் வாடிக்கையாளர்கள் வர வேண்டும். அதுவும் தி.நகரில் கடை. வாடகை அதிகம். உதவிக்கு வேலை ஆள் ஒருவர். அவருக்கு சம்பளம். அதுவும் புத்தகத்துறையில் ஆர்வமானவராக இருக்க வேண்டும். எப்படியும் மாதம் ரூ.35000-40000 வரை செலவு இருக்கும். 

குகன். ஒரு தனி மனிதன். எந்த இலக்கிய அமைப்பின் ஆதரவில்லை. அரசியல் பின்னனி கிடையாது. பூர்வீக சொத்து என்று எதுவுமில்லை. இங்கிருந்து வந்தவன் என்று என்னை அடையாளம் காட்ட முடியாது. 

”ஒரு இலக்கிய அமைப்போடு சேர்ந்து செயல்படுங்கள். அவர்கள் மூலம் பல வாடிக்கையாளர்கள் வருவார்கள்” என்றார்கள். அது தற்காலிகமாக வருமானத்தை கொடுக்கும். ஆனால், நான் செல்லவிருக்கும் தூரத்திற்கு பயணத்திற்கு ஒரு இலக்கிய அமைப்பு ஆதரவு மட்டும் போதாது. அப்படி என்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும் விரும்பவில்லை. 

 பலர் கொடுத்த யோசனைகள், அறிவுரைகள் ஒதுக்கிவிட்டு எனக்கு தோன்றிய ஒரு யோசனை தான் “Book Distributors”. 

பெரிய பதிப்பகங்களில் புத்தகங்களை மொத்தமாக அதிக கழிவில் வாங்கி புத்தக விற்பனையாளர்களுக்கு விற்பது. எதிர்காலத்தில் பதிப்பகங்களை விட சொந்தமாக நூல் வெளியிடும் எழுத்தாளர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். அவர்களால் எல்லாக் கடைகளுக்கும் புத்தகங்களை விநியோகம் செய்ய முடியாது. புத்தக விற்பனைக்கென்று ஒரு அலுவலகம் வைத்துகொள்ள முடியாது. அப்படி செய்ய முயற்சித்தால் அந்த எழுத்தாளரின் எழுதும் நேரத்தை பாதிக்கும். இந்த விஷயத்தை மனதில் வைத்து கொண்டு தொடங்கப்பட்டது தான் “We Can Books”. 

தற்போது வம்சி புக்ஸ், எதிர் வெளியீடு, மஞ்சுல், வளரி வெளியீடு என்று நான்கு பதிப்பக நூல்களை புத்தக விற்பனையாளர்களுக்கு (Cash & Carry Basisல்) கொடுத்து வருகிறோம். இன்னும் சில எழுத்தாளர்களில் புத்தகங்களை விநியோகம் செய்கிறோம். 

புத்தக விநியோகக்கடை என்பதால் வாசகர்கள் நேரடியாக வந்தால், புத்தகம் கொடுக்க மாட்டோம் என்பதில்லை. எங்களுக்கு புத்தக விற்பனையாளர்கள் எந்த அளவுக்கு தேவையோ, வாசகர்களில் நேரடி ஆதரவு தேவை. 

இரண்டாம் வருடத்தில் நுழைவது வெற்றி அல்ல… வெற்றியை நோக்கியப் பயணம். 

முகவரி : 
We Can Books 
57, Ground floor, PMG Complex, 
Near T.Nagar Bus Terminus 
T.Nagar, Chennai - 600017 
www.wecanshopping.com 
Ph : 9940448599, 044 - 4286 7570

Wednesday, August 8, 2018

புதிய பராசக்தி

இந்த நீதிமன்றம் பல வழக்குகளை கண்டுள்ளது, புதுமையான மனிதர்களை கண்டுள்ளது. இந்த வழக்கும் விசித்திரமானது அல்ல… 

வழக்காடவந்தவனும் நானும் புதுமையாவன் அல்ல… கோயிலில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கினேன், கடவுள் இல்லை என்று கூறினேன். பெண்களுக்கு சொத்துரிமை வழங்கினேன். இப்படியெல்லாம் குற்றச் சாட்டப்பட்டிருக்கிறேன். 

நீங்கள் எதிர்ப்பார்ப்பீர்கள் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று. இல்லை நிச்சமயாக இல்லை.

கோயிலில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கினேன். அனைத்து சாதியினர் புன்னியம் கிடைக்கவேண்டும் என்பதற்காக அல்ல. கோயில் ஒரு சாதியினருக்கு சொத்தாக மாறிவிடக்கூடாது என்பதற்காக. 

கடவுள் இல்லை என்று கூறினேன். அவர் எனக்கு அருள் வழங்காததற்காக அல்ல. கடவுள் என்ற பெயரில் பக்தியை வியாபாரமாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக… 

பெண்களுக்கு சொத்துரிமை வழங்கினேன். பெண்களின் வாக்குவங்கிகாக அல்ல. பெண்கள் ஆண்களுக்கு நிகராக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக… 

உனக்கு ஏன் அக்கரை. உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கரை. என்று கேட்பீர்கள். 

நான் பாதிக்கப்பட்டவில்லை. நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட இல்லை. 

நடிப்பு என்பீர்கள். என் நடிப்பிலும் நல்ல எண்ணமே கலந்துள்ளது. 

ஆகாரத்துக்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன் அதைப்போல. என்னை குற்றவாளி என்கிறீர்களே… இந்த குற்றவாளியின் வாழ்க்கை பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று தெரியும். 



பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில். படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருகின்றன. 

தென்றலை தீண்டியதில்லை நான். தீயை தாண்டியிருக்கிறேன். 

கேளுங்கள் என் கதையை. தீர்ப்பு எழுதுவதற்க்கு முன் தயவு செய்து கேளுங்கள். தமிழ்நாட்டிலே இந்த திருவாரூலிலே பிறந்தவன் நான்.

தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் விதிவிலக்கா? சென்னை என் உயிரை வளர்த்தது. அண்ணாவின் தம்பியாக்கியது. ஐந்துமுறை முதல்வராக்கி அழகு பார்த்தது. ஆறாம் முறை முதல்வராக்கி காவிகளுக்கும், பச்சை இலைக்கும் சவாலாக இருக்கலாம் என்று தேர்தலில் போட்டியிட்டேன். 

தம்பியாக இருந்த ஒருவன் ம.ந.கூட்டனி என்ற பெயரில் எதிர்கட்சி அம்மையாரை முதல்வராக்கினார். அவர்கள் சரியான ஆட்சி செய்தார்களா? செய்யும் ஒவ்வொரு வேலையும் லஞ்சத்தை தட்சணையாக கேட்டார்கள்.

மருத்துவனையில் அந்த அம்மையார் அனுமதிக்கப்பட்ட எல்லாவற்றையும் மர்மமாகவே நடத்தினர். முதல்வர் உயிரோடு இருக்கிறாரா என்ற மக்களின் கேள்விக்கும் பதிலளிக்காமல் இருந்தார்கள். 

முதல்வர் மரணத்திற்கு பிறகு முதல்வர் பதவியை பச்சை குழந்தை பந்தை தூக்கி விளையாடுவது போல் விளையாடினார்கள். இந்தியளவில் தமிழனின் மானத்தை பறக்கவிட்டார்கள். கூவத்தூர் ரெஸார்ட்டில் குடித்தனம் நடத்தினார்கள். 

’திராவிடம்’ என்ற பெயரில் சுயமரியாதை வளர்த்து ஆட்சி செய்தவன் முன் அடிமைகள் மத்தியிலிருப்பவர்களுக்கு அடிப்படிந்தனர். GST, Sterlite, NEET, எட்டு வழி சாலை என்று மக்கள் பிரச்சனைக்கு மௌனமாக இருந்தனர். 

மோடி வருகைக்கு கருப்பு கொடிக்காட்டினோம், 2ஜி வழக்கை காட்டி பயமுறுத்தினர். வழக்கில் வென்றெடுத்தோம். செயல் தலைவரை ஆட்சியை கலைக்காததால் செயல்ப்படாத தலைவர் என்றனர். 

வக்கீல்: குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார். 

இல்லை யார் வழக்கிற்க்கும் இல்லை. அதுவும் என் வழக்குதான். தமிழ்நாட்டு மக்களின் வழக்கு.

தமிழ் மொழிக்காக வாழ்க்கை முழுதும் போராடினேன். வங்கியிலும், தேர்விலும் ஹிந்தியை கட்டாயமாக்கினார்கள். போராடினேன். திருநங்கைகளுக்கு வாக்குரிமை வழங்கினேன். பெண்களை மானபங்கப்படுத்துவர்களுக்கு அடைக்களம் கொடுத்தார்கள். போராடினேன். 

பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தேர்தலில் முன்னுரை வழங்கினேன். மாட்டிறைச்சி என்ற பெயரில் பிற்படுத்தப்பட்டவர்களை தாக்கினான். போராடினேன். 

விமர்சனங்களுக்கு பதிலளித்து பழக்கப்பட்டவன் நான். கேள்வி எழுப்பும் விமர்சனர்களை மதத்தின் பெயர் கொண்டே அடக்க முயன்றனர். போராடினேன். 

போராடினேன்… போராடினேன்… நான் மடிந்தப் பிறகும் கல்லறை செல்லும் வரை போராடினேன். எனது போராட்டத்தின் கோரிக்கை நிறைவேற்றியிருக்க வேண்டும். சமூக சமநிலை உருவாக்கியிருக்க வேண்டும். அவர்கள் தான் செய்தார்களா ? நான் எதிர்த்ததை அனைத்தும் மீண்டும் கொண்டு வந்தார்கள்.

பணம் பறிக்கும் கொள்ளைக்கூட்டத்தை வளர விட்டது யார் குற்றம்? வாக்களித்த வாக்காளர்களின் குற்றமா ? நாம் தேர்வு செய்யாதவர்கள் ஆண்டு கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கும் மக்களின் குற்றமா ? 

சாமியார்களை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரை சொல்லி காலஷேபம் நடத்தும் காவிகள் குற்றமா? 

இந்த குற்றங்கள் களையப்படும் வரை கருணாநிதிகள் குறைய போவதில்லை. 

எனக்கு ஒதுக்குவதாக சொன்ன இரண்டு எக்கர் நிலத்தை பத்திரமாக பாதுகாத்துகொள்ளுங்கள். நாளை தமிழ்நாட்டு மக்கள் இந்த இடத்தை உங்கள் சடலத்திற்கு கூட தராமல் போகலாம்.

அடிமைகளை விரட்டுகள். காவிகள் தானாக திரும்பி செல்லும்…. 

வாழ்க திராவிடம்.

Wednesday, June 20, 2018

Tanna ( 2015 )

Tanna ( 2015 - Language : Nauvhal)

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பழங்குடியினர் மக்கள் பின்னனி கொண்டப் படம். 

படம் முழுக்க ஆண்களும், பெண்களும் அரையாடையில் வருவதால், உங்களால் ரசிக்க முடியாமல் போகலாம். முழுப் படமும் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஒவ்வொருவரின் முகமும் உங்களுக்கு அருவருப்பாக தோன்றலாம். ஆனால், இறுதிக்காட்சியில் நமது நெற்றிப்பொட்டில் அறைந்தது போல் இருக்கும். 

அப்படியென்ன பெரியக் கதை... 

பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பேர் காதலிக்கிறார்கள். எதிரி குழுவோடு சமரசரசப் பேச்சுவார்த்தையில் நாயகன் காதலிக்கும் பெண்ணை எதிரி குழுவில் ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார்கள். காதலர்கள் இருவரும் காட்டைவிட்டு ஓடிப்போகிறார்கள். நீண்ட நாள் அவர்களால் காட்டை விட்டு இருக்க முடியவில்லை. தங்கள் உறவுகளை பார்க்க மீண்டும் காட்டுக்குள் வருகிறார்கள். எதிர் குழுவினர்கள் தங்களை விடமாட்டார்கள் என்பதை உணர்ந்த காதலர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 



இது என்ன பெரிய விஷயம். பல தமிழ் படங்களில் வந்த கதைத்தானே என்று நினைக்கலாம். 

இறுதி காட்சியில், பழங்குடியில் தலைவர் “இனி நமது குழுவில் உயிர் பிரியாமல் இருக்க காதல் திருமணத்தை அங்கிகரிக்கப்படும்” என்கிறார். 

மீண்டும், இது ஒரு பெரிய விஷயமா என்று கேட்பீர்கள்.

1978 ஆண்டில் அந்த குழுவில் காதல் திருமணத்திற்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டதாக எழுத்துகள் போகும். 

எந்த நாகரிகம் இல்லாமல், தொழிற்நுட்ப வளர்ச்சிப் பற்றி தெரியாதவர்கள், ஆடை என்றால் என்னவென்று தெரியாதவர்கள்… இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லக் கூடிய பழங்குடியினர்கள் மக்களில் இருவர் காதலுக்காக தற்கொலை செய்துகொள்ளும் போது தங்கள் குழுவில் மாற்றம் கொண்டு வருகிறார்கள். 

யோவ் இதிலென்ன பெரிய விஷயம் ? 

நீங்கள் கௌரவ கொலை செய்வதில் எந்த மாற்றம் இல்லையே !! அவ்வளவு தான் விஷயம். 

படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் என்னுள் உருவான கேள்வி தான் இந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்பு. மற்றப்படி படத்தை குறித்து பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் இந்தப்படத்தை தவிர்க்கலாம்.

Sunday, June 17, 2018

மர்லின் மன்றோ புத்தகம்

Marilyn Monroe பெயரில் ஏற்பட்ட ஈர்ப்பில் தான் Fred Lawrence எழுதிய “Norma Jean : Biography of Marilyn Monroe” புத்தகத்தைப் படித்தேன். படிக்க... படிக்க... மர்லின் என்ற நடிகை தாண்டி ஒரு பெண்ணாக அதிகம் கவர்ந்துவிட்டாள். மேலும், அவளைப் பற்றிய தகவலை இணையத்தில் மெய்ந்தப்போது ஸ்வார்சமாண தகவலைவிட அதிர்ச்சியான தகவல்கள் அதிகம் கிடைத்தது. 

குறிப்பாக Taya G Vellairoja அவ்வப்போது பகிரும் மர்லின் மன்றோ படங்கள் என்னை கவர்ந்து கொண்டே இருந்தது. ( நியாயமாக இந்தப் புத்தகத்தை தயாவுக்கு தான் சமர்ப்பணம் செய்திருக்க வேண்டும்.) 

எல்லாம் சேர்த்து ஒரு புத்தகமாக எழுதிவிட வேண்டும் என்று தோன்றியது. எழுதியும்விட்டேன். 



நான் non-fiction புத்தகம் எழுதுவதாக இருந்தால், மூன்று நான்கு அத்தியாயம் எழுதுவேன். அந்த நூலை வெளியிடுவதற்கான பதிப்பகத்தை முடிவு செய்து, அவர்களுக்கு அந்த அத்தியாயத்தை அனுப்பி வைப்பேன். அவர்கள் சம்மதம் பெற்றப் பிறகு தான், அந்த நூலை முழுமையாக முடிப்பேன். ஒரு வேளை நூலை வெளியிட குறிப்பிட்ட பதிப்பகம் தயக்கம் காட்டினால் வேறு பதிப்பகம் செல்வேன். அங்கும் வெளியிட தயக்கம் காட்டினால், அந்தப் புத்தகத்தை அப்படியே கிடப்பில் போட்டு அடுத்த வேலையை தொடங்குவேன். 

ஆனால், மர்லின் மன்றோ புத்தகத்திற்கு அப்படி நடக்கவில்லை. 

நீண்ட வருடத்திற்கு பிறகு ஒரு புத்தகம் முழுமையாக எழுதிவிட்டு வெளியிட பதிப்பகம் தேடியது “மர்லின் மன்றோ” புத்தகத்திற்கு தான். ஐம்பது வருடம் முன்பு இறந்த நடிகையை குறித்து புத்தகம் வெளியிட்டால், வரவேற்பு இருக்குமா என்ற சந்தேகம். அதனால் நான் சொந்தமாக கூட வெளியிடவில்லை. இரண்டு பதிப்பகம் புத்தகம் வெளியிடுவதாக சொல்லி போடாமல் அப்படியே வைத்திருந்தார்கள். 

ஒரு முறை, நான் எழுதிய புத்தகங்கள் என்று பேஸ்புக்கில் பதிவு எழுதியிருந்தேன். அதில், எழுதி முடித்து அச்சுக்கு வராதப் புத்தகப் பட்டியலில் “மர்லின் மன்றோ” வை குறிப்பிட்டிருந்தேன். அதை பார்த்து வானவில் புத்தகலாயத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் புகழேந்தி வெளியிட முன்வந்தார். 


“மர்லின் மன்றோ” புத்தகத்திற்கு ஒரு பதிப்பாளராக மட்டுமில்லாமல், Co-writerஆகவே பல தகவல் சேகரித்து “இதைப் புத்தகத்தில் சேர்க்கலாமா?” என்று கேட்டார். குறிப்பாக, ப்ளே பாய் இதழ் உரிமையாளர் Hugh Hefner பற்றிய சுவையான குறிப்பை கார்த்திக் இல்லையென்றால், ”மர்லின் மன்றோ” புத்தகத்தில் இடம் பெற்றுயிருக்காது. “மர்லின் மன்றோ” புத்தகத்தை மெருகேற்றுவதில் அவருடைய பங்கு மிக முக்கியமானது. 

புத்தகத்தின் Layoutவும் பிரமாதமாக வந்திருக்கிறது. 

”நடிகை” என்பவள் ஆண் உறுப்புக்கு உணர்ச்சியை கொடுப்பவள் மட்டுமில்லை. ஒரு பெண்ணை காதலிக்க கற்றுக் கொடுப்பவளும் ’அவள்’ தான். 

ஐம்பது வருடங்கள் தாண்டியும் மர்லின் மன்றோ நினைவில் இருக்கிறாள் என்றால் பல கோடி ஆண்களுக்கு காதலை கற்றுகொடுத்தவள் என்ற பெயரில் தான். கவர்ச்சியால் அல்ல. 


புத்தகம் கிடைக்குமிடம் : 

Vanavil Puthagalayam 
10/2(8/2), Police Quarters Road 
T.Nagar,Chennai-600017 
( Lane between W-25 T. Nagar Women's Police Station
 and T.Nagar Bus Stand,South Usman Road) 
*
We Can Books 
57, Ground floor, PMG Complex, 
Near T.Nagar Bus Terminus 
T.Nagar, Chennai - 600017 
Ph : 90032 67399

Friday, May 11, 2018

‘தல’ முதல் படத்தில் ஒரு தந்தையின் சோகம்

‘தல’ முதல் படத்தில் ஒரு தந்தையின் சோகம் அஜித் முதல் தமிழ் படம் ‘அமராவதி’ என்றாலும் அவர் அறிமுகமானது தெலுங்கு படமான “பிரேம புஸ்தகம்” தான். அந்தப் படத்தை இயக்கியவர் தெலுங்கு குணச்சித்திர நடிகர் கொல்லபுடி மாருதி ராவ். அவர் பல தெலுங்கு படங்களில் குணச் சித்திர நடிகராக நடித்திருக்கிறார். ‘ஹேராம்’, ‘தோனி’ போன்ற தமிழ் படங்களிலும் தோன்றியிருக்கிறார். பல நாடகங்கள், நாவல் எழுதியிருக்கிறார். 

ஒரு எழுத்தாளர், குணச் சித்திர நடிகர் படம் இயக்குவதில் பெரிய விஷயமில்லை. ஆனால், அவர் எதற்காக இயக்குனர் அவதாரம் எடுத்தார் என்பது தான் சோகக் கதை. 



’பிரேம புஸ்தகம்’ பூஜை போடும் போது இயக்குனராக அறிவிக்கப்பட்டவர் கொல்லபுடி மாருதி ராவ்வின் மகன் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ். நாயகன் அஜித், நாயகி கஞ்சன் வைத்து பத்து நாட்கள் ஷூட்டிங் சிறப்பாக நடந்தது. ஆரம்ப இயக்குனர் புது முகங்களை கொண்டு விரைவாக செயல்பட்டார். அவரின் போராதக் காலம் படப்பிடிப்பு தளத்தில் தண்ணீர் காட்சிக்காக திட்டமிடும் போது கால் தவறி கீழே விழுந்து இறந்தார். ‘பிரேம புஸ்தகம்’ அப்படியே நின்றுப் போனது. 

மகன் திரைத்துறையில் இயக்குனராக ஜோலிக்கப் போகிறான் என்ற கனவில் இருந்த தந்தை கொல்லபுடி மாருதி ராவ் மகனின் மரணம் தாங்கிகொள்ள முடியாத துயரத்தை தந்தது. புத்திரன் இழந்த சோகத்திலும் அவனது கனவு சிதைந்துவிடக்கூடாது என்று நினைத்தார். தானே அந்தப் படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். 

இதற்கு முன் பல நாடகங்களில் இயக்கியிருக்கிறார். படங்களில் நடித்திருக்கிறார். படத்தை இயக்கப்போவது முதல் முறை. அப்பொது இவருக்கு வயது 54. திரைத்துறையில் இயக்குனராக வேண்டும் என்ற விருப்பம் கூட கிடையாது. ஆனால், ’பிரேம புஸ்தகம்’ எடுத்து முடிக்க வேண்டும் என்ற வேறி மட்டும் அந்த தந்தைக்கு இருந்தது. காரணம், மகனின் கனவு அழிந்துவிடக் கூடாது என்பது தான். 

’பிரேம புஸ்தகம்’ படத்தை இயக்கி வெளியிட்டார். படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், ஒரளவுக்கு மக்களை சென்றடைந்தது. அந்த வருடம், சிறந்த திரைக்கதைக்காக நந்தினி விருது (1994) கொல்லபுடி மாருதி ராவ்வுக்கு கிடைத்தது. 

’பிரேம புஸ்தகம்’ படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த கொல்லபுடி மாருதி ராவ் மீண்டும் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. இயக்கவும் விரும்பவில்லை. 

மகனின் கனவுக்காக தொடங்கிய வேலை. அதுமட்டுமில்லாமல், முதல் படத்தில் இருக்கும் சோக மனநிலையோடு ஒவ்வொரு படத்தை இயக்க வேண்டியது இருக்கும் என்று இயக்குனர் வாய்ப்பை தவிர்த்தார். 

தனது மகனின் நினைவாக ’கொல்லபுடி ஸ்ரீனிவாஸ்’ விருது என்ற பெயரில் ஒவ்வொரு வருடம் சிறந்த அறிமுக இயக்குனர்களுக்கு விருது வழங்கிவருகிறார். 

சமிபத்தில் அஜித் குறித்து அவரிடம் கேள்வி கேட்டப்போது, “ அஜித் அப்போது பெரிய ஸ்டாராக வருவார் என்று நான் நினைத்துபார்க்கவில்லை. பிரேம புஸ்தகம் படத்தை நினைக்கும் போது பல ஸ்டார்களை உருவாக்க நினைத்த மகனின் மரணம் தான் நினைவுக்கு வருகிறது” என்றார்.

தந்தையின் கனவை மகன் நிறைவேற்றுவது கடமை. முதுமை வயதில் மகனின் கனவை தந்தை நிறைவேற்றுவதை என்ன வார்த்தை சொல்வதென்று தெரியவில்லை.

Thursday, February 15, 2018

USS Indianapolis: Men of Courage ( English - 2016)

USS Indianapolis: Men of Courage இரண்டாம் உலகப் போரில் எத்தனையோ கப்பல்கள் முழ்கியிருக்கிறது. பல வீரர்கள் மடிந்திருக்கிறார்கள். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியிருக்கிறது. அடையாளம் தெரியாத பல கப்பல்களுக்குள் இன்னும் கடலில் இருக்கிறது. அதில், USS Indianapolis என்ற தாக்கப்பட்ட சம்மவமும் ஒன்று என்று ஒதுக்கமுடியாது. 

USS Indianapolis தாக்குதல் அமெரிக்காவின் அணு ஆயுத தாக்குதலுக்கு முன் நடந்த சம்பவம். USS Indianapolis போர் கப்பல் அல்ல. அணு ஆயுத உபரி பாகங்களை பாதுகாப்பாக ஏற்று செல்வதற்காக ரகசியமாகப் பயன்படுத்தப்பட்ட நீர்முழ்கி கப்பல். ஜப்பான் இராணுவம் போர் கப்பல் என்ற சந்தேகத்தில் USS Indianapolis கப்பலை தாக்க, அதில் இருக்கும் பாதுக்காப்பு வீரர்கள் தத்தலிக்கிறார்கள். ஐந்து நாள் உண்ண உணவின்றி நடுக்கடலில் உயிருக்காகப் போராடி மீட்பு பணி குழுக்களால் மீட்கப்படுகிறார்கள். 

1196 பேர் சென்ற USS Indianapolis கப்பலில் 317 மட்டுமே உயிருடன் மீட்கப்படுகிறார்கள். அதில் USS Indianapolis கப்பலின் கேப்டன் சார்லஸ் மெக்வே ஒருவர். சில காயங்களுடன் திரும்பிய கேப்டன் தங்களை மீட்பதற்கு ஏன் இவ்வளவு நாட்களானது என்று கேள்வி கேட்கிறார். ரெடியோ சரியாக கேட்கவில்லை, ஜப்பானின் சூழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தோம், போதையில் யாராவது கத்துகிறார்கள் என்று நினைத்தோம் என்ற சப்பை பதில்கள் அளித்தார்கள். அதிகாரப்பூர்வமாக கேப்டனின் கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. தங்களை காப்பாற்றிகொள்ள USS Indianapolis கப்பல் மூழ்கியதற்கு கேப்டன் சார்லஸ் மெக்வே தான் காரணம் என்று கூறினார்கள்.



USS Indianapolis முழ்கியதைக்குறித்து விசாரணை நடக்கிறது. ஜப்பான் தாக்குவதை அறிந்து கப்பலை ‘Zig-Zag’ திருப்பியிருக்கலாம். சாட்சியங்கள் கேப்டனுக்கு ஆதரவாக இருந்தும், கேப்டன் மீது குற்றம் சுமத்தி அவரை கோர்ட் மார்ஷல் செய்தார்கள். ( USS Indianapolis கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஜப்பானிய கேப்டன் தனது தாக்குதலிலிருந்து அவர்களால் தப்பிக்க வாய்ப்பில்லை என்று சாட்சி அளித்திருக்கிறார்.) 

இரண்டாம் உலகப் போரில் தண்டனைக்கு உள்ளான ஒரே அமெரிக்க கேப்டன் என்ற பெயரை சார்லஸ் மெக்வே பெற்றார். 1968ல் மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்கிறார். அந்த தாக்குதலில் மீட்கப்பட்ட 150 வீரர்களின் முயற்சியால் 800 ஆவணங்கள் தயார் செய்து கேப்டன் சார்லஸ் மெக்வேவுக்கு அளிக்கப்பட்ட அநீதிக்காக போராடுகிறார்கள். 

2000ல் அதிபர் கிளிண்டன் கேப்டன் சார்லஸ் மெக்வே குற்றமற்றவர் என்று கூறி, அவரிடம் திரும்பப் பெற்ற பதக்கங்களை எல்லாம் அவரது வாரிசுகளுக்கு அளிக்க உத்தரவிடுகிறார். 

இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டப்படம் தான் ”USS Indianapolis: Men of Courage”. 

ஐந்து நாள் நடுக்கடலில் உண்ண உணவின்றி உயிருக்கு போராடிய தனது வீரர்களை கண்முன் கேப்டன் பார்க்கிறார். தனது வீரர்கள் சுறா மீன் கடித்து இறப்பதும், தனிமை புத்திப்பேதலித்ததும், கடலின் உப்பு தண்ணீர் குடித்து இறப்பதையும் மனவேதனை அடைக்கிறார். மிக காலத்தாமதமாக தங்களை மீட்க வந்ததில் கோபமடைகிறார். ஒரு கேப்டனாக கேள்வியை கேட்கிறார். அதற்கு பதலளிக்க முடியாமல் தண்டனை அளிக்கிறார்கள். 

கேப்டன் சார்லஸ் மெக்வே பாத்திரத்தில் Nicholas Cage. அவரின் இயல்பான நடிப்பை அதிகம் சொல்ல வேண்டியதில்லை. தனது வீரர்கள் கண்முன் இறக்கும் போது குற்றவுணர்வில் தவிக்கும் ஒரு இடம் போதும் அவரது நடிப்பைப் பற்றி சொல்வதற்கு. 

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது அணுகுண்டு வீசிய வீரர்களுக்கு பாராட்டும், பரிசும் வழங்கி அமெரிக்கா அழகுப் பார்த்தது. பல லட்சப் பேரை கொன்று குவித்தவரக்ளுக்கு விருது வழங்கியது. ஆனால், தனது வீரர்கள் கண்முன் இறப்பதைப் பார்த்து கேள்விக் கேட்ட கேப்டனுக்கு “கப்பலை Zig-Zagஆக திருப்பாததை குற்றமாக” கூறி தண்டனையை அமெரிக்கா வழங்கியிருக்கிறது என்பதை இந்தப்படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 

அதிகாரத்தில் இருப்பவர்களை கேட்டால் அதற்கான தண்டனை நிச்சயம் என்பதற்கு ” USS Indianapolis: Men of Courage” படம் ஒரு உதாரணம்.

Saturday, December 16, 2017

We Can Books - புத்தகக் கடை ஒரு அறிமுகம்

இது வரை பேஸ்புக் ஐ.டியாக மட்டுமே இருந்தது. WeCanShopping.com என்ற பெயரில் இணையதளமாக இயங்கி வந்தது. இப்போது, சென்னை தி.நகரில் புத்தகக் கடையாக உருமாறி இருக்கிறது. 

தி.நகரில் எத்தனையோ பதிப்பகங்கள் இருக்கிறது. அங்கையே நூல்கள் வாங்கலாம். பிறகு, ஏன் தி.நகரில் நாங்கள் ஒரு புத்தகக் கடை திறக்க வேண்டும் ? We Can Books மற்றொரு புத்தகக் கடை இல்லை. வெளியூரில் இருக்கும் பதிப்பாளர்கள், சிறு பதிப்பாளர்கள், சொந்தமாக வெளியிட்டிருக்கும் எழுத்தாளர்களுக்கான கடை. 

பெரிய பதிப்பகங்கள் தங்களுக்கென்று தி.நகரில் ஒரு அலுவலகம் வைத்திருக்கிறார்கள். புத்தக வியாபாரிகளுக்கு எளிதாக புத்தக கொடுத்துவிடுகிறார்கள். ஆனால், சிறு பதிப்பாளர்கள் / சொந்தப் படைப்பை வெளியிடுபவர்கள்/ வெளியூர் பதிப்பகங்கள் போன்றவர்கள் தங்கள் நூல்களை சரியான இடத்தில் புத்தகம் கொடுப்பதில் பல சிக்கல் சந்தித்திருக்கிறார்கள். சென்னையில் நடக்கும் சிறு சிறு புத்தகக் கண்காட்சிக்கு கலந்துகொள்ள முடியாமல் போகிறது. 

அவர்களுக்கு உதவுவதற்காக அவர்களிடம் விற்பனை உரிமை வாங்கி, மற்ற கடைகளுக்கு / இணைய விற்பனையாளர்களுக்கு / Amazon போன்ற தளங்களுக்கு புத்தகங்கள் விற்பனை செய்து தருகிறோம். 

இதை, ஆங்கிலத்தில் சொல்வதென்றால் "Book Distribution" என்பார்கள். 

Rupa, Westland போன்ற ஆங்கில நூல் வெளியிடும் பதிப்பாளர் தங்கள் புத்தகத்தை நேரடியாக விற்பனை செய்வதில்லை. புத்தக விநியோகத்தரிடம் புத்தகங்கள் Bulkஆக கொடுத்துவிடுவார்கள். 3-6 மாதத்திற்கு ஒரு முறை பணத்தை பெற்றுகொள்வார்கள். புத்தக விற்பனையை புத்தக விநியோகத்தரிடம் கொடுப்பதால் ஆங்கில பதிப்பாளர்கள் தங்கள் கவனத்தை நூல் வெளியிடுவதில் கவன செலுத்த முடிகிறது. 

ஆனால், தமிழில் அப்படி ஒரு சூழ்நிலை அமையவில்லை. பதிப்பாளர்களே புத்தகங்களை விற்பனை செய்ய வேண்டியதாக இருக்கிறது. இப்போது, எழுத்தாளர்களும் சேர்ந்து புத்தகங்களை விற்பனை செய்துவருகிறார்கள். அதனால், நாங்கள் தொடங்கவிருக்கும் கடை மற்றொரு புத்தகக் கடையாக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். 

எங்கள் கடையில் நாங்கள் விற்பனை உரிமை வாங்கிய புத்தகங்கள் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்படும். 

சிறு பதிப்பாளர்கள் / சொந்தப் படைப்பை வெளியிடுபவர்கள்/ வெளியூர் பதிப்பகங்கள் : போன்றவர்களுக்கு எங்கள் கடையே வியாபார முகவரியாக இருக்கும்.

முகவரி : 
We Can Books 
57, Ground Floor, PMG Complex, 
South Usman Road, (Near T.Nagar Bus Terminus) 
T.Nagar, Chennai – 17 
Ph: 9940448599. 

மூன்று மாதம் முன்பு காவேரி தொலைக்காட்சிக்காக நான் கொடுத்த நேர்காணலில் நான் குறிப்பிட எதிர்கால திட்டத்தை தான் இப்போது செயல்படுத்தப் போகிறோம். 


Monday, October 9, 2017

நீயும் பொம்மை நானும் பொம்மை – ராஜேஷ் குமார்

முதல் இரண்டு அத்தியாயம் படித்ததும் ராஜேஷ் குமார் நாவல் தவறாக நினைத்து, இந்திரா சௌந்தரராஜன் நாவல் படிக்கிறோமோ என்ற சந்தேகம் வந்து அட்டைப்படத்தை திரும்பி பார்த்தேன். அத்தியாயம் செல்ல செல்ல எழுத்தாளர் பெயர் தவறாக அச்சடிக்கப்பட்டதோ என்ற சந்தேகம் கூட வந்தது. காரணம், கதை நடக்கும் களம் உச்சிமலைச் சித்தர் குறித்தக் கதை. நாவல் முடியும் போது அக்மார்க் ராஜேஷ் குமார் நாவலாக முடிந்தது. 



இறந்தப் பெண்ணின் உயிரை மீண்டும் கொண்டு வரும் சித்தர். அதை செய்தியாக வெளிகொண்டு வர நினைக்கும் பத்திரிகையாளர்கள். அவரை கொள்ள துடிக்கும் தீவிரவாதிகள் என்று கதை முழுக்க உச்சிமலை சுத்தியே நடக்கிறது. கடைசியில் எல்லா கேள்விக்கும் விடைக்கிடைக்கிறது. 

Low budget thriller படம் எடுக்க நினைக்கும் இளம் இயக்குனர்கள் ராஜேஷ்குமார் அவர்களிடம் அனுமதிப் பெற்று இதை திரைக்கதையாக்கலாம். கோரியன், ஹாலிவுட் படங்களில் இருக்கும் திரில் படங்களை சுடுவதை விட நம்மவூர் பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேஷ்குமார் நாவல்களை உரிமைப் பெற்று திரைப்படமாக்கினால் Minimum Guanertee வெற்றிக்கிடைக்கும். 

உதாரணத்திற்கு, The Client என்ற கோரியன் படம். ஆரம்பத்தில் நடக்கும் கொலையும், அதை தொடர்பான வழக்கும் தான் கதை. இறுதியில் வரும் க்ளைமாக்ஸ் காட்சி நல்ல ட்விஸ்டாக இருக்கும். ஆனால், ட்விஸ்டை ராஜேஷ் குமார் நாவலை வாசிக்கும் வாசகர்களுக்கு பழக்கமான ஒன்று. 

திரைப்படங்களுக்கு நல்ல எழுத்தாளர் இல்லை என்பது பெரிய குறையாக இருக்கிறது பல இயக்குனர் நண்பர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். 

நம்மவூருக்கான கதை நிறைய எழுதப்பட்டிருக்கிறது. எழுத்தாளருக்கு Credit கொடுத்து திரைப்படமாக்கும் நல்ல இயக்குனர்கள் இல்லை என்பது தான் உண்மை. 

**
நீயும் பொம்மை நானும் பொம்மை
– ராஜேஷ் குமார்
- Rs.70

இணையத்தில் வாங்க....

Tuesday, October 3, 2017

வெட்டாட்டம் - ஷான்

சுஜாதாவின் அத்மா ஷான்னின் பேனா வழிப்புகுந்து எழுத வைத்திருக்கிறது. உண்மையில் சுஜாதா உயிரோடு இருந்திருந்தால் இப்படி ஒரு நாவலை தொடராக எழுதியிருப்பார். வெட்டாட்டம் எழுதிய ஷானை ஆயிரம் முறை பாராட்டலாம் !! 

செம்பரப்பாக்கம், கூவத்தூர் ரெஸார்ட், மருத்துவமனையில் முதல்வர் என்று அனைத்து சமக்கால சம்பவ அரசியல் சம்பவங்களை புனைவுகளாக கோர்க்கப்பட்டு எழுதப்பட்ட த்ரில்லர் நாவல். 

ஆரம்பத்தில் நாவலின் ஒன் – லைன் பற்றி கேள்விப்படும் போது தெலுங்குபடம் Leader தான் நினைவுக்கு வந்தது. ( ஜகன் மோகன் ரெட்டி கொஞ்சம், ராகுல் காந்தி கொஞ்சம் மனதில் வைத்து எடுக்கப்பட்ட படம் அது). ஏறக்குறைய சில அத்தியாயங்கள் அந்தப்படத்தில் வரும் காட்சியை நினைவுப்படுத்தினாலும், பல விஷயத்தில் நாவலும், படமும் வேறுப்படுகிறது. 



பல முறை விளையாடிய தாயக்கட்டை விளையாட்டு, வெட்ட வெட்ட தாயக்கட்டை உருட்ட இன்னொரு வாய்ப்பு கிடைக்கிறது. எதிரிகளின் காய்களை வீழ்த்தும் போது ஒரு சந்தோஷம் பிறக்கிறது. எதிரிகள் முன்பு நமது காய்களை பழுக்க வைப்பதில் சுகம். 

நாம் வெற்றிப்பெற்றுவிட்டோம் என்பதை விட எதிரியை வீழ்த்திவிட்டோம் என்ற பூறிப்பு தான் தாயக்கட்டை விளையாட்டின் எல்லோருக்கும் பிடித்தமான விஷயம். அந்த அளவுக்கான சந்தோஷம் நாவலை முடிக்கும் போது வருகிறது. 

இப்படி ஒவ்வொரு அத்தியாய தொடக்கத்திலும் தாயக்கட்டை ஆட்டத்தின் விதிமுறைகள் கூறப்படுகிறது. அந்த விதிமுறையும், அந்த அத்தியாயத்திற்கும் தொடர்புடையதாக இருக்கிறது. அரசியல் சதுரங்க விளையாட்டில் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் என்ன செய்யப்போகிறது, பிரச்சனை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று விறுவிறுப்பாக செல்கிறது. மொத்தம் ஐந்து மணி நேரத்தில் வேகமாக படித்து முடிக்கலாம். ஒரு திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை இதில் இருக்கிறது. ஆனால், தற்போதிய ஆட்சி கலைக்கப்பட்டால் மட்டுமே இந்த நாவல் திரைப்படமாக மாறுவது சாத்தியம். 

ஷான்னுக்கு ஒரு வேண்டுக்கோள், 

தயவு செய்து தீவிர இலக்கியம் பக்கம் வந்துவிட வேண்டாம். அப்படி ஒரு ஆசை இருந்தால் மறந்துவிடுங்கள். தீவிர இலக்கிய எழுத்தை மேற்கொள்ள பலர் இருக்கிறார்கள். ஆனால், இதுப் போன்ற Pulf-Fiction எழுத ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள். 

**
வெட்டாட்டம் 
- ஷான்  
- யாவரும் பதிப்பகம்
- Rs.240
 

LinkWithin

Related Posts with Thumbnails