ஒரு மகன் தன் பெற்றோருக்கு இப்படி கடிதம் எழுதுகிறான்.
Disclaimer : நகைச்சுவைக்காக மட்டுமே....
**
வணக்கம்,
உங்கள் அன்பு மகன் எழுதுகிறேன்.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தீர்கள். என்னை படிக்க வைக்க நீங்கள் அடைந்துள்ள கஷ்டத்தை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன்.
இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். ’படிப்பே வேண்டாம்’ என்று முடிவு செய்திருக்கிறேன். நான் உங்கள் மகன். எதையும் எதிர் கொண்டு வெல்லும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள். அதனால், வீட்டு வாடகைக்கு வைத்திருந்த ரூ.10000 பணத்தை பீரோ உடைத்து சீட்டு விளையாட எடுத்திருக்கிறேன்.
உங்களுக்காக நான். உங்களோடு எப்போதும் நான் இருப்பேன். இப்போதைக்கு இரண்டு நாள் வீட்டுக்கு வர மாட்டேன். விரைவில் இப் பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும் எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி.
உங்கள் மீது கொண்ட அன்பின் அடிப்படையில், நான் வீட்டு செலவுக்காக ரூ.1000 விட்டு வைத்திருக்கிறேன். இரண்டு நாட்களில் ரூ.10000யை ரூ.20000 மாற்ற முழு வீச்சில் செயல்படுவேன்.
என் அரிய முயற்சிக்கு தோள் கொடுக்கும் நண்பர்களாக நாய் சேகர், ப்ளேட் பக்கிரி, போகிரி ராஜா, புது நண்பனான அசால்ட் சேது என்னுடன் அயராது உழைப்பார்கள். அவர்களை முழுவதுமாக நம்புகிறேன்.
அதில் வெற்றிப் பெற்ற பிறகு, உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமப்பேன்.
எனக்கென்று தனி வாழ்க்கைக் கிடையாது.
எனக்குச் பொதுநலம் அறவே கிடையாது. என் உறவு நீங்கள் தான். நான் வைத்திருக்கும் அனைத்து பொருட்களும் நீங்கள் வாங்கிக் கொடுத்தது. என் இல்லமும் உள்ளமும் என் பெற்றோராகிய நீங்கள் தான்.
நீங்கள் வைத்த பெயரை மறந்து போகும் அளவுக்கு, ’தண்டச்சோறு’, ’தருதலை’, ’உதவாக்கரை’ என்று அழைக்கின்ற சொல்லுக்காகவே என் வாழ்நாட்கள் முழுக்க வாழ விரும்புகிறேன்.
இது போன்ற சம்பவங்களில் பல முறை நான் மீண்டு வந்திருக்கிறேன். மீண்டும் ஒரு முறை மீண்டு வந்து, உங்கள் புகழை நிலை நாட்டுவேன். எத்துயர் வரினும் அதையும் இத்தனயன் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள்.
நன்றி!
உங்கள் அன்பு மகன்
தருதலை.