வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label தொடர். Show all posts
Showing posts with label தொடர். Show all posts

Friday, April 26, 2013

அந்த மூன்று பெண்கள் (2) - 8

எம்.ஜி.ஆர் முதல்வரானதை கொண்டாட தெருவோரம் இருந்தவர்கள் எல்லாம் பட்டாசு வெடித்து கொண்டாடினர். எனக்கு நல்லது நடக்கும் போது தமிழ் நாட்டுக்கு நல்லது நடக்கின்றது என்பது போல் தெரிந்தது. முதல் நாள் பள்ளியில் ரகுவை விட்டேன். முதல் நாள் என்பதால் அரை நாள் தான் பள்ளி வகுப்பு இருந்தது. ஜோசப்பிடம் சொல்லிவிட்டு என் மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்.



தன் பள்ளியில் நடந்தை எல்லாம் அம்மாவிடமும், சிவகாமியிடம் சொல்லிக் கொண்டு இருந்தான். அம்மா அவன் பேசும் போதெல்லாம் "உங்க மாமா இப்படி தான் பேசுவாரு" என்று சொல்வார். அம்மா ஒரு முறை கூட அப்பாவை பற்றி சொல்லவேயில்லை. மாமா அந்த அளவிற்கு அப்பாவை மறக்கடித்து குடும்பத்தை பார்த்திருகிறார்.

சீனியர் முத்தையாவிடம் சேர்ந்து ஒரு வருடத்தில் தனி அலுவலகம் வைக்க வேண்டும் என்று நானும் ஜோசப்பும் முடிவு செய்திருந்தோம். ஆனால், நீதிதுறையில் எல்லாம் ஒரே ஆண்டில் எப்படி கற்பது ? நான்கு வருடம் கலித்து இப்போது எங்களுக்கு தனி அலுவகம் வைக்க முடிவு செய்தோம்.

அலுவலத்திற்காக பல இடங்கள் பார்த்தோம். சில இடங்களில் வாடகை அதிகமாக இருந்தது. வாடகை சரியான இடத்தில் 'வழக்கறிஞருக்கு இடமில்லை' என்றனர். நான் என்ன தீண்டதகாதவர்களா தெரியவில்லை. வழக்கறிஞருக்கு இடம் கொடுத்தால் பிரச்சனை தன்னுடன் வைத்துக் கொள்வது போல் ஒரு சிலர் நினைக்கிறார்கள்.

பல அலைச்சலுக்கு பிறகு, எங்களுக்கு எழும்பூர் அருகே இடம் கிடைத்தது. மாத வாடகை ஆற நூறு ரூபாய். இரண்டு நாற்காலி, மேஜை எல்லாம் வைத்து எங்கள் அலுவலகத்தை அமைத்தோம். ஒரு அலமாரியில் எங்களுக்கு தேவையான சட்ட புத்தகங்களையும் அடுக்கி வைத்தோம்.

ஜோசப் கடவுள் நம்பிக்கை இருப்பவன் என்பதால் அவன் நாற்காலிக்கு மேல் சிலுவையில் அறைந்த இயேசு படம் மாட்டினான். எனக்கு நாற்காலிக்கு மேல் பெரியார், அண்ணா படத்தை மாட்டி வைத்தேன். அலுவலகம் அமைத்து விட்டோம். இனி வழக்குகள் தான் வர வேண்டும்.

எங்கள் சீனியரும் வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். தன்னிடம் வரும் கட்சிகாரர்களை எல்லாம் எங்களிடம் அனுப்பி அவர் உதவி செய்தார். அதனால், புது அலுவகம் வைத்ததும் சீனியரால் எங்களுக்கு கட்சிக்காரர்கள் வர தொடங்கினர்.

முதல் நட்பு, முதல் காதல், முதல் முத்தம்.... எப்படி இதை எல்லாம் மறக்க முடியாதோ முதல் முதலில் நமக்கு கிடைத்த வேலையும் மறக்க முடியாது. நாங்கள் அலுவலகத்தை ஆரம்பித்து எங்களுக்கு வந்த முதல் வழக்கு 'சொத்து விவகாரம்'.

வழக்கு போட்டவர் என் கட்சிக்காரர் மகாதேவன். அவரின் அப்பா தேவராஜனின் வப்பாட்டியான சுந்தரிக்கு எதிராக வழக்கு. தேவராஜன் இறக்கும் போது எந்த உயிலும் எழுதாததால் சொத்துக்காக மகாதேவனுக்கும். சுந்தரிக்கும் பிரச்சனை. சிவில் வழக்கு. எப்படியும் குறைந்தது பத்து வருடம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. ஆனால், எங்கள் முதல் வழக்கை அவ்வளவு நாள் நீடிக்க எங்களுக்கு விருப்பமில்லை.


சட்டப்படி தேவராஜனின் சொந்துக்களுக்கு என் கட்சிக்காரர் மகாதேவன் தான் வாரிசு. தன் சந்தோஷத்திற்காக வைத்துக் கொண்ட சுந்தரி எக்காரணத்தாலும் வாரிசாக நியமிக்க முடியாது. தேவராஜன் மூலம் சுந்தரிக்கு எந்த குழந்தையும் பிறக்கவில்லை. குறிப்பிட்டு எந்த சொத்தும் சுந்தரி மேல் உயில் எழுதாததால் எல்லா சொத்துகளும் மகாதேவனுக்கு தான் சென்று அடைய வேண்டும். அடையும். அது தான் சட்டம்.

தேவையில்லாமல் பிரதிவாதி சுந்தரி சொத்தில் பங்கு கேட்டு எதிர் வழக்கு போட்டுருப்பது நேரத்தையும், பணத்தையும் விரணயம் செய்வது போல் ஆகும். அவளின் வக்கிலும் வழக்கில் வெற்றி பெறலாம் என்று நம்ப வைத்து அவளிடம் இருந்து அதிக பணம் வாங்குவதிலும், வாய்தா வாங்குவதிலும் தான் கவனமாக இருந்தான். தீர்ப்பு என்று வந்தால் மகாதேவனுக்கு தான் ஆதரவாக இருக்கும் என்று தெரிந்தும் அந்த வக்கில் முடிந்தவரை சுந்தரியிடம் இருந்து பணத்தை கரந்தான்.

நானும், ஜோசப்பும் சுந்தரியிடம் தனியாக மகாதேவனுகாக பேச சென்றோம். அப்போது அவளுடைய வக்கில் எங்களை பேச விடவில்லை. வேறு வழியில்லாமல் அந்த வக்கிலை வைத்தே சுந்தரியிடம் சமாதானம் பேசினோம். அவள் கேட்கவில்லை. வழக்கு கோர்ட் ஹியரிங்க்கு(Hearing) வந்தது.

சுந்தரி மகாதேவனின் அப்பா தேவராஜனை சட்டப்புர்வமாகவோ, சம்பிரதாய முறைப்படியோ திருமணம் செய்யவில்லை. இவர்கள் சேர்ந்து வாழ்ந்ததை சொல்ல இரண்டு சாட்சிகளை எதிர் கட்சி வக்கில் கொண்டு வந்தார். நான் இவர்களை ‘Hearsay evidence’ என்று சொல்லி வாதாடினேன்.

Hearsay evidence என்றால் தனக்கு நேரடியாகச் செய்தி அறியாது, பிறர் கூற அது பற்றிக் கேள்விப்படுதல் ஆகும். சிவில் வழக்குகளில் இது போன்ற சாட்சிகள் ஏற்றுக் கொள்ளப்படாது. எல்லாம் பத்திரத்தில் இருந்தால் தான் நீதிபதி ஏற்றுக் கொள்வார்.

சுந்தரி, தேவராஜன் சேர்ந்து வாழ்ந்ததற்கு குழந்தைகளோ, உறவினர்களோ என்று வேறு சாட்சிகள் இல்லை. எதிர் கட்சி கொண்டு வந்த இரண்டு சாட்சிகளும் பலவீனமானது என்று சொல்லி நீதிபதி வேறு ஆதாரங்களை கேட்டார். வழக்கம் போல் எதிர்கட்சி வக்கில் தனக்கு நேரம் வேண்டும் என்று சொல்லி வாய்தா வாங்கினார்.

எதிர்கட்சி வக்கில் சுந்தரியிடம் இவர்கள் சேர்ந்து வாழ்ந்தை பார்த்ததாக ஒரு பொய் சாட்சியை தயார் செய்ய சொன்னார். ஆனால், சுந்தரிக்கு பொய் சாட்சி ஏற்பாடு செய்வதில் கொஞ்சம் பயம் இருந்தது. எதிர் கட்சி வக்கில் 'பொய் சாட்சி இல்லை என்றால் இந்த வழக்கில் வெற்றி பெற முடியாது' என்று கூறிவிட்டார். அப்போது தான் சுந்தரி தன் வழக்கில் பலவீனமாக இருப்பதை உணர்ந்தாள்.

பிரதிவாதி சுந்தரி எங்கள் அலுவலகத்திற்கு வந்து தான் போட்ட வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறினாள். அதற்கு தான் தங்கி இருக்கும் வீட்டை மட்டும் தனக்கு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனையும் வைத்தாள். நான் இதை என் கட்சிக்காரர் மகாதேவனிடம் சொன்னேன். முதலில் சுந்தரிக்கு ஒரு பைசா கூட கொடுக்க முடியாது என்று முரண்டு பிடித்தார். நான் மகாதேவனிடம் " உங்க பக்கம் தான் நியாயம் இருக்கு. இருந்தாலும் இந்த கேஸோட தொடர்ந்தா, சொத்த உங்க பேரன் பிள்ளைங்க தான் அனுபவிக்க முடியும். அதனால கொஞ்ச விட்டு கொடுங்க ! " என்றேன்.

நான் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்த மகாதேவன் சுந்தரி இருக்கும் வீட்டை மட்டும் அவளுக்கு விட்டு கொடுத்தார். அதற்கு சுந்தரி மற்ற சொத்துக்களில் தனக்கும், தன்னை சேர்ந்தவர்களுக்கு சம்மந்தமில்லை என்று எழுதிக் கொடுத்தாள். குறுகிய காலத்தில் நாங்கள் எடுத்த சிவில் வழக்கை வெற்றிகரமாக முடித்தோம். எங்கள் முதல் வெற்றியை சீனியர் முத்தையா அவர்கள் வாழ்த்தினார். மகாதேவனும் நல்ல பீஸ் கொடுத்ததோடு இல்லாமல், தன் வியாபாரத்திற்கு லீகல் அட்வைஸராக எங்களை நியமித்தார்.

முதல் வழக்கு சிவில் வழக்காக இருந்ததால் என்னவோ எங்களுக்கு வந்த பெரும்பாலான வழக்குகள் சிவில் வழக்குகளாகவே இருந்தன.

Wednesday, April 24, 2013

அந்த மூன்று பெண்கள் (2) - 7

என் பக்குத்தறிவுக்கு மட்டுமல்ல, தமிழர்களின் பகுத்தறிவுக்கு விளக்கேற்றியவர் பெரியார். என்னை வாழ வைத்த மாமாவை இழந்த இதே நேரத்தில், பெரியாரின் மரணம் என்னை மேலும் பாதித்தது. அரசு மரியாதையோடு அவர் உடல் தகனம் செய்ய போவததை என் மாமனார் சொன்னார்.

முதுமையிலும் கம்பிரமாக பேசக்குடியவர், எங்கள் சுய மரியாதையின் தந்தை என்று கண்கலங்கி சொன்னார். என் மாமாவின் மரணத்தை எப்படி என்னை பாதித்ததோ அதை விட பெரியாரின் மறைவு தமிழ் நாட்டை பாதிக்கும்.

பெரியாரின் சுய மரியாதை கொள்கையை ஏற்றுக் கொண்டதால், உறவினர்கள் எத்தனைப் பேர் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். எத்தனைப் பேர் மன உலைச்சல் ஆளாகியிருக்கிறார்கள். மனைவி, பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு தினமும் பதில் வேண்டியிருக்கும். இத்தனையும் கடந்து ஒருவன் சுய மரியாதை கொள்கையை ஏற்றுக் கொள்கிறான் என்பதை இந்த சமூகம் உணரும் போது தான், சுய மரியாதைக்காரர்களை மதிப்பார்கள்.

பார்ப்பனர்கள் இதை அரசியலாக பார்ப்பதால், அவர்களின் தாக்கம் மற்றவர்களையும் சுய மரியாதைக்காரர்களையும் அரசியல்வாதியாக பார்க்க வைக்கிறது. பல வலிகளை சுமந்து ஏன் சுயமரியாதைக் கொள்கையை ஏன் ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற கேள்வியை தங்களுக்குள்ளே ஒவ்வொருவனும் கேட்டு கொண்டால், சுயமரியாதையில் இருக்கும் சுகத்தை புரியும். பெரியார் இறந்து ஒரு வாரம் கலித்து, ஜோசப்பும், நானும் முத்தையா என்பவரிடம் ஜூனியராக பணிக்கு சேர்ந்தோம்.

 சீனியர் முத்தையா ஐம்பது வயது தாண்டியவர். சட்டத்துறையில் நல்ல அனுபவமுடையவர். வழக்குகளை அவர் கையாளுவதை பார்த்து நாங்கள் இருவரும் பிரம்மித்து விட்டோம். மாதம் ஐந்நூறு சம்பளம் கொடுப்பதாக சொன்னார். எனக்கு சம்பளம் பெரிதாக தெரியவில்லை. வழக்குகளை பற்றி கற்றுக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான். ஒரு வருடம் கலித்து தனி அலுவகம் வைக்கலாம் என்று ஜோசப் கூறினான். எனக்கும் அது தான் சரி என்று பட்டது.

 சிதம்பரத்தை விட்டு வந்தது அம்மாவுக்கு பிடிக்கவில்லை. நான் சொல்வதற்கெல்லாம் 'சரி சரி' என்று சொல்லிவிட்டு மனதில் ஏதோ போட்டு குழப்பிக் கொண்டே இருந்தார். அம்மாவுக்கு பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டதில் இருந்து நான் என்ன செய்தாலும் எந்த மாற்று கருத்தும் சொல்வதில்லை. கடவுள், பூஜை என்று இருந்து விடுவார். முன்பு போல் என்னிடம் அதிகம் பேசுவதில்லை.

அம்மா சாப்பிடுவதற்கு மட்டும் தான் பூஜை அறையை விட்டு வருவாள். என் மனைவி சிவகாமி சமைப்பதில் ஏதாவது குற்றம் குறை சொல்லிக் கொண்டே இருப்பாள். ஆரம்பத்தில் அம்மா பேசுவதது சிவகாமிக்கு கஷ்டமாக இருந்தது. பிறகு அம்மாவின் குணம் அவளுக்கு பழகிவிட்டது. ஒரு நாள் கூட அம்மாவை பற்றி தவறாக சொன்னதில்லை. தாயில்லாமல் அவள் வளர்ந்ததால் என் அம்மாவை தன் அம்மாவாக தான் பார்த்தாள். ஆனால், அம்மா தான் இன்னும் அவளை ராசியில்லாதவளாக பார்த்தாள். ஹோட்டலை விற்று சென்னைக்கு வந்ததும், அந்த எண்ணம் மேலும் அதிகமானது. சின்ன சின்ன விஷயங்களை பெரிதாக சொல்லி கொண்டு இருந்தாள்.

என் மனைவிக்காக பணிந்து பேசும் போதெல்லாம், " இது வரைக்கும் என்ன எதிர்த்து ஒரு வார்த்த பேசுவியா. இப்போ கல்யாணத்துக்கு அப்புறம் நா பண்ணுறது தப்புனு சொல்லுற அளவுக்கு நீ வளர்ந்திட்ட...." என்பாள். இன்னும் நான் ஏதாவது பேசினால், கண்களில் நீர் வைத்துக் கொண்டு நான் 'செத்து போறேன்' என்பாள். அதனால், அம்மாவிடம் அதிகம் பேசாமல் இருந்து வந்தேன்.

சிவகாமியிடம் அம்மா எது பேசினாலும் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது என்று சொல்லி வந்தேன். அம்மா அடிக்கடி சிவகாமியை குறை சொன்னாலும், மாமியார் கொடுமை என்று சொல்லும் அளவிற்கு இல்லை.

ஒரு முறை, பரூக் தன் குடும்பத்துடன் எங்கள் புது வீட்டுக்கு வந்திருந்தான். பாத்திமா எங்கள் வீட்டுக்கு வாங்கி வந்த பலகாரங்களை சிவகாமியிடம் கொடுத்து சமையல் அறைக்கு சென்றார்கள். இருவரும் சேர்ந்து சமைத்து ஒரு குடும்பமாக சாப்பிட வேண்டும் என்று முன்பே பரூக்கிடம் சொல்லியிருந்தேன். சிவகாமியும், பாத்திமாவும் சேர்ந்து சமைத்துக் கொண்டு இருக்க சாப்பிட போகும் எங்கள் நிலைமை நினைத்து பயந்திருந்தோம்.

என் அம்மா பரூக்கின் அம்மா ஆயிஷாவிடம் என்னை பற்றி சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தார். நான் முன்பு போல் இல்லையாம். மனைவிக்கு அதிகம் பணிந்து பேசுகிறேனாம். அவர்கள் என் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அம்மா என்னை பற்றி இப்படி சொன்னதற்கு எனக்கு வருத்தமாக தான் இருந்தது. ஆனால், நான் வருத்தப்பட்டு வந்த விருந்தாளிகளுக்கு தெரிய கூடாது என்பதில் அமைதியாக இருந்தேன். போக போக அம்மா மனம் மாறிவிடும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது. இதே போல் ஒரு நாள், ஜோசப் தன் மனைவி ஜாஸ்மின் அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தான்.

நேரம் கிடைக்கும் போது நண்பர்கள் வீட்டுக்கு வருவதும், நாங்கள் அவர்கள் வீட்டுக்கு செல்வதுமாக இருந்தோம். புது ஊருக்கு வந்த உணர்வு, கொஞ்ச கொஞ்சமாக மறைய தொடங்கியது.

நாங்கள் சென்னை வந்து இரண்டு மாதமானது.

கோர்ட் வேலை எல்லாம் முடித்து விட்டு வீட்டுக்கு சென்ற போது அம்மா வாயில் சக்கரை தினித்தார்.

"டேய் ! நீ அப்பாவாக போற...." என்றார்.

சென்னைக்கு வந்து அம்மா சிரிப்பதை இன்று தான் நான் பார்க்கிறேன். மாமாவின் மரணம், ஹோட்டல் விற்றது, சிதம்பரத்தை காலி செய்தது என்று தன் எல்லா கவலைகளை மறந்து பேர குழந்தை பிறக்க போவதை நினைத்து சந்தோஷமாக இருந்தார். நான் அப்பாவாக போவதை விட அம்மாவை பழையப்படி சந்தோஷமாக பார்த்தது தான் எனக்கு பெரிய சந்தோஷமாக இருந்தது.

அம்மா வழக்கம் போல் கருவுற்ற என் மனைவிக்காக கடவுளிடம் நன்றி சொல்ல பூஜையறைக்கு சென்றார். அவளை கருவுற செய்தவன் எனக்கு வாழ்த்துக்கள் மட்டுமே !! எப்படியோ அம்மா பழையப்படியானதே எனக்கு போதும் என்று இருந்தது.

என் அறைக்கு சென்று சிவகாமியை பார்த்தேன். வெட்கப்பட்டு திரும்பிக் கொண்டாள். நான் அவளை கட்டியனைத்தேன். எத்தனையோ முறை அவளை கட்டி அணைத்திருந்தும், இப்போது இரண்டு பேரை சேர்த்து கட்டியணைப்பது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. நாளை, எங்கள் அணைப்பை ஒரு குழந்தை வந்து தடுக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். சிவகாமியின் வயிற்றை தடவி பார்த்தேன். இப்போதே குழந்தை வெளியே வந்து என்னிடம் பேச கூடாதா என்று தோன்றியது.

என் மாமனார் இனிப்புகளோடு வந்திருந்தார். தலைபிரசவம் அம்மா வீட்டில் பார்க்க வேண்டும் என்ற போதிலும் அங்கு பெண்கள் யாரும் இல்லாததால் எங்கள் வீட்டிலே பார்த்து கொள்கிறோம் என்றோம்.

அம்மா சிவகாமியை அன்போடு கவனித்து கொண்டார். அவள் மீது உள்ள கோபம், வெறுப்பு எல்லாம் மறைந்திருந்தது. அவளை பூ போல் பார்த்துக் கொண்டார். பிரசவ நாள் நெருங்க நெருங்க சிவகாமி பயம் அதிமானது. அம்மா அவளுக்கு தைரியமுட்டினாள்.

கோர்ட் வேலையாக ஜோசப்பிடம் ஒரு பத்திரத்தை பற்றி பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது அலுவகத்திற்கு போன் வந்தது. என் மாமனார் தான் பேசினார். சிவகாமிக்கு பிரசவ வழி வந்திருப்பதாக கூறினார். நான் அந்த பத்திர வேலையை ஜோசப்பிடம் கொடுத்து விட்டு சிவகாமியை பார்க்க சென்றேன்.

 மாலை ஆறு மணி.

சிவகாமி பிரச வேதனையில் நாக்கை கடித்து கத்தி கதறுவது காதில் கேட்டது. உடம்பில் இருக்கும் நாடி, நரம்பு இழுத்துக் கொண்டு கத்தினாள். அவள் ஒவ்வொரு முறையும் கத்தும் போதும் என் கண்களில் இருந்து நீர் துளி தரையில் விழுந்துக் கொண்டு இருந்தது.

இரவு ஒன்பது மணி.

முதலில் கத்தியதை விட இன்னும் அதிகமாக கத்தினாள். இடையில் சத்தம் கேட்காமல் இருந்தது. திடீர் என்று சத்தம் போட்டாள். ஏன் இவ்வளவு நேரம் குழந்தை பிறக்காமல் இருக்கிறது. பிரசவ அறையில் இருந்து வந்த சிப்பந்தியிடம் " எதுக்கு விட்டு விட்டு கத்துறாங்க...."

"பிரசவ வலினா அப்படி தான். வலி எடுக்கும் போது கத்துவாங்க. கொஞ்ச வலி தாங்கிட்டு இருப்பாங்க. எங்கள கேள்வி கேட்காம வேல செய்ய விடுங்க" என்று சொல்லி மருத்துவரின் அறையில் இருந்து எதோ எடுக்க சென்றாள்.

நல்லிரவு 12 மணி.

நீண்ட நேரம் மருத்துவமனையில் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டு இருந்தேன். பிரசவம் என் மனைவிக்கு என்றாலும், வலி எனக்கு இருந்தது. ஆறு மணி நேரமாக நடந்திருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. உடல் முழுக்க வேர்வையுமாக இருந்தது. மருத்துவமனையில் இருக்கும் மின் விசிரியில் கீழ் நின்றேன். வேர்வை தனிந்தது. மனதில் படபடப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது.

இரவு 2 மணி

மருத்துவமனையில் அப்படியே இரண்டு மணி நேரம் உடகார்ந்தப்படி தூங்கிவிட்டேன். என் மாமனார் என்னை தட்டி எழுப்பி டீ குடிக்க அழைத்தார். என்னால் எதுவும் சாப்பிட முடியவில்லை. எட்டு மணி நேரம் பிரசவ வலி எடுத்திருக்கிறது. இன்னும் ஏன் குழந்தை பிறக்காமல் இருக்கிறது ? பத்து தடவைக்கு மேல் வெளியே வந்த சிப்பந்தியிடம் கேள்வி கேட்டுவிட்டேன். என்னை பார்த்தாலே முறைத்து கொள்ளும் அளவிற்கு கேள்விகள் கேட்டுயிருக்கிறேன்.

கொஞ்ச நேரத்தில்.... ஒரு சிப்பந்தி வெளியே வந்தாள். நான் மீண்டும் அவளிடம் சென்று கேட்க ஒரு மாதிரியாக இருந்தது. அந்த பெண்ணே சிரித்தப்படி எங்கள் அருகில் வந்தாள். " ஆண் குழந்தை பொறந்திருக்கு....." என்று மருத்துவ சிப்பந்தி சொன்னாள்.

அம்மாவின் கண்களில் ஆனந்த கண்ணீர். என் மாமனாருக்கு சந்தோஷம்.

அம்மா என்னிடம், "உங்க மாமா உனக்கு குழந்தையா பொறந்திருக்காரு" என்று சொன்னார்.

நான் மாமாவுக்கு செய்ய நினைத்தை எல்லாம் என் மகனுக்கு செய்ய வேண்டும். அவன் ஆசைப்பட்டதை எல்லாம் நான் செய்து தர வேண்டும். என் வாழ்க்கையில் நான் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று இருக்கிறேன் என்று மகன் பிறந்த போது புரிந்தது.

அம்மா, சிவகாமி மகனை புதிதாய் பூத்த மல்லிகை பூ போல் ஒவ்வொரு விஷயத்தை பார்த்து பார்த்து செய்தனர். என் மாமாவின் நினைவாக என் மகனுக்கு அவர் பெயரையே வைத்தேன். 'ரகுராம்'.

நாட்கள் உருண்டோடியது. என் மகனுக்கு மூன்று வயது வந்தவுடன் அவனை பள்ளியில் சேர்க்க நினைத்தேன். அம்மா விஜயதசமி அன்று பள்ளி சேர்த்து விடு என்றார். அதில் எனக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும், அம்மாவிடம் இதைப்பற்றி வாதம் செய்திருக்க முடியாது. ஐந்தாறு வருடங்களாக ஏற்றுக் கொண்ட பகுத்தறிவு பேசுகிறேன். ஆனால், அம்மா பிறந்ததில் இருந்து கடவுள் நம்பிக்கை உடையவர். என்னால் எப்படி மாற்ற முடியும். சுயமரியாதைக்காரர்கள் குடும்பத்தில் சந்திக்கும் மிக பெரிய சவால் என்பது என்னைப்போல் இருப்பவர்களுக்கே தெரியும்.

ஜோசப்பின் நண்பர் ஒருவரின் சிபாரிசு மூலம் ரகுவுக்கு பள்ளியில் இடம் கிடைத்தது. அவனை முதல் நாள் பள்ளிக்கு அழைத்து செல்லும் போது பட்டாசு வெடிகள் எல்லாம் வெடித்து சந்தோஷமாக பலர் ஆரவாரம் செய்தனர். இன்று தீபாவளி கூட இல்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"வாத்தியார் முதலமைச்சராயிட்டார்...." கோஷங்கள் பலர் எழுப்பினர்.

Thursday, December 20, 2012

அந்த மூன்று பெண்கள் (2) - 6

நான் இப்படி சொன்னதும் அம்மா கண்கள் சிவந்தது. இதுவரை அவரை எதிர்த்து எதையும் செய்ய வேண்டும் என்று நினைத்ததில்லை. பி.ஏ படிப்பு வேண்டாம் என்று சொன்ன போது கூட மாமாவுக்காக படிக்க சம்மதித்தேன். இப்போது அம்மா 'வேண்டாம்' என்று சொன்ன பெண்ணை போட்டோ கூட பார்க்காமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறேன்.

 " என்னடா...! ராசியில்லாத பொண்ணு இந்த குடும்பத்துக்கு மருமகளா வரணுமா....?" என்று ரௌத்திர குரலில் கத்தினார்.

" ராசி எல்லாம் ஒண்ணும் கிடையாது. எல்லாம் நம்ப மனசு தான். அது மட்டுமில்ல ! மாமா இந்த பொண்ணு எனக்கு பொருத்தமா இருக்கும்னு வேற சொல்லியிருக்காரு...." என்று சொல்லி இழுத்த போது அம்மா முகம் மாறியிருந்தது. என் வீடு ஒரு நிமிடத்தில் நிசப்தமாக இருந்தது.

"அவரோட கடைசி ஆசை. இது கூட நான் நிறை வேத்தலைன்னா. நாம மனுஷங்களே இல்லமா...." என்றேன்.

மாமாவின் கடைசி ஆசை என்றுவுடன் அம்மா பதில் எதுவும் சொல்லவில்லை. அதே சமயம் அந்த ‘ராசியில்லாதவள்’ என்ற எண்ணம் அவர் மனதில் அழமாய் பதிந்து விட்டது.

மாணிக்கம் மாமா அந்த குடும்பம் சொல்லி கொள்ளும் படி வசதி இல்லை என்றும், சீர் வரிசை எல்லாம் பெரிதாக செய்ய முடியாது என்று எல்லாம் சொன்னார். இதுஎல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை. என் மனதில் இருந்த ஒரு நிபந்தனை மட்டும் சொன்னேன். அதற்கு பெண் வீட்டார்கள் சம்மதித்தால், உடனே திருமணம் என்றேன்.

என் திருமணம் தாலியில்லாமல் 'சுய மரியாதை' திருமணமாக இருக்க வேண்டும்.

அம்மா, மாணிக்கம் மாமா இதற்கு மறுப்பு தெரிவித்தும் என் எண்ணத்தில் உறுதியாக இருந்தேன். என் திருமணத்தில் தாலி, சடங்கு எதுவும் இருக்க கூடாது.

" உங்க மாமா போனதும் அப்புறம் எல்லாம் உன் இஷ்டப்படி செய்யுற" என்று சொல்லி கோபமாக அறைக்குள் சென்றார். மாணிக்கம் மாமா எதுவும் பேசமால் பெண் வீட்டார்களிடம் பேசிவிட்டு பதில் சொல்வதாக சொல்லி சென்றார்.

இரண்டு நாள் கலித்து மாணிக்கம் மாமா வீட்டுக்கு வந்து, பெண் வீட்டில் 'சுய மரியாதை' திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாக கூறினார்.

"என்னது தாலியில்லாத கல்யாணத்துக்கு சரி சொல்லுறாங்களா... என்ன குடும்பம் இது !" என்று முகத்தை சுளித்து கொண்டு அம்மா கேட்டார்.

" அங்க பொம்பளைங்க யாரும் இல்ல. பொண்ணுக்கு அப்பா மட்டும் தான். அவரும் தி.க இருக்குறவரு. சுய மரியாதை கல்யாணம்னு சொன்னவுடனே அவருக்கு சந்தோஷம். மாப்பிளைய பார்த்தே ஆகனும் துடிச்சாரு...." என்று பெண் வீட்டில் நடந்ததை ஒவ்வொன்றாக மாணிக்கம் மாமா சொன்னார்.

" தாலிக்காக ஒவ்வொரு பொண்ணும் விரதம் இருக்காங்க. நீங்க எல்லாம் தாலியில்லாம கல்யாணம் பண்ணுறத சொல்லுறீங்க..." என்ற அம்மா கோபமாக கேட்டார்.

மாணிக்கம் மாமா எதுவும் பேசவில்லை. உள்ளே இருந்த வெளியே வந்து, " யாரும் தாலிக்காக விரதம் இருக்குறது இல்ல. புருஷனுக்காக தான் விரதம் இருக்காங்க. பொண்ணுங்க விரதம் இருக்குறது புருஷன் இருந்தா போதும். தாலி தேவையில்ல...." என்றேன். என் நாத்திக வாதத்தை கேட்டவுடன் அம்மாவுக்கு கோபம் தலைக்கேறியது. மாணிக்கம் மாமா முன்பு என்னை திட்ட அம்மாவுக்கு மனம் வரவில்லை.

 "எப்படியோ செஞ்சிட்டு போங்க !!" என்றப்படி அம்மா உள்ளே சென்றார். எப்படியோ நான் நினைத்தது போல் எந்த பிரச்சனையில்லாமல் 'சுய மரியாதை' நடக்க பெண் வீட்டார் சம்மதித்துவிட்டனர்.

 என் திருமணத்தை பாலசுந்தரம் ஐயா தான் நடத்தி வைக்க வேண்டும். அவர் தான் என் மனதில் 'பகுத்தறிவு' பற்றிய விதையை மனதில் போட்டார்.’ பெரியா’ர் சொற்பொழிவை கேட்க வைத்து முழு பகுத்தறிவாதியாக என்னை மாற்றினார். எனக்கு அவர் திருமணம் நடத்தி வைத்தால் தான் சரியாக இருக்கும் என்று நினைத்தேன்.

 நான் கும்பகோணத்திற்கு சென்று என் திருமணத்தை பற்றி சொன்னேன். 'சுய மரியாதை' திருமணம் செய்துக் கொள்ள போகிறேன் என்று சொன்னவுடன் சந்தோஷப்பட்டார். நடத்தி வைக்கவும் சம்மதித்தார்.

எங்கள் வீட்டில் நிச்சயதார்த்தம், சீர்வரிசை, அர்ச்சகர், அக்னி குண்டம் என்று எதுவுமில்லாமல் முழுக்க முழுக்க 'சுய மரியாதை'யுடன் நடக்கும் முதல் திருமணம் என்னுடையது தான். எனக்கு மனைவியாக வர போகிறவளை திருமணத்தன்று தான் பார்த்தேன். நல்ல அழகு. அவள் கண்களில் கணிவும், பணிவும் நன்றாக தெரிந்தது. ரம்யாவிடம் இப்படி ஒரு பார்வை இருந்ததா என்ற சந்தேகம். இப்போழுது அவளை பற்றிய நினைப்பு எதற்கு ? இனி என் வாழ்நாள் முழுக்க பயணம் செய்ய போகிறவள் இவள் தான்.... இந்த 'சிவகாமி' என்ற என் புது தேவதை.

பாலசுந்தரம் ஐயா திருமண பத்திரம் படித்து முடித்ததும், நானும், சிவகாமி 'ஒன்றாய் வாழ்வதாக' உறுதி மொழி எடுத்து திருமண பத்திரத்தில் கையெழுத்து போட்டோம். என் சுயமரியாதை திருமணத்திற்கு நான் எதிர்பார்த்தது போலவே, எங்கள் வீட்டில் இருந்து சொந்தங்கள் பலர் வரவில்லை. நண்பர்கள் தான் அதிகப் பேர் வந்திருந்தார்கள். என் மரியாதை இழந்து சொந்தங்களை வரவழைப்பதை விட, சுயமரியாதையோடு இருப்பது மேல் என்ற எண்ணம் வழுவாக இருந்தது.

எங்கள் திருமணம் முடிந்ததும் முதலில் அம்மா காலில் தான் விழுந்தேன். தான் விதவை என்று முதலில் ஒதுங்கிய அம்மா, பிறகு எங்களை ஆசிர்வதித்தார். என் மாமானார் என்னை பார்த்து பெருமை பட்டுக் கொண்டார். தங்கள் மகள் திருமணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்ததை நினைத்து பூரிப்படைந்தார்.

 என்னதான் 'சுய மரியாதை' திருமணம் செய்துக் கொண்டாலும், தன் மருமகளுக்கு ஆரத்தி எடுத்து தான் என் அம்மா வரவேற்றார். சாமிப்படத்துக்கு பூ போட்டு விளக்கேற்ற சொன்னார். என் மனைவிக்கும் கடவுள் பக்தி அதிகம் என்று நினைக்கிறேன். அம்மா சொல்ல சொல்ல மறு பேச்சு பேசாமல் முன்பே பழகியவள் போல் எல்லா வேலைகளை செய்தாள். அவள் தந்தை தான் பகுத்தறிவாளர். ‘அவளில்லை’ என்பதை பார்த்துமே புரிந்து கொண்டேன்.

முதல் இரவு எங்கள் வீட்டுலே இருக்கட்டும் என்று மாமனாரிடம் முன்பே சொல்லியிருந்ததால், எங்கள் வீட்டு படுக்கையறை தேவையான அழங்காரம் செய்து இருந்தனர். என் திருமணத்து வந்த பரூக், ஜோசப் தம்பதியர்களாக வந்திருந்தனர். அவர்களிடம் பேசி கொண்டு இருந்தேன். இன்று இரவே அவர்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என்பதால் அவர்களை வழி அனுப்பி விட்டு வீட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தேன். எனக்கு முன்பே என் மனைவி அங்கு இருந்தாள். நல்ல நேரம் முடிவதற்குள் அறைக்குள் போக வேண்டும் என்பது அம்மாவின் கட்டளையாம்.

 கொஞ்சம் பதட்டமாகவே அவள் காணப்பட்டாள். நானும் பதட்டமாக தான் இருந்தேன். ஒரு தலை காதல் தவிர வேறு எந்த அனுபவமும் இல்லை. என்ன பேசுவது, எதில் இருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. முதலில் என்னை பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

 "ம்ம்.. சிவகாமி ! என்ன பயமா இருக்கா...." என்றேன்.

 " அப்படியில்ல...! உங்களுக்கு.... " என்று கிண்டலாக கேட்டாள்.

இவள் அமைதியான பெண்ணா ? .... சந்தர்ப்பம் கிடைத்தால் கேலியும், கிண்டலும் செய்யும் பெண்ணா ? என்று என் மனதில் கேட்டுக் கொண்டேன்.

 "கொஞ்சம் பயமா தான் இருக்கு...." என்றேன்.

பயம் இருந்தாலும் அதை தைரியமாக சொல்லும் மனம் பக்குவம் என்னிடம் உண்டு. என் பயத்தை தைரியமாகவே சொன்னேன். முதலில் எனக்கு ஏற்ப்பட்ட ஒரு தலை காதலை சொன்னேன். முதலிரவு அன்று அவள் அழகை பற்றி பேசாமல் என்னை பற்றி உண்மைகளை அவள் தெரிந்து கொண்டால் வாழ்க்கை சுமுகமாக போகும். இந்த இரவு கசப்பாக இருந்தாலும் வர போகும் எல்லா இரவுகளும் இனிக்கும்.

என் ஒரு தலை காதல் கதை கேட்டவுடன் அவள் முகம் வாடிவிட்டது. அவளை பிரிந்து வந்த காரணத்தை சொன்னாலும், நாம் தான் கணவர் மனதில் முதலில் குடி புகுந்தோம் என்ற விருப்பம் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும். அது பொய்யாகி போனது அவள் முகத்தில் தெரிந்தது.

நான் அவளை பார்த்து, " கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய ஒரு தலை காதல் இருக்கலாம். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு தலை காதல் இருக்க கூடாது. கணவன், மனைவி இரண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர் விரும்பினா தான் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் " என்றேன்.

அறை முழுக்க நிசப்தமாக இருந்தது. முதலிரவு அறைப் போல் இல்லை. இன்று தான் முதன் முதலில் இருவரும் சந்தித்தோம். இன்றே ‘உறவு’ வைத்து கொள்ள முடியும் என்பது எனக்கு அபத்தமாக இருந்தது. அதே சமயம் முதலிரவில் மனைவி ஒன்றும் செய்யாமல் இருக்க முடியவில்லை. அவளை அணைத்து முத்தமிட்டு படுத்துக் கொண்டேன். முதல் முறையாக வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்திருக்கேன். அந்த உணர்ச்சியிலே அவளிடம் எல்லை தாண்ட வேண்டும் போல் இருந்தது. என் ஒரு தலை காதலில் அதிர்ச்சியில் இருப்பவளை என்னால் கட்டாயப்படுத்த முடியவில்லை.

இரண்டு நாள் சென்றது. சிவகாமி கோயிலுக்கு போக வேண்டும் என்றாள். நம்பிக்கையில்லாத இடத்துக்கு சென்று என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. மறுத்தேன். அவளுடைய அப்பாவும் என்னை போல் நாத்திகன் என்பதால் நிச்சயம் அவரோடு அவள் கோயிலுக்கு சென்றியிருக்க மாட்டாள். திருமணம் ஆன புதிதில் கணவனோடு கோயிலுக்கு போக வேண்டும் என்று எல்லா பெண்களுக்கும் ஆசையிருக்கும். முதலிரவில் அவளை வாடியது போல் மீண்டும் வாடி நின்றாள்.

வாடிய அவள் முகத்தை பார்க்க எனக்கு கஷ்டமாக இருந்தது. ஒரு நிமிடம் யோசித்தேன். கோயிலுக்கு வருவதாக சம்மதித்தேன். என் சிவகாமிக்காக....!!! 

என்னை பொருத்தவரை கோயிலில் இருப்பது 'கல்' தான். தன்னை திருடர்களிடம் இருந்து காப்பாற்ற தெரியாத கறுப்பு கல். அவ்வளவு தான். ஆனால், அந்த கல்லை வணங்குவதில் சிவகாமிக்கு எவ்வளவு சந்தோஷம். இதுவரை தன் தோழிகளுடன் தான் கோயிலுக்கு சென்றியிருக்கிறாள். முதல் முறையாக ஒரு ஆண் துணையோடு கோயிலுக்கு வருவதை சொன்னாள். அதுவும் நான் சம்மதிப்பேன் என்று அவள் எதிர்பார்க்கவில்லையாம். அவளை கோயிலுக்கு அழைத்து வந்த சந்தோஷத்தில் என்னிடம் பேசிக் கொண்டே இருந்தாள். நான் அவள் பேசும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தேன்.

ஒரு மாதம் உருண்டோடியது. அவள் மனம் ஒரு நிலையடைந்து எங்களுக்கு சந்தோஷமும், இயல்பான தம்பதியர்கள் போல் நாங்களும் வாழ தொடங்கினோம்.

மாமா இறந்த பிறகு ஹோட்டலை சரியாக பார்த்துக் கொள்ள ஆட்கள் இல்லாமல் முடிவைத்திருந்தோம். என்னால் மீண்டும் ஹோட்டல் வேலை எல்லாம் எடுத்து செய்ய முடியும் என்று தோன்றவில்லை. வழக்கறிஞர் வேலை தான் செய்வதென்று முடிவெடுத்து விட்டேன். ஹோட்டலை பார்க்கும் போதெல்லாம் மாமா சமையல் அறைக்கு செல்வது, கல்லா பெட்டியில் இருந்து பணம் வாங்குவது போல் தெரிந்தது. அங்கு இருக்கும் ஒவ்வொரு செங்கல்லும் மாமாவை தான் நினைவுப்படுத்தியது.

அம்மாவிடம் ஹோட்டலை விற்று விட்டு சென்னைக்கு போகலாம் என்று சொன்னேன். முதலில் அம்மா சம்மதிக்கவில்லை. நான் கட்டாயப்படுத்திய பிறகு சம்மதித்தார். இவ்வளவு நாள் எங்களை வாழ வைத்த ஹோட்டலை விற்று தருமாறு மாணிக்கம் மாமாவிடம் சொன்னேன். சிதம்பரத்தில் நன்றாக போன ஹோட்டல் என்பதால் இரண்டே நாளில் வாங்குபவரை அழைத்து வந்தார்.

நான் வழக்கறிஞராகி எழுதும் முதல் பத்திரம் எங்கள் ஹோட்டல் விற்பதனை பத்திரம் தான். ஹோட்டலை ஐம்தாயிரத்திற்கு விற்றோம். ஜோசப்பிடம் சென்னையில் ஒரு வீடு வாங்க சொல்லியிருந்தேன். அவனும் சென்னைக்கு ஒதுக்கு புறமான அண்ணா நகரில் ஒரு வீடு விலைக்கு இருப்பதாக சொன்னான். அங்கு சென்று வர மாமாவின் புல்லட் இருப்பதால் ஒதுக்குபுரமாக அந்த வீட்டை வாங்குவதாக ஜோசப்பிடம் கூறினேன். 


ஹோட்டல் விற்ற பணத்தில் சென்னையில் வீடு வாங்கி அங்கே குடிபுகுந்தோம். நானாவது மூன்றாண்டுகள் இங்கே படித்திருக்கேன். ஆனால், அம்மா திருமணமானதில் இருந்து சிதம்பரதை விட்டு வந்த்தில்லை. முதல் முறையாக சிதம்பரத்தை விட்டு வருகிறாள். அதுவும் நிரந்தரமாக வருகிறாள். இவ்வளவு நாள் வாழ்ந்த ஊரை மனமில்லாமல் காலி செய்து வந்தோம். ஆனால், மாமாவின் நினைவுகள் எங்களோடு தான் வந்தது.

அண்ணா நகர் வீட்டில் முதல் அடி வைத்ததும் முதல் இடி சத்தம் கேட்டது. 'பெரியார் இறந்து விட்டார்' என்று தலையில் அடித்து கொண்டு பலர் அழுதனர்.

Wednesday, December 12, 2012

அந்த மூன்று பெண்கள் (2) - அத்தியாயம் - 5

உலகத்திலே மிக கஷ்டமான அவஸ்தையான ஒன்று என்னவென்றால் நாம் அதிகம் நேசிப்பவர்களை வெறுப்பது தான். நாம் எந்த அவளவுக்கு ஒருவரை நேகிக்கிறோமோ அவர் நம்மை ஏமாற்றும் போது அந்த அளவிற்கு கோபம், வெறுப்பும் அதிகமாகிவிடுகிறது. அந்த நபரிடம் வெறுப்பை காட்டும் போதெல்லாம் நாம் முன்பு அவர்கள் மீது வைத்திருந்த அன்பு வந்துக் கொள்ளும். இப்படி ஒரு அவஸ்த்தையை தான் நான் அனுபவித்தேன்.

எனக்கு அவள் மீது நம்பிக்கை இல்லாமல் போனது. அவள் தன் தோழிக்கு நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறாள். கேவலம் ஒரு புத்தகத்திற்காக திருடியாக மாறுவாள் என்று நினைக்கவில்லை. இதை பற்றி அவளிடம் கேட்கவும் எனக்கு மனமில்லை. முடிந்தவரையில் அவளிடம் பேசாமல் தவிர்ப்பது தான் நல்லது. ஒரு வேளை கோபத்தில் என் மனதில் இருந்த காதலை கூட கொட்டி விட்டால், அதனால் தான் தன் மீது பழி போடுகிறான் என்று விஷயத்தை திருப்பிவிட்டாலும் விடுவாள்.

உலகத்தில் யாரை வேண்டுமானாலும் நம்பலாம். ‘பார்ப்பனர்களை நம்பக் கூடாது’ என்ற எண்ணம் மனதில் மேலும் ஆழமாக பதிந்தது. இப்படி சொல்வதால் நான் ஜாதி வெறி பிடித்தவன் என்று நினைக்க தோன்றும். நான் எல்லா மத இனத்தவர்களிடமும் அன்பாக பழக்கூடியவன். என் நண்பர் பரூக், ஜோசப் வேறு மதத்தை சேர்ந்தவர்கள். என்னை 'பையா' என்று அழைக்கும் 'பாத்திமா' வேறு மதம். இரண்டு ஆண்டுகளாக 'பாய்' வீட்டில் தான் தங்கி படித்திருக்கிறேன். எல்லா மதத்தில் நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கும் போது ஏன் பார்ப்பனர்களின் சுயநலவாதிகளாகவே இருக்கின்றனர்.

இரண்டு ஆண்டு படிப்பு முடிந்து மூன்றாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கை. இது தான் இறுதி ஆண்டு. இந்த வருடம் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மாமாவின் கட்டளை. ரம்யா மீது இருந்த காதல் உயிர்யில்லாமல் போனது. படிப்பு முடித்தபின் கல்யாணத்தை பற்றி யோசிக்கலாம் என்று இருந்து விட்டேன்.

ரம்யா கண்ணில் எதிர்படும் போதெல்லாம் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு சென்று விடுவேன். என் சிரிப்பு முகத்தளவு மட்டுமே தெரிந்தது. அவளிடம் பேச எந்த விருப்பமும் இல்லை. அப்படியே அவள் பேச வந்தாலும் ஒரு வார்த்தையில் பதில் அளித்து விடுவேன். அவளும், லக்ஷ்மியும் சேர்ந்து வந்தால் ‘ஆளுங்கட்சியின் மேலுள்ள வெறுப்பினால் எதிர்கட்சிக்கு ஓட்டுப் போடுவது’ போல் நான் அவளிடம் பேச்சை குறைத்து லக்ஷ்மியிடம் பேசுவேன். இப்படியே தொடர்ந்துக் கொண்டு இருந்ததில் அவளும் என்னிடம் பேச குறைத்துக் கொண்டாள். நாங்கள் இருவரும் அறிமுகமானவர்கள். அவ்வளவு தான். ‘எங்களுக்குள் எதுவும் இல்லை’ என்று எனக்குள் சொல்லி நானே நம்ப தொடங்கினேன். அவளும் அப்படியே நடந்துக் கொண்டாள்.

பல போட்டி, பொறாமை, கோபங்களுக்கு நடுவில் இறுதி ஆண்டு படிப்பை படித்து முடித்தேன். இனி என் வாழ்நாளில் ரம்யாவை சந்திக்க கூடாது என்று தீர்மானமாக இருந்தேன்.

ஜோசப், ஜாஸ்மின் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள போவதாக கூறினார்கள். அவர்கள் காதலுக்கு வாழ்த்து தெரிவித்து, திருமணத்துக்கு கண்டிப்பாக வருவேன் என்று சொன்னேன்.

இந்த மூன்று ஆண்டுகளில் பரூக்கின் அம்மா சாப்பாடு என்னால் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. பாத்திமாவின் சகோதர பாசத்தையும் அளவிட முடியாது. பரூக் பார்க்கும் போதெல்லாம் என் மனதில் பாரதியார் எழுதிய ஒரு வரி ஞாபகம் வரும்.

"இங்கிவினை நான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்". 

என் வாழ்நாள் முழுக்க இவர்கள் என்னுடனே இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரே வீட்டில் இரண்டு பேரின் குடும்பமும் வாழ வேண்டும் என்ற ஆசை பிறந்தது. பரூக்கின் அம்மாவிடம் ஆசி பெற்றுக் கொண்டேன். பாத்திமா கண்ணில் நீர் நிரம்ப என்னை வழி அனுப்பி வைத்தாள்.

"பையா! எங்கள மறந்திட மாட்டீங்ளே...."

" நீங்க எப்போது என் கூடவே இருப்பீங்க.... எப்படி என்னால மறக்க முடியும் " கண்ணில் நிறம்ப பதில் சொன்னேன்.

பரூக் என்னை வாரி கட்டி அணைத்துக் கொண்டான். அவன் சிதம்ரத்தை விட்டு செல்லும் போது எனக்கு இந்த அளவுக்கு துயரம் வரவில்லை. ஆனால், இப்போது இந்த குடும்பத்தை விட்டு பிறிவது நினைத்தால் வேதனையில் வெந்து போகின்றேன். பிரிய முடியாமல் பிரியாவிடை பெற்றுக் கொண்டு பஸ் நிலையத்திற்கு சென்றேன்.

" நல்ல சாப்பிடுப்பா. உடம்ப பத்திரமா பார்த்துக்கோ..." என்று பரூக் அம்மாவின் குரலில் நான் பஸ் ஏறும் வரை என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

பரூக் என்னை பஸ்ஸில் ஏற்றிவிட்டான். கண்ணில் நீர் நிறம்ப பஸ்ஸில் ஏறி சிதம்பரத்திற்கு சென்றேன்.

மாத விடுமுறைக்கு வந்து கொண்டு இருந்த நான் மீண்டும் நிரந்தரமாக சிதம்பரத்தில் தங்க வந்துவிட்டேன். அதுவும் ஒரு வழக்கறிஞராக !!

பல லட்சிய கனவுகளுடன் என் ஊரில் கால் வைத்தேன். அம்மாவை ராணி போல் வாழ வைக்க வேண்டும். என்னக்காக மாமா வாழ்நாள் முழுக்க கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார். ஹோட்டலை விற்றுவிட்டு அவரை உட்கார வைத்து சோறு போட வேண்டும். இனி அவர் உழைக்கவே கூடாது. ஓய்வு தான் எடுக்க வேண்டும். இப்படி பல ஆசைகளோடு சைக்கிள் ரிக்ஷாவை நோக்கி சென்றேன்.

நான் வீட்டுக்கு செல்ல சைக்கிள் ரிக்ஷா பேசிக் கொண்டு இருக்கும் போது மாணிக்கம் மாமா மருந்து கடையில் மருத்து வாங்கி கொண்டு சென்றார். நீண்ட நாள் பிறகு இன்று தான் அவரை பார்க்கிறேன். சென்ற விடுமுறை கூட அவரை நான் பார்க்கவில்லை. வெளியூர் போய்யிருந்ததாக மாமா சொல்லியிருந்தார்.

" என்ன மாணிக்கம் மாமா ! எப்படி இருக்கீங்க.... போனவாட்டி கூட உங்கள பார்க்க முடியல..." என்று மலர்ந்த முகத்தோடு பேசினேன்.

அவர் கண்கள் அழுது சிருத்துக் கொண்டது போல் இருந்தது. அவர் உறவினர்களுக்கு உடல் சரியில்லாமல் இருக்கும் என்று நினைத்தேன். கையில் மருந்தெல்லாம் வைத்திருந்தார்.

" இப்ப தான் ஊருல இருந்து வந்தியா...." என்றார்.

 " ஆமா ..."

 " நல்ல வேல. நீ என் கூட வா..." என்று கை பிடித்து அழைத்து சென்றார்.

நான் என் துணி மணியை வீட்டில் வைத்து விட்டு வருகிறேன் என்று சொல்லியும் என்னை விடவில்லை. அவர் என்னை 'நடராஜர் மருத்துவமனை'க்கு அழைத்து சென்றார். ஏன் இப்படி செய்கிறார் என்று புரியவில்லை. எப்போதும் பேசி குழப்புபவர், இப்போது செய்கையால் குழப்பினார். எதாவது சொல்ல போகிறாரா, காட்ட போகிறாரா... எனக்கு குழப்பம் தான் அதிகமானது. ஒரு முறையாவது இவர் தெளிவாக எந்த வேலையும் செய்யமாட்டாரா என்று நினைத்துக் கொண்டேன்.

மருத்துவமனையில் நுழைந்தவுடன் அம்மா கண்ணில் தழும்ப நின்றுக் கொண்டு இருந்தார். என்னை பார்த்ததும் கட்டி பிடித்து அழுதார். அப்பா இறந்த போது எப்படி கட்டி பிடித்து அழுதோரோ அதே போல் இருந்தது. அம்மா எதுவும் பேசமால் அழுதுக் கொண்டே இருந்தார்.

" உங்கள் மாமாவுக்கு மாரடைப்பு. நேத்து ராத்திரி தான் ஆஸ்பத்திரியில சேர்த்தோம்" என்றார். மாணிக்கம் மாமா சொன்னவுடன் திடுக்கிட்டேன்.

அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என்னை தனியாக விட்டு ஓய்ந்து போககிறார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. 

மாணிக்கம் மாமா என்னை தனியாக அழைத்து சென்று, " நானே உனக்கு தகவல் கொடுக்கனும்னு இருந்தேன். டாக்டர் காப்பத்த முடியாதுனு சொல்லிட்டாரு. அம்மாவுக்கு நீ தான் ஆருதல் சொல்லனும்..." என்றார்.

"ஐயோ...ஐயோ..." என்று புழம்ப வேண்டும் போல் இருந்தது. யாரை உட்கார வைத்து வாழ்நாள் முழுக்க சாப்பாடு போட்டு ராஜா மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேனோ அவர் நிரந்தரமாக படுக்கப்போககிறார் என்று சொன்னால் எனக்கு எப்படி இருக்கும். அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல நான் இருக்கிறேன். எனக்கு ஆறுதல் யார்...?

அப்பா இறந்த பிறகு மாமா தான் எங்களை வாழ வைத்தார். அப்பா இருந்திருந்தால் கூட எங்களை இப்படி கவனித்திருக்க மாட்டார் என்று பல முறை நினைத்திருக்கிறேன். அவர் வாழ்நாள் முழுக்க எங்களுக்கு செய்த உதவியில் திரும்பி செய்ய வாய்ப்பில்லாமல் செய்துவிட்டாரே...!

என் தலை அடித்துக் கொண்டு "ஐயோ...ஐயோ...." என்று அழுதேன். அம்மா மாமாவின் மரணத்தை பற்றி சொன்னதும் பிரஷர் அதிகமாகி மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். டாக்டர் அம்மா உடலை பார்த்து ஒரு நாள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க சொன்னார். மாமாவை பிணமாக பார்க்கும் சக்தி என்னகே இல்லாத போது அம்மாவால் எப்படி பார்க்க முடியும். அம்மாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மாமாவுக்கு நடக்க வேண்டிய காரியங்களை கவனித்தேன்.

"கடமைய முடிச்சிட்டுச்சு இவரு பாட்டுக்கு போய்ட்டாரே. இவருக்கு அப்படி என்ன அவசரம். அவருக்கு செய்யனும்னு நினைச்சது எல்லாம் எப்போ செய்ய முடியும்" என்று மாணிக்கம் மாமாவிடம் சொல்லி புலம்பினேன்.

மாமாவின் உடலை சாஸ்த்திரப்படி தகனம் செய்ய சில செய்ய சொன்னார்கள். இப்போது எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. ஆனால், மயக்க நிலையில் அம்மாவுக்கு இது தெரிந்தால் தாங்கிக் கொள்ள மாட்டார். கோபத்தில் என்ன செய்வார் என்று சொல்ல முடியாது. என் கொள்கைக்காக சாஸ்த்திரங்களை மதிக்காமல் தகனம் செய்தால், மாமா இறந்ததை விட பெரிய வலியை அம்மாவுக்கு கொடுப்பது போல் இருக்கும். எனக்காக வாழ்ந்த ஒரு உயிருக்கு என் கொள்கையை விட்டு கொடுப்பதில் எனக்கு பெரிதாக தெரியவில்லை. அப்படி தவறு என்று யார் சொன்னாலும் கவலையில்லை. என் மாமாவை அடக்கம் செய்ய சொன்ன இறுதி சடங்குகளை, சாஸ்த்திரங்களை செய்து அவர் உடலை மயானத்தில் தகனம் செய்தேன்.



என்னைப் போல் திராவிடக் கொள்கை ஏற்றுக் கொண்டவர்கள் இப்படி தான் பல இக்கட்டானா நிலைமை சந்தித்திருப்பார்களா ? அவர்கள் எல்லாம் எப்படி இதில் இருந்து மீண்டு இருப்பார்கள் ? சுற்றத்தின் வற்புருத்தலால் பழைய சாஸ்திரங்களை செய்யும் போது, திராவிட கொள்கை ஏற்றுக் கொண்டவர்கள் எப்படி எல்லாம் விமர்சிக்கப்பட்டிருப்பார்கள் ? கடவுளை வணங்குபவர்கள் கடவுள் சோதிப்பதாக சொல்வார்கள். ஆனால், திராவிடக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் சுற்றியிருப்பவர்கள் சோதனை செய்கிறார்கள்.

மாமா படத்திற்கு முன்பு விளக்கேற்றி அழுதப்படி அமர்ந்திருந்தேன். மருத்துவமனையில் இருந்து அம்மா மாமா படத்தை பார்த்து கதறி அழுதார்.

"கடைசி வரைக்கும் அவர் முகத்த பார்க்காம பண்ணிட்டீங்களே...." என்று சொல்லி என் தொடையில் படுத்து அழுதார். என் அம்மாவுக்கு நான் அம்மாவாக இருந்து ஆறுதல் சொன்னேன். இப்போது எனக்கென்று இருக்கும் ஒரே சொந்தம் அம்மா மட்டும் தான்.

மாமா இறந்து ஒரு வாரம் மேலானது. மாணிக்கம் மாமா கையில் ஒரு போட்டோவோடு வீட்டுக்கு வந்தார். அவரை உள்ளே வரவழைத்து உட்கார சொன்னேன். தன் கையில் இருக்கும் போட்டோவை அம்மாவிடம் கொடுத்தார்.

" இந்த பொண்ணு தான் ராமா சந்திருவுக்கு பொருத்தமா இருக்கும்னு சொன்னான். சம்மந்தம் பேசுறதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு...." என்றார்.

" வேண்டாம் அண்ணே. வேற பொண்ணு பாருங்க. இந்த பொண்ண பார்த்த நேரம். என் அண்ணனே என்ன விட்டு போய்ட்டார்" என்று சொல்லி தன் கையில் இருந்த போட்டோவை மாணிக்கம் மாமாவிடம் கொடுத்தார்.

எனக்கு ஏதோ சொல்ல வேண்டும் போல் இருந்தது. அம்மா, மாமா எனக்கு எது செய்தாலும் நன்மைக்காக தான் செய்வார்கள். அந்த அளவிற்கு நம்பிக்கை அவர்கள் மீது வைத்திருக்கிறேன். ஆனால், இப்போது இது பேசுவது தவறாக கூட இருக்கலாம். சொல்வது சரி என்று என் மனதில் பட்டது.

" மாணிக்கம் மாமா ! அந்த பொண்ணே கல்யாணம் பண்ணிக்கிறேன். பேசி முடிச்சிடுங்க " என்றேன்.

Tuesday, December 4, 2012

அந்த மூன்று பெண்கள் (2) - அத்தியாயம் - 4

ஆறு மாதம் பிறகு மீண்டும் அந்த மூன்று பெண்கள் நாவல் தொடர்கிறது....!!!
**
"அந்த மூன்று பெண்கள்" நாவலை முழுவதும் வாசிக்க

'கடவுள் இல்லை' என்று யாரும் யாரையும் ஏமாற்றுவதில்லை. 'கடவுள் உண்டு' என்று சொல்பவர்கள் தான் ஒருவனை ஒருவன் ஏமாற்றிக் கொள்கிறான். கடவுள் இல்லை என்று சொல்பவன் தன் கருத்தை மற்றவர்கள் மீது தினிப்பதில்லை. பிரச்சாரம் மற்றுமே செய்கிறான். ஆனால், 'கடவுள் உண்டு' என்று சொல்பவர்கள் கடவுளை வணங்க கட்டாயப்படுத்துகிறார்கள். கடவுளை வணங்கவில்லை என்று 'சாமி கண்ண குத்தும்' என்று சிறுவயதிலே பயமுறுத்துகிறார்கள்.

தெளிவான மனதோடு இரண்டாம் ஆண்டு சட்ட கல்லூரி வகுப்பில் எடுத்து வைத்தேன். முடிவு எடுத்து விட்டேன். 'கடவுளை வணங்க போவதில்லை', 'கோயிலுக்கு செல்ல போவதில்லை' இது தான் என் முடிவு. நான் ஒரு முழுமையான நாத்திகனாக மாறிவிட்டேன் என்று என்னால் உணர முடிந்தது.

வகுப்புக்குள் நுழைந்தவுடன் ரம்யா, லக்ஷ்மி தான் என் கண்ணில் பட்டார். இருவரையும் பார்த்து சிரித்து விட்டு என் இடத்திற்கு சென்று அமர்ந்தேன். ஜோசப், ஜாஸ்மின் வகுப்பு தொடங்கும் கொஞ்ச நேரத்திற்கு முன்பு உள்ளே வந்தனர். வகுப்பில் பாடத்தை கவனமாக குறிப்பு எடுத்துக் கொண்டு இருந்தேன். என்னை அறியாமல் சில சமயம் ரம்யாவை பார்த்தேன். விரும்பும் பெண்ணை கொள்கைக்காக வெறுக்கும் ஒரே முட்டாள் நானாக தான் இருப்பேன் என்று நினைத்துக் கொண்டேன்.

பார்ப்பனர்கள் எல்லாம் இப்படி என்று முடிவுக்கு வந்த பிறகு ரம்யா மட்டும் விதிவிளக்காக எப்படி இருக்க முடியும். இனி ரம்யாவோடு தொடர்ந்து பேசலாமா ? வேண்டாமா ? என் மனதில் பட்டி மன்றமே நடத்தினேன். தீர்ப்பு கிடைக்கும் வரை அவளோடு பேசலாம் என்று தீர்ப்பை ஏற்றுக் கொண்டேன்.

வகுப்பு நடக்கும் போது ரம்யா என்னை திரும்பி திரும்பி பார்த்தாள். ஒரு மாதம் கலித்து என்னை பார்த்த ஏக்கம் அவள் கண்ணில் தெரிந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவளுக்கு என் மீது காதல் வந்திருக்குமோ என்ற ஆசையும் மனதில் இருந்தது. கொள்கைக்கும், காதலுக்கும் நடுவில் போராட்டமே நடத்தினேன்.

வகுப்பு முடிந்ததும் ரம்யாவே என்னிடம், ' சந்திரு ! எப்படி இருக்க...? லீவ் எல்லாம் எப்படி போச்சு...? " என்று என்னை பற்றி விசாரித்தாள்.

" நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க... லீவ்ல என்ன பண்ண ? ".

" நான் புதுசா என்ன பண்ண போறேன். சாண்டில்யன் எழுதின 'கடல் புறா' புஸ்தகம் படிச்சேன். அவ்வளவு தான்." என்றாள்.

அவளாக பேச தொடங்கட்டும். ஒவ்வொரு முறையும் நான் ஒரு கேள்வி கேட்பதும், அதற்கு அவள் பதில் சொல்வதுமாக தான் எங்கள் சந்திப்பு இருந்தது. முதல் முறையாக அவள் என்னிடம் கேள்வி கேட்டுயிருக்கிறான். இது அப்படியே தொடர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

" ஆமா, லீவ்ல என்ன பண்ண...?" என்று கேட்டாள்.

"ரொம்ப நாள் கலிச்சு அம்மா கையால சாப்பிட்டேன். ஃபிரண்டோட கும்பகோணம் போனேன். அங்க 'பெரியார் பார்த்தேன். அவர் பேசுனது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது..." என்று அவளிடம் சொன்னேன். வேண்டுமென்றே பெரியாரை பற்றின பேச்சை அவள் முன் எடுத்தேன்.

திராவிட கொள்கையை பற்றி அவளுடைய எண்ணம் என்னவென்று தெரிந்துக் கொள்ள ஆசையாக இருந்தது.

"என்ன பெரியார் பேச்ச போய் நல்லா இருக்குனு சொல்லுற..." என்று முகத்தை சுலித்துக் கொண்டு கேட்டாள்.

‘பெரியார் பேச்சை நன்றாக இல்லை’ என்றால் யார் பேச்சை நன்றாக இருக்கிறது என்று சொல்ல முடியும். அவர் பேச்சை கேட்க எத்தனை பேர் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர் பேச்சை கேட்டது என் வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். அவள் இப்படி சொன்னவுடன் எனக்கு கோபம் தலைக்கேறியது.

" அவர் இல்லனா பொண்ணுங்க படிப்பப்பத்தி நினைச்சு கூட பார்த்திருக்க முடியாது. " என்றேன்.

"கடவுள் இல்லனு சொல்லுறவருக்கு வக்காளத்து வாங்குற..." என்று இழுத்து எதோ சொல்ல வந்தாள். அவள் சொல்வதை முடிக்க விடாமல், நான் " நா இப்ப இருந்தே வக்கில். அதான் நல்லவங்களுக்கு வக்காளத்து வாங்குறேன்" என்றேன்.

அவள் வாதத்தை தொடர விரும்பவில்லை. என்னிடம் பேசாமல் சென்று விட்டாள். இரண்டாம் ஆண்டு, முதல் நாளே இப்படியானதும் கொஞ்சம் சூடாக தான் இருந்தது. இருந்தாலும், ‘பெரியார்’ மீது எந்த அளவுக்கு எனக்கு பற்று வந்திருக்கிறது என்று என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

பரூக் வீட்டில் கல்யாண வேலை எல்லாம் பரபரப்பாக நடந்தது. மணபெண் பாத்திமா வாணியம்பாடி ஊரை சேர்ந்தவள். மணபெண் வீட்டார்கள் எல்லாம் சென்னைக்கு வரவழைத்து 'நிக்கா' நடத்தினர். பரூக் புது மாப்பிள்ளையாகி விட்டான். இதற்கு மேல் அவன் வீட்டில் நான் தங்கினால் புது தம்பதியர்களுக்கு சங்கடமாக இருக்கும்.

நான் செய்த உதவிக்கு பரூக் என்னை அவன் வீட்டில் தங்க வைத்தான். அதே நன்றி அவன் மனைவியிடம் நான் எதிர் பார்ப்பது நியாயமில்லை. முன்பே ஜோசப்பிடம் ஒரு வீடு பார்க்க சொல்லியிருந்தேன். அவனும் எனக்கு ஒரு வீடு பார்த்து வைத்திருப்பதாக சொன்னான்.

'நிக்கா' முடிந்த கையோடு அவனிடம் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வான் என்பதால் நான் செல்வதை பற்றி எதுவும் அவனிடம் சொல்லவில்லை. நான் அவன் வீட்டில் இருந்தது பெண் வீட்டாரை கவனித்துக் கொள்ள உதவியாக இருந்தது. நிக்கா முடிந்து ஒரு வாரம் ஓடிவிட்டது. மணபெண் பாத்திமாவின் பெற்றோர்கள், உறவினர்கள் எல்லாம் வாணியம்பாடிக்கு சென்றனர்.

" பரூக் ! என் காலேஜ் பிரண்ட் ஜோசப் எனக்கு ஒரு தனி ரூம் பார்த்திருக்கான். நான் அங்க போய் தங்கிடலாம் இருக்கேன்..." என்றேன்.

அவன் அம்மா ஆயிஷா என்னை புரியாமல் பார்த்தார். " என்னடா ஆச்சு...! நிக்காவுல யாராவது உன்ன தப்பா பேசுனாங்களா....இல்ல உன்ன சரியா நடத்தலையா...." என்றான்.

"ச்சச்சே.... இது நம்ம வீட்டு கல்யாணம். என்ன யார் கவனிக்கனும். நான் எல்லாரையும் கவனிச்சேன்." என்றேன்.

"அப்புறம் எதுக்கு என்ன விட்டு தனியா போய் தங்குறேனு சொல்லுற...."

"இல்லடா ! உனக்கு கல்யாணமாடிச்சு. உங்களுக்கு தனிமை தேவப்படும். நான் இருந்தா நல்லா இருக்காது. அதான்...." என்று இழுத்தேன்.

அப்போது பரூக்கின் மனைவி பாத்திமா, " பையா ! நீங்க சொல்லுறத பார்த்தா நாங்க தனி குடுத்தனம் போகனும்னு சொல்லுற மாதிரி இருக்கு..." என்றாள். அவள் என்னை 'அண்ணன்' நினைத்தோடு மட்டுமில்லால் 'அண்ணன்' உரிமையில் பேசியதை என்னால் உணர முடிந்தது.

"நா இந்த வீட்டுக்கு வந்தது வாழுறதுக்கு. அவர் கூட இருக்குறவங்கள பிரிக்கிறதுக்கு இல்ல. நீங்க இப்போ போனா என்னால தான் நீங்க வீட்ட விட்டு போணீங்கனு அவரு என் கிட்ட சரியா பேசமாட்டாரு..." என்றாள்.

பரூக், அவனின் அம்மாவை விட அவன் மனைவி பாத்திமாவின் அன்பு கட்டளையில் இருந்து என்னால் தட்டி கலிக்க முடியவில்லை. நான் அவர்களோடு தங்க சம்மதித்தேன். மறு நாள், கல்லூரியில் ஜோசப்பிடம் நான் புது வீட்டுக்கு வரவில்லை என்பதை தெரிவித்தேன். அப்போது தன் புத்தகம் காணோம் என்று ஜாஸ்மின் அங்கும், இங்கும் தேடிக் கொண்டு இருந்தாள். தன் புத்தகத்தை பற்றி லக்ஷ்மி, ரம்யாவிடம் கேட்டுக் கொண்டு இருந்தாள். பெண்கள் உட்காரும் ஒவ்வொரு இடமாக தேடி பார்த்தாள்.



" என்ன ஆச்சு ஜாஸ்மின். என்ன தேடுற..." என்று ஜோசப் அவள் தேடுவதை பற்றி கேட்டான்.

" என்.டி.கப்பூர் எழுதுன 'மெர்க்கன்டைள் லா' பூக் வச்சிருந்தேன். காணோம். நாளைக்கு முக்கியமான நோட்ஸ் எடுக்கனும். இப்ப என்ன பண்ணுறதுனு தெரியல்ல..." என்று பதரினாள்.

விலை உயர்ந்த புத்தகம். ஜாஸ்மின் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது. பாவம் எந்த இடத்தில் புத்தகம் வைத்தாளோ தெரியவில்லை.

" இதுக்கு போய் ஏன் அழுவுற. என் கிட்டையும் என்.டி.கப்பூர் புக் இருக்கு. தரேன்." என்று அவளை சமாதானம் சொல்லி ஜோசப் அழைத்து சென்றான். அவர்கள் சென்றவுடன் நான் வழக்கம் போல் பஸ் நிலையத்துக்கு சென்றேன். 

அங்கு ரம்யா, லக்ஷ்மி இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்தேன். ரம்யாவிடம் இருந்து லக்ஷ்மி ஒரு புத்தகம் வாங்கினாள். அந்த புத்தகம் பார்த்ததும் அதிர்ந்தே விட்டேன்.

 அது ஜாஸ்மின் வைத்திருந்த என்.டி.கப்பூரின் 'மெர்க்கன்டைள் லா' புத்தகம் !!

Thursday, April 19, 2012

அந்த மூன்று பெண்கள் (2) - அத்தியாயம் - 3

அந்த மூன்று பெண்கள் நாவலை முழுவதும் வாசிக்க

ஒரு மாத விடுமுறைக்கு சிதம்பரத்திற்கு வந்தேன். அம்மாவும், மாமாவும் உடல் மேலிந்து விட்டேன் என்று கவலை பட்டனர். இந்த ஒரு மாதத்தில் என் உடல் எடையை ஏற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அம்மா தினமும் அசைவ உணவை சமைத்தார்.

" அப்புறம் மருமகனே ! ஒரு வருஷம் படிப்பு முடிஞ்சிடுச்சு. " என்று எதோ சொல்ல வாயெடுத்தார். மாமா சொல்லும் போது அம்மாவை ஒரு பார்வை பார்த்தார். அம்மா எதோ பேச சொல்ல ஜாடை செய்ய மாமாவும் பேச்சை தொடர்ந்தார்.

" அங்க சாப்பாடுக்கு ரொம்ப கஷ்டமா மருமகனே...." என்று கேட்டார்.

" இல்ல மாமா ! பரூக் அம்மா நல்ல சமைக்கிறாங்க. பாய் விட்டு அசைவ சாப்பாடு சொல்லவே வேண்டாம். சும்மா பிச்சி உதருவாங்க. " என்று பரூக் அம்மாவின் சமையல் பற்றி சொன்னேன்.

எதோ எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தது போல் அம்மா முகம் வாடியிருந்தது. அவர்கள் என்னிடம் ஏதோ சொல்ல நினைத்து சொல்லமால் இருக்கிறார்கள் என்று என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

" என்ன மாமா விஷயம் ! நீங்களும், அம்மாவும் கண்ணுல பேசிட்டு இருக்கீங்க...." என்று நானே தொடங்கினேன்.

" அது ஒண்ணுமில்ல மருமகனே ! மாணிக்கம் ஒரு பொண்ணு ஜாதகம் கொண்டு வந்தான். உனக்கு பொருத்தமா இருக்கும். நீயும் கல்யாணம் பண்ணிட்டு படிச்சா சமைச்சு போடுறதுக்கு இருப்பாள்ல....." என்று சொல்லி கொண்டு இழுத்தார். நான் அம்மாவையும், மாமாவையும் முறைத்தவாரு பார்த்தேன். ரம்யாவுக்கு என் மீது என்ன எண்ணம் இருக்கிறது என்று தெரியாமல் அவளை பற்றி வீட்டில் சொல்ல முடியாது. அதே சமயம் திருமணம் செய்து கொண்டு படிப்பது நடக்காத காரியம்.

" சமைச்சு போடுறதுக்கு ஆள் வேணும்னா சென்னையில் ஒரு வீடு பார்த்து அம்மாவ நா கூட்டிடு போறேன். இப்போதைக்கு கல்யாணம் எனக்கு வேண்டாம்" என்று திட்ட வட்டமாக கூறினேன்.

மாமாவும், அம்மாவும் என் பிடிவாத குணத்தை புரிந்துக் கொண்டு என் திருமணத்தை பற்றி மேலும் பேசவில்லை. விடுமுறை நாட்கள் வேகமாக நகர தொடங்கியது. எனக்கு ஸ்ரீ ரங்கம் சென்று ரம்யாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவள் ஊர் ஸ்ரீ ரங்கம் என்று வைத்துக் கொண்டு எங்கு போய் அவளை தேடுவது. அதுமட்டுமில்லாமல், சிதம்ரத்தில் தன் திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பதற்காக பரூக் வருவதாக சொல்லியிருந்தான். நான் சிதம்பரத்திலேயே இருக்க வேண்டியதாக இருந்தது.

விடியற்காலை வீட்டுக்கு வந்த பரூக் எங்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு வேலை விஷயமாக வெளியே சென்றான். மாலை, கும்பகோணத்திற்கு சேர்ந்து போகலாம் என்று சொல்லியிருந்தான். விடுமுறை என்பதால் ஊரை சுற்ற வேண்டும். எங்கு சென்றால் என்ன... என்ன ஏது என்று கேட்காமல் 'சரி' என்று சொன்னேன். தன் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லோருக்கும் பத்திரிக்கை வைத்து விட்டு பரூக் வீட்டுக்கு வந்தான். அம்மா எங்களுக்காக சுவையான மீன் குழம்பு செய்து வைத்திருந்தாள். இருவரும் சாப்பிட்டு, கும்பகோணத்திற்கு பஸ் ஏறினோம்.

மாலை 4.30 மணிக்கு கும்பகோணம் சென்றோம். அங்கு தனக்கு தெரிந்த தலைமை ஆசிரியருக்கு பத்திரிக்கை வைக்க வேண்டும் என்று சொல்லி கொண்டு இருந்தான். இருவரும் நடந்து அந்த தலைமை ஆசிரியர் வீட்டை விசாரித்து சென்றோம். அங்கு நாங்கள் அவர் வீட்டுக்கு நுழைந்த போது தான் அது பாலசுந்தரம் அவர்களின் வீடு என்று தெரிந்தது. எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக பரூக் யாரை பார்க்க போகிறோம் என்று சொல்லாமல் வந்தான்.

" உள்ளே வாருங்கள். வீட்டில் அம்மா எல்லாம் நலம் தானே...." என்று பாலசுந்தரம் ஐயா எங்களை பற்றி விசாரித்தார்.

" நாங்க நல்ல இருக்கோம்..." என்று இருவரும் சேர்ந்து சொன்னோம்.

" படித்து முடித்த மாணவர்கள் ஆசிரியரை தேடிவருவது வியப்பான ஒன்று. நான் உங்களுக்கு ஏதாவது உதவ வேண்டுமா..." என்று இன்னும் பழைய குணம் மாறாமல் இருந்தார். தான் ஓய்வு பெற்ற போது அடுத்தவருக்கு உதவும் குணத்தில் இருந்து அவர் ஓய்வு பெறவில்லை.



" இல்ல ஐயா... எனக்கு அடுத்த மாசம் கல்யாணம். அதுக்கு பத்திரிக்கை வைக்கலாம்னு..." என்று சொல்லி தன் கையில் இருந்து ஒரு பத்திரிக்கையை பாலசுந்தரம் ஐயாவிடம் பரூக் கொடுத்தான்.

பத்திரிக்கை வாங்கி விட்டு, " நல்லது, அடுத்த மாதம் இந்த தேதியில் எனக்கு சென்னையில் ஒரு கூட்டம் இருக்கிறது. கொஞ்சம் காலதாமதமாக தான் வருவேன். இப்போதே மண்ணித்துக் கொள்ள வேண்டும்...." என்றார்.

" கவல படதீங்க ஐயா. காலதாமதமா வந்தா நீங்க தான் வகுப்புக்குள்ள அனுமதிக்கமாட்டீங்க. நாங்க கண்டிப்பா சாப்பாடு போட்டு தான் அனுப்புவோம் " என்றான் பரூக்.

பரூக் சொல்லும் போது எங்களுக்கு கல்லூரி நாட்கள் ஞாபகம் வந்தது. பாலசுந்தரம் ஐயா அவர்கள் படிப்பு சொல்லிக் கொடுக்கும் போது படிப்பை தவிர எதையும் பேசமாட்டார். கண்டிப்பான சமயத்தில் கண்டிப்பாக இருப்பார். எங்கள் ஞாபக அலை ஓடி ஓயந்தது.

" இன்று மாலை உங்களுக்கு வேறு பணிகள் உள்ளதா...?" என்று பாலசுந்தரம் ஐயா கேட்டார்.

" இல்லை ஐயா... உங்களுக்கு ஏதாவது செய்யனுமா...." என்று பணிவோடு பரூக் கேட்டான்.

" இன்று கும்பகோணத்தில் ஐயா சொர்பொழிவு நிகழ்த்தவுள்ளார். இந்த தள்ளாத வயதிலும் அவர் பேசவருவதை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. நீங்களும் அவர் பேச்சை கேட்க வேண்டும்" என்று அன்பு வேண்டுக்கோள் விடுத்தார்.

"கரும்பு திங்க கூலியா..." என்று மனதில் நினைத்தேன். முதல் முறையாக பெரியாரை பார்க்க போகிறேன். இது வரை அவர் புத்தகங்களை மட்டும் படித்த எனக்கு நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவமாக தான் இருக்கும். பரூக்கு பெரியாரை பிடிக்காது. ஒரு நாளுக்கு நான்கு முறை தொழுகை செய்பவனுக்கு 'கடவுள் இல்லை' என்று சொல்பவரை பிடிக்காமல் போவது நியாயம் தான். இருந்தாலும், என்னக்காக பரூக் பெரியார் கூட்டத்திற்கு வர சம்மதித்தான்.

நான், பரூக், பாலசுந்தரம் ஐயா மூவரும் 'பெரியார்' கூட்டத்திற்கு சென்றோம். கூட்டம் தொடங்கி பெரியார் பேச தொடங்கி விட்டார்.

முதல் முறையாக தொண்டு செய்த பழுத்த பழத்தை பார்க்கிறேன். இவ்வளவு வயதான போதிலும் அவரின் குரல் சிங்கத்தின் கர்ஜனை போல் ஒலித்தது. வயது காரணமாக அவரால் நின்றுக் கொண்டு பேச முடியவில்லை. உட்கார்ந்து கொண்டு தான் பேசினார்.

"சுதந்திர இந்தியா முன்பும், பின்பும் பாப்பனர் தான் பெரிய பதவியில் இருக்காங்க..."
" கடவுள் எல்லாருக்கும் பொதுனா. ஏன் சூத்திரன் கோயிலுக்குள் போக கூடாது."
" யாரு வேணும்னாலும் பூச பண்ணாலாம். பாப்பன தான் பூச பண்ணனும்னு அவசியமில்லை...."
- பெரியாரின் பேச்சு ஒவ்வொரு வாசகங்களும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

பெரியார் பேச பேச என் உள்ளுக்குள் பல கேள்வி எழுந்தது. அது என் காதலின் அஸ்திவாரத்தையே ஆட்டி வைக்க தொடங்கியது. அது வரை என் தேவதையாக தெரிந்த ரம்யா பாப்பத்தியாக தெரிந்தாள். லக்ஷ்மியும், ரம்யாவும் பாப்பத்தியாக இருப்பதால் தான் ஜாஸ்மின்னை ஏற்க்காமல் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் தோன்றியது.

எந்த காலத்திலும் பார்ப்பனர்களின் 'காலை வாரும் குணம் மாற போவதில்லை' என்று கூட்டத்தில் இருந்த ஒரு தி.க தொண்டரின் வார்த்தைகள் காதில் விழுந்தது.

உலகத்தில் காதலிக்க பல பெண்கள் இருக்க ஒரு பார்ப்பன பெண் தேவையா என்ற எண்ணம் அடி மனதில் பாயத் தொடங்கியது.

Tuesday, April 10, 2012

அந்த மூன்று பெண்கள் (2) - அத்தியாயம் - 2

அந்த மூன்று பெண்கள் நாவலை முழுவதும் வாசிக்க

சென்னைக்கு வந்த நாட்களில் என்னைத் திகைப்பூட்டியது, சாலைகள் தான். எல்லா சாலைகளும் ஒரே மாதிரியாக இருக்கும். சாலையை நினைவுபடுத்திக் கொள்வதற்கான இடங்களும் குழப்பம் தருவதாக இருக்கும். சிதம்பரத்தில் நுழையும் வழியும், வெளியேறும் வழியும் ஒன்றாக இருக்கும் சில இடங்களில் இரண்டே இரண்டு செல்லும் பாதையிருக்கும். இதனால், ஊருக்குள் வருபவர்கள் எவராக இருந்தாலும் கண்ணில் படாமல் போகவே முடியாது. சிதம்பரத்தில் நான் சைக்கிள் மிதித்து செல்லும் போது என்னுடன் படிப்பவர் யாராவது கண்ணில் பட்டுக்க் கொண்டே இருப்பார்கள்.

ஆனால், சென்னையில் நூற்றுக்கணக்கான பாதைகள், சாலைகள் கொண்டது. இந்த பாதைகளும், சாலைகளும் ஒன்றோடு ஒன்று குறுகிட்டும் வெட்டியும் கடந்துக் கொண்டே இருக்கின்றன. ஒரே சென்னைக்குள் எத்தனை ஊர்கள் அடங்கி இருக்கிறது என்று பிரம்பித்தேன். சென்னையில் இருந்து கொண்டே உறவினர்கள் முகத்தை பார்க்காமல் பலர் இருக்கிறார்கள். இருந்தாலும், மூன்று வருடம் சென்னையில் கழிக்க வேண்டுமே என்ற எண்ணம் எனக்கு வரவில்லை. அதற்கு, காரணம் 'ரம்யா' தான்.

லட்சியம், காதல் இரண்டும் ஒரே இடத்தில் சந்திப்பது போல் தினமும் அவளை சந்திப்பதற்காகவே கல்லூரிக்கு சென்றேன். ‘சட்டப்படிப்பு’ என்ற லட்சியத்தில் இருந்து நான் தடமாறவில்லை. அதே சமயம் வகுப்பு நடக்கும் போது அவளை என்னால் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

லஷ்மி வீடு சென்னையில் இருப்பதால் கல்லூரி முடிந்ததும், வீட்டுக்கு சென்று விடுவாள். ஜோசப் தன் ஸ்கூட்டரில் ஜாஸ்மினை அழைத்துக்கு வீட்டில் விட்டு செல்வான். ரம்யா தன் விடுதிக்கு செல்வாள். நான் பஸ் ஏறி பரூக் வீட்டுக்கு வந்துவிடுவேன். கல்லூரியில் நன்றாக பேசி கொள்வோம். முடிந்ததும் வீட்டுக்கு சென்று விடுவோம். ஒன்றாக சேர்ந்து எங்கும் வெளியே செல்வதில்லை. ஒவ்வொரு நாளும் கல்லூரி முடிந்ததும் இப்படி தான் நடந்துக் கொண்டு இருந்தது.

ஒரு முறை ரம்யாவின் வற்புருத்ததால் எல்லோரும் கடற்கரைக்கு சென்றோம். அந்த மாலை பொழுது இனிமையாக தான் இருந்தது. இருந்தாலும், நான் மட்டும் ரம்யாவுடன் தனியாக இந்த கடற்கரையில் நடக்க வேண்டும் போல் இருந்தது. எனக்கு தோன்றும் இதே உணர்வு அவளுக்கும் தோன்றியுக்குமா என்று தெரியவில்லை. அப்படி நடந்தால் என்னை போல் சந்தோஷப்படுபவனும் யாருமில்லை.

ஒரு பாட்டி ஜோசியம் பார்க்க எங்கள் அருகில் வந்தாள். எனக்கு நம்பிக்கையில்லாததால் நான் மறுத்து விட்டேன். ஆனால், ரம்யா, லக்ஷ்மி அந்த அம்மாவிடம் தங்கள் கையை காட்டி எதிர்காலத்தை பற்றி கேட்டுக் கொண்டு இருந்தனர். ஜாஸ்மினுக்கு இதில் நம்பிக்கை இல்லாததால் அவள் கை காட்டவில்லை. அந்த அம்மா ரம்யாவுக்கு சொன்னதை கொஞ்சம் மாற்றி லக்ஷ்மிக்கு சொன்னாள். அவர்கள் வயிற்று பிழைப்பு நான் ஏன் கெடுக்க வேண்டும் என்று பேசாமல் அமைதியாக இருந்தேன். அந்த அம்மா யோசியம் பார்த்து முடித்தவுடன் என் கையில் இருந்து பணத்தை கொடுத்தேன்.

பெண்களுடன் வந்து விட்டு அவர்களை செலவு செய்ய வைத்தால் நன்றாக இருக்குமா...? ரம்யாகாக லக்ஷ்மிக்கும் சேர்த்து நான் பணம் தந்தேன்.

கொஞ்ச நேரம் மணலில் உட்கார்ந்து பேசினோம். ஜோசப் என்னை பார்த்து தனியாக பேச வேண்டும் என்பது போல் சமிக்ஞை செய்தான். ஒரு வேளை ஜாஸ்மினுக்கு செய்வதை நான் தவறாக புரிந்துக் கொண்டானோ என்று யோசித்தேன். ஆனால், அவன் என்னை அழைக்க தான் இந்த சம்பாஷையில் அழைத்தான் என்று புரிந்துக் கொண்டேன்.

நாங்கள் இருவரும் எழுந்தோம். ஜாஸ்மின் "எங்க போறிங்க ?" என்று கேட்டாள். ஜோசப் எதுவும் பேசாமல் தன் சுண்ட விரலை மட்டும் நீட்டினான். ரம்யா, லஷ்மி, ஜாஸ்மின் மூவரும் சேர்ந்து சிரித்தனர். எனக்கு வரவேயில்லை. இவன் அவசரமாக போக வேண்டும் என்றால் தனியாக செல்ல வேண்டியது தானே ! என்னை எதற்கு அழைத்தான். அது கூட பராவியில்லை. சொல்லுவதற்கு காரணமா இல்லை. பெண்கள் முன் அநாகரிகமாக சுண்டு விரலை ஏன் நீட்ட வேண்டும். ஜோசப்பை மனதில் திட்டிக் கொண்டே அவனுடன் நடந்து வந்தேன்.

ஜோசப் ஒரு ஐஸ் வண்டியிடம் சென்று ஐந்து ஐஸ் வாங்கினான். ஜாஸ்மினுக்கு ஐஸ் என்றால் ரொம்ப பிடிக்குமாம். அவளுக்கு தெரியாமல் வாங்கி தர வேண்டும் என்பதற்காக வந்ததை சொன்னான். " அதுக்கு ஏன்டா ! என் மானத்த வாங்குன" என்றேன். சிரித்தப்படி அவன் கடைக்காரனிடம் இருந்து இரண்டு ஐஸ் வாங்கினான். மூன்று ஐஸ்யை வாங்கி கொண்டேன்.

நாங்கள் இருவரும் அவர்களிடம் சென்ற போது மாங்காய் விற்ப்பவன் ஜாஸ்மின்னிடம் கோபமாக பேசினான். "ஏம்மா...! கையில காசு இல்லாம எதுக்கு சாப்பிடுறீங்க..." என்றான். எங்களுக்கு விஷயம் புரிந்தது. மூன்று பேரும் அவனிடம் மாங்காய் வாங்கி சாப்பிட்டு, கொடுக்க பணம் இல்லாமல் இருந்துள்ளார்கள். ஜோசப் மாங்காய் விற்ப்பவனுக்கு பணம் கொடுத்து அனுப்பினான். மாங்காய் விற்ப்பவன் கோபமாக பேசியதில் ஜாஸ்மின் அழுதுவிட்டாள். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால், அதை பற்றி கவலைப்படாமல் ரம்யா, லஷ்மி மாங்காய் தின்ற வாயில் ஐஸ் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

ஜோசப் ஜாஸ்மினை சமாதானப்படுத்தினான். ஜாஸ்மின் அழுத முகத்தோடு இருந்ததால் எங்களால் நீண்ட நேரம் இருக்கவில்லை. ஜோசப் ஜாஸ்மின்னை அழைத்துக் கொண்டு சென்றான். நான் ரம்யா, லஷ்மியுடன் பஸ்ஸில் ஏற பஸ் நிலையத்திற்கு சென்றோம். பஸ்ஸில் செல்ல இவர்களிடம் கண்டிப்பாக பணம் இருக்கும். ஏன் இருவரும் அந்த மாங்காய் விற்ப்பவனுக்கு பணம் கொடுக்கவில்லை. மூவரும் சேர்ந்து தான் சாப்பிட்டார்கள். தன் தோழியை ஒருவன் திட்டுவதை எப்படி பேசாமல் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தங்கள் கையில் இருக்கும் பணத்தை ஏன் கொடுக்க இவர்களுக்கு மனம் வரவில்லை.

இதை பற்றி அவர்களிடம் கேட்க நான் அவர்களுக்கு இன்னும் நெருக்கமாகவில்லை என்று தோன்றியது. அதனால், அவர்களிடம் இதை பற்றி எதுவும் பேசவில்லை. கடற்கரையில் நடந்தை ஒன்று விடாமல் பரூக்கிடம் சொன்னேன். பெண்களை பற்றி எனக்கு தெரிந்த அளவில் கூட அவனுக்கு தெரியாது. அவன் எல்லாவற்றையும் கேட்டு மௌனமாக இருந்தான். தெரியாத விஷயத்தை பற்றி அவன் வாய் திறக்கமாட்டான். இருந்தாலும், தினமும் ரம்யாவிடம் என்ன பேசினேன் என்பதை அவனிடம் கூறினால் தான் எனக்கு தூக்கமே வரும்.

என் நண்பர்களின் குணம் கொஞ்சமாக புரிந்துக் கொள்ள ஆரம்பித்தேன். ஜோசப் ஜாஸ்மின் மீது உயிரே வைத்திருக்கிறான். சிறு வயதில் இருந்தே இவனுக்கு அவள் என்று அவர்கள் வீட்டில் பேசியிருக்கிறார்கள். அவனும் அப்படியே வளர்ந்துவிட்டான். ரொம்பவும் வேடிக்கையானவன். சில சமயம் அவன் செய்வது ரசிக்கும் படியாக இருக்கும். பல சமயம் கோபம் வரும் படி இருக்கும். அதற்கு எடித்துகாட்டு.... கடற்கரையில் பெண்கள் முன் சுண்டு விரலை நீட்டியது.

ஜாஸ்மின் நல்ல பெண். அப்பாவி. மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவள். நல்ல படிக்க கூடியவள். ஜோசப்புடன் இருக்கும் போது என்னிடம் அன்பாக பேசியிருக்கிறாள். ஜோசப் தவறாக நினைப்பான் என்று என்னிடம் பேசாமல் இருந்ததில்லை. ரம்யாவை விட இவள் தான் எனக்கு நெருக்கமாக பலகினாள். ஜாஸ்மினின் நல்ல குணத்தை பார்க்கும் போது எனக்கு ஜோசப் மீது பொறாமை கூட வந்திருக்கிறது.

கடற்கரை ஒரு விஷயம் போதும். ரம்யா சுயநலவாதி என்று சொல்லுவதற்கு. தனக்கு வேலையாக வேண்டும் என்றால் தான் அவளாக வந்து பேசுவாள். மற்றப்படி நான் தான் அவளை தேடி பேசியிருக்கிறேன். மற்றவர்களிடம் வாங்க கூச்சப் படமாட்டாள். அதே சமயம், தன்னிடம் இருந்து ஒரு பொருளை கொடுக்கும் போது பல முறை யோசிப்பாள். அப்படி கொடுத்தால் தனக்கு என்ன லாபம் இருக்கும் என்று கணக்கு போடுவாள். அவள் குணத்தை பற்றி தெரிந்தும் என் மனம் அவளை தான் விரும்பியது என்பது தான் துரதிஷ்டம்.

அடுத்து லக்ஷ்மி... இவளை தன் நண்பர்களில் ஒருத்தியாக நினைக்க கூட முடியவில்லை. ரம்யாவின் தோழி என்பதற்காக அவளிடம் பேசிகிறேன். மற்றவர்கள் விஷயம் என்றால் இவளுக்கு ஆர்வம் அதிகம். என்னை பொருத்தவரை இவளும் ஒரு சுயநலவாதி தான். ரம்யாவை காட்டிலும் இவள் பெரிய சுயநலவாதி. மாங்கை விற்றபவன் ஜாஸ்மினை திட்டிய போது கவலைப்படமால் ஜாஸ்மின் ஐஸ்யையும் சேர்த்து சாப்பிட்டவளை என்னவென்று சொல்லுவது...!

காலை வகுப்பு முடிந்தது, மதியம் ரம்யா, ஜாஸ்மின், லக்ஷ்மி மூவரும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். ஜோசப் இன்று கல்லூரிக்கு வராததால் தனியாக சாப்பிட ஒரு மாதிரியாக இருந்தது. நான் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதை யாராவது பார்த்தால் என்ன சொல்லுவார்களோ என்று பயமாக இருந்தது. நான் யோசித்துக் கொண்டு இருந்த போது, ரம்யா என்னை பார்த்து. " வா சந்திரு. எங்க கூட கூட்கார்ந்து சாப்பிடு..." என்றாள்.

என் தேவதையே சொன்ன பிறகு நான் எப்படி மீற முடியும். அவர்களுடன் உணவு அருந்த சென்றேன். அப்போது, ரம்யாவும், லக்ஷ்மியும் ஜாஸ்மின்னை கேலி செய்துக் கொண்டு இருந்தார்கள். நான் வந்த பிறகு அவர்கள் நின்று விடும் என்று இருந்தேன். ஆனால், அப்படியும் ஜாஸ்மின்னை கேலி செய்வதை நிருத்தவில்லை.

" ஜாஸ்மின் ! ஜோசப் தினமும் வந்து வீட்டுல விடுறாரே. உங்க வீட்டுல ஒண்ணும் சொல்லமாட்டாங்களா..." என்று கேலி கலந்த குரலில் லக்ஷ்மி கேட்டாள்.

" எங்க வீட்டுல சொல்லி தான் அவர் தினமும் வந்து விடுறாரு...." பதில் அளித்தப்படி தன் கையில் இருந்த சப்பாத்தி எனக்கு கொடுக்க நீட்டினாள். நான் வேண்டாம் என்று மறுத்தேன். ஒரு ஆண்ணை முன் வைத்து கொண்டு இப்படி ஒரு கேள்வி கேட்கிறோமே என்று லக்ஷ்மிக்கு அறிவில்லை. அப்பாவியான ஜாஸ்மினும் அவள் கேட்பத்ற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருந்தாள். எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

நான் என் சாப்பாட்டை கொடுக்க ஜாஸ்மினுக்கு நீட்டினேன். அவள் சம்பிரதாயத்திற்கு என்று கொஞ்சம் எடுத்துக் கொண்டாள். ரம்யா, லஷ்மியிடம் என் சாப்பாட்டை நீட்டியும் வேண்டாம் என்றனர். ரம்யாவும், லஷ்மியும் தங்கள் சாப்பாட்டை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவேயில்லை. சாப்பாட்டை நீட்டவுமில்லை.

" இரண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்கு போகாம... வெளியே போயிருக்கீங்க..." என்று ஆரவம் கலந்த பார்வையில் ரம்யா கேட்டாள். எனக்கு அவளை அரைந்து விட வேண்டும் போல் இருந்தது. இன்னும் விட்டால் என் முன்பே காதலன், காதலி அந்தரங்கத்தை பற்றி எல்லாம் கேட்டாலும் கேட்பார்கள். ரம்யாவை எனக்கும் பிடிக்கும் என்றாலும் அவள் செய்வதெல்லாம் 'சரி' என்று சொல்லும் ஆள்ளில்லை. ஆனால், என் மீது என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறாள் என்று தெரியாமல் நான் அவளுக்கு அறிவுரை வழங்க தயாரகயில்லை.

நான் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு, " எனக்கு அவசரமா லைப்ரரியில வேலை... நான் போனும்.." என்று சொல்லி அந்த இடத்தை விட்ட நகர முயற்சித்தேன். ஆனால், ரம்யா " இன்னு சந்திரு ! நாங்களும் சாப்பிட்டு வரோம்" என்றாள். சாப்பிடும் வரை காத்திருக்கலாம். ஆனால், ஜாஸ்மின்னை சீண்டுவதை பார்த்துக் கொண்டு என்னால் சும்மா எப்படி இருப்பது. நான் அவசரபட்டுத்தியதாலோ என்னவோ லக்ஷ்மியும், ரம்யாவும் சீக்கிரம் சாப்பிடு என்னடன் வந்தனர். ஜாஸ்மினும் அவர்கள் பேசிதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எங்களுடன் வந்தாள்.

மதியம் வகுப்புகள் முடிந்து எல்லோரும் வீட்டுக்கு செல்ல ஆயத்தமானோம். லக்ஷ்மியும், ஜாஸ்மினும் பஸ்ஸில் ஏறி சென்றார்கள். ரம்யா தனியாக விடுதிக்கு சென்று கொண்டு இருந்தாள். அவள் தனியாக போவதை பார்த்து, இது தான் அவளிடம் பேச சரியான சந்தரப்பம் என்று தோன்றியது. நான் அவள் பின்னாலே சென்று அவளிடம் பேசினேன்.

" ஹாய் ரம்யா....! என்ன ஹாஸ்டல் போரீயா...?" என்று அபத்தமான கேள்வி கேட்டேன். கல்லூரி முடிந்த பிறகு வேறு எங்கு செல்வார்கள் திருப்பி கேட்டால் என் முகத்தை எங்கு கொண்டு போய் வைத்துக் கொள்வேன்.

"ம்ம்.... நீ என்ன இந்த பக்கம் " என்றாள்.

" வீட்டுக்கு போய் என்ன பண்ண போறேன். அத சும்மா இங்கையே சுத்திட்டு இருக்கேன்..."

அடுத்து என்ன பேசுவதென்று தெரியவில்லை. எதாவது கேட்டால் தான், அவளிடம் பதில் வருகிறது. அவளாக எதாவது பேசினால் நன்றாக இருக்கும். அளவாய் அளவுக்கு அதிகமாய் என்னை கொள்கிறாள்.

" மதியம்...ஏன் பொய் சொன்ன...." என்று திடீர் மதிய நடந்த நிகழ்ச்சியை பற்றி கேட்டாள். எனக்கு ஒன்று புரியவில்லை. பேசிக் கொண்டது இவர்கள். நான் இவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சாப்பிட்டேன். அவ்வளவு தான். இங்கு 'பொய்' எங்கிருந்து வந்தது.

" என்ன பொய் சொன்னேன்" செய்ததறியாமல் கேட்டேன்.

" லைப்ரரியில அவரசமா வேலை இருக்கு சொல்லி கலம்ப பார்த்த. ஆனா, லைப்ரரி பக்கம் போக எங்களொட க்ளாஸ்க்கு வந்த. இது வரைக்கு நீ லைப்ரரி பக்கம் போகல. அப்படி தானே..." என்றாள்.

நான் அதிர்ந்தே விட்டேன். நான் சொன்ன ஒரு வார்த்தை இவ்வளவு சரியாக ஞாபகம் வைத்துக் கொண்டு பொய் சொன்னதற்கு கோபம் படுகிறாள் என்றால் என் மீது அவளுக்கு எதோ இருந்திருக்க வேண்டும். அதனால், நான் சொன்ன பொய்யை பற்றி கேட்கிறாள்.

" தேவையில்லாம பொய் சொல்லல்ல. பொண்ணுங்க நீங்க பேச்சிட்டு இருந்தீங்க. நான் வந்திருக்க கூடாது. என்ன வெச்சிட்டு ஜாஸ்மின கிண்டல் பண்ணா அவ தப்பா நினைச்சிட்டா என்ன பண்ணுறது. அதான் பொய் சொன்னேன்" என்றேன்.

ரம்யா எதுவும் பதில் சொல்லவில்லை. அவள் நான் செய்வதை கவனித்து என்னை பற்றி கேட்டாள். அவளுக்கு என் பொருட்டு மண்டைக்கனம் ஏறிவிடக்கூடாதென்று நானும்; எனக்கு அவளால் மண்டைக்கனம் ஏறிவிடக்கூடாதென்று அவளும், மிகவும் எச்சரிக்கையாக பேசி கொண்டோம்.

எனக்கு இந்த கல்லூரி சேர்ந்த நாளில் ராம்யாவை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கும் அவளிடம் ஒரு சந்தேகம் கேட்க தோன்றியது.

"ரம்யா..! நான் ஒண்ணு கேட்கலாமா...."

" என்ன....?"

" லக்ஷ்மியும், ஜாஸ்மினும் நம்ப கூட தான் படிக்கிறாங்க. ஆனா, நீயும் ஜாஸ்மினும் சேர்ந்து ஒரு வாட்டி கூட லக்ஷ்மிய கிண்டல் பண்ணதில்ல. அதே மாதிரி லக்ஷ்மியும், ஜாஸ்மினும் சேர்ந்து உன்ன கிண்டல் பண்ணதில்ல. நீங்க ரெண்டும் பேரும் சேர்ந்து ஏன் எப்போவும் ஜாஸ்மின சீண்டிக்கிட்டே இருக்கீங்க...?" என்று மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டேன்.

எனக்கு ஜாஸ்மின் மீது ஈடுபாடோ, அக்கரையோ இல்லை தோழிகள் என்றால், ஒரு முறை ஒருவர் கேலி செய்வார், இன்னொரு முறை இன்னொருத்தர் கேலி செய்வார். ஆனால், இரண்டு பேர் சேர்ந்து எப்போது ஒருவரை சீண்டுவது எனக்கு பிடிக்கவில்லை. இந்த விஷயம் நீண்ட நாட்களாக என் மனதில் உருத்திக் கொண்டு இருந்தது. இது தான் சரியான சந்தர்ப்பம் என்று அவளிடம் கேட்டேன்.

" எனக்கு ஜாஸ்மின்ன விட லக்ஷ்மி தான் நல்ல பிரண்ட். அத தான் லக்ஷ்மி என்னைக்கும் விட்டு கொடுத்து பேச மாட்டேன். ஜாஸ்மின் அப்படியில்லை. ஜோசப் இருந்தா எங்கள கண்டுக்கவே மாட்டா...!" என்றாள்.

" என்னதான் இருந்தாலும் நட்புல பாகுபாடு பார்க்குறது தப்பு ரம்யா...." என்று என்னையும் அறியாமல் அவளுக்கு அறிவுரை கூறினேன். நான் சொன்னது அவளுக்கு பிடிக்கவில்லை என்று அவள் பார்வையிலே தெரிந்தது.

" இது பொண்ணுங்க விஷ்யம் சந்திரு. உனக்கு எதுவும் தெரியாது..." என்று கோபமாக சொல்லிவிட்டு அவள் விடுதியை நோக்கி சென்றாள்.

அவளிடம் ஏதாவது கூறினால் தனக்கு தான் எல்லாம் தெரியும், மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற மனப்போக்கு அவளிடம் இருந்ததை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

ஜாஸ்மின் இதுவரை எந்த பாகுபாடுயில்லாமல் தான் எல்லோரிடமும் பழகுகிறாள். இருந்தும் ரம்யா ஏன் இப்படி சொல்கிறாள். எனக்கு தெரிந்தவரையில் லக்ஷ்மி ஒரு சுயநலவாதி. தன் வேலை முடிந்தால் போதும் என்று இருப்பவள். ஆனால், ஜாஸ்மின் தன் வேலையை மட்டும் கவனம் செலுத்தாமல் மற்றவர்களுக்கும் உதவி செய்வாள்.

இதை தான் பெண்கள் மனம் அறிந்தவன் யாருமில்லை என்று சொல்கிறார்களோ !!!!

ரம்யா பற்றி யோசித்து யோசித்து ஒரு வருடம் முடிந்ததே தெரியவில்லை. அவள் மேல் இருந்த காதலில் படிக்காமல் இருந்துவிடவில்லை. முதலாண்டு தேர்வை நன்றாக தான் எழுதினேன்.

(தொடரும்....)

Tuesday, March 27, 2012

அந்த மூன்று பெண்கள் (2) - அத்தியாயம் - 1

முதல் பாகம்

பாகம் - இரண்டு : அத்தியாயம் - 1

சட்டக் கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் போது யார் மீது தெரியாமல் இடித்தேனோ அவளே என் வகுப்பில் ஒருத்தியாக இருப்பாள் என்று நினைத்து பார்க்கவேயில்லை. ஒரு பக்கம் சாயலில் 'சரோஜா தேவி' போல் தெரிந்தாள். அவளை பார்த்ததும் நான் எம்.ஜி.ஆராக மாறிவிட்டேன். 'அன்பே வா' கனவு பாடல் 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' நாங்கள் இருவரும் சேர்ந்து பாட வேண்டும் போல் இருந்தது. முதல் பார்வை, முதல் சந்திப்பு, முதல் ஸ்பரிசம் என்று முதலாம் ஆண்டினேலே கனவில் மிதக்க தொடங்கிவிட்டேன். 'தமிழ்' படித்த எனக்கு கனவு வந்த கவிதைக்கு பஞ்சமாயிருக்க போகிறது.

“வஞ்சி நாண இடைக்கு, மடநடைக்கு
அஞ்சி அன்னம் ஒதுங்க, அடியன்ன
கஞ்சம் நீரில் ஒளிப்பக் கயலுகப்
பஞ்சி மெல்லடிப் பாவையும் ஆடினாள்”


சீதை நீராடும் போது அவளின் மெல்லிய இடையைக் கண்ட வஞ்சிக்கொடியானது வெட்கப்பட்டு ஒதுங்கிக்கொள்ள, நடையழகைப் பார்த்ததும் அன்னப்பறவைகள் பயந்து ஒதுங்கிக்கொள்ள, கால்களைப் பார்த்து வெட்கி தாமரை நீருக்குள் மறைந்து கொள்ள, கண்களைக் கண்ட மீன்கள் ஓட, பஞ்சை விட மென்மையான பாதங்களை உடைவது போல் இருக்கும் என்று “கம்பராமயணத்தில்” கம்பன் வர்ணிப்பார். இந்த பெண் நீருக்குள் இறங்க தேவையில்லை. நீராட நினைத்தாலே போதும். கம்பன் சொன்ன அத்தனை வர்ணனைகளும் சீதையை விட இவளுக்கு நன்றாக பொருந்தும்.

அவளை பார்த்து ஒரு கவிதை சொல்ல வேண்டும். அப்போது என் பின்னால் இருந்து ஒரு குரல்...

" மிஸ்டர்... ! க்லாஸ் ஸ்டார்ட் அயிடுச்சு. போய் உக்காருங்க...." என்று பேராசிரியர் கூறினார்.

அவளை பார்த்த சந்தோஷத்தில் சிலையாக நின்று விட்டேன். புது வகுப்பில் எங்கு எனக்கென்று ஒரு இடம் பார்த்து உக்கார வேண்டும். பள்ளியில் ஒரு வாரம் ஒரே இடத்தில் உக்கார்ந்து விட்டால் அது தான் நம் நிரந்தர இடம் என்று முத்திரை குத்திவிடுவார்கள். ஆனால், கல்லூரியில் அப்படியில்லை. நினைத்த மாத்திரத்தில் எந்த இடத்தில் வேண்டுமாலும் உட்காரலாம். ஆனால், பேராசிரியர் வந்த பிறகு ஏதாவது ஒரு இடத்தில் உக்கார நினைக்கும் போது இடம் தான் கிடைக்கவில்லை.

கண்ணாடி போட்ட ஒருவன் தன் அருகில் உக்காரும்படி சைகை செய்தான். இப்போதுக்கு உக்கார இடம் கிடைத்ததே பராவியில்லை என்று அந்த இடத்தில் சென்று அமர்ந்தேன்.

" ஹாய் ! ஐ எம் ஜோசப். யூவர் நேம்...." கண்ணாடி அணிந்தவன் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டான்.

" சந்திரு....." என்றேன்.

" ஃபெச்சுலர் டிகிரி என்ன படிச்சிங்க...." என்று ஜோசப் கே ட்க, பக்கத்தில் இருந்து அதட்டும் குரலில் "சைலன்ட்" என்று வந்தது. நாங்கள் இருவரும் பேசாமல் அமைதியாக இருந்தோம்.

பி.ஏ. தமிழ் படித்த எனக்கு இந்த சட்ட படிப்பு வகுப்பரை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. பி.ஏ படிப்பில் எல்லோரும் தமிழில் தான் பேசுவோம். பேராசிரியர் சுத்த தமிழில் தான் பேசுவார். அவர் பேசும் தமிழை பார்த்து தான், அதில் பாதியளவில் எங்கள் தமிழ் வளர்ந்தது. ஆனால், இங்கு ஆங்கிலம் கலந்த தமிழில் தான் பேசவேண்டும். முடிந்தால், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசினால் நல்லது. காரணம், நீதி மன்றத்தில் வாதம் செய்வதாக இருந்தாலும், பத்திரமாக இருந்தாலும் பெரும்பாலும் ஆங்கில மொழிதான் தேவை. அதனாலே அங்கில மொழிக்கு முன்னுரிமை இருப்பதை உணர்ந்தேன்.

பேராசிரியர் வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்க ஜோசப் பெண் இருக்கையில் அமர்ந்து இருக்கும் பெண்களையே உற்று பார்த்தான். எனக்கு அடி வயிற்றில் என் தேவதையை பார்க்கிறானோ என்ற பொறாமை எழுந்தது. நல்ல வேலை, குறிப்பாக மஞ்சல் சேலை அணிந்த பெண்ணை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அந்த பெண்ணும் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை அவனை திரும்பி பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"அடபாவி.... வந்த முதல் நாளே கண்களால் தூது விடுகிறானே" என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

நமக்கு சிவப்பு தேவதை பிடிக்கும் போது, அவனுக்கு மிஞ்சல் நிற சேலை பெண் தேவதையாக தெரிந்திருக்கலாம். என் அடி மடியில் கை வைக்காதவரை சரி தான்.

வகுப்பு முடிந்ததும் என் தேவதையும், ஜோசப் பார்த்துக் கொண்டு இருந்த பெண்ணும், இன்னொருத்தியும் வெளியே சென்றார்கள். எனக்கும் அவர்கள் பின்னால் போக வேண்டும் போல் இருந்தது. முதல் நாளில் ஒரு பெண் பின்னால் செல்வதை யாராவது பார்த்தால் படிப்பு முடிக்கும் வரை என் பெயர் அவ்வளவு தான். வேறு வழியில்லாமல் ஜோசப்புடன் கல்லூரி சிற்றூண்டி விடுதிக்கு சென்றேன்.

" என்ன சாப்புடுற...." என்று ஜோசப் ஒருமையில் கேட்டான். காலையில் தான் சந்தித்தோம். அதற்குள் ஒருமையில் அழைக்கும் நண்பன் போல் பேசினான். அவன் ஒருமையில் பேசிய பிறகு நான் மட்டும் 'வாங்க', 'போங்க' என்று மரியாதையாக பேசினால் நன்றாக இருக்காது.

" ஒரு தோச சொல்லு " என்று ஒருமையில் பதிலளித்தேன்.

எனக்கு தோசையும், அவனுக்கு சாப்பாடும் சொன்னான். கொஞ்ச நேரத்தில் நாங்கள் சொன்னது வந்து விட்டது. இருவரும் சாப்பிட்டு கொண்டே எங்கள் குடும்பத்தை பற்றி பேசி கோண்டோம். அவன் தாத்தா வெள்ளையர் என்பதும், இந்திய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதை சொன்னான். நானும் என் குடும்பத்தை பற்றி அவனிடம் சொன்னேன்.

நாங்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது மஞ்ச சேலை பெண் எங்கள் அருகில் வந்தாள்.

" என்ன ஜோசப்..! பார்த்தும் பார்க்காத மாதிரி இருக்க....?" என்றாள். இவர்கள் முன்பே அறிமுகமானவர்கள் என்பது அந்த பெண் பேசுவதிலே தெரிந்துக் கொண்டேன். அந்த பெண்ணோடு எனது தேவதையும் நின்று கொண்டு இருந்தாள்.

" அப்படியெல்லாம் இல்ல ஜாஸ்மின். பொண்ணுங்க நீங்க பேசிட்டு இருக்கீங்க. நான் எப்படி நடுவில் வந்து பேச முடியும் ?" என்று அவள் கேள்விக்கு எதிர் கேள்வி கேட்டான். குறும்பு புன்னகையோடு அவளும், அவளின் தோழிகளும் எங்களுடன் அமர்ந்தனர். நாங்கள் ஒருவர் முகம் ஒருவர் பார்த்து கொண்டு இருந்தோம்.

" ம்ம்... இப்படியே ஒருத்தர் முஞ்சி ஒருத்தர் பார்த்திட்டு இருந்தா போர் அடிக்கும். ஏதாவது பேசு.." என்று ஜாஸ்மின் பேச்சை தொடங்கினாள்.

நான் அவளை புன்முருவலோடு பார்த்தேன்.

" ஓ.கே. என் பேரு ஜோசப். ஜாஸ்மினோட அத்த பையன். படிப்பு முடிச்சதும் எங்க இரண்டு பெருக்கும் கல்யாணம்" என்று ஜாஸ்மின் தோழியர்களிடம் அறிமுகம் செய்துக் கொண்டான்.

எனக்கு வியப்பாக இருந்தது. கல்லூரிக்கு வந்து காதலை கண்டு பிடிப்பவர்களில் மத்தியில் காதலர்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்க வந்திருக்கிறார்கள். அதுவும் பெற்றோர் சம்மதத்துடன். இவர்கள் இருவரும் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்து என்னை பற்றி சொல்ல தோன்றியது. ஆனால், அதற்குள் ஜாஸ்மின் எதோ பேச ஆரம்பித்தாள்.

" என் பேரு ஜாஸ்மின். ஜோசபோட கஸின்" என்றாள்.

ஜோசப் மாதிரியே அவளும் இருக்கிறாள். அடுத்தவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் இவர்களே பேசுவதற்கு நான் ஏன் இங்கு உக்கார வேண்டும் என்று தோன்றியது. என் தேவதை அருகில் உட்கார சந்தர்ப்பம் கிடைத்தும் அவள் பெயர் தெரியாமல் எப்படி செல்வது. கொஞ்சம் இடைவேளை விட்டாலும் மீண்டும் ஜோசப் பேச தொடங்கிவிடுவான் என்பதால் அவரசரமாக நான் பேசினேன்.

" என் பேரு சந்திரசேகர். பி.ஏ தமிழ். சிதம்பரத்துல இருந்து வரேன். இங்க பிரண்ட் வீட்டுல இருந்து படிக்கிறேன்." என்று என் தேவதையை பார்த்து சொன்னேன். அப்போது தான், அடுத்து தன்னை பற்றி சொல்வாள் என்று அற்ப சந்தோஷம். என் எண்ணம் புரிந்து கொண்டு அவளும் பேச வாயெடுத்தாள்.

" என் பேரு ரம்யா ராமானுஜம். பி.ஏ ஹிஸ்ட்ரி. அப்பா, அம்மா ஸ்ரீ ரங்கத்துல இருக்கா. இங்க ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறேன்." என்று என்னை பார்த்து சொன்னாள். அவள் பெயரும், தோரணையும் ஐய்யர் ஆத்து பெண் என்ற சொல்லவே வேண்டியதில்லை. அவள் 'ஐயர்' பெண் என்று தெரிந்து மனம் அவளை ஏன் பார்க்க தோன்றியது என்று தெரியவில்லை.

நான் அசைவம். அதுவும் இப்போது 'பெரியார்', 'அண்ணா' என்று அவர் புத்தகங்களை விரும்பி படிப்பவன். எனக்கு 'பிராமின பெண்ணுடன் காதல் வேண்டுமா என்று தோன்றியது. ஆனால், காதல் என் எண்ணத்தை வென்றது.

"என் பேரு லஷ்மி. பி.ஏ இங்க்லீஷ். எங்க ஆத்து மைலாப்பூர்ல இருக்கு….." என்றாள்.

எனக்கு ராம்யாவிடம் பேச வேண்டும் போல் இருந்தது. நான் அவளிடன் ஒன்று கேட்டு அதற்கு அவள் என்னை பார்த்து பதில் சொல்ல வேண்டும். அதே சமயம், பள்ளிக்கூடத்திலிருந்து பாஸ் ஆகி வந்து, புதிதாக கல்லூரியில் சேர்ந்த ஒரு பெண்ணிடம் பேசி, அற்ப சுகதுக்காக அலையும் பைத்தியக்கார ஆண் என்று என்னை நினைக்ககூடாது. என்ன கேட்கலாம், எதை பற்றி கேட்கலாம்.... யோசி சந்திரு...யோசி....!

" ரம்யா உங்களுக்கு என்ன பிடிக்கும் " மனதில் தோன்றியதை கேட்டுவிட்டேன். ஜோசப் என்னை ஒரு மாதிரியாக பார்த்தான். மூன்று பெண்கள் இருக்க குறிப்பாக அவளை பார்த்து கேட்டதும் அவனுக்கு என் மீது சந்தேகம் ஏற்படுத்தியிருக்கும்.

" எனக்கு புத்தகம் படிக்கிறது ரொம்ப புடிக்கும். குறிப்பாக கல்கி கதைகள், சாண்டில்யன் நாவல்கள் ரொம்ப விரும்பி படிப்பேன்." என்றாள்.

எனக்கும் புத்தகங்கள் என்றால் பிடிக்கும். ஆனால், கல்கி, சாண்டில்யன் மீது அவ்வளவோ ஈடுபாடில்லை. புத்தகம் விரும்பிகள் என்ற புள்ளியில் இணைந்த எங்கள் சிந்தனை ஒருவரின் அபிமானி என்பதில் வேவ்வேறாக தெரிந்தோம்.

ரம்யா சொன்னவுடன் ஜோசப், ஜாஸ்மின், லக்ஷ்மி என்று அவரவர் தங்கள் விருப்பத்தை சொன்னார்கள். இப்படியே பேசிக் கொண்டதில் அவரவர் வீட்டுக்கு செல்லும் நேரம் நெருங்கி விட்டது. நாங்கள் அனைவரும் விடை பெற்றுக் கொண்டோம். இறுதிவரை யாரும் என் விருப்பத்தை பற்றி கேட்கவில்லை.

Tuesday, March 20, 2012

அந்த மூன்று பெண்கள் - 10

அறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3,அத்தியாயம் 4, அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8 அத்தியாயம் 9

‘பி.ஏ படிப்பே வேண்டாம்’ என்று சொன்ன நான் இப்போது’ பி.எல் படிக்க வேண்டும்’ என்று சொல்கிறேன். கல்லூரி வாழ்க்கை ஒருவனை எப்படி எல்லாம் மாற்றும், அவன் செல்லும் பாதை எப்படி நிர்ணய்கும் என்பதை அனுபவ புர்வமாக உணர்ந்தேன். ஹோட்டல் நிர்வாகம் என்ற குறுகிய வட்டத்தத்திற்குள் சிக்க நான் விரும்பவில்லை. பணக்காரர்களிடம் அடைக்கலமாக இருக்கும் சட்டத்தை ஏழைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற லட்சியம் மனதில் ஆழமாய் பதிந்தது.

ராமா மாமா என்றுமே என் விருப்பத்திற்கு தடை சொன்னதில்லை. அப்படியே அவர் மறுத்தாலும் அது என் நன்மைக்காக தான் இருக்கும் என்று எனக்கு தெரியும். பி.எல் படிப்புக்கு மாமா சம்மத்தித்தாலும் அம்மா சம்மதிக்கவில்லை. எனக்கு திருமணம் செய்து பேரன், பேத்தி பார்க்க வேண்டும் என்பது அவரின் ஆசை. ஆனால், மாமா எனக்கு சாதகமாக இருந்ததால் 'வழக்கிஞர்' படிப்பு படிக்க வீட்டில் அனுமதிகிடைத்தது.

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் படிக்க விண்ணப்பம் போட்டேன். சென்னையில் பரூக் வாத்தியார் வேலை செய்வதால் அங்கு தங்கி படிக்க பிரச்சனை இருக்காது. சமிபத்தில் தான் அவன் அம்மா ஆயிஷாவையும் அழைத்து சென்றான். அதனால், வீட்டு சப்பாடு கிடைக்கும். இதை எல்லாம் அம்மாவிடம் சொன்ன பிறகு முகம் மலர்ந்தது. இல்லை என்றால் பையன் வெளியூரில் சாப்பாடிற்கு கஷ்டப்படுவான் என்று என்னுடனே சென்னைக்கு வந்தாலும் வந்திருப்பார்.

நான் எதிர்பார்த்தது போல் கல்லூரியில் இருந்து நேர்முக தேர்வுக்கு அழைப்பு வந்தது.முதல் முறையாக அம்மாவை விட்டு தனியாக செல்கிறேன். படிக்க இடம் கிடைத்தால் மூன்று வருடம் அம்மா,மாமா இருவரையும் விட்டு தனியாக இருக்க வேண்டும். சமூகத்தொண்டு என்று லட்சியம் மனதில் வந்த பிறகு சிறு சிறு பிரிவுகளை தாங்கி தான் ஆக வேண்டும். மாமா பஸ்ஸில் ஏற்றிவிட என்னோடு வந்தார். பஸ் நிலையம் வர அம்மாவுக்கு மனம் வரவில்லை. அப்பா இறந்த பிறகு நான் தான் உலகம் என்று இருந்தவர், என் பிரிவு அவருக்கு பெரிய துயரத்தை கொடுக்கும் என்பது சந்தேகமில்லை.

மாமாவுக்கு கை அசைத்தப்படி பஸ்ஸில் சென்றேன். கொஞ்ச தொலைவில் சென்றவுடன் கண் அசதியாக இருந்தது. இரவு முழுக்க அம்மா,மாமாவிடம் பேசியதால் சரியாக தூங்கவில்லை. தூங்கிவிட்டேன். விழித்த போது பஸ் சென்னை பாரிமுனையில் வந்து நின்றது.

என்னை அழைத்து செல்ல பரூக் பாரிமுனை பஸ் நிலையத்தில் காத்திருந்தான். தன் நன்றி கடன் திற்பதிற்கு சந்தோஷம் அவன் முகத்தில் தெரிந்தது.

"என்னடா எப்படி இருக்க. பஸ் பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது ? என்று மலர்ந்த முகத்துடன் கேட்டான்.

" நல்ல இருக்கேன். அம்மா எப்படி இருக்காங்க...?" என்று அவன் அம்மா பற்றி கேட்டேன்.

"ம்...நல்ல இருக்காங்க. வா போவோம்" என்று பரூக் சொன்னான். இருவரும் சைக்கிள் ரிக்ஷாவில் ஏறினோம். ரிக்ஷாக்காரன் 'பேமாளி, 'சோமாரி' என்று குறுக்கே நடந்து சென்றவர்களை திட்டியப்படி சைக்கிள் ரிக்ஷாவை இழுத்தான். ரிக்ஷாக்காரன் பேசுவது உண்மையான சென்னை பாஷை என்று பரூக் என்னிடம் சொன்னான். கொஞ்ச நேரத்தில் பரூக் வீடு வந்தது.

சைக்கிள் ரிக்ஷாவிற்கு பணம் பரூக் தான் கொடுத்தான். என்னை செலவு செய்ய விடவில்லை. பரூக்கின் அம்மாவும் என்னை அன்போடு கவனித்து உணவெல்லாம் பரிமாறினார். சென்னைக்கு வந்ததை போன் போட்டு ஹோட்டலில் இருக்கும் மாமாவிடம் சொன்னேன்.

ஒரு நாள் போனதே தெரியவில்லை. நேர்முக தேர்வுக்கு தயாரானேன். பரூக் சொன்னப்படி சைக்கிள் ரிக்ஷாவிலே ஏறி அம்பேத்கர் சட்ட கல்லூரியில் இறங்கினேன். பலர் நேர்முக தேர்வுக்காக வெளியே காத்துக் கொண்டு இருந்தனர். ஒவ்வொருவராக உள்ளே சென்று கொண்டு இருந்தனர். இப்போது என் முறை.

நான் உள்ளே நுழைந்தேன். அங்கு என்னை கேள்வி கேட்க மூவர் இருந்தனர். ஒருவர் நான் படித்த பள்ளி, கல்லூரி விபரங்களை மட்டும் கேட்டார். இன்னொருவர் என் குடும்ப பின்னனியை பற்றியும், நான் படித்த பி.ஏ தமிழில் இருந்தும் கேள்விகள் கேட்டார். எதோ கல்லூரியின் பேராசிரியர் தான் கேட்டார். அவர்கள் கேட்ட கேள்விக்களுக்கு சரியானா பதிலை தான் சொன்னேன். நேர்முக தேர்வு முடிந்ததும் பரூக் வீட்டுக்கு வந்துவிட்டேன். மாலை நேரம் பள்ளி முடிந்தது பரூக் வீட்டுக்கு வந்திருந்தான்.

பரூக் சென்னையை சுத்திக் காட்டுவதற்காக அழைத்து சென்றான். எல்.ஐ.சி கட்டிடம், ரிப்பன் கட்டிடம், ஸ்பென்ஸர் பிலாசா போன்ற இடங்கள் எனக்கு புதிதாக இருந்தது. சிதம்பரத்தில் இருந்தவரை இது போன்ற கட்டிடங்களை நான் பார்த்தில்லை. பட்டிக்காட்டான் யானை பார்ப்பது போல் ஒவ்வொரு இடத்தையும் பார்த்துக் கொண்டு வந்தேன்.

என்னை சென்னை கடற்கரைக்கு பரூக் அழைத்து சென்றான். அங்கு நான் அண்ணா சமாதியை பார்த்தேன். மாமா பேச்சுக்கு பேச்சு 'அண்ணாவை போல வரனும்னா நல்ல படிக்கனும்' சொல்லுவார். அவர் பாதம் பட்ட மண்ணிலே அந்த உணர்வு வந்துவிட்டது. கடல்கரை காற்றுக்கும், சிதம்பரம் அருகில் இருக்கும் கடலூர் காற்றுக்கும் பெரிய வித்தாயசம் ஒன்றுமில்லை. இப்படி ஒரு சில நாட்கள் உருண்டோடின.

நேர் முக தேர்வில் தேர்வானவானவர்களின் பெயர்களை கல்லூரி வளாகத்தில் ஒட்டியிருந்தனர். ஒவ்வொரு பெயராக பார்த்தேன். "பரணி, பத்மா, சிதம்பரம், சின்னமணி, சின்னதம்பி...." என்று ஒவ்வொரு பெயரும் பார்த்து கொண்டு இருந்தேன். என் பெயர் மட்டும் அதிலில்லை. நான் அதிர்ந்துவிட்டேன்.

நான் தேர்வாகவில்லையா, இதற்காகவா இத்தனை போராட்டம் செய்து தேர்வு எழுதினேன். அம்மாவுக்கும், மாமாவுக்கு என்ன பதில் சொல்ல போகிறேன். தேர்வாகாமல் ஊருக்கு சென்றால் பார்ப்பவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறேன். அப்போது இன்னொரு பட்டியல் ஒட்டியிருப்பதை ஒருவன் சொன்னான். அங்கு சென்று பார்த்தேன்.

“அருணாச்சலம், அறுமுகம், பானுசந்தர், சித்ரா, சந்திரசேகர், சார்லஸ்…“ என்று படித்துக் கொண்டே இருந்தேன். மீண்டும் ஒரு முறை படித்தேன். " சித்ரா, சந்திரசேகர்,...." என்று இருந்தது. நான் தேர்வாகிவிட்டேன். நான் வழக்கறிஞராக போகிறேன். படிப்பறிவு இல்லாத எங்கள் குடும்பத்தில் முதல் 'வழக்கறிஞர்' நான் தான்.

நான் தேர்வானதை வீட்டுக்கு போன் போட்டு சொன்னேன். பரூக்குக்கும், அவன் அம்மாவுக்கும் இனிப்பு வாங்கி கொடுத்தேன். கல்லூரி ஆரம்பிக்க ஒரு மாதம் இருப்பதால் சிதம்பரம் சென்று வந்தேன். ஊருக்கு சென்றவுடன் மாமாவும், அம்மாவும் என்னை வாரி அணைத்துக் கொண்டனர். மாமா என்னை ஹோட்டலில் வேலை செய்யவிடவில்லை. ஒரு மாதம் நிம்மதியாக இருக்க சொன்னார். கல்லூரி தொடங்கிய பிறகு படிப்பு தான் முதல் கவனமாக இருக்கும். அப்போது எப்படி இது போல் சுதந்திரமாக இருக்க முடியும்.

ஒரு மாதம் போனதே தெரியவில்லை. இரவு பஸ் பிடித்து சென்னைக்கு சென்றேன். காலையில் பஸ் சென்றது. பரூக் இன்று பள்ளிக்கு சீக்கிரம் செல்ல வேண்டிய வேலையிருந்ததால் என்னை அழைத்து செல்ல அவன் வரவில்லை. பஸ் நிலையத்தில் வெளியே வரும் போது அவசரமாக ஒரு பெண் என் மீது இடித்தாள்.

"ஸாரி..தெரியாம இடிச்சிட்டேன்..." என்று பயந்த குரலில் அந்த பெண் மண்ணிப்பு கேட்டாள்.

"பரவாயில்ல" என்று சொன்னேன்.

அவளை ஒரு மோட்டர் கார் வந்து அழைத்து சென்றது. அம்மா பக்கத்தில் இல்லாததுனால் என்னவோ முதல் முறையாக ஒரு பெண் மீது ஈர்ப்பு. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தேன் என்பதை அவள் மோட்டார் காரில் சென்ற போது தான் உணர்ந்தேன். வீடு விட்டால் ஹோட்டல் என்று இருந்த நான் இப்படி ஒரு சலனமடைந்ததில்லை.

அவள் சென்ற பிறகு நான் பரூக் வீட்டுக்கு செல்ல தொடங்கினேன். எந்த சிரமமும் இல்லாமல் அவன் வீட்டை அடைந்தேன். பரூக் காலையிலே பள்ளிக்கு சென்று விட்டான். அவன் அம்மா காபி, சாப்பாடு எல்லாம் கொடுத்து என்னை வழி அனுப்பினார்.

இன்று நான் 'வழக்கறிஞர்' பட்டம் பெருவதற்காக முதல் நாள் கல்லூரியில் அடியெடுத்து வைக்கிறேன். வகுப்பரையை விசாரித்து வகுப்புக்குள் நுழைந்தேன்.

நான் வருவதற்கு முன்பே என்னை வரவேற்பதற்காக ஒரு தேவதை பெண் இருக்கையில் முன் வரிசையில் இருந்தாள். அவள் நான் பஸ் நிலையத்தில் பார்த்த அதே 'பெண்' தான். சிவப்பு சேலை கட்டிக் கொண்டு அம்மன் போல் தெரிந்தாள்.

Wednesday, March 14, 2012

அந்த மூன்று பெண்கள் - 9

அறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3,அத்தியாயம் 4, அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8

ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டது போல் ஓவென்று அழுதனர். தங்கள் எதிர்காலம் என்னாகும் என்பது அஞ்சியப்படி பல முகங்கள் வெறுமையாக இருந்தன. பலர் லாரி, பஸ் பிடித்து சென்னை பட்டினத்திற்கு சென்று கடைசியாக 'அண்ணா'வை பார்க்க துடித்தனர். முதல்வரின் இறுதி யாத்திரையில் பார்க்க பலர் படை எடுத்ததால் பஸ்ஸில் கூட்டங்கள் நிறம்பி வழிந்தன. உள்ளே நிற்கும் இடமில்லாதவர்கள் பஸ் மேல ஏறிக்கூட பயணம் செய்ய தயாராக இருந்தனர். 'தமிழ் நாடு' என்று பெயரிட்டவர் தன் பெயரை மட்டும் பூமியில் விட்டு ஏன் சென்றார் என்று உரிமையோடு அண்ணாவின் படத்தை பார்த்து கேட்டனர்.

அண்ணா மிக பெரிய சகாப்தம். அதற்கு மற்றவர்கள் 'அண்ணா' என்று கண்ணீர் சிந்துவதில் பலர் மனதில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார். இறுதியாக அண்ணாவை பார்க்க பலர் சென்று கொண்டு இருக்கும் போது, மாமா மட்டும் 'அண்ணா'வை பார்க்க நினைக்கவில்லை. மாணிக்கம் மாமாவுக்கும் 'அண்ணா'வை மிகவும் பிடிக்கும். அவர் சென்னை பட்டினத்திற்கு தான் சென்றுக் கொண்டு இருந்தார். ராமா மாமாவை அழைத்த போது அவர் வர மறுத்து விட்டார்.

" அந்த மனுஷன போட்டோவுல கம்பீரமா பார்த்து பழகி போச்சு. இன்னும் அவர் பேசுனது காதுல கேட்குது. இப்போ நாலு பேரு அவர தூக்கிட்டு போறத என்னால் பார்க்க முடியாது" என்று சிறு குழந்தை போல் தேம்பி தேம்பி அழுதார்.

முதல்வர் மரணத்திற்காக ஹோட்டலுக்கு கூட விடுமுறை கொடுத்து விட்டோம். அம்மாவும், நானும் மாமாவை சமாதானம் செய்வதே பெரும் போராட்டமாக இருந்தது.

"டேய் ராமா ! இப்போ பார்த்தா தான் உண்டு. வாடா..." என்று மாணிக்கம் மாமா கடைசியாக அழைத்தார்.

" என் மனசுல இன்னும் 'அண்ணா' உயிரோட இருக்கார். அவர் உடம்ப பார்த்து என் மனசுல இருக்குறவர சாகடிக்க விரும்பல... நீ போ " என்று சொல்லி அறைக்குள் சென்று விட்டார்.

மாணிக்கம் மாமாவும் அவரை கட்டாயப்படுத்த விரும்பவில்லை. அவர் தன் நண்பர்களுடன் சென்னை பட்டினத்துக்கு சென்றார்.

மூன்று நாட்களாக ஹோட்டல் திறக்கவில்லை. உணவகம் வைத்த காலத்தில் கூட விடுமுறை என்று ஓய்வெடுத்ததில்லை. ஆனால், 'அண்ணா' அவர்களின் மரணம் மாமாவை இந்த அளவுக்கு பாதிக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இதற்கு மேல் ஹோட்டல் முடியிருந்தால் நன்றாக இருக்காது என்பதால் நானே திறந்து ஹோட்டல் நடத்தினேன். அம்மா மாமாவை வீட்டில் பார்த்து கொண்டு இருந்தார். வியாபாரம் கொஞ்சம் சுமாராக இருந்தது. 'அண்ணாவின் மரணத்துக்காக வானொலியில் கூட சோகமான கீதங்களே ஒலித்தன.

இரண்டு நாட்களுக்கு பிறகு சென்னை பட்டினத்தில் இருந்து மாணிக்கம் மாமா வீட்டுக்கு வந்தார். 'அண்ணா'வை தகணம் செய்ததை பற்றியும், அவருக்கு இறுதி மரியாதையை பற்றியும் கண்ணில் நீர் தழும்ப கூறினார். மாமாவும் துக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு அவர் சொன்னதை கேட்டுக் கொண்டு இருந்தார்.



" பாவம் வாத்தியாரு ! தலையில அடிச்சிட்டு தாங்க முடியாம அழுதாரு." என்றார்.

'வாத்தியாரு' என்று சொன்னவுடன் 'எம்.ஜி.ஆர்' பற்றி தான் சொல்கிறார் என்று புரிந்து கொண்டேன். 'அண்ணா' மீது அதிக ஈடுபாடு கொண்டவர் என்று அவர் படங்கள் பார்க்கும் போதே எல்லோருக்கும் தெரியும்.

"அண்ணா உடம்புல விழுந்து விழுந்து அழுதும் போது யாராலம் தாங்க முடியல. சினிமால எல்லாரையும் சந்தோஷப்படுத்தின மனுஷன் அன்னைக்கு அழுது பார்த்தேன்" என்று 'அண்ணா'வின் பிரிவை பற்றி ஏங்கிய எம்.ஜி.ஆரை பற்றி சொல்வதை புரிந்துக் கொண்டேன்.

மாணிக்கம் மாமா சொல்ல மாமா அடக்கி வைத்திருந்த துக்கத்தை அழுது தீர்க்க தொடங்கினார். நானும், அம்மாவும் அவர் அழுவதை தடுக்கவில்லை. ஒரு முறை வாய்விட்டு அழட்டும். மனதில் இருக்கும் துக்கம் குறையும். மீண்டும் பழைய மாமாவை நான் பார்க்க வேண்டும். என் மாமா இப்படி பார்க்க என்னால் முடியவில்லை.



அண்ணா அவர்கள் இறந்து ஒரு மாதம் மேலாகிவிட்டது.

பி.ஏ தேர்வு முடிவுகள் வந்தது. நானும், பரூக்கும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றோம். நான் தேர்ச்சி பெற்றதை விட பரூக் தேர்ச்சி பெற்றது தான் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வாடியிருந்த மாமா என்னுடைய தேர்வு முடிவு அவருக்கு சந்தோஷத்தை கொடுத்தது. மாமாவும் இயல்பானா நிலைக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். மாமா, அம்மா காலில் விழுந்து அசிர்வாதம் வாங்கி கொண்டேன்.

மாமா வழக்கம் போல் காலையில் ஹோட்டல் திறந்து வியாபாரத்தை கவனிக்க தொடங்கினார். நான் மாமாவுக்கு உதவியாக ஹோட்டலில் வேலை செய்துக் கொண்டு இருந்தேன். அப்போது, பரூக் கையில் இனிப்போடு ஹோட்டல்க்குள் வந்தாள். சந்தோஷமான செய்தியுடன் வந்திருக்கிறான் என்று அவனை பார்த்தாலே தெரிந்தது.

" டேய் சந்திரா ! எனக்கு சென்னை பட்டினத்துல வாத்தியார் வேலை கிடைச்சிருக்கு" என்றான்.

அவன் வாப்பாவின் பிரிவுக்கு பிறகு மனதளவில் பாதிக்கப்பட்ட இவன் குடும்பம் இந்த வேலையால் ஒரளவு குணப்படுத்தும் என்று நினைத்துக் கொண்டேன். மாமாவும் அவன் கையில் இருக்கும் இனிப்பை எடுத்துக் கொண்டு அவனுக்கு வாழ்த்துக் கூறினார்.

" அடுத்த வாரம் நான் சென்னை பட்டினத்துக்கு போனும். ஒரு மாசத்துல இடம் பார்த்து அம்மாவை கூட்டிட்டு போய்டுவேன். அது வரைக்கும் அம்மாவ பத்திரமா பார்த்துக்கோடா.." என்று உணர்ச்சி முகுந்த குரலில் பேசினான்.

"உங்க அம்மாவும் எனக்கு அம்மா மாதிரி தான். நான் பார்த்துக்கிறேன்." என்று அவனுக்கு ஆறுதல் கூறினேன். மாமாவும் பார்த்து கொள்வதாக கூறினார். எங்கள் மேல் நம்பிக்கை வைத்து தைரியாமாக வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தான்.

திடீர் என்று மனதில் ஒன்று தோன்றியது. " பரூக் !" என்று சென்று கொண்டு இருந்தவனை அழைத்தேன். நான் அழைப்பதை பார்த்து பரூக் திரும்பி வந்தான். என் கையில் இருந்த பணத்தை அவன் சட்டை பையில் வைத்தேன்.

" எனக்கு பணம் வேணாம்" என்று மறுத்து சட்டை பையில் இருந்து எடுத்து கொடுத்தான்.

" புது ஊருக்கு போற. தங்கனும், துணி எடுக்கனும், சாப்பாட்டு செலவு… இப்படி எவ்வளவு இருக்கு வச்சிக்கோடா… !" என்று சொல்லி கொடுத்தேன்.

இதற்கு முன் தேர்வுக்கு பணம் கொடுத்ததை அவனால் திரும்பி கொடுக்க முடியவில்லை என்று வருந்திக் கொண்டு இருந்தவனிடம் மேலும் பணம் கொடுத்தது வருத்தமாக தான் இருந்தது. நான் கொடுக்கும் பணம் கண்டிப்பாக அவனுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமில்லை.

" டேய் கடனாவது வாங்கிக்கோ. முதல் மாசம் சம்பளம் வந்ததும் திருப்பி கொடு. போதுமா ! " என்றேன். மலர்ந்த முகத்தோடு பரூக் என்னை கட்டி அணைத்துக் கொண்டான். பதில் எதுவும் பேசாமல் நான் கொடுத்த பணத்தை வாங்கி கொண்டு சென்றான்.

பரூக்கை பஸ்ஸில் சென்னை பட்டினத்திற்கு நான் தான் சென்று வழியனுப்பினேன். இரண்டு நாளுக்கு ஒரு முறை பரூக் அம்மாவை பார்த்து விட்டு வருவேன். அவர்களுக்கும் நான் வந்து பார்த்து செல்வதில் ஒரு சந்தோஷம். அவர் கணவர் மரணத்திற்கு பிறகு என்னால் தான் தங்கள் குடும்பம் வாழ்கிறது என்று அடிக்கடி சொல்லுவார்.

இப்போது தான் தேர்வு முடிவு வந்தது போல் இருந்தது. அதற்குள் பரூக்க்கு வேலை கிடைத்து சென்னைக்கு சென்று விட்டான்.

பரூக் சென்ற பிறகு எனக்கு ஒரே பொழுபோக்கு 'ஹோட்டல்' தான். பி.யூ.சியோடு படிப்பை நிருத்த வேண்டும் என்று இருந்தேன். பி.ஏ தமிழ் படித்த பிறகு மேலும் படிக்க வேண்டும் என்று தோன்றியது. இப்போதே மாமாவிடம் சொன்னால் தான் உண்டு. ‘இல்லை’ என்றால் அம்மா மாமாவிடம் சொல்லி என் திருமணத்து வரன் பார்க்க ஆரம்பித்து விடுவார்.

நேராக மாமாவிடம் சென்று மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் சற்று நேரம் யோசித்தார்.

" என்ன படிக்கனும் ஆசைப்படுற...?" என்று கேட்டார். எந்த அறிவுரையோ, தயக்கமோ அவர் காட்டவில்லை. என் ஆசைப்படி என்னை படிக்க அவர் தயாராக இருந்தார்.

முன்பே என்ன படிக்க வேண்டும் என்று தீர்மாணித்துவிட்டேன். இந்த படிப்பு படித்தால் எனக்கும், இந்த சமுகத்திற்கும் பயன்படும். அந்த படிப்பை தான் நான் படிக்க போகிறேன்.

" வக்கில்"

Wednesday, March 7, 2012

அந்த மூன்று பெண்கள் - 8

அறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3,அத்தியாயம் 4, அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7

பேராசிரியர் பாலசுந்தரம் அவர்களின் பேச்சு என்னை மிகவும் பாதித்தது. "கடவுள் இருக்கிறா ?" என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வளர தொடங்கியது. பெரியார், அண்ணாதுரை புத்தகங்களை தேடி தேடி படித்தேன். கடவுளுக்கு எதிராக அவர்கள் சொல்லும் வாதங்கள் அப்படியே என்னால் ஏற்க முடியாவிட்டாலும், அதில் இருக்கும் உண்மை புரிந்தது. மெல்ல மெல்ல நாத்திகத்தை நோக்கி செல்வதை என்னால் உணர முடிந்தது.

ராமா மாமாவுக்கு 'பெரியார்' என்றாலே பிடிக்காது. ஆனால், அண்ணாதுரையை பிடிக்கும். இருவரும் ஒரே விஷயத்தை தான் சொல்கிறார்கள். இதில் ஒருவர் பிடிக்க , இன்னொருவர் பிடிக்காமல் போனாது எப்படி என்று தான் புரியவில்லை. மாமாவுக்கு அண்ணாதுரையை பிடித்தாலும், கடவுளை தினமும் வணங்குபவர்.அவர் கொள்கையை பின் பற்றாவிட்டாலும், அவருடைய பேட்டியையும், படத்தையும் விரும்புவார். இதனால், அண்ணாதுரை புத்தகதை தைரியமாக என்னால் வீட்டுக்கு எடுத்து வந்து படிக்க முடிக்கந்தது. பெரியார் புத்தகத்தை வீட்டுக்கே எடுத்துவர மாட்டேன்.

நான் நாத்திகத்தை நோக்கி சென்றாலும், மாமாவுக்காக கடவுளை வணங்கி கொண்டு தான் இருந்தேன். 'கடவுள் இல்லை' என்று தைரியாமாக சொல்லும் நிலையில் நானில்லை. உண்மை சொல்வதென்றால், 'கடவுள் இருந்தால் என்ன ? இல்லை என்றால் என்ன ?' என் வேலை நான் தான் பார்க்கனும். வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது. கடவுள், கோயில் என்று நேரத்தை வீணாக்க கூடாது’ என்பதையும் முடிவு செய்தேன்.

முதலமைச்சர் அண்ணாதுரை அவர்கள் கொண்டு வந்த புது சட்டம் ஒவ்வொரு நாளிதழில்களும் பரபரப்பாக பிரசுரம் செய்திருந்தனர். அந்த சட்டத்தை பற்றி தெரிந்துக் கொள்ளவே எல்லா நாளிதழ்களும் விற்று தீர்ந்தது. சிதம்பர தீட்சதர்கள் கடுமையாக அந்த சட்டத்தை விமர்சித்தனர். அப்படி என்ன தான் சட்டம் கொண்டு வந்திருக்கிறார் என்று நானும் நாளிதழ் வாங்கி படித்தேன். அந்த சட்டத்தின் பெயர் 'சுயமரியாதை திருமண சட்டம்'.

திருமணமான பெண்கள் என்றாலே அவர்களுக்கு அடையாளம் தாலி தான். அது இல்லாமல் திருமணம் இதுவரை நடந்ததில்லை. அப்படியே தாலியில்லாமல் திருமணம் நடந்தாலும் அந்த திருமணத்துக்கு சட்டப்படி அங்கிகாரமில்லை. முதலமைச்சர் தாலி இல்லாமல் நடக்கும் திருமணத்துக்கு சட்டப்படி அங்கிகாரம் கொடுத்திருக்கிறார். தாலி திருமணத்துக்கு எவ்வளவு முக்கியம். ஏன் முதலமைச்சர் இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்தார். இந்த சட்டத்தை கொண்டு வந்து ஏன் பலரின் விரோதத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும்

நான் நாளிதழ் படிக்கும் போது மாமா என் அருகில் வந்து படிக்கும் செய்தியை பார்த்தார்.

" என்ன மருமகனே ! அண்ணா கொண்டு வந்த புது சட்டத்த பத்தி படிக்கிறீயா...?" என்று கேள்வி கேட்டு அருகில் அமர்ந்தார்.

"ஆமா ! எதுக்கு இந்த மாதிரி சட்டம். தாலி ஒரு பொண்ணுக்கு எவ்வளவு முக்கியம். அது இல்லாம திருமண நடத்தாலம்னு சொல்லுறார்." என்று அவரிடன் சொன்னேன்.

" மருமகனே ! ஒரு காலத்துல திருமணம் ஆன ஆம்பளைங்க கால்ல மெட்டி போடுவாங்க. இப்போ யாரும் போடுறது இல்ல. கல்யாணம் அன்னைக்கு மெட்டி போட்டுட்டு அப்புறம் கலட்டுறாங்க. அதே மாதிரி தாலி கொண்டு வரனும் நினைக்கிறாரு. இதுல என்ன தப்பு இருக்கு." என்றார்.

எனக்கு கல்லூரி மேல் மாடியில் இருந்து கீழே குதிப்பது போல் இருந்தது. எப்போதும் அண்ணாவின் கொள்கையை ஏற்காத மாமா முதல் முறை அவர் கொண்டு வந்த சட்டத்துக்கு ஆதரவாக பேசினார். வைத்த கண் மாறாமல் மாமாவையே பார்த்தேன்.

" தாலி இல்லாம கல்யாணம் நடந்தா, புருஷனுக்கு ஏதாச்சு ஆனா கூட இந்த சமுதாயத்துல எப்பவும் போல ஒரு பொண்ணால நடமாட முடியும். கல்யாணமாகி, புருஷன் செத்து தாலி இல்லாம நடந்து போனா பொண்ணுங்கள இந்த சமுதாயம் எவ்வளவு கஷ்டப்படுத்தும்னு எனக்கு தெரியும். உங்க அம்மா எவ்வளவு அவமானம் பட்டாங்கனு அவளுக்கு தெரியும்." என்று உருக்கமான குரலில் பேசினார்.

விதவையான அம்மா சில சமயம் நடக்கும் போது தெருவில் இருந்து ஒதுங்கிக் கொள்வார். உணவகம் வைத்த காலத்தில் காலையில் அந்த பக்கமே போகமாட்டார். மதியம் தான் செல்வார். காலையில் 'விதவை' முகத்தில் விழிக்க பலர் யோசிப்பார்கள் என்பதற்காக அம்மா இப்படி செய்திருக்கிறார் என்பதை இப்போது தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

" தாலி ஒண்ணு இல்லனு வச்சிக்கோ. சமுதாயத்துக்கு முன்னாடி விதவ பொண்ணும், கல்யாணமான பொண்ணும் ஒரே மாதிரி தான் தெரிவாங்க. அவங்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கும். இது தான் நா புரிஞ்சிக்கிட்டது." என்று அண்ணாவின் சுயமரியாதை சட்டத்தை விளக்கினார்.



மாமாவின் விளக்கம் ‘பேராசிரியர் பாலசுந்திரம் வகுப்பு எடுக்கவில்லை என்ற குறையை திற்ந்தது. படிக்காத மாமாவே இவ்வளவு விளக்க கொடுக்கும் போது, முதலமைச்சர் அவர்கள் எவ்வளவோ யோசித்து தான் இந்த சட்டத்தை கொண்டு வந்திருப்பார். இந்த சட்டம் அமளுக்கு வந்தால் ‘அம்மா’ போன்ற விதவை பெண்கள் தைரியமாக சமுதாயத்தில் நடமாடலாம் என்று புரிந்துக் கொண்டேன்.

மெதராஸ் மகாணம் 'தமிழ் நாடு' மாற்றப்பட்டதாக இன்னொரு சட்டம். ஒவ்வொரு நாளும் அண்ணா அதிரடியான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மனதால ஆசைப்பட்டேன். அதே போல் மாமாவின் ஹோட்டல் வியாபாரம் நன்றாக வளர தொடங்கியது.

கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பை நானும், பரூக்கும் தீவிரமாக எங்கள் வீட்டில் படித்து கொண்டு இருந்தோம். அப்போது மாணிக்கம் மாமா வந்து பரூக்கை அவன் வீட்டுக்கு அழைத்து போக சொன்னார். அவன் என் வீட்டில் படிப்பது இந்த மாணிக்கம் மாமாவுக்கு என்ன வந்தது என்ற கோபப்பட்டேன். இப்போது என்ன செய்து என்னை குழப்ப போகிறார் என்று தெரியவில்லை. அவர் என்னை தனியாக அழைத்து விஷயத்தை சொன்னார். அதிர்ந்தே விட்டேன். இதை எப்படி பரூக்கிடம் சொல்ல போகிறேன் என்று புரியவில்லை.

மாமாவிடம் புல்லட்டை வாங்கி கொண்டு பரூக்கை அவன் வீட்டில் விட்டேன். அவன் வீடு வரும் வரை அவனிடம் விஷயம் சொல்லவில்லை. அவனுடைய வாப்பா பாட்ஷா பாய் இறந்திருந்தார். அவருடைய உறவினர்கள் எல்லாம் அவன் வீட்டு முன் நிறம்பி இருந்தனர்.

"வாப்பா... என்ன விட்டு போய்ட்டியே வாப்பா..." என்று கத்தி அழுதான்.அவன் அம்மா ஆயிஷா நிலை குலைந்து போனாள். பரிட்சை சமயத்தில் பரூக் வாப்பாவின் மரணத்தை எப்படி சமாளிக்க போகிறான் என்று புரியவில்லை.

தலையில் குல்லா அணிந்தவர்கள் இஸ்லாமிய மந்திரத்தை சொன்னப்படி பரூக்கின் வாப்பாவை தூக்கி சென்றனர். பரூக்கின் வாப்பாவின் தகனம் முடிந்து எல்லோரும் அவன் வீட்டுக்கு வந்தோம்.

ஒரு முறை பரூக்கிடம் அவன் தந்தை அவர்களுடன் இருப்பதை வைத்து "உன்னை பார்த்தா பொறாமையா இருக்கு" என்று சொல்லியிருக்கிறேன். நான் சொன்னதாலே என்னவோ இப்போது பரூக்கின் தந்தை அவனுடன் இல்லை. அவன் தந்தை மரணத்தை விட இன்னொரு பெரும் கஷ்டமான விஷயம் அவன் பரிட்சைக்கு பணம் கட்ட வேண்டும்.

பரூக்கின் வாப்பா எதோ வீட்டு வாடகையில் காலத்தை நடத்தி வந்தார். அவர் தகனத்துக்கான செலவு எல்லாம் கடன் வாங்கி தான் பரூக் செய்தான். அவர்களுக்கு உதவுவதற்கு உறவினர்கள் என்று சொல்லி கொள்ளும் படி யாருமில்லை. நண்பன் என்று என்னை தவிற பரூக்குக்கு யாரும் கிடையாது. என்னிடம் உதவி கேட்க ரொம்ப யோசித்தான். அவனுடைய வாப்பா பலரிடம் கடன் வாங்கியிருந்தாலும், அவன் இது வரை யாரிடமும் கடன் வாங்கியதில்லை.

அவன் என்னிடம் கடன் கேட்க மாட்டான் என்று தெரிந்து கொண்டேன். இந்த தேர்வு எழுதி முடிந்தால் கையில் பி.ஏ பட்டம் வாங்கி விடலாம். கௌரவம் பார்த்து அவன் என்னிடம் உதவி கேட்கவில்லை. ஆனால், இதை பார்த்து அமைதியாக இருந்தால் நான் உண்மையான நண்பனில்லை. மாமாவிடம் சொல்லி அவன் பரிட்சைக்கு பணம் வாங்கினேன். அந்த பணத்தை அவன் கையில் கொடுத்தால் வாங்க மறுப்பான் என்று நன்றாக தெரியும். அதனால், அந்த பணத்தை நேராக அவன் பெயரில் பரிட்சைக்கு பணம் கட்டி ரசிதை அவன் அம்மாவிடம் கொடுத்தேன்.

மாலை நேரம் பரூக் என் வீட்டுக்கு வந்தான். பரூக்கின் அம்மா ஆயிஷா நான் பரிட்சைக்கு பணம் கட்டியதை அவனிடம் சொல்லியிருக்கிறார் என்று புரிந்துக் கொண்டேன். அவன் வாயில் இருந்து 'நன்றி' என்ற வார்த்தை வரவில்லை. அந்த வார்த்தையால் என் நட்பை அந்நியப்படுத்தவில்லை. அவன் எதிர்பார்க்காத ஆளிடம் இருந்து எதிர்பார்க்காத உதவி கிடைத்திருக்கிறது.

அப்போது மாமா வந்தார். " வா பரூக் ! பரிட்சைக்கு பணம் கட்டுனியா..." என்றார்.

" ரொம்ப நன்றி மாமா... இந்த உதவிய என்னைக்கும் நா மறக்க மாட்டேன்".

"பரவாயில்ல... அப்பா இல்லாத குடும்பம் எப்படி கஷ்டப்படும்னு எனக்கும், சந்திருவுக்கு நல்லா தெரியும். நல்லப்படியா படிச்சு முன்னுக்கு வா..." என்று சொன்னார். இந்த பணத்தை எப்படியும் எனக்கு தருவதாக பரூக் சொன்னான். நான் எதுவும் சொல்லவில்லை. அந்த பணத்தை சம்பாதிக்க அவனுக்கு நல்ல வேலை கிடைத்தால் போதும் என்று நினைத்துக் கொண்டேன். அப்போது தான் அவனால் குடும்பத்தை காப்பாற்ற முடியும்.

எப்படியோ பெரும் பாடு பட்டு மூன்று வருட படிப்பை நானும், பரூக்கும் முடித்தோம். அடுத்து என்ன செய்யலாம் என்ற முடிவை பற்றி யோசிக்கவில்லை. தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு என்று பல புத்தகங்கள் படித்த எங்கள் அறிவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.

இருவரும் மாமாவின் ஹோட்டல்லுக்கு சென்றோம். அந்த சமயத்தில் வானொலி ஒரு அதிர்ச்சியான செய்தி. நானும், பரூக்கும் உரைந்து போனாம். சாப்பிட வந்தவர்கள் பலர் ஸ்தம்பித்து நின்றனர்.

"ஐயோ போச்சே...போச்சே..." என்று தலையில் அடித்து கொண்டு மாமா அழுதார். என்னால் மாமாவுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை. அவர் இப்படி அழுது நான் பார்த்ததில்லை.

முதலமைச்சர் ‘அண்ணாதுரை’ அவர்கள் அகால மரணம் அடைந்துவிட்டார் என்பது தான் அந்த செய்தி !!

LinkWithin

Related Posts with Thumbnails