வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, February 23, 2017

ஜிந்தாபாத் ஜிந்தாபாத் – ச.தமிழ்ச்செல்வன்

தனிப்பட்ட முறையில் எனக்கு கம்யூனிசக் கொள்கையில் பெரிய ஈடுபாடு கிடையாது. காரணம், நான் நாளைய முதலாளி. என்றாவது ஒரு நாள் முதலாளியாகிவிடுவோம் என்று நம்பிக்கையில் உழைப்பவர்களால் கம்யூனிசத்தை ஏற்பது கடினம். முதலாளி கனவோடு இயங்குபவர்கள் எட்டு மணி நேரத்திற்கு மேல் உழைக்கத் தயாரானவர்கள். அவர்களுக்கு கம்யூனிசக் கொள்கை ஏற்புடையதாக இருக்காது.

ஆனால், ஒரு தொழிலாளருக்கு பிரச்சனை என்று வரும்போது அவர்களுக்காக களம் இறங்கிப்போராடும் தொழிற்சங்க இயக்கம் என்பதை மறுக்க முடியாது. அதனால், அவர்கள் மீது ஒரு சாப்ட்கார்னர். 

முக்கியமாக அரசாங்க ஊழியர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளையும், இயக்கங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். சம்பளம், போனஸ், பஞ்சப்படி போன்ற எல்லா விஷயத்திலும் அவர்களுக்காக பேசக்கூடியவர்கள், போராடக்கூடியவர்கள் இவர்கள் தான். அதனால், ஊழியர்கள் தங்கள் நலனுக்காக இதில் இணைத்துக்கொள்வதில் நன்மை இருக்கிறது. 




ச.தமிழ்ச்செல்வன் அஞ்சல்துறையில் பணியாற்றும் தொழிலாளர் சங்கத்தின் ஏற்ப்பட்ட அனுபவங்கள், சங்கத்தோழர்கள் குணாதியங்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் என்று பல தரப்பை சொல்கிறது. ஒவ்வொருத்தரோடு பற்றிய அனுபவக் கட்டுரையும் தனி சிறுகதையாக வர வேண்டியது என்று சொல்லலாம். 

தோழர்களின் தத்துவம் சாமான்யங்களுக்கு ஏதார்த்தத்திற்கு ஏற்புடையதாக தெரியாது. ஆனால், தோழர்களுக்கு தத்துவம் தப்புக்கிடையாது, அது நடைமுறை கோளாறு என்பார்கள். 

இந்தப் புத்தகம் அவர்களின் போராட்டத்தை மட்டும் பேசவில்லை. அவர்களுக்குள் இருக்கும் அன்பு, பழக்கம், உதவும் மனப்பான்மை போன்ற பல விஷயங்கள் பேசுகிறது. சொந்தப் பணத்தில் கூட்டம் நடத்துபவர்களைப் பார்த்து அனுதாபப்படவில்லை. ”சங்கத்துக்கு கைப்பணத்தை செலவழிப்பதும், சங்கப்பணத்தை சொந்தச் செலவுக்கு எடுப்பது ஒரே விளைவைத்தான் ஏற்படுத்தும்” என்ற அறிவுரை கூறுகிறார். 

ஒரு தோழன் வீழ்ந்தால்… இன்னொரு தோழன் எழுவான் என்ற வாசகம் என்ற வாசகத்தோடு முடிக்கும் போது, “அது நான் தான்” என்று தமிழ்ச்செல்வன் சொல்லும்போது வாசகன் சத்தமாக ” ஜிந்தாபாத் ஜிந்தாபாத்” என்று சொல்லத்தோன்றும். 

பிறந்த நாள் பரிசாக இந்தப் புத்தகத்தை பரிசளித்த உரத்த சிந்தனை அமைப்புக்கும், உதயம்ராமுக்கும் நன்றி !! 

** 

ஜிந்தாபாத் ஜிந்தாபாத் 
– ச.தமிழ்ச்செல்வன் 
- Rs.130 

Wednesday, February 22, 2017

துருவங்கள் பதினாறு ( 2016 )

கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு கொலை நடக்கிறது. அதை விசாரிக்கும் காவல் அதிகாரி, அவரின் உதவிக்கு புதிதாக வேலைக்கு சேர்ந்த கான்ஸ்டெபிள். அவர்களின் விசாரணை தான் கதை. 

ஒரு ப்ளாட், ரகுமான் வீடு, காவல் நிலையம், சாலை என்று இதைச் சுற்றிதான் கதைகளன் அமைந்திருக்கிறது. அதற்குள் பல முடிச்சுகளோடு கதை தொடங்குகிறது. ஒவ்வொரு முடிச்சுகள் அவிழ்க்கும் போது அழகான விளக்கம் என்று திரைக்கதை விறுவிறுப்பாக செல்கிறது. 



படத்தில் கடைசிக் காட்சி வரை கேள்விகளும், அதற்கான விடையோடு பார்வையாளனை சீட் நுணியில் அமர வைக்கிறது. இறுதியாக சொல்லப்படும் கதை… அது வரை திரையில் காட்டப்பட்ட கதைக்கும், விவாதிக்கப்பட்ட சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லாத விஷயமாக இருக்கிறது. 

படம் முடிந்து இரண்டு மணி நேரமாக கதையின் திரைக்கதை மனதில் ஓட்டிப்பார்த்தேன். எல்லா மூடிச்சுகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன். மிகவும் ரசித்த விஷயம், கதையை யார் கோணத்தில் சொல்கிறோமோ அவர்கள் தான் நமக்கு நாயகர்களாக தெரிவார்கள். இதேக் கதையை பாதிக்கப்பட்டவன் பார்வையில் இருந்து பார்த்தால் ’உண்மை’ என்று தான் தெரிகிறது. 

Simple and Neat Screenplay என்பதற்கு மிக சிறந்த உதாரணம் “துருவங்கள் பதினாறு”. 

Horrer Thriller என்று சொல்லி பெய்ப்பட சீசனில் இப்படி ஒரு Investigative Thriller படம் தமிழில் பார்ப்பதற்கு உற்சாகமாக இருக்கிறது. யார் கண்டது ”துருவங்கள் பதினாறு ” மூலம் அடுத்து Investigative Thriller பட சீசன் ஆரம்பிக்கலாம் !!! 

எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் பார்த்தப்படம். தனது அடுத்தப்படத்தில் பார்வையாளனை அதிகம் எதிர்ப்பார்க்க வைத்திருக்கிறார் கார்த்திக் நரேன். வாழ்த்துகள் !!!

Tuesday, February 21, 2017

அருண் சிதம்பரமும் நானும் - 2

ஆரம்பத்தில், படம் எடுக்கப் போகிறேன் என்று அருண் சொல்லும் போது “இது உனக்கு தேவையா?” என்று அவனிடம் கூறியப் போது, அவன் “பிடிக்காத வேலையை இதுவரைக்கும் சரியா செஞ்சிருக்கிறேன். எனக்கு பிடிச்ச சினிமாவ சரியா பண்ணுவேன் நம்பிக்கை இருக்கு” என்றான். 

 

அந்த நம்பிக்கை “கனவு வாரியம்” ட்ரெய்லரைப் பார்க்கும் போது புரிந்தது. அவனுக்கு சரியான இடம் சினிமா தான். நாயகி, அவனை தவிர்த்து படத்தில் அனைவரும் பிரபல முகங்கள். ட்ரெய்லரில் வரும் இரண்டு மூன்று வசனம் மிகவும் கவர்ந்தது. நிச்சயம் ஒரு புது இயக்குனரின் படம் என்று சொன்னால் மட்டுமே தெரியும். 

படத்தை விரைவாக எடுத்து முடித்தாலும், ஒரு தயாரிப்பாளராக வெளியிடுவதில் மிகவும் சிரமப்பட்டான். கிட்டத்தட்ட ஒரு வருடம் மேல் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. 

இன்றைய தேதியில் படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. ஆனால், வெளியிடுவது எவ்வளவு பெரிய சிரமம் என்று அருணின் “கனவு வாரியம்” ஒரு உதாரணம். படம் எடுத்த நாட்களை விட அதை வெளியிட பல நாட்கள் உழைக்க வேண்டியதாக இருந்தது. 

அவனது உழைப்பை அங்கிகாரம் இந்தியாவில் கிடைக்கவில்லை. வெளிநாட்டில் தான் கிடைத்தது. உலக அங்கிகாரமான “ரெமி” விருது கிடைத்தது. தொடர்ந்து பல திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஒரு பெரிய வெளிநாட்டு நிறுவனம் படத்தை வாங்க முன் வந்தது. அந்த நிறுவனம் ஹாலிவுட் வார்னர் பிரதர்ஸ் !! 

பல ஆங்கிலப்படங்களை உலகம் முழுக்க வெளியிட்டவர்கள், முதல் முறையாக தமிழ் திரையுலகில் தடம் பதிக்கிறார்கள். அதுவும் அருண் சிதம்பரம் இயக்கிய “கனவு வாரியம்” படத்தின் மூலம். 

அடுத்த வாரம் 24ஆம் தேதி படம் வெளியாகப் போகிறது. மிகுந்த ஆவலோடு இருக்கிறேன். 



இந்தப்படத்தில் பாடலாசிரியர் அருண் சிதம்பரம் தான் !! 

“இவன் கிறுக்கன் தான்” பாடல் எப்படி காட்சிப்படுத்தியிருப்பான் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. படப்பிடிப்பின் போதே இந்த பாடலை எனக்கு போட்டு காட்டினான். பாடலின் இசையை விட வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் பாடல் கனவுக்கு பின்னால் ஓடுபவர்களின் தேசிய கீதமாக இருக்கும். நான் கல்லூரி நாட்களில் கேட்டு பழகிய உத்வேகமாக அருண் வரிகளை “கிறுக்கன்” பாடலில் கேட்டேன். 

”கல்லா மண்ணா” பாடல் கிராமப் பிள்ளைகளின் விளையாட்டை அழகாகச் சொல்கிறது. ’வெயிலோடு விளையாடி’ பாடலுக்கு பிறகு கிராமியப் பாலியத்தை அழகாகச் சொல்லும் பாடல்.

 “நீ பாதி”  என்ற காதல் பாடலும் இருக்கிறது. 

ஒரு பாடலாசிரியராக அருண் சிதம்பரம் வெற்றிப் பெற்றிருக்கிறான். 

அதேப் போல், ”கனவு வாரியம்” படம் கண்டிப்பாக வெற்றி பெறும். அதன் வெற்றி திரையுலகில் நுழையும் பல புதியவர்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. 

வாழ்த்துகள் !!

Friday, February 17, 2017

அருண் சிதம்பரமும் நானும் - 1

அருண் சிதம்பரத்தை பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால் ’நான் எழுதுவதற்கு முக்கியக் காரணம் அவன் தான்’. 

பொறியியல் படித்தக் காலத்தில் இருவரும் கவிதை எழுதுவோம். என்னுடைய பெரும்பாலான கவிதையின் முதல் வாசகன் அவன் தான். ஆனால், அவனுடைய கவிதையின் முதல் வாசகன் நானில்லை. காரணம், ஒரு கவிதை எழுதிவிட்டால் அவன் அறையை கடந்துப் போகும் யாரையாவது அழைத்து தனது கவிதையை வாசித்துகாட்டுவான். ஒன்றுக்கு பத்து பேரிடமாவது தனது கவிதையை சொல்லி கருத்துக் கேட்பான். தனது கவிதைக்கு தேவையான வார்த்தைக்கு பல நாள் காத்திருப்பான். 



அதேச் சமயம், நான் எழுதுவது பலருக்கு தெரியாது. எனது கவிதை மற்றவரிடம் காட்டுவதற்கு கூட வெட்கப்படுவேன். எதற்கும் ஒரு Marketing வேண்டுமென்று அருண் சிதம்பரத்திடம் கற்றுக்கொண்டேன். என்னுடைய கவிதையில் அதிகம் தனிமை, விரக்தி, சோகம் இருக்கும். ஆனால், அருண் சிதம்பரத்தின் கவிதையில் ’உத்வேகம்’ நிறைந்திருக்கும். 

எட்டு திசை 
உனக்கெதிரா 
ஒன்பதாம் திசையை 
நீ எழுப்பு ! 

அவனது முதல் கவிதை தொகுப்பான “விழியே விழித்திரு” நூலில் எழுதியது. நான் இறக்கும் வரை மறக்க முடியாத வரிகள். அவனோடு போட்டிப் போட்டதாலோ என்னவோ கல்லூரியின் இறுதியாண்டில் நானும் “உறங்காத உணர்வுகள்” என்ற கவிதை தொகுப்பு வெளியிட்டேன். ( நான் எழுதிய ஒரே கவிதை தொக்குப்பு)



 கல்லூரி முடிந்தப் பிறகு, “முயற்சியை மூச்சாக்கு” என்று தனது இரண்டாவது கவிதை தொகுப்பை வெளியிட்டான். எனக்கு ‘கவிதை’ ஒத்துவராது என்று முடிவு செய்து வரலாறு, அரசியல் சார்ந்த நூல்களை எழுத தொடங்கினேன். அருண் கவிதை எழுதுவதை நிறுத்தவில்லை. அவ்வப்போது கவிதை வாசிக்கும் வீடியோ யூ-டியூப்பில் வெளியிடுவான். அமெரிக்கா வேலை அவனது கவிதை திறமையை விழுங்காமல் இருந்தது. 

தன்னுடைய படைப்பாற்றலை கவிதை முழுமையாக வெளியே கொண்டுவரவில்லை என்று சினிமா இயக்கப் போகிறேன் என்றான். அதுவும் சொந்த தயாரிப்பில் எடுக்கப்பதாக சொன்னான். ஆரம்பத்தில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவன் நினைத்திருந்தால் சினிமாவில் பாடல் எழுதலாம். அதற்கான திறமை அவனிடம் நிறைய இருக்கிறது. எழுத்தாற்றலும் இருந்தது. ஆனால், யாரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யாமல், அனுபவமில்லாமல் ஒரு படத்தை இயக்குவது ஆபத்தான விஷயம். ஒரு நண்பனாக அறிவுரை கூறினேன். எந்தவித தயக்கமில்லாமல் தனது கனவை நோக்கி பயணித்தான். 

ஆரம்பத்தில் கதை விவாதத்தில் கலந்துக் கொண்டேன். நாங்கள் சில காட்சிகளைப் பற்றி விவாதித்தோம். கொஞ்ச நாட்கள் சென்றது. நாயகன் கால்ஷீட், புது இயக்குனர் மீது நம்பகயின்மை, பட்ஜெட் பிரச்சனை அவனது கதைக்கான நாயகன் கிடைக்கவில்லை. கடைசியில் தானே நடிப்பதாகச் சொன்னான். இது விஷப் பரிட்சை என்றேன். அவனது கனவிலிருந்து தடமாறவில்லை. 

சென்னை புத்தகக் கண்காட்சி வேலை அதிகரிக்க, தொடர்ந்து அருணுடன் சினிமா குறித்து பேசமுடியவில்லை. அழைக்கவும் முடியவில்லை. ஆறு மாதம் கழித்து ஒரு புத்தகத்தைப் பற்றி விபரம் கேட்க தொடர்பு கொண்டான். 

பட வேலை எப்படி போகிறது என்று கேட்க, 60% படப்பிடிப்பு முடித்துவிட்டதாகச் சொன்னான். அடுத்த சந்திப்பில் முழுப்படம் முடிந்துவிட்டது, போஸ்ட் புரோடேக்ஷனில் இருப்பதாக சொன்னான். 

ஒரு நாள் ட்ரெய்லர், டிஸர் பார்க்க அழைத்தான். அது வரை பயம் கலந்த அதிர்ச்சியை கொடுத்தவன், இன்ப அதிர்ச்சியை கொடுத்தான். அனுபவமில்லாமல் ஒரு புது இயக்குனர் இவ்வளவு விரைவாகப் படம் எடுக்க முடியுமா என்று வியப்பாக இருந்தது. 

 பல வருடங்களாக தனது கனவுகளை சிறுக சிறுக சேகரித்து இயக்கியதால் என்னவோ தனது படத்திற்கு “கனவு வாரியம்” என்று பெயர் வைத்திருந்தான்.

Monday, February 13, 2017

இல்லுமினாட்டி – கார்த்திக் ஸ்ரீநிவாஸ்

ஒரு நாட்டை ஆட்சி செய்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. கார்ப்ரேட் நிறுவனங்கள். அவர்களின் மகுடிக்கு அதிகாரவர்கம் ஆடுகிறது என்று நினைத்திருந்தேன். ஆனால், அந்த அம்பானி, அதானி போன்ற கார்ப்ரேட் நிறுவனங்களையே ஆட்டி வைக்கும் ஒரு குழு இருக்கிறது. பில் கேட்ஸ், வாரன் ஃபவர்ட் போன்று உலகின் நம்பர் 1 பணக்காரர் பந்தயத்தில் அவர்கள் கலந்து கொள்ளவதில்லை. அந்த நம்பர் 1 பணக்காரர் யார் என்பதை தீர்மானிப்பவர்கள் !! 

நம்பர் 1 பணக்காரர்களை விட அதிகப் பணம் வைத்திருப்பவர்கள். அதிகாரம் வைத்திருப்பவர்கள். உலகத்தை நோட்டம் விடுபவர்கள். இந்த உலக அரசியலை தங்களுக்காக மாற்றுபவர்கள். தங்களுக்கு எதிராக இருப்பவர்களை ஒழித்து கட்டுபவர்கள். எல்லா சம்பவங்களுக்கு பின்னால் அவர்கள் இருக்கிறார்கள். 

அவர்களின் பெயர் ”இல்லுமினாட்டி”. 



இவர்களின் அருளில்லாமல் எதுவும் நடவாது. யாராவது எதிர்த்தால் அவர்களுடைய உடலில் ஒரு அணுவும் அசையாது. அடையாளம் தெரியாமல் தொலைந்து போவார்கள். அல்லது திட்டமிட்ட விபத்தில் இறப்பார்கள். வழக்கு, நீதி மன்றம் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்கள். 

ராக் ஃபெல்லர், ஜான் எஃப்.கென்னடி, லீ குவான் யூ என்று இல்லுமினாட்டி பெயர்களை இந்த நூல் பட்டியலிடுகிறது. ஒரு கட்டத்தில் இந்த உலகத்தில் யார் தான் உண்மையான உழைப்பில் உயர்ந்தார்கள் என்ற சந்தேகத்தை இந்த நூல் விதைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நம்மை சுற்றியிருக்கும் உலகத்தை சந்தேகப்பட வைக்கிறது. 

ஒவ்வொரு அத்தியாயம் மிக ஸ்வாரசியமாக இருக்கிறது என்பதை விட மிக அதிர்ச்சியான தகவல் கொண்டிருக்கிறது. 

அவசியம் வாசிக்க வேண்டிய நூல். 

** 
இல்லுமினாட்டி 
– கார்த்திக் ஸ்ரீநிவாஸ் 
- Rs.133 

Sunday, February 5, 2017

Face/Off ( 1997)

அவனை பிடிக்க வேண்டும் என்றால் அவனாகவே மாற வேண்டும். இது தான் ‘Face Off’ படத்தின் ஒரு வரி கதை. 

வில்லன் Nicholas Cage பிடிக்க நினைக்கும் போலீஸ் அதிகாரியான John Travalto வில்லனை போன்று முகமுடியை ஆப்ரேட் செய்து வில்லன் குழுவில் சேர்கிறான். காவலர் பிடியில் இருக்கும் Nicholas Cage அவர்களிடம் தப்பித்து John Travalto முகமுடியை ஆப்ரேட் செய்து மாட்டிக் கொள்கிறான். 

இப்போது, வில்லனாக இருந்த Nicholas Cage நாயகன். போலீஸ் அதிகாரியான நாயகன் John Travalto தான் வில்லன். இருவரும் தங்கள் இயல்பான உடல்மொழியை மறந்து பாத்திரத்திற்கான உடல் மொழியை காட்ட வேண்டும். படம் முழுக்க இந்த இருவரின் ராஜ்ஜியம் தான் நடக்கும். 



 இரண்டு நாயகர்களுக்கான படம் என்றால் ‘Face Off’ படத்தை உதரணமாக குறிப்பிடலாம். ஒருவருக்கு அதிக முக்கியத்துவமோ, இறக்கமோ இல்லாத கதை. நேர்த்தியான திரைக்கதை. இருவருக்குமே சமமான வாய்ப்பு. ஒரு நல்ல ஆக்ஷன் படத்திற்காக எடுத்துக்காட்டாக இந்தப்படத்தை சொல்லலாம். 

1997ல் வந்த இந்தப் படம். படம் வந்து 20 வருடங்களிலாகியும் Body Swap திரைக்களனாக கொண்டு, இந்த அளவிற்கு விறுவிறுப்பாக யாரும் எடுக்கவில்லை. இவ்வளவு நாள் இந்தப் படத்தை தமிழில் எடுக்காமல் இருந்ததே மிகப் பெரிய விஷயம். 

இப்போது, ‘போகன்’ Face off படத்தின் கதை கொண்டதாக தெரிகிறது. Face offல் இருக்கும் 50% எடுத்தாலே ’போகன்’ வெற்றிப்படமாக அமையும். பொருத்திருந்து பார்ப்போம்.

Thursday, February 2, 2017

மாண்புமிகு உளவுத்துறை - வே.இராமநாதன்

கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது உளவுத்துறை ரிப்போர்ட்டை விடக்கட்சிக்காரர்களைத்தான் அதிகமாக நம்புவார். செல்வி ஜெயலலிதாவோ உளவுத்துறையையும் நம்பமாட்டார், கட்சிக்காரர்களையும் நம்பமாட்டார். தனக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யக் கூடியவர். 


தமிழகத்தின் வரலாற்றில் கலைஞருக்கு மிக முக்கிய இடமுண்டு. மிகச்சிறந்த ஞாபக சக்தியும், கூர்மையான அறிவும் உடைய தலைவர்கள் அவருக்கு நிகராக இந்திய வரலாற்றில் யாரையேனும் சொல்ல வேண்டுமென்றால் வெகுநேரம் யோசிக்க வேண்டியிருக்கும். 


தன் பாதுகாப்பு அதிகாரிகளை நல்ல முறையில் நடத்துவதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் அவர்தான். அவர்கள் சாப்பிட்டார்களா ? என்ன சாப்பிட்டார்கள் ? எது அவர்களுக்கு பிடிக்கும் என்பதையெல்லாம் கவனித்துக்கொள்வார். ஏதாவது விசேஷம் என்றால் அன்பளிப்புகளைத் தாராளமாக வழங்குவார். எம்.ஜி.ஆரின் பாதுகாப்புக்குப் போவதென்றால் போலீஸாருக்குக் குஷிதான். ஆனால், ஒரு விஷயம். எம்.ஜி.ஆரின் மேடைப்பேச்சு அவரது புகழுக்கு ஏற்ற வகையில் தெளிவாக இருக்காது. 




இப்படி முக்கியமான அரசியல் தகவலை கொடுத்திருப்பவர் தமிழகத்தை சேர்ந்த உளவுத்துறை அதிகாரி. 1964 – 1999 வரை 35 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய வே.இராமநாதன் தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அரசியல் ஆர்வமுள்ளவர்கள், உளவுத்துறை பற்றி தெரிந்துகொள்ள விருப்பமுடையவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

இணையத்தில் வாங்க....

LinkWithin

Related Posts with Thumbnails