வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, February 17, 2017

அருண் சிதம்பரமும் நானும் - 1

அருண் சிதம்பரத்தை பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால் ’நான் எழுதுவதற்கு முக்கியக் காரணம் அவன் தான்’. 

பொறியியல் படித்தக் காலத்தில் இருவரும் கவிதை எழுதுவோம். என்னுடைய பெரும்பாலான கவிதையின் முதல் வாசகன் அவன் தான். ஆனால், அவனுடைய கவிதையின் முதல் வாசகன் நானில்லை. காரணம், ஒரு கவிதை எழுதிவிட்டால் அவன் அறையை கடந்துப் போகும் யாரையாவது அழைத்து தனது கவிதையை வாசித்துகாட்டுவான். ஒன்றுக்கு பத்து பேரிடமாவது தனது கவிதையை சொல்லி கருத்துக் கேட்பான். தனது கவிதைக்கு தேவையான வார்த்தைக்கு பல நாள் காத்திருப்பான். 



அதேச் சமயம், நான் எழுதுவது பலருக்கு தெரியாது. எனது கவிதை மற்றவரிடம் காட்டுவதற்கு கூட வெட்கப்படுவேன். எதற்கும் ஒரு Marketing வேண்டுமென்று அருண் சிதம்பரத்திடம் கற்றுக்கொண்டேன். என்னுடைய கவிதையில் அதிகம் தனிமை, விரக்தி, சோகம் இருக்கும். ஆனால், அருண் சிதம்பரத்தின் கவிதையில் ’உத்வேகம்’ நிறைந்திருக்கும். 

எட்டு திசை 
உனக்கெதிரா 
ஒன்பதாம் திசையை 
நீ எழுப்பு ! 

அவனது முதல் கவிதை தொகுப்பான “விழியே விழித்திரு” நூலில் எழுதியது. நான் இறக்கும் வரை மறக்க முடியாத வரிகள். அவனோடு போட்டிப் போட்டதாலோ என்னவோ கல்லூரியின் இறுதியாண்டில் நானும் “உறங்காத உணர்வுகள்” என்ற கவிதை தொகுப்பு வெளியிட்டேன். ( நான் எழுதிய ஒரே கவிதை தொக்குப்பு)



 கல்லூரி முடிந்தப் பிறகு, “முயற்சியை மூச்சாக்கு” என்று தனது இரண்டாவது கவிதை தொகுப்பை வெளியிட்டான். எனக்கு ‘கவிதை’ ஒத்துவராது என்று முடிவு செய்து வரலாறு, அரசியல் சார்ந்த நூல்களை எழுத தொடங்கினேன். அருண் கவிதை எழுதுவதை நிறுத்தவில்லை. அவ்வப்போது கவிதை வாசிக்கும் வீடியோ யூ-டியூப்பில் வெளியிடுவான். அமெரிக்கா வேலை அவனது கவிதை திறமையை விழுங்காமல் இருந்தது. 

தன்னுடைய படைப்பாற்றலை கவிதை முழுமையாக வெளியே கொண்டுவரவில்லை என்று சினிமா இயக்கப் போகிறேன் என்றான். அதுவும் சொந்த தயாரிப்பில் எடுக்கப்பதாக சொன்னான். ஆரம்பத்தில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவன் நினைத்திருந்தால் சினிமாவில் பாடல் எழுதலாம். அதற்கான திறமை அவனிடம் நிறைய இருக்கிறது. எழுத்தாற்றலும் இருந்தது. ஆனால், யாரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யாமல், அனுபவமில்லாமல் ஒரு படத்தை இயக்குவது ஆபத்தான விஷயம். ஒரு நண்பனாக அறிவுரை கூறினேன். எந்தவித தயக்கமில்லாமல் தனது கனவை நோக்கி பயணித்தான். 

ஆரம்பத்தில் கதை விவாதத்தில் கலந்துக் கொண்டேன். நாங்கள் சில காட்சிகளைப் பற்றி விவாதித்தோம். கொஞ்ச நாட்கள் சென்றது. நாயகன் கால்ஷீட், புது இயக்குனர் மீது நம்பகயின்மை, பட்ஜெட் பிரச்சனை அவனது கதைக்கான நாயகன் கிடைக்கவில்லை. கடைசியில் தானே நடிப்பதாகச் சொன்னான். இது விஷப் பரிட்சை என்றேன். அவனது கனவிலிருந்து தடமாறவில்லை. 

சென்னை புத்தகக் கண்காட்சி வேலை அதிகரிக்க, தொடர்ந்து அருணுடன் சினிமா குறித்து பேசமுடியவில்லை. அழைக்கவும் முடியவில்லை. ஆறு மாதம் கழித்து ஒரு புத்தகத்தைப் பற்றி விபரம் கேட்க தொடர்பு கொண்டான். 

பட வேலை எப்படி போகிறது என்று கேட்க, 60% படப்பிடிப்பு முடித்துவிட்டதாகச் சொன்னான். அடுத்த சந்திப்பில் முழுப்படம் முடிந்துவிட்டது, போஸ்ட் புரோடேக்ஷனில் இருப்பதாக சொன்னான். 

ஒரு நாள் ட்ரெய்லர், டிஸர் பார்க்க அழைத்தான். அது வரை பயம் கலந்த அதிர்ச்சியை கொடுத்தவன், இன்ப அதிர்ச்சியை கொடுத்தான். அனுபவமில்லாமல் ஒரு புது இயக்குனர் இவ்வளவு விரைவாகப் படம் எடுக்க முடியுமா என்று வியப்பாக இருந்தது. 

 பல வருடங்களாக தனது கனவுகளை சிறுக சிறுக சேகரித்து இயக்கியதால் என்னவோ தனது படத்திற்கு “கனவு வாரியம்” என்று பெயர் வைத்திருந்தான்.

1 comment:

இராய செல்லப்பா said...

இது கதையா, அல்லது அருண் சிதம்பரம் என்று ஒருவர் உண்மையிலேயே இருக்கிறாரா?

-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

LinkWithin

Related Posts with Thumbnails