நடந்து செல்லும் காலடி சத்தம். நகங்களில் அழகு சேர்க்கும் நெயில் பாலிஷ். காலை உயரத்தி வைக்கக் கூடிய ஹை ஹில்ஸ். வல வலவான கால்கள். அப்படியே காலின் மேல் நோக்கி முட்டி வரை சென்றால் நெஞ்சம் பதை பதைக்கும். அவ்வப் போது முட்டியை மூடியப்படி அவளது ஸ்கர்ட் ஆடை வந்துப் போகும். ஆடை காற்றில் இன்னும் மேலே பறக்காதா என்று பார்ப்பவர் மனது ஏங்கும். அவளைச் சுற்றிய செயற்கை காற்றும் அந்த எண்ணத்தோடு செயல்ப்படும். அதை அறிந்தும், அவளது இடது கை ஆடைக் கொண்டு முட்டி வரை மூடி மறைக்கும்.
அந்த நோடியில், நமக்கு அவளது இடது கை மீது அதிகமாக கோபம் வரும். ஆனால், அதே அளவுக்கு அவளது வலது கை மீது மரியாதை பிறக்கும். காரணம், பார்ப்பவர்கள் மனதை புரிந்துக் கொண்டு அவளின் இதழில் இருக்கும் முத்தத்தை பெற்று அனைவரும் பரிபாறியப்படி காற்றில் பறக்கவிடுவாள் அந்த தேவதை.
தனது ஆடைப் பறந்துவிடுமோ என்ற அச்சம் அவள் முகத்தில் இருக்காது. ஆனால், பார்ப்பவர்கள் கண்கள் அவள் ஆடை விலகுவதே விரும்புவார்கள். தன்னைப் தவறாக பார்க்கிறார்கள் என்று தெரிந்தும் அவளது புன்னகையில் ஒரு செட்டிமீட்டர் கூட குறையாது. அவளது அனைத்து பற்களும் விளக்கு வெளிச்சத்தை விட பிரகாசமாக எரியும். சிவப்பு வண்ணம் புசப்பட்ட அவளது லிப்ஸ்டிக் இதழ் முத்தம் கொடுப்பது போன்று வைத்திருப்பாள்.
தங்கத்தால் செய்யப்பட்ட தேகம் என்பதை இலக்கியத்தில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இவளின் தேகம் மட்டுமல்ல கூந்தலும் தங்க நிறத்தில் மின்னக்கூடியவை. மற்ற பெண்களை போல் முதுகுவரை கூந்தல் வைத்து கொண்டு தன் பின்னழகை மறைப்பவள் இல்லை. பாப் கட் முடி வைத்திருப்பவள். தன் கழுத்தின் அழகைக் கூட மறைக்க மாட்டாள்.
காற்றில் பறக்கும் அவளது முத்தத்தை பிடிக்க ஆயிரம் கைகள் தவமாய் தவம் காத்திருந்தது. ஹாலிவுண்டில் பல நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவள் இந்த அழகு தேவதை தான். பல நாயகர்களை ஓரம் கட்டிவிட்டு தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவள்.
ஆடையை குறைத்து கவர்ச்சி காட்டுவதில் உலகப் புகழ் பெற்றவள். தன் அழகை எப்படி வெளிப்படையாக காட்டினாலோ, தன் மனதையும் வெளிப்படையாக காட்டினாள். ஆனால், அவள் அழகை பார்த்து ரசிக்க கோடி கண்கள் இருந்தாலும், அவள் மனதுக்கு ஆறுதலான ஒரு மனமுமில்லை.
ஒரு நடிகை எப்படி எல்லாம் பொருள் ஈட்டலாம் என்பதற்கு இன்றைய நடிகைகளுக்கு சொல்லிக் கொடுத்தவள். அதே சமயம், எப்படி எல்லாம் வழி தவறிப் போகக் கூடாது என்பதற்கும் முன் உதாரணமாக இருந்தவள்.
தமிழகத்தில் சில்க் சுமிதா தமிழர்களின் கனவை எப்படி கலைத்தாரோ, உலகளவில் பலரின் கனவுகளை இந்த தேவதை கலைத்தாள். சில்க் சுமிதாவுக்கு ரோல் மாடலே இந்த தேவதை தான். அதனால் தான் இந்த தேவதை தேர்ந்தெடுத்த முடிவை சில்க் சுமிதாவும் தேர்ந்தெடுத்தாள்.
சில்க் சுமிதா மட்டுமல்ல... புகழ் உச்சியில் இருந்து விழ்ச்சியடைந்த நடிகை விஜி, இப்படி ஒரு நடிகை இருந்தாரா என்பதை தெரியாமல் போன நடிகை பிரதிக்ஷா, தமிழ் நாட்டை தனது இடுப்பால் ஆட்டி வைத்த சிம்ரனின் சகோதரி நடிகை மோனல், ஹிந்தி திரையுலகின் நம்பர் ஒன் இடத்தில் இருந்த திவ்ய பாரதி. இன்னும் இந்த பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம். அவர்களுக்கெல்லாம் இந்த தேவதை காட்டிய வழியை தேர்ந்தெடுத்தார்கள்.
அவள் இறந்த ஐம்பது வருடங்கள் மேலாகியும், அவள் இருந்த சுவடு ஹாலிவுட்டால் மறக்க முடியாது. அவள் பெயர் தெரியாதவர்கள் கூட அவளது புகைப்படத்தை அடையாளம் கண்டுக் கொள்வார்கள். தன் அறையில் மாட்டி வைத்து தினமும் அதன் முன் முழிப்பார்கள்.
அந்த தேவதைக்கு பெற்றோர் வைத்த பெயர் ‘நோர்மா ஜீன்’. திரையுலகம் அவளுக்கு வைத்த பெயர் ‘மர்லின் மன்றோ’ !!
கருப்பு வெள்ளை காலத்தில் நடித்தவள் தான். ஆனால், பலரின் கனவுகளுக்கு வண்ணம் கொடுத்தவள். அவளின் ஒவ்வொரு புகைப்படமும் பல டாலருக்கு விற்பனையானது. அவளின் கடைக்கண் பார்வைக்கு பல சீமான்கள் காத்திருந்தார்கள். அவள் பாட்டை கேட்பதற்கு அமெரிக்க அதிபர் கென்னடி கூட தவமாய் இருந்தார்.
மர்லின் மன்றோ என்னும் தேவதை பூமியில் இருந்த காலம் 36 ஆண்டுகள். திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியது 15 வருடங்கள். ஆனால், ஐம்பது வருடங்கள் கடந்தும் அவளை யாராலும் மறக்க முடியவில்லை. அவளின் புன்னகையை யாராலும் மறைக்கவும் முடியாது. வாழும் போது சர்ச்சைகளில் நாயகியாகவே இருந்தார். இறந்தப் பின்னும் சர்ச்சகையாக இருக்கிறார். அவரின் மரணம் இன்று வரை தொடரும் மர்மமாகவே இருக்கிறது.
மன்றோவின் அழகை வைத்து பலர் கோடிக் கணக்கான டாலர்களை சம்பாதித்திருக்கிறார்கள். மன்றோவின் பார்வைக்காகவும், அழகுக்காகவும் எத்தனை கோடி வேண்டிமானாலும் கொடுக்கலாம் என்று பலர் வரிசையில் காத்திருந்தார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட அவளது மனதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அவள் அழகுக்கு இருந்த மதிப்பு, அவளது மனதிற்கு யாரும் கொடுக்கவில்லை என்பது தான் இந்த தேவதையின் கண்ணீர் முடிவுக்கு காரணம்.
இன்றைக்கும் இணையத்தில் தேடினால் மர்லின் மன்றோவின் கவர்ச்சிப்படம் கிடைத்துவிடும். நிர்வாணப்படம் கூட கிடைக்கலாம். ஆனால், அவளின் வெள்ளை உள்ளம், அன்பும் பாசம் கொண்ட மனது இருந்தது. அதைப் பற்றி யாரும் அறியவில்லை.
”என்னை Sex Symbol ஆக பலர் பார்ப்பதை வெறுக்கிறேன். Sex எல்லோரின் வாழ்க்கையில்
ஒரு பகுதி. அதன் அடையாளமாக நான் இருக்க விரும்பவில்லை. Sex தவிர்த்து
வேறொரு அடையாளமாகவே இருக்க விரும்புகிறேன்.” – மர்லின் மன்றோ .