இரண்டு நாட்களாக எனது நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் ஒரு சிலர் ”ஆணவக்கொலையை ஆதரிக்கவில்லை. ஆனால், ஒரு குடும்பத்தில் இருந்து பெண்ணை இழுத்துச் சென்று அந்த குடும்ப சந்தோஷத்தை கெட்டுப்பது தவறு” போன்ற கருத்து தெரிவித்திருப்பதை பார்க்கிறேன்.
ஏறக்குறைய, அவர்கள் கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக தான் கருத்துச் சொல்கிறார்கள். அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்கள் மகள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று சொல்லியிருந்தால் அவர்கள் கூறும் கருத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், நடந்திருப்பது கொலை. பல வருடங்களாக வளர்த்த மகளை விட ஜாதிப்பெருமை பெரிதாக நினைப்பவர்களின் ஆணவச்செயல். அதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
உண்மையில் அவர்கள் மகளை அன்பு காட்டி வளர்த்திருந்திருந்தால், அந்தப் பெண்ணுக்கு பெற்றோர்களை பிரிந்து சென்றிருக்கமாட்டாள். பெற்றோரின் அன்புக்கு முன் ‘காதல்’ பெரிதாகவும் தெரிந்திருக்காது. ஆனால், தங்கள் ஜாதிப் பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கருவியாக மகளை வளர்த்திருக்கிறார்கள். அது நிறைவேறாத கோபத்தில் கொலையில் முடிந்திருக்கிறது.
அந்தப் பெண்ணும் ஜாதிப்பார்க்கும் பெற்றோருக்கு மகளாக இருப்பதை விட தாழ்ப்பட்டவனாக இருந்தாலும் அவரின் மனைவியாக இருக்க விரும்பியிருக்கிறாள். அது சரியா ? தவறா ? என்பதை அவர்கள் வாழப்போகும் வாழ்க்கையில் தெரிந்துவிடும். அவர்கள் வாழ்வே கூடாது என்று நினைப்பவர்களின் செயலுக்கு பின்னால் என்ன காரணம் சொன்னாலும் அது தவறு தான்.
நாம் ஒருவர் மீது உண்மையாக அன்பு காட்டி, அவர் நம்மை விட்டு பிரிந்து செல்கிறார் என்றால் ஒன்று நாம் சரியாக அன்பு காட்டவில்லை என்று சொல்ல வேண்டும். அல்லது நமது அன்பை புரியாதவராக இருக்க வேண்டும். இரண்டுக் காரணத்திற்காக ’கொலை’, ‘தற்கொலை’ தீர்வில்லை. அது சரி என்று சொல்லவும் முடியாது.
No comments:
Post a Comment