இந்தியாவில் சாம்ராட் அசோகன், சத்திரபதி சிவாஜி, முகலாயர் மன்னர்கள் என்று நம்மை ஆண்ட மன்னர்களின் பட்டியல் எடுத்தால் நீண்டுக் கொண்டே போகும். அவர்களின் வீரமும், சாகசமும் உண்மையாகவும், சிலது கற்பனை கலந்து சொல்லப்படுகிறது. நாட்டை ஆண்டவர்கள் தான் சரித்திர நாயகர்களாக திகழந்து இருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டும் நாட்டை ஆளாமல் மக்கள் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
பல மகாராஜா போர், நிர்வாகம், அரசியல் திறன், நீதி என்று போன்ற பல விஷயங்களில் கவனம் செலுத்தி எடுத்த பெயரை அந்த ஒரு சிலர் தனிமனிதனாக எப்படி எடுக்க முடிந்தது என்ற பிரம்மிப்பதை எற்படுத்துகிறார்கள். மன்னர்களுக்கும், அந்த ஒரு சிலருக்கும் உள்ள ஒரே வித்தியாசம். மன்னர்கள் நாட்டை ஆண்டார்கள். அந்த ஒரு சிலர் தன்னை தானே ஆண்டார்கள்.
தனக்கென்ற ஒரு நீதி, ஒரு கொள்கை, ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொண்டு மன்னர்களுக்கு நிகராக பெயர் எடுத்திருக்கிறார்கள். அந்த கட்டுப்பாடு, நீதியை மற்றவர்களுக்கு சொல்லி ஏற்க வைத்திருக்கிறார்கள். தெனாலிராமன், பீர்பால் போன்ற புத்திக்கூர்மையாளர்கள், புத்தகர், மகாவீர் என்று மன்னர்கள் அல்லாதவர்கள் சரித்திர புருஷர்களாக இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் மிக முக்கியமானவர் ஒருவர் தான் விவேகாந்தர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராகவும் விளங்கினார்.
’நரேந்திரநாத் தத்தா’ என்ற இயற்பெயர் கொண்ட இவர் இராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரது சீடரானார். 1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும், இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். அவர்களின் விவேகானந்தர் முதல்மையாக திகழ்ந்தார்.
இவரின் ஆன்மீக கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வதாக அமைந்துள்ளன. இந்தியாவில் மட்டுமல்லாமல் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு, இவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.
1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.
ஒரு முறை, மன்னர் ஒருவர் விவேகானந்தரிடம் எனக்கு உருவ வழிப்பாட்டில் நம்பிக்கையில்லை என்கிறார். கல்லையும், மண்ணையும், மரத்தையும் கடவுளாக எண்ணி வழிபட முடியாது என்கிறார். அப்போது, விவேகானந்தர் மன்னரின் திவானிடம் மன்னரின் புகைப்படத்தை பார்த்து துப்பச் சொல்கிறார். திவான் துப்ப யோசிக்க, விவேகானந்தர் மன்னரிடன் “திவான் அவர்கள் அந்த புகைப்படத்தில் மன்னர் முகம் பொருந்திய படமாக பார்க்கவில்லை. மன்னரை பார்க்கிறார். அதனால், அவர் துப்ப யோசிக்கிறார். நீங்கள் கல், மண் என்று சொல்லுவது மற்றவர்கள் அதில் கடவுள் இருப்பதாகப் பார்க்கிறார்கள்” என்று விளக்கமளித்தார்.
அதேப் போல் உலகின் மிக பெரிய பணக்காரரான ராக்பெல்லர் ஒரே ஒரு நன்கொடை வழங்கியிருக்கிறார். அது விவேகானந்தரின் உரைக் கேட்டப் பின்பு வழங்கியிருக்கிறார் !!
விவேகானந்தர் பற்றிய வரலாறு, சொற்பொழிவு என்று அத்தனை குறிப்புகளும் நமக்கு எளிதாக கிடைக்கிறது. ஆனால், இந்த புத்தகத்தில் அதையும் தாண்டி ஒரு கூடுதல் சிறப்பு ஒன்று இருக்கிறது. இதில் அவரின் வரலாற்று மட்டுமல்லாமல், வெளிநாட்டில் சொற்பொழிவு மேற்கொள்ளும் போது கிறிஸ்துவ பாதரியார்களால் எதிர்க் கொண்ட எதிர்ப்புகளை சொல்கிறது. விவேகானந்தரை மதம் மாற்றம் செய்ய நடந்த முயற்சியையும் சொல்கிறது.
இந்துக்கள் பெரும்பான்மை கொண்ட இந்தியாவில் இந்து மத கொள்கை, ஆன்மீக சொற்பொழிவு நடத்துவது போன்ற விஷயங்கள் பெரிய சவால் இல்லை. ஆனால், அந்நிய நாட்டில் மற்ற மதத்தினர் முன்பு இந்து மத சொற்பொழிவு ஆற்றுவது என்பது மிகப் பெரிய சவால். கோபப்படுத்துவதற்கும், பகடி செய்வதற்கும் பல கேள்விகள் கேட்கப்படும். அவர்களிடம் கோபப்படாமல் பொறுமையாக பதிலளிக்க வேண்டும். அளிக்கும் பதில் பிரமிப்பு ஏற்படுத்த வேண்டும்.
இன்று வணிக நோக்கத்துடன் எத்தனையோ பேர் வெளிநாடுகளில் சொற்பொழிவு செய்கிறார்கள். தங்களை வளர்த்துக் கொள்வதில் பிரதான நோக்கத்துடன் செயல் படுகிறார்கள். ஆனால், எந்த விதப் பிரதிபலன் பார்க்காமல், தனது மதக் கொள்கையை பரப்ப வேண்டும் என்று விவேகானந்தரை போல் யார் செய ல்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த கிழக்கு பதிப்பகத்தின் எழுத்து நடையும், இப்போது வரும் புத்தகத்தின் எழுத்து நடையும் பல வித்தியாசங்கள் தெரிகிறது. முன்பு கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களில் குறிப்பாக வாழ்க்கை வரலாறு நூல்கள் வாசிக்க மிக எளிமையாக இருக்கும். நாவல், கதை படிப்பது போன்ற உணர்வு இருக்கும். ஆனால், சமிபத்திய நூல்கள் வடிவமைப்பு பாடப்புத்தக படிப்பதை போன்ற சோர்வு ஏற்படுகிறது. இந்த நூலிலும் பார்க்க முடிகிறது.
பல சமயம், காவியை வெளிப்படையாக விமர்சிக்கும் அளவிற்கு, நாம் வெள்ளை அங்கியை விமர்சிக்கவில்லை என்ற குற்றவுணர்வு இந்த நூல் படித்து முடிக்கும் போது ஏற்படுத்துகிறது.
***
விவேகானந்தர்: இந்திய மறுமலர்ச்சி நாயகன்
ரஞ்சனி நாராயணன்
கிழக்கு பதிப்பகம், ரூ 150