வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, June 30, 2017

அண்ணன் எஸ்.வி.சேகருக்கு திறந்த மடல் !!

மதிப்புக்குரிய அண்ணன் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு, 

சிறு வயதில் உங்கள் நகைச்சுவையால் ஈர்க்கப்பட்ட ரசிகனின் மடல். தங்களின் அரசியல் பார்வை என் பார்வைக்கும் ஒத்துப்போகாத காலத்தில் கூட தங்களின் நாடகத்தை வாணி மஹால், ராணி சீதை ஹாலில் காசுக் கொடுத்துப்பார்த்திருக்கிறேன். ஆனால், சமிபக்காலமாக தங்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சி சார்பாக பேசுவதாக நினைத்து தங்களின் சாதியை தூக்கிப்பிடித்து கட்சிக்கு துரோகம் செய்வதாக எனக்குப்படுகிறது. அதனால் திறந்த மடலை உங்களுக்கு எழுதுகிறேன்.



 * 

1. 

’ஒரு முறை உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பிராமண இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தால் அங்கையே இருந்துவிடுங்கள். இந்தியா வராதீர்கள். பிராமணர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது’ என்று சொன்னீர்கள். இதே கருத்தை அமீர்கான் வேறு மாதிரியாக முன் வைத்தப்போது ஊடகம் அவரை வறுத்தெடுத்தது. ஆனால், தாங்கள் சார்ந்த பா.ஜ.க கட்சிக்கு எதிரான கருத்து என்று கூட பார்க்காமல் கூறியிருக்குறீர்கள். இதை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. 

 2. 

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பல பிரச்சனைகள், பாலியல் தொல்லைகள் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், தாங்கள் சுவாதி பிராமணப் பெண் என்ற ஒரே காரணத்திற்காக அந்த கொலை வழக்கை குறித்து பேசினீர்கள். 

3. 

தற்போதைய பிரச்சனை எடுத்துக்கொள்வோம். வெ.மதிமாறன் டி.வி விவாதத்தில் மத்திய அரசை கண்டித்து பல கருத்துகளை கூறியிருக்கிறார். மோடி எதிர்த்து விமர்சித்திருக்கிறார். அதற்காக பொங்காமல் “திரு.நாராயணனை பார்ப்பனன்” என்று கூறியதற்கு பொங்கியிருக்கிறீர்கள். அதற்கான கண்டன வீடியோவும் வெளியீட்டு இருக்கிறீர்கள். தாங்கள் சார்ந்த கட்சியை விட உங்களுக்கு சாதி முக்கியமாக இருப்பதை வெளிப்படையாக காட்டுகிறது. பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் வெறுப்பை விதைத்திருப்பதை உங்களால் மறுக்கமுடியாது. 

*
 4. 


 // இப்பொழுதும் என் வீட்டில் சமையல் வேலை செய்பவர், வீட்டு வேலை செய்பவர்கள், குழந்தைகளை பார்த்துக்கொள்பவர்கள் எவருமே என் ஜாதியினர் அல்லர்// என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

எதனால் என் நெருங்கிய நண்பர்கள், நலம் விரும்பிகள் என் ஜாதியினர் இல்லை என்று உங்களால் சொல்ல முடியவில்லை. நீங்கள் நடத்தும் நாடகத்திற்கு ஸ்பான்ஸர் வேறு சாதியிடம் இருந்து வந்திருக்கிறது. அதை குறிப்பிட்டு இருக்கலாமே ? உங்கள் வீட்டு வேலை செய்பவர்கள் பற்றி ஏன் குறிப்பிட வேண்டும் ? உங்கள் ஆதிக்க சாதி சிந்தனை தான் இதைக் காட்டுகிறது என்பதை நீங்கள் உணரவில்லையா ? 


5. // சுன்னத் பற்றிய கேள்வியை தென் வட மாவட்டங்களில் நீங்கள் நேரில் போய் கேட்க துணிச்சல் உள்ளதா நண்பரே ? “ // என்று கேட்டிருப்பதை பார்த்தேன். 

பல நூற்றாண்டுகளாக கல்வி கற்று அறிவாளி என்று காட்டிக் கொள்ளும் பிராமணர்கள் புத்தியில் இருந்து ‘சாதி’யை நீக்குவதில் தி.கவினர் தோல்வியடைந்திருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக வேல் கம்பு, வீரம் என்று இருப்பந்தவர்கள் தற்போது தான் கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். தோல்வியுற்ற தி.கவினர் எப்படி தென் மாவட்டத்தினரிடம் ”சாதி இல்லை” என்று சொல்லி அவர்களால் புரிய வைக்க முடியும். 

கல்விச்சாலையில் பட்டம் பெற்ற நீங்களே “சாதி தாய், தந்தை போன்றது” என்று குறிப்பிடும் போது, கல்வி அறிவற்றவர்களிடம் “சாதி தவறு” என்று யாரால் புரிய வைக்க முடியும். 


6. 
// என் நண்பர் திரு.ஸ்டாலின் அவர்களது தொடர் உழைப்பால் வரும் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று முதல்வராகும் வாய்ப்பு இருக்கிறது. // 

திராவிடக்கட்சியை ஒழிப்போம் என்று சபதம் செய்த பா.ஜ.க கட்சியில் இருக்குறீர்களை என்பதை நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன். இதுவரை அ.தி.மு.க., காங்கிரஸ்., பா.ஜ.க என்று மூன்று கட்சியிலும் இருந்துவிட்டீர்கள். அடுத்து தி.மு.கவுக்கு தாவும் சந்தர்ப்பத்தை பார்த்துக்கொண்டிருப்பதாக தற்போதைய பா.ஜ.க உறுப்பினர்கள் நினைப்பார்கள். 

 “இதுக்கு தான் இந்த பார்ப்பனர்கள் நம்ம கட்சியில சேர்க்கக்கூடாது” என்று அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள். இவர்கள் திராவிடக் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை. பா.ஜ.கவினர். 

அதை நீங்கள் எப்படி எதிர்க்கொள்ளப் போகிறீர்கள் என்பது கவலையாக இருக்கிறது. 

7. 

தி.க., தி.மு.கவினரை விட மூன்று வேளை கோயிலுக்கு சென்று கடவுளை வழிப்படும் மற்ற சாதியினரிடம் ‘பிராமண வெறுப்பு’ அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு பெரியார் என்ன சொன்னார் என்பது தெரியாது. பகுத்தறிவு குறித்து புரிதல் கிடையாது. ஆனால், பிராமணர்கள் என்றால் இப்படி தான் நடந்துக்கொள்வார்கள் என்று எண்ணம் உடையவர்கள். எதனால் அவர்கள் மனதில் இப்படி எண்ணம் உருவானது என்றாவது சிந்தித்ததுண்டா ? 


8. 
// அடுத்த வாரம் நடக்க இருக்கும் உங்கள் இல்ல திருமணத்தில் சாதிப் பெயருடன் அழைப்பிதழ் அச்சடித்திருப்பதை ஏற்கனவே சொன்னேன் அல்லவா...// 

 ஒரு சம்பவம் சொல்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கு, நடிகர் தனுஷ் திருமணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். திரு. ரஜினியும், தனுஷ் தந்தை கஸ்தூரிராஜாவும் பிராமணர்கள் அல்ல. ஆனால், திருமணம் பிராமண முறைப்படி நடந்தது. எதற்காக பிராமண முறைப்படி நடத்தப்பட்டது என்று நான் கேட்கப் போவதில்லை. அந்த திருமணத்திற்கு கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்பட்டதா ? பகுத்தறிவாளிகளும், கடவுள் மறுப்பாளர்கள் கலந்து கொள்ளவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ? 

அதேப் போல், கடவுள் மறுப்பாளர் கலைஞர் இல்ல நிகழ்ச்சிக்கு கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் கலந்துகொள்வதில்லையா ? நம்மை சார்ந்துள்ளவர்கள், உறவினர்கள் நமது கொள்கைக்கு எதிரானவர்களாக இருந்தாலும் அவர்களின் அன்புக்கு அடிப்பணிவது மனித இயல்வு. அன்பை விட கொள்கை முக்கியமில்லை. அந்த அடிப்படையில் சுப.வீ வாணியச் செட்டியார் அறக்கட்டளையில் உறுப்பினராகியிருக்கலாம். பெற்றோர்கள் மீது கொண்ட அன்பால் அவர்கள் காட்டியப் பெண்ணை திருமணம் செய்திருக்கலாம். உரிமையோடு அவருடைய பெயரை உறவினர்கள் பத்திரிக்கையில் அச்சடித்திருக்கலாம். 

பிரச்சனை சாதி அமைப்பில் உறுப்பினராக இருப்பதில் இல்லை. தன்னுடைய சாதியை தூக்கிப்பிடித்து பேசுவது தான் பிரச்சனை. சுப.வீயின் திறந்த மடலில் அவரது சாதியை தூக்கிப்பிடித்து எழுதியதுப் போல் இல்லை. உங்களின் திறந்த மடலை பார்த்தப் பிறகு தான் அவர் எந்த சாதியை சேர்ந்தவர் என்பது பலருக்கு தெரிய வந்திருக்கும். 

 *

 9. 

// உங்களால் மட்டுமல்ல... யாராலும் சாதியையும் மதத்தையும் ஒழிக்க முடியாது. இதுதான் யதார்த்தம்// 

இந்த உண்மையை நான் ஏற்றுக்கொள்கிறேன். பிறப்பு, திருமணம், இறப்பு இந்த மூன்றுக்கும் சாதி அடையாளம் இல்லாமல் நடப்பதில்லை என்பதை நான் அறிவேன். ஆனால், பேச்சு, உடை, நட்பு என்று எல்லா விஷயத்திலும் பிராமணர்களை போல் யாரும் சாதியை தூக்கி சுமந்து செல்வதில்லை. அதனால் தான் நீங்கள் மற்றவர்களை விட வேறுப்பட்டு தனித்து நிற்குறீர்கள். 

பேசத் தொடங்கியதும் “இவர் பிராமணர்” என்று எளிமையாக கண்டுப்பிடிக்கும் அளவிற்கு உங்களை போல் யாரும் சாதி அடையாளத்தை காட்டுவதில்லை. 

மதத்தையும் ஒழிக்க முடியாது என்று குறிப்பிடும் நீங்கள் ஏன் கிறிஸ்துவம், முஸ்லீம் எதிராக கருத்துக் கூறும் கட்சியில் இருக்கிறீர்கள் ? 

 ** 

10. 

ஒன்று புரிந்துக்கொள்ளுங்கள். பிராமண வெறுப்பு என்பது தி.கவோ, தி.மு.கவோ விதைத்தது அல்ல. பிராமணர்கள் தங்கள் அன்றாட நடவடிக்கையால் விதைத்தது. அதை தி.மு.க அருவடை செய்து அரசியல் லாபம் பார்த்திருக்கிறது. இது மறுக்கமுடியாத உண்மை. இன்னும் எத்தனைக்காலம் இந்த உண்மை புரியாமல் தி.கவினரையோ, தி.மு.கவினரையோ குறைக்கூறி உங்கள் தவறை தொடர்ந்துக்கொண்டு இருப்பீர்கள் என்று நீங்கள் வணங்கும் கடவுளுக்கு கூட தெரியாது. 

நீங்கள் நல்ல நடிகன். ஆனால் திரையில் நடிப்பது போல் நிஜத்தில் உங்கள் அடையாளத்தை மறைத்து உங்களால் நடிக்க முடியவில்லை. உங்கள் திருந்தச் சொல்வதற்காக இந்த மடல் எழுதவில்லை. 

சோவையும், கலைஞரையும் பார்த்து பழகிய நீங்கள் என்ன பேசுகிறோம் என்பதை புரிந்துகொள்ளாமல் பேசுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அந்த வருத்தத்தை ஒரு ரசிகனாக எழுதியிருக்கிறேன். 

நன்றி.

Wednesday, June 14, 2017

உலக சினிமா - ஓர் பார்வை

சரியாக 5 வருடங்களுக்கு முன்பு வந்த புத்தகம். 'உலக சினிமா' என்ற பெயரைக் கேட்டாலே டூ-ஸ்டெப்-பாக் போய்க்கொண்டிருந்த என் போன்றவர்களிடமும் ஈரான், சௌத் கொரியா, லத்தீன் அமெரிக்கா என்று கொஞ்சம் கொஞ்சமாக தரமான சினிமா படிப்படியாக பிரபலமாகத் தொடங்கியிருந்த காலகட்டம். கடை கடையாக ஆங்கிலப் பட டி.வி.டி-களைத் தேடிக்கொண்டிருந்த நான், உலக சினிமா டி.வி.டி-களை சேகரிக்கத் தொடங்கியிருந்தேன். ப்ளாகராக நான் தொடர்ந்து வாசித்து திரு. குகன் கண்ணன் ( www.wecanshopping.com ) சென்னைப் புத்தகக்கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை வெளியிடும் தகவல் அறிந்து ஆன்-லைனில் வாங்கினேன். உலக சினிமா கட்டுரைகளை எளிய நடையில் எழுதி வந்த வெகுசில ப்ளாகர்களில் குகனும் ஒருவர். ஸினாப்சிஸ் அளவில் தான் கதையைச் சொல்வார் என்பதால் வளவளவென்று பெரிய பதிவுகளாக இல்லாமல் படம் பார்க்கும் முன் நமக்கு என்ன தெரியவேண்டுமோ அதை மட்டும் தரும் சிறிய பதிவுகளாகவே இருக்கும்.



கமர்ஷியல் சினிமா தாண்டி உலக சினிமா என்று வகைபடுத்தப்படும் இது தான் தரமான, நல்ல சினிமா நீங்கள் பார்க்கும் கமர்ஷியல் மசாலா குப்பைகள் அல்ல என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும் அந்த வகை சினிமாக்களில் அப்படி என்ன தான் ஸ்பெஷலாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு அருமையான அறிமுக கைடு. எடுத்த எடுப்பிலேயே பெலினி, கோடார்டு, பெர்க்மென் என்று முயற்சி செய்தால் அடுத்து உலக சினிமா என்றாலே மிரளத் தொடங்கிவிடுவீர்கள். எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் பயணிப்பது போன்ற ஆபத்தான முயற்சி அது (பெர்சனலான என்னைக் கேட்டால் குப்ரிக், குரசோவா, ஹிட்ச்காக், மஜித் மஜிதி படங்களிலிருந்து தொடங்கலாம்). மெல்ல மெல்ல உங்களைத் தயார் படுத்ததிக்கொள்ள இந்தப் புத்தகத்தில் திரு. குகன் அறிமுகப்படுத்தியிருக்கும் 19 படங்கள் நல்லதொரு ஆரம்பம். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மிக முக்கியமான திரைப்படங்கள். The Stoning of Saroya M என்ற அற்புதமான படத்தை இந்த புத்தகத்திலிருந்து தான் தெரிந்து கொண்டேன். 

எழுத்தாளர் குகன் இதுவரை - 'உலகை உழுக்க வைத்த இனப்படுகொலைகள்', இந்திய உளவுத்துறை, தேவர், முசோலினி, கலைஞரின் நினைவலைகள், பெரியார் ரசிகன், என்னை எழுதிய தேவதைக்கு, எனது கீதை, உலக சினிமா, கார்ப்பரேட் சாமியார்கள், உளவு ராணிகள், கலாம் கண்ட கனவு, கவிதை உலகம், நடைபாதை (சிறுகதைகள்) என்று சினிமா தவிர்த்து கட்டுரைத் தொகுப்பு, கவிதை, அரசியல் என்று வெவ்வேறு ஏரியாக்களில் புத்தகங்கள் எழுதியுள்ளார். 

இந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டால் ஒரே ஒரு சிறிய குறை. பார்த்தவுடன் கையில் எடுத்துப் பிரித்துப் பார்த்து உடனே வாங்கத் தூண்டும் ஃபினிஷிங் இல்லை. நல்ல கன்டென்ட் இருக்கிறது ஆனால் கண்டவுடன் கவர்ந்திழுக்கும் 'கவர்ச்சி' இல்லை. என்ன செய்வது, a book cannot be judged by it's cover என்பது உண்மை தான். a good book should also have a good cover என்பது நிதர்சனம். கவர் கவரவில்லை என்றால் நம்மாட்கள் வாங்க மாட்டார்கள்.

நன்றி பிரதீப் செல்லத்துரை. 

** 
பதிப்பகம் - கௌதம் பதிப்பகம் 
விலை - ரூ. 50/-

Monday, June 12, 2017

Sachin : A Billion Dreams ( Documentary film)

ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகளாகிறது. 2002 பிறகு இவர் ஆடிய ஆட்டம் பெரும்பாலும் சுயநல ஆட்டமாகப் பார்க்கப்பட்டது. இன்றைய தோனி, கோலி போல் வெற்றிப் பெற்ற கேப்டன் கூட இல்லை. அப்படியிருக்கும் போது சச்சின் ஆவணப்படம் பெரிய முக்கியமானப் படமா என்று சினிமா ரசிகர்களுக்கும், இன்றைய கிரிக்கெட் இளைய தலைமுறை ரசிகர்களும் நினைக்கலாம். 

ஒரு முக்கியமான விஷயம் இந்த ஆவணப்படம் இன்றைய இளைய தலைமுறைக்கு தகவல் சொல்வதற்காக மட்டுமல்ல… 30 வயது தாண்டிய எங்களைப் போன்றவர்களுக்கு 90களை மீட்டெடுத்துக் கொடுத்த டைம் மிஷினாக இந்தப்படம் இருக்கிறது. 

சச்சினின் ஆட்டம் சுயநலமானது என்று விமர்சிப்பவர்கள் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். 90களில் சச்சின் ஆடும் போது அவருடைய ரசிகர்கள் அதை விட சுயநலமானவர்களாக இருந்தார்கள். இந்தியா 50/2 என்று ஸ்கோர் சொன்னால், ‘சச்சின் களத்தில் இருக்கிறாரா?’. அப்படியென்றால் பிரச்சனையில்லை. சச்சின் களத்தில் இருக்கும் போது நாங்கள் இந்தியாவின் ஸ்கோர் பற்றி கவலைப்பட்டதில்லை. அதேப் போல், சச்சின் களத்தில் இருக்கும் வரை எதிரணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டதில்லை. 

தோனி, கோலி, அஸார் வாழ்க்கை வரலாறு படத்தில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால், சச்சின் வாழ்க்கை வரலாற்றில் வேறு யாரும் நடிக்க முடியாது. ஒரு போலியான சச்சினை திரையில் பார்ப்பதை சச்சின் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். சச்சின் போல் நடிக்க வேண்டும் என்றால் சச்சின் தான் வர வேண்டும். அதை தான் இந்த ஆவணப்படம் காட்டுகிறது. 



** 

அன்று சச்சின் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை இன்றைய தோனி, கோலி மீது கூட யாரும் வைக்க முடியாது. அன்றைய தேதியில் இந்தியாவின் வெற்றியும், சச்சின் ஆட்டத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது ஒன்று. சச்சின் விக்கெட் விழுந்து, கடைசி நம்பிக்கை இழந்தப் பிறகு இந்தியா வெற்றிப் புகழ்ப் பெற்ற ஆட்டமாக இரண்டு தான் என் நினைவுக்கு வந்தது. 



இந்த ஆவணப்படத்தில் காட்டப்பட்ட ஒவ்வொரு ஆட்டமும் எனது பாலியக்காலத்தை நினைவுப்படுத்தியது. குறிப்பாக, 96ல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தப் போது அழுததை அசைப்போட வைத்தது. 

** 

இந்த ஆவணப்படத்தில் எனக்கு இருந்த இரண்டு வருத்தம் இருக்கிறது. 

முதல் வருத்தம். வினோத் காம்பிளியை காட்டியதோடு சரி. அவரைப்பற்றி ஒரு வரிக்கூட குறிப்பிடவில்லை. சச்சினின் ஆரம்ப நாட்களில் மிக நெருங்கிய கிரிக்கெட் நண்பன் வினோத் காம்பிளி. பள்ளி நாட்களில் இருவரும் சேர்ந்த செய்த பாட்னர்ஷிப் சாதனை இன்று வரை முறியடிக்க முடியாமல் இருக்கிறது. 

1992-95களில் இவர்கள் இருவரும் களத்தில் இருக்கும் போது ’Running between wickets’ அருமையாக இருக்கும். அமிதாப், லதா மங்கேஷ்கர் போன்றவர்கள் பேசும் போது வினோத் காம்பிளி சச்சின் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கலாம். 

இரண்டாவது. இந்த ஆவணப்படம் சச்சினின் பேட்டிங் மட்டுமே பேசுகிறது. அவர் ஒரு Last Over Specialist bowler என்பதை இந்த ஆவணப்படம் பேசவில்லை. அதுவும் சச்சின் பவுலிங் போடும் போது Off break/ Leg Spin/ Medim Space என்று அவரது பெயருக்கு கீழ் குறிப்பிடப்படும். அவர் என்ன விதமான பவுலிங் போடப்போகிறார் என்பது பந்துவீசி முடிக்கும் வரை யாருக்கும் தெரியாது. 

நெருக்கடியான நேரத்தில் சச்சின் கடைசி ஓவர் பந்துவீச்சு இந்தியாவின் தோல்வி விழும்பில் இருந்து காப்பாற்றியிருக்கிறது. உதாரணத்திற்கு கீழ் காணும் ஆட்டத்தை பார்க்கவும்…





** 

ஒரு காட்சியில் சச்சின் வீட்டின் முன் கூடிய ரசிகர் கூட்டம் காட்டப்படுகிறது. அதைப் பார்த்த என் மகன், “சச்சின் ரஜினியை விட பெரிய ஆளா ? இவ்வளவு பேன்ஸ் இருக்காங்காளா… ?” என்று கேட்டான். 

சினிமாவின் உண்மையான ரசிகர்கள் பெரும்பாலும் ரஜினி, அபிதாப் போன்றவர்களின் ரசிகர்களாக இருப்பதில்லை. ஆனால், கிரிக்கெட்டின் உண்மையான ரசிகன் சச்சின் ஆட்டத்தை கண்டிப்பாக ரசிப்பான். 

இராமாயணத்தில் இராவணனின் மகனான இந்திரஜித்தை கொல்ல வேண்டும் என்றால் பதினான்கு வருடம் உறங்காத ஒருவனால் மட்டுமே கொல்ல முடியும் என்ற வரம் பெற்றவனாக இருப்பான். கடைசியில் பதினான்கு வருடம் உறங்காத லட்சுமணனால் கொல்லப்படுவான். 

சச்சின் என்ற இந்திரஜித்தை வீழ்த்த இன்னும் U16, U19ன் டீம்மில் லட்சுமணன் பிறக்கவில்லை என்பது தான் நிஜம். 

பல கோடி இந்தியர்களுக்கு கிரிக்கெட் கனவு கொடுத்த சச்சினுக்கு Sachin : A Billion Dreams என்ற ஆவணப்படம் ஒரு சிறு பதிவு மட்டுமே !!

Friday, June 2, 2017

பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ஆண்டில் எழுதப்பட்டது என்று சரியான குறிப்புகள் இல்லை. 18ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

பல நூற்றாண்டு முன் இலக்கியமல்லாத ஒரு புத்தகம் இவ்வளவு முக்கியத்துவம் பெரும் காரணம், இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமையை எப்படி சீர்குழைக்க வேண்டும் என்று பிரிட்டன் பேரரசு இரகசியமாக சேகரித்த முக்கியமான ஆவணமாக இருப்பதால் தான். 



18ஆம் நூற்றாண்டில் ஓட்டோமன் பேரரசை சீர்குழைக்க இஸ்லாமிய வேடத்தில் பிரிட்டிஷ் உளவாளியான ஆலிவர் ஹெம்பர் ஊடூருவினார். அங்கு அவர் மேற்கொண்ட அனைத்து வழிமுறைகளை தனது நினைவுக்குறிப்புகளாக இந்த நூலில் எழுதியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், இஸ்லாமிய நாடுகளை தகர்க்க பிரிட்டன் அரசு ஆவணப்படுத்தியிருக்கும் ரகசிய அறிக்கையும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

அந்த அறிக்கையில் இஸ்லாமிய தேசங்களை தகர்ப்பதற்கு ஒரு நூற்றாண்டு காலம் தேவைப்பட்டாலும், தங்களுக்கு அடுத்து வரும் பிரிட்டன் அதிகாரிகளுக்கும், பேரரசுக்கும் உதவியாக இருக்கும் என்பது தான் அந்த உளவாளியின் நோக்கம். ஏற்கக்குறைய அவர்களின் நோக்கப்படி சில இஸ்லாமிய தேசங்களை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். பாகிஸ்தான் அமெரிக்க அனுதாபியாக இருக்கிறது. ஓட்டோமன் சாம்ராஜ்ஜியத்தில் இஸ்ரேல் தேசம். இன்னும் சில இஸ்லாமிய தேசங்கள் அமெரிக்காவுக்கு அஞ்சி அமைதியாக இருக்கிறது. 

பிரிட்டனுக்கு பதிலாக அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இஸ்லாமிய தேசங்களை தகர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறது. இதில் பிரிட்டன் தயாரித்த இரகசிய அட்டவனையில் எந்த மாற்றம் செய்யாமல் திட்டம் போட்டு செயல்படுத்திவருகிறார்கள். 

இஸ்லாமிய தேசம் ஒன்றுப்படாமல் இருப்பதற்கு ஏகாப்பத்திய நாடுகளில் இரகசிய அறிக்கையாகவே இந்தப் புத்தகம் இருக்கிறது. அவசியம் வாசிக்க வேண்டிய நூல்… !!! 


***
பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் 
- ஆலிவர் ஹெம்பர் ( தமிழில் : நாஞ்சிலான்)
- அடையாளம் வெளியீடு
 - ரூ.80

இணையத்தில் வாங்க...

Monday, May 29, 2017

கக்கூஸ் ( ஆவணப்படம்)

பார்க்க வேண்டிய முக்கியமான ஆவணப்படம். 

இதை ஏன் முதலில் சொல்கிறேன் என்றால் இந்த கட்டுரையை பாதியிலேயே வாசிக்காமல் நீங்கள் கடந்து செல்லலாம். தலைப்பு உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். அதனால், நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஆவணப்படம் என்பதை முன்பே சொல்லிவிடுகிறேன். 

நமது தினசரி வாழ்க்கையில் காலைக்கடன் கழிப்பது என்பதை நிகாரிக்க முடியாத ஒன்று. உண்ட உணவு உடலில் தங்கிவிட்டால் நோய் அண்டிவிடும் என்ற அச்சத்தில் டீ, காபி என்று எதையாவது குடித்து ல்லது ஒரு சிலர் சிகரெட் பிடித்தாவது உடல் கழிவை வெளியேற்றி விடுகிறோம். ஆனால், நமது உடலின் கழிவு எங்கோ சென்று ஒரு இடத்தில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது. சுற்றுசூழலை பாதித்து கொண்டிருக்கிறது. அதை அப்புறப்படுத்தும் மனிதர்களை பற்றி நமக்கு தெரியாது. அவர்களுக்கான வாழ்க்கையை நாம் சிந்தித்திருக்க மாட்டோம். இவ்வளவு ஏன் ? அவர்கள் மனிதர்கள் என்பதை கூட நாம் யோசிக்காமல் கடந்து சென்று இருக்கிறோம். 



காலையில் கார்ப்ரேஷன் அலுவலகத்தின் முன்பு நில உடை அணிந்து செல்பவர்களை மட்டும் நமக்கு தெரியும். பொது கழிப்பிடத்தில் மலத்தை கைகளால் அள்ளும் மனிதர்களை இந்த ஆவணப்படம் காட்டுகிறது. பொது கழிப்பிடம் பக்கமே போகாதவர்களுக்கு “manual scavenging” எதோ சில இடங்களில் நடப்பதாக வாதிடலாம். சிங்கார சென்னையில் ப்ராட்வே, தி.நகர் போன்ற பகுதிகள் இன்னும் நடப்பதை தலையில் சுத்தி வைத்தி அடிப்பது போல் காட்டுகிறது. 

துணி துவைப்பதில் இருந்து சமையல் வரைக்கும் பல இயந்திரங்கள் வந்துவிட்டது. ஆனால், மனிதனின் மலத்தை சுத்தப்படுத்தும் இயந்திரம் ஏன் கண்டுப்பிடிக்கவில்லை ? ஒரு வேளை அப்படி ஒரு இயந்திரம் இருந்தால், கார்ப்ரேஷன் எதற்காக வாங்கவில்லை ? 

பல மரணங்கள் தவறிவிழுந்த விபத்தாகவே சித்தரிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தொகைக் கூட கிடைப்பதில்லை. எல்லையில் இராணுவ வீரன் நாட்டுக்காக உயிரை விடுகிறான் என்று சொல்வதை Trending ஆக இருக்கிறது. ஆனால், நமது மலத்தை அள்ளுவதில் பலர் இறந்திருக்கிறார்கள் என்பதை ஒரு வரி ஸ்டேடஸாக கூட இல்லாமல் நாம் கடந்து செல்லும் வாழ்க்கை வாழ்ந்துவருகிறோம். 

மலத்தை அள்ளுபவர்களின் உயிர் மலிவாகக் கருதப்படுகிறது என்பது அனைத்து கேள்விகளுக்கும் பதிலாக அமைகிறது. 

ஆவணப்படம் முடியும் போது பல கேள்விகளுடன் கனத்த மனதோடு செல்வோம். அவர்களின் வாழ்க்கையை நம்மால் மாற்ற முடியவில்லை என்றாலும் அவர்களை மனிதர்களாக மதிப்போம். 

ஆவணப்படம் இயக்கிய தோழர் திவ்யாவுக்கு வாழ்த்துகள் !!

LinkWithin

Related Posts with Thumbnails