வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label Documentary Film. Show all posts
Showing posts with label Documentary Film. Show all posts

Monday, June 12, 2017

Sachin : A Billion Dreams ( Documentary film)

ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகளாகிறது. 2002 பிறகு இவர் ஆடிய ஆட்டம் பெரும்பாலும் சுயநல ஆட்டமாகப் பார்க்கப்பட்டது. இன்றைய தோனி, கோலி போல் வெற்றிப் பெற்ற கேப்டன் கூட இல்லை. அப்படியிருக்கும் போது சச்சின் ஆவணப்படம் பெரிய முக்கியமானப் படமா என்று சினிமா ரசிகர்களுக்கும், இன்றைய கிரிக்கெட் இளைய தலைமுறை ரசிகர்களும் நினைக்கலாம். 

ஒரு முக்கியமான விஷயம் இந்த ஆவணப்படம் இன்றைய இளைய தலைமுறைக்கு தகவல் சொல்வதற்காக மட்டுமல்ல… 30 வயது தாண்டிய எங்களைப் போன்றவர்களுக்கு 90களை மீட்டெடுத்துக் கொடுத்த டைம் மிஷினாக இந்தப்படம் இருக்கிறது. 

சச்சினின் ஆட்டம் சுயநலமானது என்று விமர்சிப்பவர்கள் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். 90களில் சச்சின் ஆடும் போது அவருடைய ரசிகர்கள் அதை விட சுயநலமானவர்களாக இருந்தார்கள். இந்தியா 50/2 என்று ஸ்கோர் சொன்னால், ‘சச்சின் களத்தில் இருக்கிறாரா?’. அப்படியென்றால் பிரச்சனையில்லை. சச்சின் களத்தில் இருக்கும் போது நாங்கள் இந்தியாவின் ஸ்கோர் பற்றி கவலைப்பட்டதில்லை. அதேப் போல், சச்சின் களத்தில் இருக்கும் வரை எதிரணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டதில்லை. 

தோனி, கோலி, அஸார் வாழ்க்கை வரலாறு படத்தில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால், சச்சின் வாழ்க்கை வரலாற்றில் வேறு யாரும் நடிக்க முடியாது. ஒரு போலியான சச்சினை திரையில் பார்ப்பதை சச்சின் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். சச்சின் போல் நடிக்க வேண்டும் என்றால் சச்சின் தான் வர வேண்டும். அதை தான் இந்த ஆவணப்படம் காட்டுகிறது. 



** 

அன்று சச்சின் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை இன்றைய தோனி, கோலி மீது கூட யாரும் வைக்க முடியாது. அன்றைய தேதியில் இந்தியாவின் வெற்றியும், சச்சின் ஆட்டத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது ஒன்று. சச்சின் விக்கெட் விழுந்து, கடைசி நம்பிக்கை இழந்தப் பிறகு இந்தியா வெற்றிப் புகழ்ப் பெற்ற ஆட்டமாக இரண்டு தான் என் நினைவுக்கு வந்தது. 



இந்த ஆவணப்படத்தில் காட்டப்பட்ட ஒவ்வொரு ஆட்டமும் எனது பாலியக்காலத்தை நினைவுப்படுத்தியது. குறிப்பாக, 96ல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தப் போது அழுததை அசைப்போட வைத்தது. 

** 

இந்த ஆவணப்படத்தில் எனக்கு இருந்த இரண்டு வருத்தம் இருக்கிறது. 

முதல் வருத்தம். வினோத் காம்பிளியை காட்டியதோடு சரி. அவரைப்பற்றி ஒரு வரிக்கூட குறிப்பிடவில்லை. சச்சினின் ஆரம்ப நாட்களில் மிக நெருங்கிய கிரிக்கெட் நண்பன் வினோத் காம்பிளி. பள்ளி நாட்களில் இருவரும் சேர்ந்த செய்த பாட்னர்ஷிப் சாதனை இன்று வரை முறியடிக்க முடியாமல் இருக்கிறது. 

1992-95களில் இவர்கள் இருவரும் களத்தில் இருக்கும் போது ’Running between wickets’ அருமையாக இருக்கும். அமிதாப், லதா மங்கேஷ்கர் போன்றவர்கள் பேசும் போது வினோத் காம்பிளி சச்சின் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கலாம். 

இரண்டாவது. இந்த ஆவணப்படம் சச்சினின் பேட்டிங் மட்டுமே பேசுகிறது. அவர் ஒரு Last Over Specialist bowler என்பதை இந்த ஆவணப்படம் பேசவில்லை. அதுவும் சச்சின் பவுலிங் போடும் போது Off break/ Leg Spin/ Medim Space என்று அவரது பெயருக்கு கீழ் குறிப்பிடப்படும். அவர் என்ன விதமான பவுலிங் போடப்போகிறார் என்பது பந்துவீசி முடிக்கும் வரை யாருக்கும் தெரியாது. 

நெருக்கடியான நேரத்தில் சச்சின் கடைசி ஓவர் பந்துவீச்சு இந்தியாவின் தோல்வி விழும்பில் இருந்து காப்பாற்றியிருக்கிறது. உதாரணத்திற்கு கீழ் காணும் ஆட்டத்தை பார்க்கவும்…





** 

ஒரு காட்சியில் சச்சின் வீட்டின் முன் கூடிய ரசிகர் கூட்டம் காட்டப்படுகிறது. அதைப் பார்த்த என் மகன், “சச்சின் ரஜினியை விட பெரிய ஆளா ? இவ்வளவு பேன்ஸ் இருக்காங்காளா… ?” என்று கேட்டான். 

சினிமாவின் உண்மையான ரசிகர்கள் பெரும்பாலும் ரஜினி, அபிதாப் போன்றவர்களின் ரசிகர்களாக இருப்பதில்லை. ஆனால், கிரிக்கெட்டின் உண்மையான ரசிகன் சச்சின் ஆட்டத்தை கண்டிப்பாக ரசிப்பான். 

இராமாயணத்தில் இராவணனின் மகனான இந்திரஜித்தை கொல்ல வேண்டும் என்றால் பதினான்கு வருடம் உறங்காத ஒருவனால் மட்டுமே கொல்ல முடியும் என்ற வரம் பெற்றவனாக இருப்பான். கடைசியில் பதினான்கு வருடம் உறங்காத லட்சுமணனால் கொல்லப்படுவான். 

சச்சின் என்ற இந்திரஜித்தை வீழ்த்த இன்னும் U16, U19ன் டீம்மில் லட்சுமணன் பிறக்கவில்லை என்பது தான் நிஜம். 

பல கோடி இந்தியர்களுக்கு கிரிக்கெட் கனவு கொடுத்த சச்சினுக்கு Sachin : A Billion Dreams என்ற ஆவணப்படம் ஒரு சிறு பதிவு மட்டுமே !!

Monday, May 29, 2017

கக்கூஸ் ( ஆவணப்படம்)

பார்க்க வேண்டிய முக்கியமான ஆவணப்படம். 

இதை ஏன் முதலில் சொல்கிறேன் என்றால் இந்த கட்டுரையை பாதியிலேயே வாசிக்காமல் நீங்கள் கடந்து செல்லலாம். தலைப்பு உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். அதனால், நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஆவணப்படம் என்பதை முன்பே சொல்லிவிடுகிறேன். 

நமது தினசரி வாழ்க்கையில் காலைக்கடன் கழிப்பது என்பதை நிகாரிக்க முடியாத ஒன்று. உண்ட உணவு உடலில் தங்கிவிட்டால் நோய் அண்டிவிடும் என்ற அச்சத்தில் டீ, காபி என்று எதையாவது குடித்து ல்லது ஒரு சிலர் சிகரெட் பிடித்தாவது உடல் கழிவை வெளியேற்றி விடுகிறோம். ஆனால், நமது உடலின் கழிவு எங்கோ சென்று ஒரு இடத்தில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது. சுற்றுசூழலை பாதித்து கொண்டிருக்கிறது. அதை அப்புறப்படுத்தும் மனிதர்களை பற்றி நமக்கு தெரியாது. அவர்களுக்கான வாழ்க்கையை நாம் சிந்தித்திருக்க மாட்டோம். இவ்வளவு ஏன் ? அவர்கள் மனிதர்கள் என்பதை கூட நாம் யோசிக்காமல் கடந்து சென்று இருக்கிறோம். 



காலையில் கார்ப்ரேஷன் அலுவலகத்தின் முன்பு நில உடை அணிந்து செல்பவர்களை மட்டும் நமக்கு தெரியும். பொது கழிப்பிடத்தில் மலத்தை கைகளால் அள்ளும் மனிதர்களை இந்த ஆவணப்படம் காட்டுகிறது. பொது கழிப்பிடம் பக்கமே போகாதவர்களுக்கு “manual scavenging” எதோ சில இடங்களில் நடப்பதாக வாதிடலாம். சிங்கார சென்னையில் ப்ராட்வே, தி.நகர் போன்ற பகுதிகள் இன்னும் நடப்பதை தலையில் சுத்தி வைத்தி அடிப்பது போல் காட்டுகிறது. 

துணி துவைப்பதில் இருந்து சமையல் வரைக்கும் பல இயந்திரங்கள் வந்துவிட்டது. ஆனால், மனிதனின் மலத்தை சுத்தப்படுத்தும் இயந்திரம் ஏன் கண்டுப்பிடிக்கவில்லை ? ஒரு வேளை அப்படி ஒரு இயந்திரம் இருந்தால், கார்ப்ரேஷன் எதற்காக வாங்கவில்லை ? 

பல மரணங்கள் தவறிவிழுந்த விபத்தாகவே சித்தரிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தொகைக் கூட கிடைப்பதில்லை. எல்லையில் இராணுவ வீரன் நாட்டுக்காக உயிரை விடுகிறான் என்று சொல்வதை Trending ஆக இருக்கிறது. ஆனால், நமது மலத்தை அள்ளுவதில் பலர் இறந்திருக்கிறார்கள் என்பதை ஒரு வரி ஸ்டேடஸாக கூட இல்லாமல் நாம் கடந்து செல்லும் வாழ்க்கை வாழ்ந்துவருகிறோம். 

மலத்தை அள்ளுபவர்களின் உயிர் மலிவாகக் கருதப்படுகிறது என்பது அனைத்து கேள்விகளுக்கும் பதிலாக அமைகிறது. 

ஆவணப்படம் முடியும் போது பல கேள்விகளுடன் கனத்த மனதோடு செல்வோம். அவர்களின் வாழ்க்கையை நம்மால் மாற்ற முடியவில்லை என்றாலும் அவர்களை மனிதர்களாக மதிப்போம். 

ஆவணப்படம் இயக்கிய தோழர் திவ்யாவுக்கு வாழ்த்துகள் !!

Tuesday, April 5, 2016

ஜெய்பீம் காம்ரேட் - ஆவணப்படம்

ஆனந்த் பட்வர்தனின் மிக முக்கியமான ஆவணப்படம். 15 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு, தொகுக்கப்பட ஆவணப்படம் என்று சொல்லலாம். 

ஜூலை 11, 1997 

ராமாபாய் நகரில் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தற்காக தலித் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தை தடுக்க வந்த காவல்துறையினர் சரமாரியாக தூப்பாக்கி சூடு நடத்தியது. அதில் பத்து பேர் இறந்தனர். 26 பேர் படுகாயம் அடைந்தனர். 

காவல்துறை தரப்பில் காவலர்களின் டான்க்கர் லாரியை தாக்க வந்ததால் தற்காப்புக்காக தூப்பாக்கி சூடு நடத்தியதாக கூறினர். ஆனால், இறந்தவர்களின் ஒருவர் சடலம் கூட டான்க்கர் லாரி அருகில் இல்லை. அதற்கு சாட்சியாக பெட்ரோல் பங்க்கில் இருப்பவரின் வீடியோ கவரேஜ் காட்டப்படுகிறது.

தூப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிக்கு இடமாற்றம் மட்டுமே தண்டனையாக கொடுக்கப்பட்டது. சிவ சேனா போன்ற இந்து கட்சிகள் தங்களின் ஆதிக்கத்தனமான பேச்சை வெளிப்படுத்தும் காட்சிகளை இடம்பெறுகிறது.



அடுத்து, இரண்டாம் பாகத்தில் கைர்லன்ஜி கிராமத்தில் தலித் குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை ’குன்பி’ என்ற ஆதிக்க சமூகத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்களின் சடலமும் நிர்வாணமாய் கிடக்கிறது. ஆனால், அவர்கள் கற்பழிக்கப்படவில்லை என்று காவல் அதிகாரிகள் சொல்கின்றனர். அதற்கான பிரேதப் பரிசோதனையும் காவலர்கள் நடத்தவில்லை. 

அடுத்து, அம்பேத்கர் எழுச்சி பாடல்கள் பாடும் ’கபீர் கலா மன்ச்’ பற்றியது. அந்த குழுவினருக்கும் நக்ஸல்பாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தேடுதல் நடத்தப்படுகிறது. தங்களை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்பதை காவல்துறையினர் குறியாக இருக்கிறது என்று ’கபீர் கலா மன்ச்’ கூறுகிறார்கள்.

எல்லாவற்றிருக்கும் உச்சக்கட்டமாக, எந்த ராமப்பாய் நகரில் தூப்பாக்கிச் சூடு நடந்ததோ, அதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு ஆதரவாக இருந்த பா.ஜ.கவினரோடு தங்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பாதிக்கப்பட்டவர்களின் தலைவரும் பிரச்சாரம் செய்கிறார். 

இந்திய அரசியல் சட்டப்படி தலித் மக்களை ’இந்துக்கள்’ என்று சொல்கிறது. இந்துத்துவத்தினர் எல்லோரையும் இணைப்பது தான் தங்கள் லட்சியம் என்று சொல்கிறார்கள். 

 ஆனால், அவர்களே தலித் மக்களுக்கு எதிராக தொடரும் வன்முறைக்கு காரணமாக இருக்கிறார்கள் என்பதை இந்த ஆவணப்படம் காட்டுகிறது.

LinkWithin

Related Posts with Thumbnails