வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, September 9, 2009

ஹிட்லரை அஞ்ச வைத்தவன் !

தனது ஆலோசகர்களை எல்லாம் அவசரமாக அழைத்திருந்தார் ஹிட்லர். தனது நீண்ட நாள் கனவை பற்றி அவர்களிடம் ஆலோசனை செய்தார். ஹிட்லரின் ஆலோசகர்கள் எல்லோரும் சுத்தி வலைத்து ஒரே விஷயத்தை தான் திரும்ப திரும்ப சொன்னார்கள். ஆஸ்திரியாவை ஜெர்மனியுடன் இணைக்க வேண்டும் என்றால் நிச்சயம் 'அவர்' உதவி வேண்டும். 'அவர்' ஆதரவில்லாமல் ஆஸ்திரியாவில் ஒரு அடிக்கூட முன்னேற முடியாது. 'அவர்' இத்தாலியில் தான் இருக்கிறார். ஆனால், ஆஸ்திரியாவில் ஜெர்மனி இராணுவம் உள்ளே நுழைய போகிறது என்று திட்டம் போடுகிறோம் தெரிந்தால் போதும், உடனே இத்தாலி இராணுவம் ஜெர்மனியை தாக்கும். ஆஸ்திரியாவின் சான்ஸ்லர் டால்பஸ்க்கும், இத்தாலிக்கும் அப்படி ஒரு நட்பு உள்ளது.

ஆலோசகர் வார்த்தைகளின் உண்மை இருப்பதை உணர்ந்தார். ஹிட்லர் 'அவரை' எதிர்க்க தயங்கியதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஹிட்லரின் மானசீக குருவும் அவர் தான். அவர் எதிர்த்து மோதுவது என்பது தற்கொலைக்கு சமம். அதனால், அவரின் ஆதரவு பெற சமாதானமாக போவது தான் நல்லது என்று முடிவுக்கு வந்தார்.

ஹிட்லர் அவரை முதல் முதலில் 1934ஆம் ஆண்டு வென்னிஸ் நகரத்தில் தான் சந்தித்தார். 'அவர்' சுமார் ஐந்தேமுக்கால் அடி உயரம். அதற்கு தகுந்த பருமலான தேக அங்கம்; விசாலமான நெற்றி; நீண்ட கண்கள்; கூரிய மூக்கு; சிரிப்பிலே கம்பீரம் தரும் உதடுகள். வீரம், துணிச்சல், கம்பீரம் எல்லாம் நிறைந்தவரை அன்று தான் பார்த்தார். ஹிட்லரே ஒரு கனம் அஞ்சினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஹிட்லர் அவரிடம் " உங்களை தான் நான் அரசியல் குருவாக கொண்டு ஜெர்மனியில் ஆட்சி புரிகிறேன். நீங்கள் தான் எனக்கு வழிக்காட்டி " என்றெல்லாம் ஹிட்லர் பல புகழ் மாலைகள் அவருக்கு சுட்டினார். அவரும் மௌனமாக எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தார்.



தன் உரையாடல் முடிவில் ஹிட்லர், "ஆஸ்திரியாவில் பல ஜெர்மனி மக்கள் வாழ்கிறார்கள். ஆஸ்திரியாவை ஜெர்மனியுடன் இணைக்க உங்கள் ஆதரவு வேண்டும்" என்றார். அது வரை மௌனமாக இருந்த அவர் அப்போது தான் பேசினார். ஒரே வார்த்தை..."முடியாது" என்றார். அதற்கு மேல் பேசி எந்த பலனுமில்லை என்று ஹிட்லரும் தன் வாடிய முகத்துடன் ஜெர்மன் திரும்பினார்.

அவர் மறுத்தது ஆஸ்திரிய சான்ஸ்லரான டால்பஸ்க்கு பயங்கர மகிழ்ச்சி. அவருடைய நட்பை நினைத்து மிகவும் பெருமை கொண்டார். ஆனால், அவரின் சந்தோஷம் நீண்ட நாள் நிலைக்கவில்லை. ஆஸ்திரிய நாஜி கட்சியினரால் டால்பஸ் படுகொலை செய்யப்பட்டார். இந்த செய்தியை கேட்ட 'அவர்' கோபத்தில் எழுந்தார். அதே சமயத்தில் ஆஸ்திரியாவின் பாதுக்காப்பை பற்றியும் சிந்தித்தார். தனது இராணுவத்தை ஆஸ்திரியாவின் எல்லை பகுதியில் நிரப்பி வைத்தார். இராணுவ உதவி தேவைப்பட்டால் தனக்கு உடனே தகவல் கொடுக்கவும் என்று ஆறுதலும் கூறினார். அவரின் அதிரடி நடவடிக்கையால் ஹிட்லர் ஜெர்மனியை ஆஸ்திரியாவுடன் இணைக்கும் திட்டத்தை தள்ளி வைக்க வேண்டியதாக இருந்தது.

'அவர்' சர்வாதிகாரத்தில் ஹிட்லரை விட சீனியர். ஆனால், அதன் பின் நடந்த அரசியல் நிகழ்வுகளால் அவரை ஹிட்லர் முந்திவிட்டார். அதன் பின் இருவரும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி நண்பர்களாக மாறினர். பிறகு இருவரும் சேர்ந்து உலகத்தையே மிரட்ட தொடங்கினர். அந்த 'அவர்' தான் பெனிட்டோ முசோலினி. இருபதாம் நூற்றாண்டின் மறக்க முடியாத இன்னொரு நபர்.

ஹிட்லர் தனிப்பட்ட ஒருவருக்கு பயந்து தன் திட்டத்தை தள்ளி வைத்தார் என்றால் அது பெனிட்டோ முசோலினியாக தான் இருக்கும். பெனிட்டோ முசோலினி ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஹிட்லர் உலகத்தையே மிரட்ட ஆரம்பித்தார். பொலாந்தை தாக்கி இரண்டாம் உலகப்போரை ஹிட்லர் துவக்கியவுடன், பெனிட்டோ முசோலினி உடனே கலத்தில் குதிக்கவில்லை. சற்று நிதானமாக யோசித்து தான் ஹிட்லருக்கு உதவ முன்வந்தார். இந்த இரண்டு பேர் இறந்தால் தான் உலகப்போர் முடியும் என்று பலரும் கருதிவந்தார்கள்.

அவ்வபோது இருவருக்குள் அரசியல் 'ஈகோ' இருந்தாலும், இருவரின் நட்புக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. துரியோதனன், கர்ணன் போல் இந்த இரண்டு பேரின் நட்பும் இருந்ததா என்று நீங்கள் கேட்கலாம். அப்படியும் கற்பனை செய்து பார்த்தால் கூட தவறில்லை. ஒரு கட்டத்தில் சர்வதேச அரசியலில் பெனிட்டோ தனிமையாக்க பட்ட நேரத்தில் ஹிட்லர் அவருடன் கூட்டனி வைத்து கொண்டார். பெனிட்டோ இறந்த இரண்டாவது நாளில் ஹிட்லர் தற்கொலை செய்துக் கொண்டார். மேலோட்டமாக பார்த்தால் நண்பர்கள் போல் தெரிந்தாலும் உண்மையில் அரசியல் சூழ்நிலையால் ஏற்பட்ட கூட்டனி என்று தான் சொல்ல வேண்டும்.

Tuesday, September 8, 2009

கற்பனை கதையல்ல...! - 2

இருள் சூழ்ந்த அறையில் எதோ ஒரு சிறு வெளிச்சம் இருப்பது உள்ளூணர்வு சொல்கிறது. இல்லை... எல்லாம் முடிந்துவிட்டது. இனி எதுவும் செய்ய முடியாது. பேசாமல் குடும்ப தொழில் பார்க்க வேண்டியது தான் என்று யோசித்தேன்.

"உன்னால் முடியும் . நீ சாதிக்க பிறந்தவன். நாளை சினிமா உலகம் உன்னை பற்றி பேசும்."
என்று தனக்கு தானே ஆறுதல் கூறிக் கொண்டான். அறுதல் கூட யாரும் இல்லாமல் இருப்பது போல் இருந்தது.

எதுக்காக கலைப்படத்தை எடுத்தேன். வியாபார ரிதியான படத்தை எடுத்திருக்கலாம். போட்ட பணத்தையாவது பார்த்திருக்கலாம். கலைப்படம் எடுக்கிறோம் என்ற பெயரில் தியேட்டர் பக்கம் கூட்டமே இல்லாமல் இருக்கிறது. நாளை 'ஜிந்தகி' என்று புது படம் வெளிவர போகிறது.

தமிழில் வெற்றி பெற்ற படமாம். இந்தியில் எடுத்திருக்கிறார்கள். இங்கும் வெற்றி பெறும் என்று சொல்கிறார்கள். என் படத்தை தியேட்டரில் இருந்து எடுக்க போவது சந்தேகமில்லை.

உலகத்தில் பணம் கொடுத்து எது வேண்டுமானாலும் செய்யலாம். காசு கொடுத்து ரசிகர்களையும், வாசகர்களையும் உருவாக்க முடியாது. அவர்களாக விரும்பி வர வேண்டும். அப்படி என் படத்திற்கு ரசிகர்கள் தேடி வரமாட்டார்களா ? என்று எங்கிக் கொண்டு இருந்தேன்.

யாரோ கதவு தட்டும் சத்தம். படம் பெட்டி வீட்டுக்கு கொண்டு வந்து தருகிறார்களோ என்று சந்தேகத்துடன் கதவை திறந்தேன்.

"என் பெயர் வாசன். சென்னையிலிருந்து வருகிறேன்."

'வாழ்க்கை படகு' இந்தியில் 'ஜிந்தகி' என்ற பெயரில் உருவாக்கிய தயாரிப்பாளர் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன். அதன் வெளியீட்டு விழாவுக்காக வந்த போது கல்கத்தா வந்த தியேட்டர் மேனேஜர் அவர்கள், " புதிய இளைஞன் ஒருவர் உருவாக்கிய ஆர்ட் பிலிம் நம் தியேட்டரில் ஒடுகிறது. கூட்டமே இல்லை. நாளை ' ஜிந்தகி' வெளியிடலாம்" என்றார்.

படத்தை பார்த்து விட்டு விலாசத்தை வாங்கி வந்த விஷயத்தை சொன்னார்.

"உங்கள் படத்தை பார்த்தேன். Simply Superb. இந்த படத்தை கடைசி ஒரு ரசிகன் வரும் வரை, தன் படத்தை இந்தத் தியேட்டரில் வெளியிட மாட்டேன். இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் பெரிய கலைஞனாக புகழ் பெறுவீர்கள்" என மானதார வாழ்த்திவிட்டு வந்தார்.

தன் படம் ஒரு தயாரிப்பாளர் மனதை மாற்றுமா...? அப்படி என்றால் என் படம் இந்தியாவை மாற்றும்... !! இந்திய திரைப்பட உலகில் என் பெயர் நீங்காமல் இருக்கும் என்று இளைஞன்
சத்யஜித்ரே தனக்கு தானே புகழ் மாலை சுடிக்கொண்டான்.

அந்த படம் 'பதேர் பாஞ்சாலி' ! சத்யஜித்ரே ஆஸ்கர் விருது பெற காரணமாக இருந்த படம்.

Monday, September 7, 2009

கற்பனை கதையல்ல...!

உடம்பில் ஒடுவது சிவப்பு இரத்தம் என்பதை காட்டுவதற்காகவே அடித்தது போல் இருந்தது. அவன் இரத்ததை மண்ணில் சில துளிகளை பார்த்தான். எத்தனை அடி, அத்தனை பூட்ஸ் மீதி.... அனைத்தையும் வாங்கிக் கொண்டு, மெதுவாக 'குடிக்க தண்ணீர்' கேட்டான் அந்த இளைஞன். போலீஸ் கொடுத்தனர். அடிவாங்கிய இளைஞனை போலீஸ் சிறை கம்பிகளில் நடுவே தள்ளி அவள் சகாக்களோடு சாத்தி தள்ளினர்.

அறையில் அந்த இளைஞனை தவிர மற்ற எழு பேர் இருந்தனர். ஜெயில் ஆபிசர்கள் படுக்கை எதுவும் கொடுக்கவில்லை. ஏழு பேருக்கு மேல் படுக்க முடியாத அறை மிகவும் சிரமப்பட்டு துக்கத்தை வரவழைத்தான் அந்த இளைஞன்.

அடுத்த நாள், காலை ஏழு மணிக்கு கதவு திறந்தது. 10 நிமிடங்களுக்குள் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு திரும்ப வேண்டும் என்று வார்டர் கூறினார்.

அங்கு இருந்தது மூன்று கழிவறைகள். அந்த இளைஞனோடு கைதானவர்கள் 50 பேர் இருந்தனர். ஒரு சிலர் காலைக் கடன் கழிக்காமல் திரும்பினர். அந்த இளைஞனும் காலைக்கடனை கழிக்கவில்லை.

பல் விளக்க பற்பொடி கேட்டான். சிறை அதிகாரி செங்கல் பொடி, மண் எடுத்து பல் விளக்க சொன்னார். வெறும் தண்ணீரில் வாய்யை கழுவிக் கொண்டு சிறை அறைக்குள் சென்றான்.

சாப்பாடு நேரம். கதவை திறந்து வெளியே வர சொல்லி அந்த இளைஞனை கியூவில் நிற்க சொல்லி களியும், சாம்பார் மாதிரி கிரையும் கொடுத்தனர்.சாப்பிடுவதற்கு தட்டு இல்லை. வேர் கைதியிடம் இருந்து தட்டு வாங்கி தந்தனர். நெளிந்தும் வளைந்தும் மண் படிந்த தட்டில் சாப்பாடு வாங்கி சாப்பிட்டான் அந்த இளைஞன்.

சாப்பிட்ட பிறகு அந்த இளைஞனை ஏழாவது அறையில் இருந்து மூன்றாவது அறைக்கு மாற்றினர். அங்கு பாபு, வீரசாமி, கோவிந்தராசன், நீல நாராயணன் என்று நான்கு பேர் கைதிகளாக இருந்தனர்.

மாலை சாப்பிட சாப்பாத்தி கொடுத்தனர். அதை கடிக்கக் கூட முடியவில்லை. பொழுது மெதுவாக செல்வது போல் இருந்தது.

இரவு 8.30. மணி இருக்கும். பூட்ஸ் சத்தம் கேட்டது. பத்து கன்விக்ட் வார்டர்களும், ஒரு அஸிஸ்டண்ட் ஜெயிலரும், தலைமை வார்டரும் நுழைவுவாயில் வழியாக பிளாக்குள் நுழைந்தனர். வராண்டா வழியாக கடைசி அறைக்குள் சென்றார்கள்.

"சர்ச்" என்ற சத்தம் கேட்டது. சற்று நேரத்தில் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. வெளியே இழுத்து அடிக்கும் சத்தம் கேட்டது. "அய்யோ, அம்மா " என்ற சத்தமும் கேட்டது.

அந்த இளைஞனின் தொண்டை குழியில் எதோ செய்வது போல் இருந்தது. சோதனையின் பொது வைத்திருக்க கூடாத சாமான்களை எதையாவது வைத்திருப்பானோ என்று எண்ணி தன்னை தானே தேற்றிக் கொண்டான்.

வரிசையாக ஒவ்வொரு அறை திறக்கப்படும் சத்தமும், அடி விழும் சத்தமும், 'அய்யோ, அம்மா' சத்தமும் கேட்டுக் கொண்டு இருந்தது.

"எல்லா அறையில் இருப்பவர்களை அடிப்பது போல் தெரியுதே !" என்றான் அந்த இளைஞன்.

"பயப்படாதே !" என்று பாபு அந்த இளைஞனை ஆறுதல் கூறினான்.

தங்கள் அறைக்குள் வருவதை உணர்ந்த பாபு, " சட்டையை கழற்றாதே அடி பலமாக விழும்" என்றான்.

காவலர்கள் மூன்றாவது அறைக்குள் நுழைந்தனர். அந்த அறையில் இருக்கும் கைதிகளை வர சொன்னார்கள்.

ஒரு வார்டர் துணை ஜெய்லரிடம் காதில் எதோ சொல்ல, " ஓ.... அவனா இவ..." என்று அந்த இளைஞன் பார்த்து சற்று எதிர்பார்க்காத சமயத்தில் அந்த இளைஞனின் கன்னத்தில் அடித்தார். பூட்ஸ் காலால் மிதித்தனர்.

அந்த இளைஞனுடன் இருந்த பாபுவை சுவரில் சாத்தி அடிப்பதை பார்த்தான். அவன் இடது பக்கத்தில் வீராசாமி அடிப்பதை பார்த்தான். பாதி நினைவிழந்தான். பீதியில் ஒன்றுமே புரியவில்லை.

மறுபடியும் அந்த இளைஞனை அடிக்க வரும் போது பாபு ஒடிவந்து அந்த இளைஞனை கட்டிபிடித்துக் கொண்டான். அந்த இளைஞன்னுக்கு விழ வேண்டிய அடியை தான் வாங்கிக் கொண்டான். வார்டரும், கன்விக்ட் வார்டரும் பாபு மீது ஏறி ஏறி பூட்ஸ் காலால் உதைத்தனர். அந்த இளைஞன் பாபு அடிவாங்குவதை பார்த்தான்.

அந்த இளைஞனின் கையில் தடியால் அடித்தார்கள். கை முட்டியில் பலமாக அடிப்பட்டது. வெறி அடங்கிய காவலர்கள், அனைவரையும் உள்ளே பிடித்து தள்ளினர்.

வலி தாங்க முடியாமல் 'அய்யோ அம்மா ' என்று அந்த இளைஞன் முணகிக் கொண்டு இருந்தான். பாபுவையும் தள்ளினர். அந்த இளைஞன் பாபுவை கட்டி பிடித்து உயிர் இருக்கிறதா பார்த்தான். பாபு அந்த இளைஞனின் உடல் காயங்களை தடவி பார்க்கிறான்.

பத்து நிமிடத்தில் மீண்டும் அறையை மாற்றினர். அந்த இளைஞன் பாபுவை விட்டு பிரிய வேண்டிய நிலை. மனமில்லாமல் அந்த இளைஞன் பாபுவை விட்டு பிரிந்து வேறு அறைக்கு சென்றான்.

அடுத்த நாள் பாபு இறந்ததை அந்த இளைஞனுக்கு தெரிகிறது. தன் உயிரை காப்பாற்றிய சிட்டிபாபுக்காக இளைஞரான ஸ்டாலின் கண்ணில் இருந்து வந்த நீர் மண்ணை ஈரமாக்கியது.

Sunday, September 6, 2009

யுவன் சந்திரசேகர் : கானல் நதி

வாழ்க்கையில் நடக்கும் ஒரு சில நிகழ்வுகள் ரனங்களாக தங்கிவிடுவதால், அது என்று ஆராத வடு மாறிவிடுகிறது. அந்த வடுவில் வாழ தெரிந்தவன் தான் வாழ தகுதியாவனாக தெரிகிறான். வடுவை தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தால், இந்த உலகத்தில் இருப்பவர்களால் நிராகரிக்கப்பட்டு தனிமையில் தள்ளப்படுக்கிறான். அப்படிப்பட்ட மனிதனின் வாழ்க்கையை தான் 'கானல் நதி' கதை.

'மோகன முள்' பிறகு முழு முழுக்க ஒரு இசை கலைஞனை மையமாக வைத்து வந்த நாவல் இது தான் என்று நினைக்கிறேன்.



தனஞ்செயன் முகர்ஜி என்ற ஹிந்தூஸ்தானி பாடகனின் சுற்றி நடப்பது கதை.

இந்திய இசைகளில் மிக பழமையான இசை ஹிந்தூஸ்தானி. த்ருபட், கயல், டப்பா, தரனா, தும்ரி, கஜல் என்று பல வகையில் ஹிந்தூஸ்தானி இசை வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான், பாங்ளாதேஷ், நேபால், ஆப்கான் என்று பல நாடுகளிலும் ஹிந்தூஸ்தானி இசை பரவியிருக்கிறது. இப்படி பழமை வாய்ந்த இசையை கற்ற தனஞ்செயன் ஒரு காதலால் எப்படி மனம் பித்து பிடித்து, குடித்து, குரல் சீரழிந்து போவதை யுவன் சந்திரசேகர் கண் முன்னே காட்சியாக கொண்டு வந்திருக்கிறார்.

வாழ்க்கையில் நடக்கும் எதிர் பாராத நிகழ்வுகளை ஏற்றுக் கொள்ள முடியாமல், தன்னை தானே நோகும் படி செய்து, மேலும் பல காயங்கள் தேடிக் கொண்டு.... இறுதியில் பரதேசி போல் அலைந்து வாழ்க்கை என்றால் என்னவென்று உணர்கிறான் தனஞ்செயன் முகர்ஜி.

தனஞ்சனின் முதல் கச்சேரி, ஸரயுவுடன் காதல், காதல் கை கூடாததால் மது, நண்பன் குருதாஸ்வுடன் சண்டை... இறுதியில் காதலித்த ஸரயு தாசியாக பார்த்து மனம் வேதனை படுவது, பரதேசியாக திரிந்த போது ஒரு முறையாவது ஸரயுவை அனுபவிக்க ஆசைப்பட்டு வேறு ஒரு பெண் தொடுவது, திருடி அடிவாங்குவது என்று பல பரிமாங்களில் வரும் கதாநாயகன் படிப்பவர்கள் நெஞ்சில் நீங்காத காயத்தை ஏற்படுத்துகிறான்.

உண்மையான இசை கலைஞனின் வாழ்க்கை எடுத்து அவரை பற்றி ஒரு வருடம் மேல் பல தகவல்கள் சேகரித்து நாவல் வடிவில் கொடுத்திருந்திருக்கும் யுவன் அவர்கள் கடின உழைப்பு அவர் எழுத்துகளில் பிரதிப்பலிக்கிறது.

இந்த புத்தகத்தை பற்றி நான் சொன்னது கொஞ்சம் தான். சொல்லாததை படித்து அனுபவியுங்கள்.

செப்.13 அன்று நல்ல குரு (யுவன் சந்திரசேகர்) சிறுகதை பயிற்சி பெற போகிறோம் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.


பக்கங்கள் : 316,
விலை :200
உயிர்மை பதிப்பகம்

Friday, September 4, 2009

ஒரு நாள் அரசு விடுமுறை !

முதலில், ஆந்திர முதல்வர் மரணத்துக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்பெல்லாம் தலைவர்கள் இறந்துவிட்டால், டி.டி தொலைக்காட்சியிலும், வானொலியிலும் சோக இசையும், இறந்தவர் பற்றிய செய்திகளும் போடுவார்கள்.

ஆனால், இப்போது பல சேனல் வந்த பிறகு இறந்த தலைவர்களுக்கு ஒரு நாள் அரசு விடுமுறை மட்டுமே மிஞ்சுகிறது. 'அரசு விடுமுறை' என்றதும் சும்மா இருப்பாருக்குமா தனியார் தொலைக்காட்சி....! புது படம் போட்டு தங்கள் டி.ஆர்.பி ரேடிங்கையை உயர்த்திக் கொள்வார்கள். கடைசியில் , உண்மையாக துக்கம் அனுசரிக்க வேண்டிய நோக்கம் நிரைவேறாமல் போய்விடுகிறது.

வெள்ளிக்கிழமை கிடைக்கும் ஒரு நாள் அரசு விடுமுறையை 'Long Weekend' என்று பலர் கொண்டாட தான் நினைப்பார்கள்.

அரசு அலுவலகத்தில் பல வேலைகள் தேங்கி இருக்க... துக்கம் அனுசரிக்க கொடுக்கும் ஒரு நாள் விடுமுறை தொலைக்காட்சியும், கொண்டாட்டமும் என்று இருக்கும் போது விடுமுறைக்கான நோக்கம் தெரிய போவதில்லை.

அப்படி இருக்கும் போது இந்த ஒரு நாள் அரசு விடுமுறை தேவை தானா ???

ஒரு நாள் விடுமுறை என்று அரசு அறிவித்ததும், என் நண்பர் ஒருவர் " நம்ப லீவ் விட்டதால,நாளைக்கு நம்ப ஆளுங்களுக்கு யாருக்காவது இப்படி நடந்தா இதே மாதிரி லீவ்விட தான் இப்படி பண்ணுறாங்களோ ! " என்று கேட்டார்.

அவர் பேச்சில் எந்த உள்குத்தும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பின்குறிப்பு :அரசு விடுமுறை அறிவித்ததால், சனி கிழமை அலுவலகம் வைத்த ஆதங்கத்தில் இந்த பதிவை இடுகிறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails