வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label Lesbian. Show all posts
Showing posts with label Lesbian. Show all posts

Tuesday, September 28, 2010

ஓரின சேர்கையாளர்கள் மிருகங்களா ?

தன் மதர் சூப்பிரியர் ஓரின சேர்கையின் ஆசைக்கு இனங்காமல், மனநோயாளி என்று சொல்லி ஒரு கன்னியாஸ்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். அவர் பெரிய பாதரியாரிடம் சொல்லியும் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. தன் சுயசரிதையில் தனக்கு ஏற்ப்பட்ட ஓரின கொடுமைகளை விளக்கிய பிறகு பலர் மனநோயாளி புத்தகம் என்றே விமர்சனம் செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் நடந்தது.

*

சென்னை விடுதியின் மேனேஜர் ஒருவர், ஒரு இளைஞனை ஓரின உடல் உறவுக்காக தொல்லைக் கொடுத்தார். வற்புறுத்திய மேனேஜரின் தொல்லை தாங்காமல் இந்த இளைஞன் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டான்.

மேனேஜரின் ஓரின வேட்கை அந்த இளைஞனை மிருகமாக மாற்றிவிட்டது.

*



ஜனவரி 24, 1994.

திருப்பதி.

ஐந்தாவது தேசிய அளவில் மகளிர் மாநாடு நடைப்பெறவிருந்தது. பெண் இயக்கங்கள், பெண் முன்னேற்ற அமைப்புகள், பெண்கள் மறுவாழ்வு என்று பல அமைப்புகளில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர். வழக்கத்துக்கு மாறாக இந்த முறை சில புது அமைப்பினரும் வந்திருந்தனர்.

இதற்கு முன் நடந்த நான்கு மாநாட்டில் இல்லாத ஒரு அஜென்டா இந்த மாநாட்டில் சேர்த்திருந்தார்கள். அந்த அஜென்டாவை பார்த்தும் ஒரு சிலர் முனு முனுத்தனர். இன்னும் சிலர் அதை பற்றி பேச எதிர்த்தனர். முதல் முறையாக மகளிர் மாநாட்டில் 'லெஸ்பியனை' பற்றி அஜென்டாவாக சேர்த்திருந்தனர். லெஸ்பியன் பெண்கள் பொருத்தமட்டில் இது தான் முதல் மாநாடு. முதல் முறையாக லெஸ்பியன் குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்படிருந்தது.

ஒரு சில எதிர்ப்புகள் மீறி லெஸ்பியன் பற்றி கருத்துகள் அந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. எதிர்த்தவர்கள் கூறிய கருத்து " ஓரின சேர்க்கையாளர்கள் மிருகங்கள்" என்றது தான்.

ஓரின சேர்கையாளர்கள் உடல் சுகத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய கூடியவர்கள், மிருகங்கள் போல் நடந்துக் கொள்பவர்கள், கொலை கூட செய்வார்கள் என்று பல கருத்து நிலவி வருகிறது.

‘செக்ஸ்’ விஷயத்தில் ஓரின சேர்கையாளர்கள் மட்டும் தான் மிருகங்களாக நடந்து கொள்கிறார்களா என்ற கேள்விக்கு முதலில் பதிலளித்தால், மேல் சொன்ன கருத்துக்கு பதில் வந்துவிடும்.

மனைவியின் மரணத்திற்கு பிறகு பாலியல் உறவுக்காக தன் சொந்த மகளை ஒரு பாதள அறையில் அடைத்து இருபது வருடங்களாக ஒருவன் வாழ்ந்து வந்திருக்கிறான் என்ற செய்தியை சமிபத்தில் படித்திருப்பீர்கள். சொந்த மகளை புணர நினைத்தவன் மனிதன் என்பதா அல்லது மிருகம் என்பதா ?

நொய்டாவில் சின்ன சிறுமிகளை வன்புணர்ச்சிக்காக கொலை செய்தவனை இயற்கைக்கு ஒப்பான உறவில் ஈடுப்பட்டவன் என்று யாராலும் சொல்லமுடியாமா ?

இன்னும் மலையடிவாரத்தில் பழங்குடி மக்களின் பெண்கள் அதிகார வர்கத்தினரால் தொல்லைகள் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதை மனித உணர்ச்சிகள் என்று சொல்லி நம்மால் நிராகரிக்க முடியுமா ? இல்லை நியாயம் தான் படுத்த முடியுமா ?

அளவுக்கு மீறிய செக்ஸ் ஆசை ஒரு மனிதனை மிருகமாக மாற்றிவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மற்ற உறவில் ஜோடி கிடைப்பது போல் எதிர்பால் உறவுகளை விட சுயபால் உறவுக்கு ஜோடி கிடைப்பது சிக்கல் மட்டுமல்ல… இது பகிரங்கமாகத் தேடலில் ஈடுபட முடியாத ஒன்று. அதனால் மற்ற உறவு தேடலில் விட இதில் வன்முறை கூடுதலாக உள்ளது.

இயற்கையான உறவு என்று சொல்லப்படும் ஆண் - பெண் உறவாகட்டும், ஓரின சேர்கையாகட்டும்... செக்ஸ் உணர்வுக்கான உடல் கிடைக்காத போது கிடைத்த உடலில் மீது வன்முறை அதிகமாக இருப்பதை தான் தினமும் செய்திதாளில் பார்க்கிறோம்.

மேல் சொன்ன எல்லா வன்முறைகளும் 'செக்ஸ்' வன்முறையாகவே பார்க்க வேண்டிய ஒன்று. எந்த வன்முறையையும் நம்மால் எப்படி நியாயப்படுத்த முடியாதோ அதே போல் ஓரின சேர்க்கையாளர்கள் இப்படி தான் என்று முத்திரை குத்தவும் முடியாது.

“சுயபால் விழைவு இயற்கைக்கு ஒவ்வாத கொடூரச் செயல். அதனால் தான் மிருகத்தனமான நிலை” என்று சொல்லுபவர்களுக்கு இன்னும் சில உதாரணங்கள்.

விலங்கு, பறவைகளில் தாமே இரு பாலுமாக இருக்கும் வகைகள் இயற்கையிலேயே உண்டு. ஒரு ஜோடி ஆண் பறவைகள் தம்பதியாகக் கூடு கட்டி வாழும் போது முட்டைகளுக்குப் பதிலாக அதே போன்ற தோற்றமுடைய கற்களைச் சேகரித்து வந்து தங்கள் கூட்டில் வைக்கும் பழக்கத்தில் உள்ளன. இவை சில சமயம் வேறு பறவையின் அசல் முட்டையைத் திருடி வந்து தம் கூட்டில் வைத்துப் பொரித்து வளர்ப்பதும் உண்டு !

சுமார் 1500 வகை உயிரினங்களில் சுயபால் விழைவுச் செயல்பாடுகளுக்கும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காட்டெருமை, யானை, சிங்கம், மான், பூனை, சிறுத்தை, நாய், பசு, முயல், ஓட்டைச்சிவிஅங்கி, ஆடு, குரங்கு, கரடி, குதிரை, நரி, கழுகு என்று இன்னும் பல இனங்கள் இந்த பட்டியலில் உண்டு.

( நன்றி : ஞாநியின் 'அறிந்ததும் அறியாமலும்' )

‘சுயபால் விழைவு’ என்பது இயற்கையில் இல்லாத ஒன்று என்ற அணுகுமுறையில் இருந்து மிருக தனமான உணர்வு என்று நிலையில் தான் இன்று பார்க்கிறார்கள். மிருக தனமான உணர்வு என்ற நிலையில் இருந்து மாறினால் தான், மிருகங்களாக பார்க்கும் ஓரினசேர்கையாளர்கள் மனிதர்களாக நடத்த பட முடியும்.

செக்ஸ்காக கொலை செய்பவர்கள், வன்முறையில் இறங்குபவர்கள், கொடூரமாக நடந்துக் கொள்பவர்கள் போன்றவர்களை மிருகங்கள் என்று சொல்லலாம். ஆனால், ஓரினசேர்கையாளர்கள் மிருகங்கள் என்ற பொதுவான பார்ப்பது எந்த வகையிலும் நியாயம் இருப்பதாக தெரியவில்லை.

இதில், ஓரின சேர்க்கையாளர்களால் நடத்தப்படும் செக்ஸ் வன்முறைக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. எதிர்பாலில் செக்ஸ் வன்முறை இருப்பது போல் சுயபாலிலும் உள்ளது என்பதை தான் இந்த கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.

Friday, August 27, 2010

ஓரினசேர்கை மீதான வன்கொடுமைகள்

உலகில் அதிக ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மையினர் யார் என்று தெரியுமா ? யூதர்கள். கண்டிப்பாக இல்லை. இஸ்ரேலில் யூதர்கள் தான் பெரும்பான்மையினர். இஸ்லாமியர்களா ? உலகில் இருபதுக்கு மேற்ப்பட்ட நாடுகளில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஒரு வேளை தமிழர்கள். தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு பிரச்சனையில்லையே !! கருப்பு இனத்தினர். அவர்களும் இல்லை. ஆப்பிரிக்கா நாடுகளில் பெரும்பாலான பகுதியில் அவர்கள் தான் இருக்கிறார்கள். அவர்கள் தான் ஆள்கிறார்கள். பின்பு எந்த சிறுபான்மையினர் எல்லா பகுதியிலும் ஒடுக்கபடுகிறார்கள். சந்தேகமே இல்லை. எந்த நாடாக இருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும், இனமாக இருந்தாலும் எல்லா பகுதியிலும் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் ‘ஓரின சேர்கையாளர்கள்’ தான்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான பிரச்சனை ஓரினசேர்க்கையாளர்களுக்கு வந்துக் கொண்டு தான். அந்த நாட்டின் அந்த நாட்டின் பராம்பரிய குணமும், பழக்க வழக்கமும் அவர்களை பார்க்கும் விதத்தில் வேறாக இருந்தாலும் உளவியல் ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தாக்கப்பட்டு வருகிறார்கள்.



தென் ஆப்பிரிக்காவில் லெஸ்பியனில் ஈடுபடும் பெண்களை கற்பழிப்பு நடவடிக்கைகள் நடந்து வருகிறது. ஓரின சேர்க்கை என்பது ஒரு வியாதி. அந்த நோய்யை குணப்படுத்த லெஸ்பியன் பெண்களை ‘கரேக்டிவ் ரேப்’ என்ற பெயரில் கற்பழித்தால் சரியாகிவிடுமாம். ஆண் சுகம் தெரிந்து விட்டால் சுயபால் இன்பத்தை கைவிடுவார்களாம். அதனால், லெஸ்பியன் பெண்கள் குணப்படுத்த அவர்கள் விருப்பதிற்கு மாறாக கற்பழிக்க பல சமூக சேவகர்கள் கலத்தில் குத்தித்துள்ளனர்.

2000ல் இருந்தே 'கரேக்டிவ் ரேப்' என்ற பெயரில் பல லெஸ்பியன் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், 2008ல் தென் ஆப்பிரிக்கா கால்பந்து வீராங்கனை ஈடி சிமெலைன் என்ற லெஸ்பியன் பெண் 'கரேக்டிவ் ரேப்' பெயரில் ஒரு குழுவால் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் 'கரேக்டிவ் ரேப்' உலக பார்வைக்கு வந்தது. மேலும், வருடத்திற்கு 5 லட்சம் சிறுமி, யுவதிகள் கற்பழிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்கா அரசு ஒத்துக் கொண்டுள்ளது.

பிரேசிலில், 19 வயதான ஓச்வன், தன் பகுதியில் 'மிஸ் கே' போட்டியில் வெற்றிப் பெற்று திரும்பும் போது மர்மமான முறையில் தாக்கப்பட்டான். அடுத்த நாள் அவன் உடல் நிர்வணமாய் கண்டெடுக்கப்பட்டு போது இறக்கும் முன் பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்தது. 1980 முதல் 2006 வரை பிரேசிலில் 2800 மேற்பட்ட ஓரின சேர்க்கை ஆண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

2002ல் பிரான்ஸ் நாட்டில் இருக்கும் பாரிஸ் மெயரான 'Bertrand Delanoë 'கே' என்பதால் என்பவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேலில் . யிஷாயி என்ற யூதன் 'கே போராட்ட ஊர்வலத்தில் மூன்று கேகளை தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளான்.

போர்சுக்கலில், மாற்று பால் அருவை சிகிச்சை செய்துக் கொண்ட Gisberta Salce Júnior' என்பவர், சில வாலிபவர்களால் மூன்று நாள் கற்பழிக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டுளார்.

நியூசிலாந்தில், ஜெஃப் விட்டிங்டன் என்ற ‘கே’ இளைஞன் இரண்டு ஆண்களால் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்தார்.

இவ்வளவு ஏன் ? ஹிட்லரின் மரண முகாமில் ஓரின சேர்கையாளருக்கு தான் முன்னுரிமை. ஹிட்லர் கொன்ற கோடிக்கணக்கானவர்களில் 50,000 ஓரின சேர்கையாளர்களும் அடங்குவார்கள். இறந்த யுதர்களில், ஓரின சேர்கையாளர்கள் கொடுமையான வன்கொடுமைகளுக்கு பலியானார்கள் என்பது பரிதாபத்திற்குறியது.

இன்னும், ஈரான், நைஜிரியா, அரேபியா, சுடான், ஏமன் போன்ற நாடுகளில் ஓரின சேர்கையாளர்களுக்கு மரண தண்டனை வழங்குகிறது. அதுவும் ஈரானில், 1979ல் இருந்து 4000 ஓரின சேர்கையாளர்களுக்கு மரண தண்டனை வழங்கி கொன்றுள்ளார்கள்.

ஆப்கானிஸ்தானில் கூட ஓரின சேர்கையாளர்களுக்கு 2001ல் வரை மரண தண்டனை வழங்கி வந்தார்கள். தாலிபன் வீழ்ந்த பிறகு ஆப்கானிஸ்தானில் ஓரின சேர்கையாளர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதை நிறுத்தி அபராதம் மட்டும் போட சட்டம் கொண்டு வந்துள்ளனர். பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஓரின சேர்கையாளர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்படுகிறது.

இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் ஓரின சேர்கையாளர்களுக்கு சட்டப்படி அங்கிகாரம் கிடையாது. சமூகப்பார்வையில் நிராகரிப்பு என்ற பெரிய தண்டனை இவர்களுக்கு வழங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

உலகம் முழுக்க எதோ சில பகுதிகளில் அங்கிகாரம் பெற்ற இவர்கள் தின வாழ்க்கை நடத்துவதில் சிரமப்படுபவர்கள் பலர் உண்டு. இவர்களை அழிப்பதாகட்டும், எதிர்பதாகட்டும் மொழி, இனம் பாராமல் ஒற்றுமையாக செயல் படுவதில் ஓரின சேர்கையாளர் விஷயத்தில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.


கட்டுரைக்கு உதவிய இணையம்

http://en.wikipedia.org/wiki/Sexual_violence_in_South_Africa

http://en.wikipedia.org/wiki/Violence_against_LGBT_people

Thursday, August 12, 2010

ஓரின சேர்கை போராளிகள்

ஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சணங்கள் இந்தியாவில் இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பியா, ரஷ்யா போன்ற நாடுகளில் ஓரின சேர்கையாளர்கள் இருக்கிறார்கள். ஒரு சிலர் ஒதிக்கினாலும் துணிவாக அவர்கள் பேசுவதை மதிக்கிறார்கள். பாச வலையில் பின்னப்பட்ட இந்தியாவில் ஓரின சேர்கையாளர்களர்களை அவர்கள் குடும்பங்கள் நிராகரிப்பதை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பல எதிர்ப்புகள் சந்திக்க வேண்டியதாக இருக்கிறது.

இந்த எதிர்ப்புகளையும் மீறி ஒரு சிலர் வாழ்ந்து, அவர்களைப் போல் இருப்பவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒரு சிலர்.....

கிடி தடனி (Giti Thadani)

1980ல் இந்தியாவில் லெஸ்பியன் பரவலாக தெரியப்பட்ட காலத்தில் போராடிய பெண். லெஸ்பியன் திருமணத்தை பற்றியும், லெஸ்பியன் தற்கொலை தடுப்பது பற்றியும் மிக தீவிரமாக பேசியும், எழுதியும் வருகிறார். தன்னை லெஸ்பியன் என்று அறிவித்து, ' Sakhiyani: Lesbian Desire in Ancient and Modern India' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் பத்தாண்டுகளாக சமஸ்கிரத்தத்தை கற்று அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளை இதில் தொகுத்துள்ளார். ரிக் வேதத்தில் ‘ஜமி’ என்ற இரட்டை அம்மாக்கள், இரத்த சம்மந்தமில்லாத உஷா, நக்டா தாய் - மகள் உறவு போன்ற குறிப்புகள் இருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக, கஜுராஹோ சிலையில் இரண்டு யோனி கொண்ட பெண் சிலைகள் இருப்பதாக சொல்லுகிறார்.

டெல்லியில் இருக்கும் 'Sakhi' (சகி) மற்றும் Red Rose Rendezous Group (சிவப்பு ரோஜா) போன்ற ஓரின சேர்க்கை அமைப்புகள் உருவாக காரணமாக இருந்திருக்கிறார்.

நம் விநாயகர் கூட இரண்டு பெண்களால் உருவானவர் என்று தன் பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார். பார்வதி கங்கையில் நீராடும் போது தன் காவலுக்காக விநாயக பெருமானை உருவாக்கிய கதையில், பார்வதிக்கும், கங்கைக்கும் உருவானவர் என்று விளக்குகிறார். இஸ்லாம், கிறிஸ்து மதங்களில் ஓரின சேர்கையை எதிர்க்கும் நிலையில் இந்து மதத்தை தங்களுக்கு ஆதரவாக்க பார்க்கிறார்கள் என்று இவர் ஆராய்ச்சியை எதிர்ப்பவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கிடி தடனி தன் வேத குறிப்புகளை மறு பரிசீலனை செய்து எந்த லாபமும் அடைய முடியாது என்று அவரை எதிர்ப்பவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

அப்ஹா பையா (Abha Bhaiya)

பத்து வருடங்களாக ஒரு பெண்ணுடன் வாழ்ந்து, இப்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார். லெஸ்பியன் பெண்களுக்கு மட்டுமில்லாமல் பெண்ணியத்துக்காவும் போராடி வருகிறார். ‘சங்கத்’ என்ற அமைப்பின் மூலம் திருமணமாகாத பெண்கள், விவாகரத்தான பெண்கள், கன்னியாஸ்திரிகள் போன்றவர்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

மன்வேந்திர சிங் கோஹில் (Manvendra Singh Gohil)




குஜராத்தில் உள்ள ராஜ்பிப்லா சமஸ்தானத்தின் இளவரசராக கருதப்படும் மன்வேந்திர சிங் கோஹில் ஒரு கே. திருமணத்துக்கு பிறகு தனக்கு ஏற்பட்டு இருக்கும் தன் பால் ஆர்வம் மாறிவிடும் என்று நம்பி சந்திரிகா குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். அப்போது தான் ஒரு கே என்று அவருக்கு தெரியவில்லை. தாம்பத்திய வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் 1992ல் விவாகரத்து பெற்றார். மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சுற்றி இருப்பவர்கள் நினைத்தார்கள். 2002ல் அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஒரு கே என்று உறுதிப்படுத்தினார். தான் கே என்று உணர்ந்த கோஹில், தன்னை போல் பாதிக்கப்பட்டுயிருப்பவர்களுக்கு 'லக்ஷியா' என்ற அமைப்பை தொடங்கினார். ஓரின சேர்க்கை மட்டுமில்லாமல் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடம் பரப்பிவருகிறார். தான் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

பிந்துமாதவ் கிரே (Bindumadhav Khire)



மராத்திய எழுத்தாளர். திருமணமாகி விவாகரத்து பெற்றவர். ஆரம்பத்தில் தன்னுடைய ஓரின சேர்கை உணர்வை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், விடுபடவும் முடியாமல் மிகவும் அவதைப்பட்டவர். மிகுந்த மன உலைச்சலுக்கு உள்ளன, பிந்து மாதவ் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு இருக்கும் சன் ப்ரான்சிகோவில் த்ரீகோன் (Trikone) ஓரின சேர்க்கை அமைப்பின் மூலம் தன் குற்றவுணர்வில் இருந்து விடுப்பட்டார். த்ரீகோன் காலாண்டு இதலில் துணை பதிப்பாளராக இருந்து, பின்பு பதிப்பாசிரியரானார். அதன் பின், அமெரிக்காவில் நடந்த ஓரின சேர்கை போராட்டங்களில் கலந்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் தன்னம்பிகை வளர்ந்ததும் தன்னைப் போல் அவதைப்படும் இந்தியர்களுக்கு உதவ இந்தியா திரும்பினார்.

நிறைய புத்தகம் படித்தார். சுயபால் இனத்திற்காக எழுத தொடங்கினார். 2005ல் , 'பார்ட்னர்' என்ற நாவலை எழுதினார். ஓரின சேர்கைப் பற்றிய இந்த நாவல் சுய பால் தொண்டு நிறுவனங்கள் தங்கள் பிரச்சாரத்திற்கு இந்த புத்தகத்தை பயன்படுத்துகின்றனர்.

அஷோக் ரோவ் ரவி (Ashok Row Ravi)

ஓரின சேர்கையாளரான இவர் மும்பையில் பிறந்தார். சுய பால் இனத்தினருக்காக போராடுவதோடு இல்லாமல், 50000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் இந்திய பாரம்பரியத்தை பற்றியும் ஆராய்ச்சி செய்துவருகிறார். மலையாள மணோராமா, சன்டே மைல், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற முன்னனி பத்திரிகைகளுக்கு நிருபராக பணியாற்றியிருக்கிறார். 1990ல் பத்திரிகை நிருபர் வேலைக்கு முழுக்கு போட்டு, சொந்தமாக 'பாம்பே தோஸ்த்' என்ற ஓரின சேர்கையாளருக்காக இதழை தொடங்கினார். ஓரின சேர்கை மட்டுமல்லாமல் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்து வருகிறார். அம்ஸபவர் ஓரின சேர்க்கை அமைப்பை தொடங்கி அதற்கு தலைவராகவும் இருந்து வருகிறார்.

இன்னும் பல பேர் ஓரின சேர்கைக்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வெளிச்சத்திற்கு வரமால் இருக்கலாம். இன்று நூற்றி ஐம்பது நாடுகளுக்கு மேல் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஓரின சேர்கை திருமணம் சமூகத்தின் அங்கிகாரத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. உலகில் பல நாடுகளில் இவர்கள் போராட்டம் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

சரி... போராட்டம் நடத்த அப்படி என்ன இருக்கிறது ? சமூகத்தில் அங்கிகாரம் கொடுக்கவில்லை. ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அவ்வளவு தான். போராட்டம் நடத்தினால் மதிப்பும், மரியாதையும் தானாய் வந்து விடுமா ? என்று கேள்வி எழலாம். நியாயமான கேள்வி தான்.

இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான போராட்டங்கள் புரிய வைப்பதற்காகவும், விழிப்புணர்வு எற்ப்படுத்தவும் தான். ஓரின சேர்க்கையால், தற்கொலை நடக்காமல் இருக்க இவர்கள் பாடுபடுகிறார்கள். ஆனால், உலகளவில் ஓரின சேர்கையாளர்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளை தடுக்க பல போராட்டங்கள் உலகளவில் நடந்து வருகிறது. மிருகத்தை கேவலமாக தண்டிக்கப்பட்டுயிருக்கிறார்கள். ஏன் ? கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதை பற்றி அடுத்த பதிவில்.....

கட்டுரைக்கு உதவியது :

Sexualities – edited by Nivedita Menon, Kali for Women publication

http://www.sayoni.com/index.php?option=com_content&view=article&id=1947:interview-giti-thadani&catid=61:literature-queer-a-more&Itemid=54

http://www.desicritics.com/2008/05/06/003835.php

http://en.wikipedia.org/wiki/Manvendra_Singh_Gohil

http://en.wikipedia.org/wiki/Ashok_Row_Kavi

Thursday, August 5, 2010

ஓரின சேர்க்கை - உலக தொண்டு நிறுவனங்கள்

மலேரியா, பன்றிகாய்ச்சல், சிக்கன்குனியா போன்ற முக்கிய வியாதிகளுக்கு மக்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கமே பொருப்பேற்றுகிறது. டி.வி, போஸ்ட்டர், ரேடியோ என்று விளம்பரப்படுத்தி மக்களுக்கு நோய்களை பற்றி விளக்குவார்கள். அதே போல், எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்றபடுத்துவதற்கு அரசாங்கத்தோடு தனியார் தொண்டு நிறுவனங்களும் லாபம் நோக்கமில்லாமல் பிரச்சாரம் செய்கிறார்கள். இப்படி மக்களுக்கு வியாதிகள் பற்றி புரியவைப்பதாகட்டும், நல்ல திட்டங்களை கொண்டு செல்வதாகட்டும் தொண்டு நிறுவனங்களில் பங்கு கண்டிப்பாக உண்டு.

உயிரை குடிக்கும் எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வும், உடல் உறவு பற்றி பாதுகாப்பைப் பற்றி பேசும் தொண்டு நிறுவனங்கள் இருப்பது போல் ஓரின சேர்கை பற்றி மக்களுக்கு புரிய வைக்கவும், அவர்களும் மனிதர்கள் என்று விளக்கவும் சில தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த தொண்டு நிறுவனங்கள் கே, லெஸ்பியன் என்று யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வதில்லை. கௌன்சிலிங் முறையில் அவர்கள் கே, லெஸ்பியன் என்று தெரிந்த பிறகே ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படி கே, லெஸ்பியன் இல்லாதவர்கள், தங்களை தவறாக கே, லெஸ்பியன் என்று நினைத்துக் கொண்டவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப படுகிறார்கள்.



உலகளவில் ஓரின சேர்க்கைக்காக ஒரு சில தொண்டு நிறுவனங்கள் செயல்ப்பட்டு வருகின்றன.

International Lesbian and Gay Association ( ILGA)
International Lesbian Information Service ( ILIS)
International Gay and Lesbian Human Rights Commission ( IGLHRC)
International Lesbian, Gay, Bisexual, Transgender and Queer Youth and Student Organisation (IGLYO)
International Lesbian, Gay, Bisexual, Transgender & Intersex Law Association (ILGLaw)

உலகிலே அதிக கே, லெஸ்பியன் கொண்ட தொண்டு நிறுவனக்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்தில் தான் உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 118 கே, லெஸ்பியன் அமைப்புகள் உள்ளது.

International Lesbian, Gay, Bisexual, Trans and Intersex Association (ILGA)

இன்று 600க்கும் மேற்பட்ட கே, லெஸ்பியன் அமைப்பினரை அங்கத்தினராக கொண்ட அமைப்பு. கே, லெஸ்பியன் எதிராக நடத்தப்படும் வன்முறைகள், கொடுமைகள், உரிமை மறுப்பு போன்ற விஷயங்களில் இந்த அமைப்பு கவனம் செலுத்துகிறது. இன்று உலகளவில் 110 நாடுகளுக்கு மேல் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

கே, லெஸ்பியன் அமைப்புகளில் UN ECOSOC (Economic and Social Council) வின் லாபம் நோக்கமற்ற தொண்டு நிறுவனம் என்ற அங்கிகாரம் பெற்ற முதல் தொண்டு நிறுவனம் ILGA தான்.

அதன்பின் உலகத்தில் உள்ள 3000 கே, லெஸ்பியன் அமைப்பினர் இதில் அங்கத்தினராக உருவாகினார்கள். ஆனால், ஒரு சில காரணத்தால் அடுத்த வருடமே ECOSOC கொடுத்த அங்கிகாரத்தை திரும்ப பெற்றது. அதன் பிறகு, தனியாகவும், மற்ற அமைப்பினருடனும் சேர்ந்து ECOSOC அங்கிகாரத்தை பெற முயற்சித்தனர். ஆனால், அவர்கள் இழந்த அங்கிகாரம் மீண்டும் கிடைக்கவில்லை.

இருந்தும், இந்த அமைப்பு செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் இல்லை.

International Lesbian Information Service (ILIS)

ஒரு கொள்கை தான். ஆனால், கருத்தளவில் வேறுபடுவதால் பல சங்கங்கள், கட்சிகள் உருவாகுவது போல் கே, லெஸ்பியன் போராடும் தொண்டு நிறுவனங்களில் கூட வெவ்வேறாக அமைப்பாக செயல்படுகிறது.

ILGA இயங்குவதில், உறுப்பினர் சேர்வதில் ஒரு சில நிபந்தனைகள் உள்ளது. இதில் உறுப்பினராக தொண்டு நிறுவனங்கள் செக்ஸ் மற்றும் நிற பிரச்சனைகள் முன் நிறுத்தி செயல்பட வேண்டும். ஆனால், தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிற கே அமைப்பினர் (GASA - Gay Association of South Africa) செக்ஸ் பிரச்சனைகளில் காட்டிய முக்கியதுவத்தை நிறவெறி பிரச்சனைகளில் காட்டவில்லை. அதனால், அவர்கள் உறுப்பினர் ஒரு வருடத்திற்கு ரத்து செய்தது.

கே உறுப்பினர் சேர்த்துக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை லெஸ்பியன் உறுப்பினர்கள் சேர்ப்பதில் காட்டவில்லை என்ற கருத்து வேறு இருந்தது. ILGA வில் இருந்த அதிருப்தியால் 1982 ல் இத்தாலியில் உள்ள டூரின் என்ற இடத்தில் கூட்டம் நடத்தினார்கள். அதில், பல லெஸ்பியன் பெண்கள் சேர்ந்து ILIS என்ற அமைப்பை தொடங்கினர்.

ஆரம்பித்த வேகத்தில் துண்டு பிரசுரம், பிரச்சாரம் என்று மேற்கொண்ட 'ILIS' அமைப்பு, அதன் பின் பெரிதாக செயல்படாமல் போய்விட்டது.

International Gay and Lesbian Human Rights Commission (IGLHRC)

ரஷ்யயர், அமெரிக்கர் கே, லெஸ்பியன் கூட்டமைப்பால் 1990 ல் இந்த அமைப்பு உருவானது. ஆரம்பத்தில் ரஷ்யாவில் நடக்கும் மனித உரிமைக்கு மட்டும் குரல் கொடுத்து வந்த அமைப்பு பின்பு அமெரிக்கா, ஆப்ரிகா, ஆசியா என்று உலகளவில் பரவ தொடங்கியது. கே, லெஸ்பியனுக்காக வுக்காக உழைக்கும் தோழர் / தோழிகளுக்கு இந்த அமைப்பு ஆண்டு தோறும் பரிசு வழங்குகிறது. ஜூலை 19, 2010 அன்று இந்த அமைப்புக்கு ECOSOCவின் லாபம் நோக்கமற்ற தொண்டு நிறுவனம் என்ற அங்கிகாரத்தை வழங்கியுள்ளது.

International Lesbian, Gay, Bisexual, Transgender and Queer Youth and Student Organisation (IGLYO)

1984ல் ஐரோப்பிய பகுதியில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, மாணவர்கள், இளைஞர்களை உறுப்பினர்களாக கொண்டு ஐரோப்பிய பகுதியில் கே, லெஸ்பியன் பற்றி உரிமைகள், பிரச்சாரங்கள் செய்து வருகிறார்கள்.

International Lesbian, Gay, Bisexual, Transgender & Intersex Law Association (ILGLaw)

கே, லெஸ்பியன், இருபால் உறவு வைத்துக் கொள்பவர், பால் மாறியவர்கள் மட்டும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளாமல் சட்டம் படித்தவர்கள், சட்டத்துறை சம்மந்தப்படவர்களையும் இதில் உறுப்பினராக சேரலாம். ஓரின சேர்கையாளர்களுக்கு சட்ட உதவிகள் வழங்குவதில் முதன்மையாக திக ழ்கிறது.

இந்தியாவில் செயல் பட்டுவரும் கே, லெஸ்பியன் தொண்டு நிறுவனங்களை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.


கட்டுரைக்கு உதவியது :

Sexualities – edited by Nivedita Menon, Kali for Women publication
http://www.sayoni.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=8&Itemid=54
http://en.wikipedia.org/wiki/International_Lesbian_and_Gay_Association
http://en.wikipedia.org/wiki/International_Lesbian,_Gay,_Bisexual,_Transgender_and_Queer_Youth_and_Student_Organisation

http://en.wikipedia.org/wiki/International_Lesbian,_Gay,_Bisexual,_Transgender_%26_Intersex_Law_Association

Tuesday, July 27, 2010

லெஸ்பியனும் சில தற்கொலைகளும்

" ஜோஸ்னா ! இனி நாம் இனி பார்க்க முடியாது. நம் பழக்கம் என் அப்பா, அம்மாவுக்கு தெரிந்துவிட்டது."

" நம் இருவரின் காதலை பற்றி சொன்னாய்யா ?"

" சொன்னேன் ஜோஸ்னா ! அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. என் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்"

" உன்னை பற்றி, என்னை பற்றி, நம் உறவை பற்றி முழுவதும் சொன்னாய்யா ஜெயா ?" என்று கலங்கிய குரலில் கேட்டாள் ஜோஸ்னா.

" எல்லாவற்றையும் சொன்னேன். அவர்கள் மறுத்துவிட்டனர். அவர்கள் என்ன ? இந்த உலகில் யார் தான் நம் உறவை ஏற்றுக் கொள்ளமுடியும்." என்று கண்ணீர் விட்டு அழுதாள் ஜெய ஸ்ரீ.

"நாம் பிரிவது தான் முடிவா ?"

" நாம் பிரிய வேண்டும் என்பது என் பெற்றோர்களின் முடிவு. அப்படியே சேர்ந்து வாழ நினைத்தாலும், இந்த சமூதாயம் என்ன சொல்லும் ? புத்திக்கெட்ட பெண்கள் என்று தானே. அந்த விமர்சனம் நமக்கு தேவையா"

" தேவையில்லை தான். பிரியாமல் ஒன்றாக இருக்க ஒரு வழி சொல்லவா " என்றாள் ஜெய ஸ்ரீ.

பாலைவனத்தில் பழரசம் கிடைத்தது போல் ஜோஸ்னா முகம் மலர்ந்தது. ஜெய ஸ்ரீ சேர்ந்து சாக எடுத்திருக்கும் முடிவை கூறினாள். ஜெய ஸ்ரீ பிரிந்து வாழ்வதை விட அவளுடன் இறக்க ஜோஸ்னாவும் சம்மதிக்கிறாள்.

இருவரும் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். அடுத்த நாள் செய்தி தாளில் இரண்டு பெண்கள் இறந்ததை விட அவர்கள் இறந்ததற்கு காரணத்தை தான் பெரிதாக எடுத்துக் கொண்டு பேசினார்கள்.

இந்த சம்பவம் 1979 ஆண்டு டெல்லியில் நடந்தது. ( ABVA 1991 : 70)



ஆக்டோபர் 29, 1980 அன்று மல்லிகா, லலிதாம்பிகா (20 வயது) இருவரும் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்கள் விருப்பதத்துக்கு மாறாக காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். (ABVA 1991 : 70)

ஆக்டோபர், 1988 கீதா டார்ஜி என்ற பெண், தன் நர்ஸ் தோழியான கிஷோரி ஷாவிடம் இருந்தது தன் கணவன் பிரிக்கப்பட்டதால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டாள். ( இந்தியா டூடே, 1988)

ஆகஸ்ட், 1990, வந்தனா என்ற பெண் தன் தோழி சிம்மி கப்பூருக்கு (21 வயது) திருமணம் நிச்சயமாகி இருந்ததால் அவளை சுட்டுக் கொன்று, தன்னையும் சுட்டுக் கொண்டாள். (தாகூர் 1990 : 33)

இது போல் தங்கள் லெஸ்பியன் உறவுகளை வெளியே சொல்ல முடியாமல், கணவனுடன் வாழவும் முடியுமால் வாழ்ந்து கொண்டு இருக்கும் பெண்கள், சில சமயம் இது போல் விபரித முடிவை எடுக்கிறார்கள்.. எல்லா இடங்களில் இருக்கும் ஆணாதிக்கத்தனம் இருப்பது போல், ஓரின சேர்க்கையிலும் இருப்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை.

தென் குஜராத் மாநிலத்தின் இளவரசனாக கருதப்படும் மன்வேந்திர சிங் கோஹில் ஆரம்பத்தில் அவரும் இப்படி தான் இருந்ததாக சொல்லியிருக்கிறார். இப்போது, தன்னை போல் இருக்கும் கே நண்பர்களுக்கு லக்ஷியா என்ற அமைப்பை தொடங்கியிருக்கிறார். ராஜ்கோட், சூரத், வடோடாரா போன்ற இடங்களில் இந்த அமைப்பு இயங்கிவருகிறது.

நடிகர் வேள் எம்.ஆர்.ராதா தன்னுடைய சிறை அனுபவங்கள் பற்றி எழுதிய புத்தகத்தில், நாடகம் நடத்திய காலங்களையும் பகிர்ந்துள்ளார். அதில், தனது நாடகத்தில் நடித்த அழகான யுவன்களை சீமான் மார்கள் அழைத்து சென்றதை சொல்லியிருக்கிறார். ( தகவல் : ஞாநியின் 'அறிந்தும் அறியாமலும்')

‘Page 3' என்ற படத்தில் மேல்தட்டு வர்கத்தினர் அனாதை ஆசிரமத்தில் இருந்து சிறுவர்களை அழைத்து வந்து உறவு வைத்துக் கொள்வது போல் காட்டியிருப்பார்கள். பணக்கார வர்கத்தினர் தங்கள் பணபலத்தால் சாதித்ததில் ஓரின சேர்க்கையும் ஒன்று என்று படத்தில் காட்டியிருப்பார்கள். போலி சாமியார்கள் மாட்டிய பிறகு, தங்களை தேடி வரும் யுவன்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட செய்திகளை சமிபத்தில் பார்த்து வருகிறோம்.

பணம், பதவி, பொருள் என்று ஏதாவது ஒன்று பயண்படுத்தி ஓரின சேர்கை ஆண்கள் தங்கள் ஆசையை தீர்த்துக் கொள்கிறார்கள். இல்லை என்றால், மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் குடும்பத்தோடு ஒட்டவும் முடியாமல் விலகிவிடுகிறார்கள். ஆனால், பெண்களால் அப்படி இருக்க முடியவில்லை. குறிப்பிட்டு காலத்திற்கு மேல் தங்கள் திருமணத்தை தள்ளி போட முடியாது. திருமணமான பின்னும் கணவனிடம் உண்மையை சொல்ல முடியாது. பிரிந்து வந்தாலும் தவறான பார்வையில் இருந்து தப்பவும் முடியாது. இப்படி பல சிக்கல்களில் ஆண்களை பெண்கள் ஓரின சேர்க்கையில் அவதை படுகிறார்கள்.

இரண்டு ஆண்கள் நீண்ட நாட்கள் ஒன்றாக வாழுவதை ஏற்றுக் கொள்ளும் உலகம் இரண்டு பெண்கள் நீண்ட நாள் ஒன்றாக வாழ முடிவதில்லை. தங்களையும் ஏமாற்றிக் கொள்ள முடியாமல், சமூகத்தையும் ஏமாற்ற முடியாமல் போகும் போது தான் இது போன்ற தற்கொலை நிகழ்வுகள் நடக்கின்றன.

‘திருமணம் வேண்டாம்’ என்று சொல்லும் ஆண்ணையும், பெண்ணையும் விமர்சிப்பதில் எந்த வித்தியாசம் தெரிகிறதோ அதே வேறுபாடு ஓரின சேர்க்கையில் ஆண்களை விட பெண்கள் அதிகம் விமர்சிக்கப்படுகிறார்கள். பல விமர்சனங்கள் வரும் என்று தெரிந்து துணிந்து சில பெண்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்கள் பற்றி சொல்லும் போது சேர்ந்து வாழ்ந்தவர்கள் பற்றியும் சொல்லியாக வேண்டும். இல்லையா !

கிராமத்தில் ஆசிரியராக பணி புரிந்த அருணா சொம்பை ஜெய்சிங்பாய் கோகில் ( வயது 31) தன் தோழியாக சுதா அமர்சின் மோகன்சின் ரடன்வாடியா (வயது 29) ஒரு வருடம் மேல் ஒன்றாக வாழ்ந்த பிறகு 'மைதிதி கரர்' (நட்பு ஒப்பந்தம்) என்ற ஒப்பந்தம் செய்துக் கொண்டதாக அறிவித்துக் கொண்டனர். (ABVA 1991 : 67 )

ஊர்மிலா என்ற பெண் தான் திருமணம் செய்யவிருக்கும் ஆண்ணை நிராகரித்து விட்டு 28 வயது நிரம்பிய போலீஸ் கான்ஸ்டேபிள் லீலா நம்டேவும் ஒன்றாக வாழ தொடங்கினார். ஊர் மக்கள் இவர்களை கண்டித்தும் கேட்காமல் இருந்ததால், ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். (ABVA 1991 : 67 - 68, India abroad 1993)

சமூகத்தின் முன் இந்த பெண்கள் நகைச்சுவை பொருளாக தான் தெரிவார்கள். ஊடகங்களும் இவர்களை பற்றி பெரிதாக காட்டுவார்கள். ஆனால், தற்கொலை செய்து கொள்வதாகட்டும், துணிந்து தன்னை பற்றி வெளிப்படையாக சொல்வதாகட்டும் ஓரின சேர்க்கையில் பெண்களுக்கு இருக்கும் துணிச்சல் ஆண்களுக்கு இல்லை என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.

கட்டுரைக்கு உதவியது :

Sexualities – edited by Nivedita Menon, Kali for Women publication
http://www.dnaindia.com/india/report_the-prince-comes-out-of-closet_1018219
http://www3.interscience.wiley.com/journal/118947120/abstract?CRETRY=1&SRETRY=0

Tuesday, July 20, 2010

ஐயப்பன் திருமணமாகாததற்கு இது தான் காரணமா ?

நமது புராண கதையில் எடுத்துக் கொண்டால், சிவன் அப்பாவி தனமாக வேண்டிய வரத்தை அரக்கர்களுக்கு கொடுத்துவிடுவார். விஷ்ணு தன் தந்திரத்தை பயன்படுத்தி அரக்கர்களை ஒழிப்பார். தேவர்களுக்கு பிரச்சனை வரும் என்று தெரியாமல் சிவன் தன் இஷ்டத்துக்கு வரம் கொடுத்துக் கொண்டு தான் இருந்தார். அப்படி, ஒரு அரக்கனிடம் அவன் யார் தலையில் கை வைத்தாலும் அவன் தலை வெடித்து இறந்து விடுவதாக வரம் கொடுத்து விடுகிறார். கொடுத்த வரத்தை சோதித்து பார்க்க சிவன் தலையில் கை வைக்க அரக்கன் வருகிறான். விஷ்ணு விஜய் போல் எண்ட்ரி கொடுத்து பெண் வேடத்தில் அரக்கனை கொல்கிறார். விஷ்ணுவின் பெண் உருவத்தை பார்த்து சிவன் மயங்க, இருவருக்கும் 'ஐயப்பன்' என்ற ஆண் குழந்தை பிறக்கிறது. முதல் ஆண் – ஆண் உறவால் பிறந்த குழந்தை 'ஐயப்பன்' என்று புராண கதைகள் சொல்லுகிறது.



புராணத்தின் பல கதைகள் நம்பும் படியானது இல்லை. நல்லது மட்டும் எடுத்துக் கொண்டு கற்பனைகளை ஒதுக்கி வைக்க வேண்டிய கதைகள் பல உள்ளது. இதில் 'கே' உறவில் பிறந்த ஐயப்பன் என்பதை விட, இரண்டு ஆண்ணின் மகன் என்று கொஞ்சம் கௌரவமாக சொல்லுவோம். என்ன தான் அரசக் குடும்பத்தில் வளர்ந்தாலும், இரண்டு ஆண்களுக்கு பிறந்ததால் பெண்கள் மீது ஈர்ப்பு வராமல் திருமணம் செய்யாமல் இருந்தாரா என்ற சந்தேகம் வரலாம்.

விஞ்ஞான ரீதியாக இரண்டு ஆண்ணுக்கும், இரண்டு பெண்ணுக்கும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. ஆனால், லெஸ்பியன், கே தத்தெடுக்கும் குழந்தைகளுக்கு இவர்கள் பாதிப்பு இருக்குமா என்ற சந்தேகம் நிலவிவருகிறது. பலர் கே, லெஸ்பியன் போன்றவர்களை மன நோயாளியாக பார்ப்பதால் சட்டப்படி இவர்கள் குழந்தை தத்தெடுப்பதில் சிக்கல் உள்ளது.

இந்தியாவில், ஒரு குழந்தையை தத்தெடுக்க வேண்டியது இருந்தால் திருமணமான ஆண்,பெண் சேர்ந்து தத்தெடுக்கலாம் அல்லது திருமணமாகாத / தனிமையில் வாழும் பெண்கள் தத்தெடுக்கலாம். அதனால், கே, லெஸ்பியன் ஜோடிகள் சட்டப்படி குழந்தைகளை தத்தெடுக்க முடியாது. இவர்கள் தத்தெடுக்க மூன்று விதமான பிரச்சனைகளை நேரில் சந்திக்கிறார்கள்.

1. கே, லெஸ்பியன் பராமரிப்பில் வளர்ந்தால் அந்த குழந்தைக்கு தன் பால் உணர்வு குறித்து சந்தேகம் வரலாம். தன்னையும் அவர்கள் வளர்ப்பு பெற்றோர்களை போலவே எண்ணிக் கொள்ளும் அபாயம் உள்ளது.
2. குழந்தை கே, லெஸ்பியனுடன் வளர்ந்தால் சுற்றி இருக்கும் சமூகம் இவர்களை மனநோயாளிகளாக பார்ப்பது போல் அந்த குழந்தையை பார்க்கும். அதன் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும்.
3. கே, லெஸ்பியன் குழந்தைகள் பள்ளியிலோ அல்லது விளையாட்டிலோ அவர்களது நட்பு வட்டத்தில் கேலியாக பேசலாம். உதாசினம் செய்யலாம். இதனால், அந்த குழந்தைக்கு தன் மீது தாழ்வு மனப்பான்மை வர வாய்ப்புள்ளது.

கே, லெஸ்பியன் போன்றவர்கள் குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு தனிமையாக்கப்பட்ட போதும், அவர்களுக்கு என்று குடும்பம் அமைத்து கொள்ள இது போன்ற நடைமுறை சிக்கல் உள்ளது.

இந்தியாவில் கே, லெஸ்பியன் பற்றின வெளிப்படையாக பேசாமல் இருப்பதால் அவர்களை பற்றி ஆராய்ச்சியோ, சர்வேவோ பெரிய அளவில் எடுக்கப்படவில்லை. ஆனால், அமெரிக்காவில் வெளிப்படையாக பேசப்படுவதால் அவர்கள் தத்தெடுத்து குழந்தைகளை பற்றின சர்வே ஒன்று வெளியீட்டு இருக்கிறார்கள்.

அதில், கே உறவில் ஈடுபடுபவர்கள் பெண் குழந்தையை தத்தெடுப்பதிலும், லெஸ்பியன் உறவில் ஈடுபடுபவர்கள் ஆண் குழந்தையை தத்தெடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தங்கள் பால் இனத்தில் இருக்கும் குழந்தையை தத்தெடுத்தால் அம்மா, மகள் உறவை / தந்தை, மகன் உறவை கொச்சை படுத்துவார்கள் என்ற அச்சமே காரணமாம்.

இவர்கள் தத்தெடுக்கும் குழந்தைகள் யுவன்/யுவதியாக வளர்ந்த பிறகு செக்ஸ்யில் சாமான்ய யுவன்/யுவதி காட்டிலும் ஆர்வம் குறைவாக இருப்பார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனர். தங்கள் தத்து குழந்தைகளிடம் செக்ஸ் பற்றி கே, லெஸ்பியன் பெற்றோர்கள் பேச தயங்குவதே காரணம் என்று கூறுகின்றனர். அதே சமயம், மற்ற யுவன் / யுவதிகளை விட சமூக காரியங்கள், உதவிகள் செய்வதில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும் என்ற கருத்தையும் தெரிவிக்கிறார்கள்.

கே தம்பதியர்கள் குழந்தை வளர்ப்பதில் தெளிவு இல்லாதவர்கள். லெஸ்பியன் தம்பதியர்கள் குழந்தை வளர்ப்பதில் திறமையானவர்கள் என்ற இன்னொரு கருத்தும் உண்டு.

இப்படி, பல கருத்துகள் வெளியிட்டாலும் கே, லெஸ்பியன் ஜோடிகள் குழந்தைகள் தத்தெடுக்கும் உரிமையை சட்ட ரீதியான உரிமை வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை.

'செக்ஸ்' என்பது தனிப்பட்ட உரிமை. எந்த பெற்றோர்கள் வளர்த்த யுவன் / யுவதியாக இருந்தாலும் சரி, பெற்றோர்களின் வளர்ப்பு முறைக்கும், செக்ஸ்க்கும் சம்பந்தமில்லை. சுற்றமும், நண்பர்கள் சேர்கை தான் 'செக்ஸ்' பற்றிய விழிப்புணர்வும், மோகமும், புரிதலும் ஏற்ப்படுத்துகிறது என்பதை தான் நடைமுறையில் சந்திக்கிறோம். ‘செக்ஸ் பிடிக்கவில்லை’ என்றால் மருத்துவ ரீதியாக அனுக வேண்டிய ஒன்று தான். ஆனால், யார் மீது ‘செக்ஸ் ஈர்ப்பு’ வருகிறது என்பது மனது சம்பந்தப்பட்டது. இதற்கும், வளர்ப்பு முறைக்கும் சம்மந்தமே இல்லை என்பது தான் அமெரிக்க சர்வே வெளியீட்டுள்ளது.

விநாயகர் கூட தான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அவரை சந்தேகப்படாமல் இருப்பவர்கள் ஐயப்பன் திருமணம் ஆகாமல் இருப்பதையும் சந்தேகப்பட கூடாது. அதே போல், அனிதாவுக்கும், கார்த்திக்கும் பிறக்கும் குழந்தையும், ஜானகி, மாலதி இருவரும் தத்தெடுக்கும் குழந்தையும், கௌஷிக், கருணாகரன் தத்தெடுக்கும் குழந்தையும் ஒன்று தான்.

**

ஐயப்பன், விநாயகர் என்று குறிப்பிட்டது புரிதலுக்காக மட்டுமே.... இந்து துரோகம் செய்துவிட்டேன் என்று பின்னூட்டம் போட்டு கட்டுரையை திசை திருப்ப வேண்டாம் என்று பணிவுடம் கேட்டு கொள்கிறேன்.

Wednesday, July 7, 2010

ஓரின சேர்க்கை - எதிரான வாதங்கள்

ஒரு முறை அமெரிகாவில் இருக்கும் என் நண்பனிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது, " அமெரிக்காவில் ஆண் - பெண் சேர்ந்து சுதந்திரமாக சுற்றும் அளவிற்கு ஆண் - ஆண், பெண் - பெண் சுற்றுவதில் இல்லை" என்றான். எனக்கு தூக்கி வாரி போட்டது. இந்தியாவை தவிர எந்த நாட்டையும் பார்க்காத எனக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும். அதற்கு அவன் சொன்ன காரணம், " ஒரு ஆண் - ஆண் நெருக்கமாக பழகினால், அவர்கள் 'கே' என்று சந்தேகப்படுவார்கள்". இரண்டு பெண்கள் ஒரு வீட்டில் தங்கியிருந்தால் அவர்களுக்குள் 'உறவு' இருப்பதாக நினைப்பார்களாம். கே, லெஸ்பியன் ஜோடிகள் அமெரிக்காவில் பரவலாக வாழ்ந்துக் கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் ஓரின சேர்க்கை வளர தொடங்கினால் உண்மையாக நண்பர்களாக பலகும் ஆண் - ஆண், பெண் - பெண் உறவுகள் கூட பெற்றோர், சுற்றத்தின் கண்களுக்கு சந்தேக பார்வையில் தெரிவார்கள்.

குடும்ப நிகழ்ச்சியில் ஒரு பெண் கலந்து கொண்டால், ' உங்க புருஷன் வரலையா ' என்று கேட்பார்கள். கணவன் வந்தால், ' பொண்டாட்டி வரலையா ' என்று விசாரிப்பார்கள். ஓரின சேர்க்கை வளர தொடங்கினால், ' புருஷன் வரலையா ' என்பதற்கு பதிலாக ' இவங்க புருஷன் ஆணா ? பெண்ணா ?' என்ற கேள்வி வரும். இரண்டு பேரில் 'யார் ஆண் மாதிரி இருப்பீங்க ?' போன்ற கேள்விகள் எதிர்காலத்தில் எழும் அபாயம் உள்ளது.



ஓரின சேர்க்கை திருமணத்திற்கு சட்ட அங்கிகாரமே கிடைத்தாலும், சமூக அங்கிகாரம் கிடைப்பது மிகவும் கடினம். மற்ற திருமணம் போல் ஓரின சேர்க்கை திருமணத்தை பார்க்க மாட்டார்கள். அவர்கள் தத்தெடுக்கும் குழந்தையின் எதிர்காலம் அதே நிலைமை தான். பெற்றோர்கள் பெயர் தெரியாமல் இருப்பதை விட ஒரு பால் இனத்தினரை விண்ணப்ப படிவத்தில் அம்மா, அப்பா நிரப்புவதற்கு சங்கடமாக இருக்கும். அந்த குழந்தையும் தன்னை தத்தெடுத்த பெற்றோர்களை புரிந்துக் கொள்வதில் சிரமம் இருக்கும். வெளியே சொல்லுவதற்கு தயங்கலாம்.

ஆண் - ஆண், பெண் - பெண் உடலுறவு வைத்துக் கொள்ளுவதில் மருத்துவ ரீதியாக உடல் தொல்லைகள் ஏற்ப்படும். ஒரு சில மருத்துவர்கள் இதை மறுத்தாலும், பலர் உடல் தொல்லை வரும் என்று நம்புகிறார்கள். ஓரின சேர்ர்கையாளர்களை மனநோயாளிகளாக பார்க்கும் பார்வையும் இன்னொரு காரணம்.

ஓரின சேர்க்கையாளர்கள் திருமணமே செய்துக் கொண்டாலும் சட்டப்படி அவர்கள் உறவுக்கு அங்கிகாரம் இல்லை. எதிர்காலத்தில் ஒருவருக்கு ஏதாவது நடந்தாலோ மற்றவர் அவரின் சொத்துக்களையோ, பணத்தையோ உரிமை கேட்க முடியாது.

ஓரின சேர்க்கை ஆதரிக்க தொடங்கினால், தங்கள் வம்சம் அந்த தலைமுறையோடு நினறுவிடும் என்ற பெற்றோர்களின் பயப்படுகிறார்கள். அதனால், தங்கள் மகள்/ மகன் பற்றி உண்மை தெரிந்ததும் அவர்களை அடித்தோ அல்லது மிரட்டியோ திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்கள். இரண்டு, மூன்று குழந்தைகள் பெற்ற பெற்றோர்களின் நிலைமை இன்னும் மோசம். ஒருவர் ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர் என்று தெரிந்தால் மற்றவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.

பல வருடங்களாக வாழும் கணவன், மனைவிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு பிரியும் போது எந்த அங்கிகாரம் இல்லாமல் ஒன்றாக வாழும் ஆண் - ஆண், பெண் - பெண் மட்டும் எவ்வளவு நாள் ஒத்த கருத்தோடு வாழ முடியும். ஒரு சிலர் ஆரம்பத்தில் இருக்கும் தைரியம் வாழும் போது இருப்பதில்லை. இருவரில் யாரோ ஒருவர் மனம் மாறி எதிர்பால்வினரை திருமணம் செய்து கொண்டு இயல்பாக வாழ நினைத்தால், மற்றவர் வாழ்க்கை பாதிக்கப்படும். ஓரின சேர்கையாளர்கள் நீண்ட நாள் ஒன்றாக வாழ்வதில்லை என்ற கருத்து நிலவி வருகிறது.

இந்தியாவில், 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற பண்பாட்டில் வாழ்பவர்கள். நடைமுறையில், பல பெண்களுடன் ஒரு ஆண் உறவு வைத்துக் கொண்டாலும், ஒரு பெண் கணவனுக்கு தெரியாமல் கள்ளகாதல் இருந்தாலும் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற வாசகம் நம் எல்லோர் மனதில் பதிந்து ஒன்று. 'ஒருவனுக்கு ஒருவன்', 'ஒருத்திக்கு ஒருத்தி' என்ற வாசகம் மாற்றி பேச யாருக்கும் மனவராது.

ஆதரவான வாதங்களையும், எதிரான வாதங்களையும் இரண்டு பக்கம் ஆராய்ந்தால் ஒரு விஷயம் மிக தெளிவாக தெரிகிறது.

ஓரின சேர்க்கை எதிர்ப்பவர்கள் ' உடல்' சம்பந்தப்பட்ட உறவாக பார்க்கிறார்கள்.
ஓரின சேர்க்கை ஆதரிப்பவர்கள் 'உணர்வு' ரீதியாக பார்க்கிறார்கள்.


இரண்டு பக்கத்தில் நீங்கள் எந்த பக்கம் என்று முடிவு செய்வதை விட, முதலில் நாம் புரிந்து கொள்வோம்.

Tuesday, July 6, 2010

ஓரின சேர்க்கை - சாதகமான வாதங்கள்

ஜூ 27,2010.

சென்னை கடற்கரையில் ஓரின சேர்கையாளர்கள், திருநங்கைகள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தினர். பலர் தன் உரிமைக்காக கோஷங்கள் எழுப்பினர். வானவில் கொடிகளை கையிலேந்தி நடந்தனர். அந்த பேரணியில் வயதானவர்களை பார்த்ததும் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி. பரப்பரப்பான தகவல்களை சேகரிக்க அவர்களிடம் நெருங்கிய போது தான் தெரிந்தது அவர்கள் ஓரின சேர்க்கையாளரின் பெற்றோர்கள் என்று !

அந்த போராடத்தில் பங்கு பெற்ற ஒரு அம்மா, " என் பையன் 'கே'னு போன மாசம் தான் தெரியும். எனக்கும், என் கணவனுக்கும் ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. கொஞ்ச நாள்ல எங்கள நாங்களே சமாதானம் பண்ணிகிட்டோம். அவன் 'கே' நால என் மகன் இல்லனு சொல்ல முடியுமா !" என்றார். மேலும், " என் மகன் சமூக விரோதியில்ல. சமூக பார்வையில வித்தியாசமான பாலுணர்வு உள்ளவன். அவன் உணர்வ நாங்க புரிஞ்சிகிட்ட மாதிரி அவன் மாதிரி இருக்குறவங்களோட பெற்றோரும் புரிஞ்சிக்கனும். என் பையன போல இருக்குறவங்களுக்கு ஆதரவுக்காக எங்க பங்க்கு போராடுறோம்" என்று பெருமையாக கூறினார்.
ஒரு லெஸ்பியன் பெண், " நான் பாலுணர்வால் வித்தியாசமானவள். ஒருவனுடைய திருமதியானவள் என்பதை விட நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு பெண்கள் மீது வரும் ஈர்ப்பு கூட ஆண்கள் மீது வரவில்லை" என்றாள். " பதினெட்டு வயதானவர்கள் தங்கள் துணையை அவர்களே தேர்ந்தெடுக்கலாம் என்று சட்டமே சொல்லும் போது, அவர் ஆணாக இருந்தால் என்ன ? பெண்ணாக இருந்தால் என்ன ?. எதிர்பாலினரை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று எப்படி இந்த சமூதாயம் கட்டுப்படுத்தலாம் ?" என்று குரல் உயர்த்தியே பேசி இருக்கிறார்.

ஓரின சேர்க்கையை ஆதரிக்க தொடங்கிவிட்டால் பல குடும்பங்களின் அடுத்த தலைமுறை இல்லாமல் போகும் என்று கேட்டதற்கு, ஒரு லெஸ்பியன் பெண் " உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நாங்கள் இந்தியாவை முதல் இடத்தை அடைய உதவுவதற்கு விருப்பமில்லை. மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஓரின சேர்கை உதவி தான் செய்கிறது." இந்த பெண் ஒரு ஆஸ்ரமத்தில் இருந்து குழந்தையை தத்தெடுத்து வளர்கிறார். தன் வாரிசாக அந்த குழந்தையின் மீது பாசம் காட்டுகிறார். 'அனாதை' என்ற வார்த்தை ஓரினசேர்க்கையாளர், திருநங்கையர் போன்றவர்களால் குறைக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அவர் பேச்சில் இருந்தது.

**


காதலை கொண்டாடும் படங்களில் இந்த வசனம் இல்லாமல் இருப்பதில்லை.

" லவ் அது ஒரு பிலிங்"
" உலகத்துல காதலிக்காதவங்க யாருமில்ல "
" காதல மறந்திட்டு யாரும் நிம்மதியா வாழ முடியாது"
“ஒருவர் மீது அன்பு, அறவனிப்பு, காதல், பாசம் காட்ட மனசு இருந்தால் போதும். பண காசு தேவையில்லை”

ஆக, காதலிக்க இரண்டு மனது, இரண்டு உயிர் தேவைப்படுகிறது. காதலிக்கும் இரண்டு மனது ஆணும், பெணும் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அந்த இரண்டு மனதும் ஆண்களுடையதாகவோ, பெண்களுடையதாகவோ இருப்பதால் தான் பிரச்சனையே !

இன்று ‘Living together’ கலாச்சாரம் அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் வளர்ந்து கொண்டு தான் வருகிறது. திருமணமாகல் ஒரே வீட்டில் ஆண், பெண் தங்குகிறார்கள். எந்த நிபந்தனையில்லாமல் ஒன்றாக வாழ்வதால் இவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. நாளைக்கே பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டால், பிரிவதற்கு குழந்தை ஒரு தடையாக இருக்க கூடாது என்பதில் ‘Living together’ ஜோடிகள் நினைக்கிறார்கள். ‘Living together’ பற்றி விமர்சிக்காதவர்கள், ஏன் ஓரின சேர்கை திருமணத்தை எதிர்க்க வேண்டும் ? என்று நினைக்க தான் தோன்றுகிறது.

நிலா ரசிகனின் 'யாரோ ஒருத்தியின் டைரி குறிப்பு' புத்தகத்தில் 'லெஸ்பியன்' பற்றி எழுதிய சிறுகதைக்கு ஒரு வாசகி மின்னஞ்சல் எழுதியதை தனது தளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வாசகி, சிறு வயதில் ஒரு ஆண்ணால் பாலியல் தொல்லை அனுபவித்திருக்கிறாள். வளர்ந்த பிறகு அவளுக்கு ஆண்கள் மீதே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தன் தோழியுடன் தான் வாழ்ந்துவருதையும் குறிப்பிடிருந்தார். இந்த வாசகி போல் பல சிறுதிமகள் பாலியல் தொல்லைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆண்களை வெறுக்க காரணமானவனை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லாத போது அந்த பெண்ணின் உணர்வுக்களுக்கு பூட்டு போடுவது எந்த வகையில் நியாயம்.

பலர் ஓரின சேர்க்கையாளர்களை மனநோயாளிகள் என்று கூறுகிறார்கள். இதுவரை ஓரின சேர்க்கை பற்றி படித்த புத்தகங்கள், நண்பர்கள் மூலம் சேகரித்த தகவலில் நான் புரிந்து கொண்டது அவர்கள் மன நோயாளிகள் அல்ல. மனநோயாளிகளாக ஆக்கப்பட்டவர்கள். பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று ஒன்று சேர வெருக்கும் போது அவர்கள் மனம் பாதிக்கப்படுகிறது. ஒரு சில பெற்றோர்கள் அடித்து, மிரட்டி திருமணம் செய்து வைக்கிறார்கள். சுற்றத்தின் உதாசின பார்வையும், மிரட்டலும் தங்கள் உணர்வை மறைக்க முடியாமல் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சிலர் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் உணர்வுகளை கொன்று வாழ்கிறார்கள். தன்னம்பிக்கை, தைரியம் உள்ளவர்கள் தங்கள் பாலுணர்வை வெளிப்படுத்தி துணிச்சலாக வாழ்க்கிறார்கள்.

ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் யாரும் பணமோ பொருளோ எதிர்பார்க்கவில்லை. 'இவர்களும் மனிதர்கள் தான்' என்ற அங்கிகாரத்தை தான் எதிர்பார்க்கிறார்கள்.

திருமணமான ஆண் - பெண் இருவரையும் குடும்பமாக பார்க்கும் சமூகம், ஆண் - ஆண் , பெண் - பெண் என்று ஒன்றாக வாழ்பவர்கள் குடும்பமாக பார்க்க வேண்டும் என்பது தான் இவர்களின் போராட்டம்.

****

அடுத்த பதிவில் ஓரின சேர்க்கை பற்றி எதிரான வாதங்ககளை பார்ப்போம்.

Thursday, June 24, 2010

கிரேக்கர்கள் ஓரின சேர்க்கையை ஏன் கொண்டாடினார்கள் ??

'300' என்ற ஆங்கிலப்படம். மற்ற நாடுகளுக்கு சென்று யுத்தம் நடத்துவதற்காக படைகளை தயாரிக்கிறார்கள். மரணத்திற்கு அஞ்சாத வீரர்களை உருவாக்க நினைக்கிறார்கள். அதனால், ஐந்து வயது சிறுவனாக இருக்கும் போது ஒவ்வொருவனுக்கும் போர் பயிற்சி அளிக்க முடிவு எடுக்கிறார்கள். குழந்தைகளை பெற்று கொள்வதற்காகவே பெண்களிடம் புணர்கிறார்கள். பிறக்கும் ஆண் குழந்தையை ஐந்து வயதில் அன்னையிடம் இருந்து பிரித்து கடுமையான பயிற்சிக் கொடுத்து பெரும் படையை உருவாக்கி யுத்தம் செய்வது தான் கதை.

பண்டைய காலத்தில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் போர் பிரியர்களாக இருந்தார்கள். போர் களத்தில் நாட்கள் கடத்துவதில் பெருமையாக நினைத்தார்கள். தங்கள் பலத்தை ஒரு ஆணிடம் காட்டுவதில் வீரம் என்று போற்றியவர்கள். கிளியோபட்ராவால் வந்த யுத்தமாகட்டும், 'இலியட்' இதிகாசத்தில் ஹெலனை வைத்து நடந்த மகா யுத்தமாகட்டும். பெண் யுத்தத்திற்கு காரண பொருளாக இருக்கிறாளே தவிர யுத்தத்தில் கலந்து கொள்ள அனுமதித்ததில்லை. யுத்தம் நடத்த காரணத்தை தேடுபவர்களகாக தான் கிரேக்கர்களின் போர் ஆசை இருந்தது.



பெண்களிடம் கூடுவதும் இனப்பெருக்கத்திற்காக மட்டும் தான். தங்களுக்கு ஒரு வாரிசு உருவாக்கி கொள்வதிலும், அடுத்த தலைமுறைக்கு படைகளை உருவாக்கி கொடுப்பது தான் பெண்ணின் முக்கிய வேலையாகவே வைத்திருந்தார்கள். அதனால், பெண்களுக்கு எந்த வித அதிகார பங்கும், பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. ஆண்டு கணக்கில் போர் விரும்பியர்களான கிரேக்க கணவர்களை அவர்கள் மனைவியர் பிரிந்து இருக்க வேண்டியதாக இருந்தது.

போர்களத்திற்கு சென்ற வீரர்கள் தங்கள் இச்சைக்கு ஆண்ணை புணர்ந்துக் கொள்ள இன்னொரு ஆண் நாடுவதுண்டு. அதே போல், ஆண் துணை இல்லாமல் பிரிந்து இருக்கும் பெண் இன்னொரு பெண்ணை தீண்டுவதும் கிரேக்கர்களின் வழக்கத்தில் ஒன்று. விதவை திருமணமோ, திருமணத்துக்கு முன் உடலுறவோ அவர்கள் கலாச்சாரத்திற்கு எதிரானது அல்ல.

போர் காலத்திலும் சரி, போர் ஒத்திகை சமயங்களிலும் சரி புணர்ந்து கொள்வதற்கு ஆண் ஆணை நாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இன்றும், இராணுவத்தில் ஓரின சேர்க்கையில் தங்கள் உணர்ச்சிகளை திர்த்துக் கொள்கிறார்கள். இதில், அமெரிக்க இராணுவமோ, இந்திய இராணுவமோ விதிவிளக்கல்ல.

மண்ணை வெற்றி பெரும் பொது பெண்ணையும் பாலியல் தொல்லை செய்வது முகலாயர் படையெடுப்பு தொடங்கி, இன்றைய ஈழத்தை ஆக்கிரமித்த இலங்கை வரை பொதுவான ஒன்று. ஆனால், உலக வரைப்படம் வரையாத காலத்தில் மாவீரர் அலெக்ஸாண்டர் தன் வெற்றி கொண்ட நாடுகளில் பெண்களை பாலியல் தொல்லை செய்ய அனுமதித்ததில்லை. தன் படை வீரர்களுக்கும் பெண்களை தொல்லை செய்யக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தான். பெண்கள் பாலியல் கொடுமை செய்த வீரர்களுக்கு தண்டனையும் கொடுத்திருக்கிறான்.

பல தேசங்கள் வெற்றி பெற்ற மாவீரன் வெற்றிக் கொண்டாடிய தேசங்களில் பண்களை புணர்ந்துக் கொள்ளாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் அவன் ஓரின சேர்க்கையாளன் என்பதால் தான். மாவீரன் அலெக்ஸாண்டர் பற்றி எழுதிய வரலாறு எழுத்தாளர்களும் அவரை அப்படிதான் குறிப்பிடிருக்கிறார்கள்.

ஆணும், பெண்ணும் கூடுவது தான் இயற்கை என்று சொல்கிறோம். ஆனால், அந்த இயற்கையான உணர்வால் எத்தனையோ பெண்கள் பாலியல் தொல்லை ஆளாகிறார்கள். ஆனால், ஓரின சேர்க்கை கொண்டாடிய கிரேக்க கலாச்சாரத்தில் ஆண் ஆணையும், பெண்ணையும் கற்பழித்ததாக எந்த புகாரும் வந்ததில்லையாம்.

இந்தியாவில் 53 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாளாம். காவல்துறையில் பதிவான வழக்கில் இருந்து வந்த புள்ளி விபரம் இது. பதிவாகாத வழக்குகளை வைத்து பார்த்தால், 40 நிமிடத்துக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படலாம். பசிக்கு உணவு கிடைக்காத நேரத்தில் திருட தோணும். அது போல், செக்ஸ் தேவையான சமயத்தில் செக்ஸ் கிடைக்காத போது தான் கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன என்று தற்கரிதியான வாதம் செய்யமுடியாது.

இப்படி செக்ஸ் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான பல வன்கொடுமைகள் நடப்பதை கட்டுப்படுத்தாதவர்கள், எங்களுக்கு பிடித்தவர்களிடம் செக்ஸ் வைத்துக் கொள்வதை ஏன் எதிர்கிறார்கள் என்று லெஸ்பியன் பெண் தன் உருமைக்காக கேள்வி எழுப்புகிறாள்.

பெண்களின் பாதுகாப்புகாக போதிய சட்டம் இல்லை என்பதற்காக 'ஓரின சேர்க்கை' சரி என்று சொல்லிவிட முடியாது. பெண்கள் லெஸ்பியன் விரும்பி சென்றால், ஆண்கள் அவர்களை மேலும் தொல்லை செய்யலாம்.ஆண்களும் 'ஓரின சேர்க்கையில்' ஈடுபட வேண்டியது இருக்கும்.

இப்படி ஒரு கேள்விக்கு பதிலளிக்க இன்னொரு கேள்வி தான் எழுகிறது. இதற்கு முடிவு காண முடியாமல் பட்டிமன்ற விவாதம் போல் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.கிரேக்க கலாச்சாரம் அழிந்து விட்ட நிலையில் அதை மேற்கொள் காட்டுவது 'ஓரின சேர்க்கையாளர்' வாதத்திற்கு ஆதரவாக அமையவில்லை.

ஓரின சேர்க்கையாளர் தங்கள் ஆதராவாக சொல்லப்படும் வாதங்கள் அடுத்த பதிவில்....

****

இந்த பதிவு எழுத அண்ணன் கோவிகண்ணன் 7 பதிவுகள் உதவியாக இருந்தது. கோவி கண்ணன் அவர்களுக்கு நன்றி !!

Thursday, June 10, 2010

ஓரின சேர்க்கை புரட்சி : ஸ்டோன் வால் சம்பவம்

நியூ யாக் நகரத்தின் அருகில் உள்ள கிரீன்விச் விலேஜ் இடத்தில் கிருஸ்டபர் தெருவில் உள்ளது ஸ்டோன்வால் ஹோட்டல்.

விடுமுறை நாட்களில் மூன்று டாலர் அனுமதி கட்டனமாக வசூலிக்கப்படும். இரண்டு டிக்கெட் கொடுப்பார்கள் மற்றும் இரண்டு கிலாஸ் டிரின்க்ஸ். வேண்டியதை குடிக்கலாம். இத்தனைக்கும் அந்த ஹோட்டலுக்கு மது விற்க லைசன்ஸ் வழங்ப்படவில்லை. முறையான எமர்ஜென்ஸி எக்ஸிட் வழியும் கிடையாது. எந்த வழியில் வந்தோமோ அந்த வழியில் தான் செல்ல வேண்டும். இருந்தும், அந்த ஹோட்டலில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டு இருக்கும். பாட்டும், கும்மாளமும் கேட்டுக் கொண்டே இருக்கும்.

காரணம், அந்த ஹோட்டல் ஓரின சேர்க்கையர்களுக்காகவே ஒதுக்கப்பட்ட ஹோட்டல். அங்கு வருபவர்கள் எல்லோரும் கே, லெஸ்பியன் உறவில் ஈடுபடுபவர்கள். ஆனால், அங்கு உறவில் ஈடுபட அனுமதியில்லை. குடிக்கலாம். பாடலாம். ஆடலாம். மற்ற படி போதை மருந்து, விபச்சாரம், பணம் கைமாற்றுவது போன்ற எந்த வித சட்ட விரோதமாக செய்ய அனுமதியில்லை. இருந்தும், போலீஸ் மாதம் ஒரு முறையாவது ரைட் வருவார்கள்.

போலீஸ் வந்ததும் கலர் விளக்கு அனைத்து வெள்ளை விளக்கு போடப்படும். ஆடியவர்கள், அடையடித்தவர்கள் எல்லோரும் அமைதியாகி விடுவார்கள். போலீஸ் விற்க அனுமதியில்லாத மதுபானங்களை பரிமுதல் செய்வார்கள். யாராவது அரை நிர்வாணமாக, ஆபாசமாக உடையணிந்தால் அவர்களையும் கைது செய்வார்கள்.

ஸ்டோன் வால் ஹோட்டலில் 'ட்ரேக்' (Drag) நடனம் மிகவும் பிரபலம். ஆண் ராணி போல் வேடமிட்டு ஆடுவதும், பெண் ராஜா போல் வேடமிட்டு ஆடுவதும் பலர் ரசித்து பார்ப்பார்கள். இப்படி நடனமாடுபவர்கள் கூட முறையான உடையணிய வேண்டும். இல்லையென்றால் ரைட் வந்த போலீஸ் இவர்களையும் கைது செய்யும்.
சில சமயம் ஹோட்டலில் வேலை செய்பவர்களை கூட கைது செய்திருக்கிறது.

இப்படி எல்லாம் பார்த்து பழகிபோனவர்களுக்கு அன்று இரவு நடந்த சம்பவம் ஒரு பெரும் புரட்சி ஏற்ப்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.



ஜூன் 28, 1969

காலை 1:20 மணி இருக்கும். இரண்டு காவல் அதிகாரிகள் காஸ்ட்ரோ தெருவில் நுழைந்தனர். அங்கு கையில் மது கோப்பையுடன் பலர் ஜோடி ஜோடியாக நடந்த வண்ணம் இருந்ததை கவனித்தனர். பொது இடம் என்று பார்க்காமல் சில ஜோடிகள் அங்கையே உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தனர். ரௌவுன்ட்ஸ் வந்த அதிகாரிகளுக்கு இதை பார்க்க அருவருப்பாக இருந்தது. ஆனால், எந்த ஜோடியும் இதை பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் அவர்களாகவே இருப்பது இது போன்ற இடத்தில் தான். அரசாங்க பார்வையில் இவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். ஆம் ! அன்றைய தேதியில் ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்களை அப்படி தான் அமெரிக்கா கருதிவந்தது.

இந்த தெருவில் போலீஸ் வருவதும், ரைட் நடத்தி வெளியே துரத்துவதும் அவர்களுக்கு பழகிப் போன ஒன்று. பொழுது போகவில்லை என்றால் போலீஸ் அடிப்பதும், காவலில் இரண்டு மூன்று நாள் வைப்பதும் ஓரினசேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், புதிதாக வந்தவர்களுக்கு இந்த விபரம் தெரியாது. போலீஸ் ரைட்டுக்கு ஹோட்டல் உள்ளே நுழைந்ததும் வழக்கம் போல் வெள்ளை விளக்கு எரிந்தது. பாட்டு, ஆட்டம், அரட்டை நின்று நிசப்த்தம் நிழவியது. புதியவர்களுக்கு பயம். தங்களை கைது செய்து விடுவார்களோ, நாளை நமது முகம் பேப்பரில் வந்தால் குடும்ப மானம் என்ன ஆகும் என்ற கவலை வேறு.

பெண் ஓரின சேர்க்கையாளர்களை பெண் போலீஸ் வைத்து சோதனை செய்தனர். ஆண் ஓரின சேர்யாளர்கள் தங்கள் அடையாள அட்டையை காட்டினர். மதுபானங்களை ஹோட்டலில் இருந்து பரிமுதல் செய்தனர். வழக்கத்துக்கு மாறாக 200 பேர்க்கு மேல் இருந்ததால் சோதனை செய்து ஒவ்வொருவராக வெளியே அனுப்பிக் கொண்டு இருந்தனர். ஒரு சிலரை மட்டும் கைது செய்தனர்.

வெளியே வந்தவர்கள் உள்ளே தங்கள் நண்பர்களுக்காக காத்திருந்தனர். என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று உள்ளூர பலர் பயந்து கொண்டு இருந்தனர். எப்படியாவது காவலர் பிடியிலிருந்து தப்பிக்க ஒருவர் நினைத்தார். ஆனால், காவலர் அவரை விடவில்லை. பிடித்துக் கொண்டனர். பத்திரிகையில் தன் பெயர், படம் வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் காவலரை தள்ளினார். ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் காவலரை தாக்கியது இது முதல் தான் முறை.

சோதனைக்கு வந்த காவலர்களில் ஒருவர் ஸ்தம்பித்தார். இரண்டு காவலர் அடித்தவனை பிடித்த போது, யாரோ ஒருவர் " We shall Overcome" என்ற பாடலை பாடினார். அந்த பாடல் அமெரிக்க மக்கள் சிவில் உரிமைக்காக பாடப்படும் கீதம். இந்த பாடலை பாடியதும், வெளியே இருந்த ஓரின சேர்க்கையாளர் உத்வேகம் பிறந்தது. உள்ளிருக்கும் தங்கள் நண்பர்களை காவலர் பிடியில் இருந்து கொண்டு வர முயன்றனர். அவர்களை தடுக்க காவலர்கள் தாக்கினர். அடிப்பட்டவர்களும் திரும்பி தாக்க தொடங்கினர். சோதனைக்கு வந்த காவலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதுவரை அடிவாங்கியவர்கள் திருப்பி அடித்தது சற்றும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. கிரிஸ்டோபர் தெருவே விடியற்காலை வரை கபளிகரமாக இருந்தது.

அடுத்த நாள் செய்திதாலில் இது தலைப்பு செய்தியாக இருந்தது.

"கே பவர் !!! " (Gay Power)

Tuesday, June 1, 2010

'ஓரின சேர்க்கை' பற்றிய புதிய தொடர்

கோவா படத்தை பார்த்து வெளியே வந்து நண்பர் ஒருவர் என்னிடம், " அரவிந்த் - சம்பத் 'கே' உறவு முறை பல பேருக்கு புரியவில்லை. அதனாலேயே காமெடி தெரியல" என்றார். ( 'கோவா' படத்தில் காமெடியே இல்லை என்ற வாதத்திற்கு நான் வரவில்லை).

'கேர்ல் பிரண்ட்' ( ஹிந்தி) படத்தில் இஷா கோபிகர் தன் தோழி அம்ருதாவை தன்னுடன் வைத்து கொள்ள அவள் காதலனை கொலை செய்யக் கூட துணிகிறாள். படம் வெளிவந்ததும் பெரிய சர்ச்சையானது. அது மட்டுமில்லாமல், 'கேர்ல் பிரண்ட்' வார்த்தையே கெட்ட வார்த்தையாக நினைத்தார்கள்.

‘ஃபையர்‘ (ஆங்கிலம் & ஹிந்தி) படம் வெளியான போது பல இடங்களில் படத்தின் போஸ்டர் பற்றி எரிந்தது.



இப்படி ஓரின சேர்க்கையை பற்றி படம் வந்தால், ஒன்று புரியாமல் இருக்கிறது அல்லது சர்ச்சைக்குளாகிறது. நம் நாட்டில் திருநங்கைக்காக மீது காட்டும் அன்பும், அனுதாபம் கூட இவர்கள் மீது காட்டுவதில்லை என்பது தான் நிதர்சனம். திருநங்கைக்காக போராடுபவர்கள் கே, லெஸ்பியன் போராடுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், பலர் இதை வெளிப்படையாக பேச பயப்படுகிறார்கள். காரணம், நம்மை ஓரின சேர்க்கை பட்டியலில் சேர்த்து விடுவார்களோ என்ற அச்சம். இதை மன நிலை நோய் என்று கருதும் சமூகத்தில் நாமும் ஒதுக்கப்படுவமோ என்று தயக்கம் இன்னொரு புரம். திருநங்கை பற்றி தெரிந்த அளவுக்கு கூட ஓரின சேர்க்கையை பலருக்கு தெரியவில்லை.

உலகம் தோன்றி பல ஆயிர வருடங்களானதில் இருந்து ஆண்-பெண் உறவு போல் ஆண்-ஆண், பெண் - பெண் உறவுகள் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது. சாக்ரடீஸ், மகா அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர், மைக்கேல் ஏஞ்சலோ, பைரன், ஆஸ்கர் ஒயில்ட் என்று தொடங்கி இன்றைய பாடகர் எல்டன் ஜான் வரை நீளுகிறது. இப்படி பல ஆயிர வருடங்களாக இருக்கும் உறவை ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனம், ஒரு பால் உறவை மனநலக் கோளாறாகத் தன் பட்டியலில் வைத்திருந்ததை 1993ல் நீக்கியது.

அமெரிக்க மன நல சிகிச்சையாளர் சங்கத்தில் இருந்து 1973வில் ஹோமோசெக்ஷூவாலிட்டியை மன கோளாறுகள் பட்டியலிருந்து எடுத்துவிட்டது.

ஒரு சில நாடுகளொரின சேர்க்கைக்கு அங்கிகரிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை. அதை பெரிய குற்றமாக கருதி மரண தண்டனை, ஆயுள் தண்டனை கூட வழங்குகிறது.

இப்படி ஓரின சேர்க்கையினரின் உரிமைக்காகவும், அங்கிகாரத்திர்காகவும் போராடும் அமைப்பாக ‘LGBT’ ( Lesbian, Gay, Bi-sexual, Transgender) அமைப்பு செயல் பட்டுவருகிறது.

எத்தனையோ வருடங்களாக இருக்கும் கே, லெஸ்பியன் உறவுகளை பற்றி முப்பது, நாற்பது வருடங்களாக தான் தைரியமாக பேசுகிறோம். பல பிரச்சனைகளும், சர்ச்சைகளும் நடுவில் ஓரின சேர்க்கை, தன் பால் உறவு, கே, லெஸ்பியன் என்று எப்போது இருந்து தைரியமாக பேச தொடங்கினோம் ? இதில் 'LGBT' அமைப்பின் பங்கு என்ன செய்கிறது ? இதனால் என்ன பயன் என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

இந்த தொடர் ஓரின சேர்க்கையை ஆதரிக்கும் தொடராக இருக்காது. அதே சமயம் எதிர்க்கும் தொடராகவும் இருக்காது.

'ஓரின சேர்க்கை' பற்றிய புரிதலும், அதன் போராட்டம் தொடங்கிய விதம், ஒரு சில ஓரின சேர்க்கையாளர் பற்றின வாழ்க்கை குறிப்பு போன்ற விபரங்கள் தொடரில் காணலாம்.

தொடரை படிக்கும் நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த தகவலை மின்னசல் மூலமாகவோ அல்லது பின்னூட்டம் மூலமாகவோ பகிர்ந்துக் கொண்டால் எனக்கு உதவியாக இருக்கும். நன்றி !

Thursday, July 9, 2009

அழகிய தோழியே…!!

பல நாட்கள் காத்திருந்த என் உணர்வுகளுக்கு இன்று தான் உத்வேகம் பிறந்தது. இதற்காக எத்தனை நாள் தவமிருந்தேன். என் மனதில் பூட்டி வைத்திருந்தேன். சொல்ல துணிந்த பிறகு ஆழ்கடலின் ஆழம் பார்ப்பது எதற்கு...? ஒரு முடிவோடு தான் பூர்ணிமாவை பார்க்க புரப்பட்டேன். இன்று என் மனதில் ஒலித்து வைத்த காதலை சொல்வதற்கு....

பூர்ணிமா அழகில் டையனாவோ ஐஸ்வர்ய ராயோ இல்லை. பார்க்க சுமாராக தான் இருப்பாள். யாரிடமும் அதிகம் பேச மாட்டாள். குறிப்பாக ஆண்கள் இருக்கும் பக்கம் போகவே மாட்டாள். எப்போதும் எதையோ பறிகொடுத்தது போலவே சோகமாக முகத்தை வைத்திருப்பாள். அவள் சிரிக்காமல் இருப்பதால் எங்கள் கல்லூரியில் அவளுக்கு 'சோனியா அகர்வால்' என்ற பட்டப் பெயரும் அவளுக்கு உண்டு.

யாரிடமும் பேசாத பூர்ணிமா என்னிடம் மட்டும் தான் மனம் விட்டு பேசுவாள். அவளுக்கு பாட தெரியும் என்பது அவளுடன் பழகிய பிறகு தான் எனக்கு தெரியும். நான் அவளை கல்லூரி ஆண்டுவிழாவில் பாட சொன்னேன். பல ஆண்கள் கூடிய மேடையின் முன் பாட முதலில் தயங்கினாள். நான் கட்டாயப்படுத்தியதில் அவள் பாட சம்மதித்தாள்.



கல்லூரி ஆண்டு விழாவில் 'வசீகரா' பாடலை பாடினாள். அரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டல் அவள் பாட்டுக்கு கிடைத்தது. பாடி முடித்து மேடையில் இருந்து இறங்கியதும், இரண்டு பேர் அவளை பாராட்டினர். அவர்கள் ‘ஆண்கள்’ என்பதால் பூர்ணிமா அவர்களின் பாராட்டுக்கு 'நன்றி' கூட கூறாமல் வந்து விட்டாள். எனக்கு அவள் செய்தது பிடிக்கவில்லை. நான் அவளிடம் அவள் செய்த தவறை சுட்டிக்காட்டினேன். எல்லா பெண்களை போல என்னிடம் சண்டைப் போட்டுக் கொண்டு பேசாமல் சென்றாள்.

இரண்டு நாளுக்கு மேல் அவளால் என்னிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. அவள் தான் உள்ளூர ஆண்களை வெறுப்பதை கூறினாள். காரணத்தை கேட்டேன். நடுங்கிய குரலில் பதிலளித்தாள். நான் அதிர்ந்து நின்றேன்.

பூர்ணிமாவுக்கு பத்து வயது இருக்கும் போது அவள் அப்பாவுக்கு வேலை மாற்றல் காரணமாக வெளியூர் செல்ல வேண்டியதாக இருந்தது. அவளுடைய அம்மாவும் அப்பாவுடன் செல்ல வேண்டிய நிலைமை. ஒரு வருடத்தில் தனக்கு வேலை மாற்றம் வாங்கி மீண்டும் இதே ஊரில் வந்து விடலாம் என்று நினைத்த பூர்ணிமாவின் அப்பா, தன் தூரத்து உறவினர் வீட்டில் தங்க வைத்தார். ஒரு வருடம் வரை அங்கு இருந்து படிக்க சொல்லி அவள் பெற்றோர் வெளியூர் சென்றனர். அந்த தூரத்து உறவினர் ஒரு வகையில் பூர்ணிமாவின் அப்பாவுக்கு அண்ணன் முறை. பூர்ணிமாவின் பெற்றோர்கள் ஊருக்கு சென்று பத்து நாள் வரை அவள் பெரியப்பா நன்றாக தான் பார்த்துக் கொண்டார். அதன் பிறகு தான் அவளுக்கு தெரிந்தது அவளுடைய பெரியப்பாவின் உண்மையான சுயரூபம்.

இரவு நங்கு தூங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் அவள் உடலில் எறும்பு ஊர்ந்து செல்லுவது போல் இருந்தது. தட்டி விட்டாள். பிறகு தான் தெரிந்தது அது அவள் பெரியப்பாவின் கை என்று ! பூர்ணிமா அவரை தடுத்தாள். கட்டாயப்படுத்தி முத்தமிட்டான். அவளை நிர்வாணமாக்கி மோப்பம் பிடிக்கும் நாய் போல் அவள் உடலை மோர்ந்தான். தடவினான். இன்னும் விவரிக்க முடியாத வார்த்தைகளில் அவள் பெரியப்பாவால் கொடுமைப்படுத்தப்பட்டாள். ஒரு நாள் அல்ல... இரண்டு நாள் அல்ல... இரண்டு மாதம் அந்த பெரியப்பனால் இரவில் நரக வேதனை அனுபவித்தாள். பயத்தில் அவளுக்கு காய்ச்சல் வந்தது. அந்த காய்ச்சலில் பள்ளிக்கு சென்று வந்தாள். வீட்டுக்கு வருவதை பயப்படுவாள். அவளின் நிலைமை அங்கு தான் வந்தாக வேண்டும். அப்பா, அம்மாவிடம் போனில் சொல்லுவதற்கு கூட பயந்தாள்.

நாளுக்கு நாள் அவன் கொடுமை அதிகரித்து வந்ததில் அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். ஊரில் இருந்து அவள் அப்பா, அம்மா வர வழைக்கப்பட்டனர். பூர்ணிமா அவள் அம்மாவை கட்டிபிடித்து அழுதாள். தன் அம்மாவிடம் அவளுக்கு சொல்ல தைரியமில்லை. தனக்கு நடந்தது என்ன என்று தெரிந்தால் தானே சொல்லுவதற்கு...! அந்த அறியாத வயதில் அந்த பெரியப்பா எதற்காக தன்னிடம் இப்படி நடந்துக் கொண்டார் என்று அவளுக்கு தெரியவில்லை. அவள் பெற்றோர்கள் அவர்களுடனே அழைத்து சென்றனர்.

விபரம் தெரியும் வயதில் பூர்ணிமாவுக்கு தனக்கு என்ன நடந்தது என்று புரிந்தது. அந்த காமந்தனை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததை நினைக்கும் போதெல்லாம் தன் உடலை கூட வெறுத்தாள். சில சமயம் காரணமில்லாமல் தன் உடலை அவளே காயப்படுத்திக் கொண்டாள். அந்த வெறுப்பு வளர வளர ஆண்கள் மீது அவளுக்கு வெறுப்பு அதிகமானது. தன் அப்பாவை உட்பட ஆண்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டாள். எல்லா ஆண்களும் மோசமானவர்கள் என்ற முடிவுக்கே அவள் வந்துவிட்டாள்.

பூர்ணிமா தன் கதையை சொல்லி முடித்ததும் என் மடியில் படுத்து அழுதாள். நான் ஆறுதலாக அவள் தலையை தடவினேன். என்னை அறியாமல் அவள் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது. அப்போது எனக்கு வந்த எண்ணம் பெரிதாக தெரியவில்லை. நாளாக நாளாக பூர்ணிமா மீது இருப்பது 'காதல்' என்று உணர்ந்தேன். பூர்ணிமா என் வாழ்நாள் முழுக்க என்னுடன் இருக்க வேண்டும் என்று தோன்றியது. நேரில் அவளை பார்க்கும் போதெல்லாம் சொல்ல தயங்கினேன். இன்று தான் எனக்கு தைரியம் பிறந்தது.

பூர்ணிமாவிடம் சென்றேன்.

"இவ்வளவு நாள் என் மனசுல இருக்குறத சொல்ல போறேன். ஐ லவ் யூ ! பூர்ணிமா !!"

"உனக்கு என்ன பைத்தியமா..."

அவள் கத்தி முடித்தப்பின் என் கதையை கூறினேன். தன் கதையை தைரியமாக சொன்ன பூர்ணிமாவிடம் இன்று தான் என் கதையை சொல்ல போகிறேன். அவளை போல நானும் சிறு வயதில் மூன்று ஆண்களால் பாதிக்கப்பட்டவள். பல இரவு காமந்தர்களால் ஆடையில்லாமல் இருந்திருக்கிறேன்..

என் கதை யை சொல்ல சொல்ல அழுதுவிட்டேன் .

" காயத்ரி..! அழாதே..." என்று கண்களை துடைத்தாள். நான் அவள் கரத்தை பற்றிக் கொண்டேன். எனக்கு நடந்த சம்பவத்தை மறக்க வெளியே சிரித்து பேசிக் கொண்டு இருந்தேன். ஆனால், பூர்ணிமாவிடம் தான் சொல்லி அழ வேண்டும் போல் இருந்தது.

பூர்ணிமா முகத்தில் " இது நடக்குமா" என்ற கேள்வி தெரிந்தது.

நான் உச்ச நீதி மன்ற தீர்ப்பை காட்டினேன்.

****

தூறல்கவிதை ச.முத்துவேல்யின் எழுதிய கவிதையை கருவாக வைத்து
"உயிரோடை" நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான இரண்டாவது ஆக்கம் !

Friday, February 20, 2009

பாலுணர்வு கதை : அவளும் நானும் ஒர் இனம் - 2

முதல் பாகம்

" எனக்கு இரண்டு வயசு இருக்கும் போது அம்மா இறந்துடாங்க. அப்பா தான் என்ன வளர்த்தாரு. ஒரு ஆம்பில மாதிரி கராத்தே, ஜிம்னு எல்லாத்திலையும் என்ன என்கரேஜ் பண்ணது அப்பா தான். ஒரு ஆம்பள மாதிரி தான் என்ன வளர்த்தாரு. நானும் ஒரு ஆம்பளைக்கு இருக்குற தைரியத்தோடு வளர்ந்தேன். அதனாலையே எனக்கு ஆம்பளைங்க மேல ஈர்ப்பு இல்ல. அப்புறம், நா காலேஜ் படிக்கும் போது அவரும் இறந்துட்டாரு..."

" அடிபாவி... நா என்ன கேள்வி கேக்குறேன். நீ என்ன பதில் சொல்லுற. உன் கதை கேக்கவா இவ்வள்வு தூரம் வந்தேன்.." என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

என் முகம் ஒரு மாதிரியாக இருப்பதை உணர்ந்துக் கொண்டாள்.

" என்ன ரொம்ப போர் அடிக்கிறேனா...???"

"அப்படி எல்லாம் இல்ல..."

" நா நேரா உங்க கேள்விக்கு பதில் சொல்லுறேன். எங்க அப்பா செத்ததுக்கு அப்புறம் என் பிரண்ட்டோட அப்பா தான் என்ன படிக்க வச்சாரு. சொந்த மக மாதிரி பாத்திக்கிட்டாரு. நாங்க ரெண்டு பேரும் உண்மையான பிரண்ட்ஸ்னு அவங்க அப்பா, அம்மா ரொம்ப நம்பினாங்க. ஆனா ! எங்களுக்குள்ள பிரண்ஷிப் மீறின உறவு இருந்ததுனு அவங்களுக்கு தெரியாது..."

ரம்யா சொல்லுவதை ஒவ்வொன்றாக பேப்பரில் எழுதினேன். அவள் நான் எழுதுவதை கவனித்துக் கொண்டு மேலும் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

" என் பிரண்ட யார் தப்பா பார்த்தாலும் சரி, கிண்டல் பண்ணுலும் சரி நா அவங்கள சும்மா விட்டதில்ல. என் பிரண்ட சைட் அடிச்ச இரண்டு பசங்கள பப்ளிக் ப்ளேஸ்ல அடிச்சிருக்கேன்." என்று தன் தொழி மீது இருந்த காதலை கூறினாள்.

" உங்க ஆசைக்கு எப்படி உங்க தோழி சம்மதிச்சாங்க....??" என்றேன்.

" எனக்கு எப்படி ஆம்பளைங்க மேல் ஈர்ப்பு இல்லையோ. என் பிரண்டுக்கு ஆம்பளைங்கனா பயம்.
என் கிட்ட எல்லாத்தையும் சொல்லுவா. நா அவள தொட்டு தொட்டு பேசுறது அவளுக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. ஒரு நாள் நாங்க இரண்டு பேரும் எக்ஸாமுக்கு கம்பைன் ஸ்டடி பண்ணும் போது அவங்க அப்பா, அம்மா ஊருக்கு போய் இருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது 'அது' நடந்திடுச்சு. எங்க ரெண்டு பேருல நான் தான் ஆண். அவ தான் பெண்..." என்றாள்.

யப்பா...யப்பா... அவள் சொல்ல சொல்ல.. எனக்குள் எதோ செய்வது போல் இருந்தது. இவ்வளவு அழகான பெண் எந்த ஆண்ணின் மீதும் ஈர்ப்பு இல்லை என்று சொல்லும் போது ஆண் இனத்திற்கே இழப்பு என்று தோன்றியது.

" உங்க இரண்டு பேருக்கு இன்னும் 'உறவு' இருக்கா...

" இப்படி கடைசி வரைக்கும் இருந்திருலாம் நினைச்சோம். ஆனா, எங்க 'உறவு' அவங்க அப்பா, அம்மாவுக்கு தெரிஞ்சிடுச்சு. என்ன வீட்ட வீட்டு அனுப்பிச்சிடாங்க. அவளுக்கும் கல்யாணம் அயிடுச்சு. " என்று தன் 'லெஸ்பியன்' கதையை சொல்லி முடித்தாள்.

எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. விபச்சாரம் வயிறு பிழைப்பு நடத்தும் தொழில் என்று சொன்னால் கூட விபச்சாரிகள் மீது ஒரு கருணை வரும். அவர்கள் கதைக்கு பின்னால் கண்டிப்பாக ஒரு சோகம் இருக்கும். ஆனால், ஒரு பெண் தன்னை 'லெஸ்பியன்' என்று சொல்லிக் கொள்ள அசாத்திய துணிச்சல் வேண்டும். வெளிப்படையாக அவள் சொன்ன பிறகும் இந்த சமுதாயம் அவளை எப்படி பார்க்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

"சொல்லுறேனு தப்பா நினைக்காதீங்க.... ஒவ்வொரு ஆண்ணும் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்காம கஷ்டப் படுறாங்க. இப்படி பொண்ணுங்க ஆண் துணை வேண்டாம்னு நினைச்சா... நம்ப நாட்டுல அடுத்த தலைமுறைக்கு ஒண்ணு இருக்காது. " என்று நான் சொல்லி முடிப்பதற்குள் ரம்யா கோபமாக பேச தொடங்கினாள். " ஜன தொகையில இந்தியா இரண்டாவது இடத்துல இருக்கு. இப்படி நாங்க எல்லாரும் 'லெஸ்பியன்' உறவு வச்சிகிட்டாலும் இந்தியாவுக்கு இராண்டுவது இடத்துல இருந்து மூனாவது இடத்துக்கு போக ரொம்ப நாள் ஆகும்."

அவள் சொன்ன பதிலில் எனக்கு சிரிப்பு தான் வந்தது. உணர்ச்சி பூர்வமாக ஒருவர் பேசும் போது நான் சிரித்தால் நன்றாக இருக்காது என்பதற்காக அமைதியாக எனக்கு இருந்த இன்னொரு சந்தேகத்தையும் கேட்டேன்.

" ஒரு சின்ன சந்தேகம். ஒர் இன சேர்க்கை தப்புனு நீங்க நினைச்சது கூட பார்த்த தில்லையா..." என்றேன்.

" லெஸ்பியங்குறது என்னோட பெட் ரூப் விஷ்யம். அத மத்தவங்க எட்டி பார்க்குறது தான் தப்பு. என்னோட உணர்வுகள் நான் கொலை பண்ண விரும்பல. நா எதுக்கு தைரியமா உங்களுக்கு இன்டர்வியூ கொடுத்தேனா.... என்ன மாதிரி பல பெண்கள் தங்கள் உணர்வுகள கொல்ல முடியாம ஒரு ஆண கல்யாணம் பண்ணிகிட்டு வாழுறாங்க. சில பேர் தற்கொலை பண்ணிக்கிறாங்க. என்னோட பேட்டி அவங்களுக்கு தைரியத்த கொடுக்கும்." என்று மிக துணிச்சலோடு கூறினாள்.

நான் அவளையே உற்று பார்த்தேன். அவள் முகத்தில் சலனமில்லை. குற்ற உணர்ச்சி என்பது சிறிது கூட இல்லை. அவள் உருவத்தில் மட்டுமே பெண்ணாக இருக்கிறாள். நிஜமாகவே தைரியத்தில் ஆண்ணை விட மிஞ்சியவள் என்று புரிந்துக் கொண்டேன்.

எனக்கு அவளிடம் தொடர்ந்து பேச வேண்டும் போல் இருந்தது. என் கேள்விக்கு அவள் பதில் சொல்லும் போது எனக்கு இன்னொரு கேள்வி பிறக்கிறது.

" மேடம். உங்க கிட்ட கடைசி கேள்வி....கேக்கலாம்மா...." என்றேன்.

"சொல்லுங்க...."

" உங்க பிரண்ட் இப்போ எப்படி இருக்காங்க... அவங்க புருஷனோட சந்தோஷமா இருக்காங்களா....!"

" இல்ல... அவ இன்னும் என்னை நினைச்சிட்டு அப்படியே இருக்குறா...." என்றாள்.

"அப்படியேனா.....?????? புரியல்ல..."

"இன்னும் அவ புருஷன் கூட 'உறவு' இல்லமா தான் இருக்கா...." என்றாள்.

" நீங்க தப்பா நினைக்கலேனே... உங்க பிரண்டையும் நான் இன்டர்வியூ பண்ணனும். அவங்க அட்ரஸ் போன் நம்பர் கிடைக்குமா...?" என்று கேட்டேன்.

அவள் அட்ரஸ், போன் நம்பர் கொடுக்க நீண்ட நேரம் யோசித்தாள்.

" கவல படாதீங்க. உங்கள பத்தி எழுதும் போது கற்பனை பேரு வச்சி தான் எழுதுவேன். அவங்களுக்கு, உங்களுக்கும் எந்த பிரச்சனையும் வராது. அதுக்கு நான் கிராண்டி..:" என்று அவளுக்கு என்னை பற்றின நம்பிக்கை கொடுத்தேன்.

" நா போன் நம்பர் கொடுக்கனும்னு அவசியமில்ல. என் பிரண்டு உங்க ஓய்ப் வர்ஷா தான். ரொம்ப பயந்திட்டு இருந்தா. நான் தான் அவளுக்கு தைரியம் சொல்லி உங்கள கான்ட்டேக் பண்ணி எங்க விஷயத்த பத்தி உங்களுக்கு சொன்னேன்.

" என்னது....? என் மனைவி லெஸ்பியனா........!!!!!!!!!!!" அதிர்ச்சியுடன் தலைசுற்றலும் வந்தது.

" சுந்தர் ! இப்போ என்ன முடிவுடா எடுக்க போறே...???" என்று எனக்குள்ளே கேட்டுக் கொண்டேன்.


சுந்தர் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று நீங்களாவது சொல்லுங்கள் ????

Wednesday, February 18, 2009

பாலுணர்வு கதை : அவளும் நானும் ஒர் இனம்

(இது பாலுணர்வு சம்மந்தப்பட்ட கதை மட்டுமே...! பாலுணர்வை தூண்டும் கதையல்ல...!! )

"வர்ஷா...ஆபிஸ்க்கு டைம் ஆச்சி. லன்ட்சு ரெடியா" என்று என் மனைவி வர்ஷாவை அவசர படுத்தினேன். எங்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் தான் ஆகிறது. ஒவ்வொரு விஷயங்களையும் எனக்காக பார்த்து பார்த்து செய்வாள். என் அம்மா கூட இப்படி கவனித்ததில்லை. அன்பின் உருவாக இருந்தாள். 'அந்த' விஷயம் மட்டும் எங்களுக்குள் நடக்க வில்லை என்றாலும், அவள் காட்டிய கனிவு, புன்னகை எதிலும் கலப்படமில்லாதவை.

திருமணமான புதிதில் அவளுக்கு ‘இந்த’ உறவில் விருப்பமில்லாமல் இருந்தாள். நானும் அவளை கட்டாய படுத்தவில்லை. அதன் பின் என் வேலை தொல்லைகள் எங்கள் உறவுக்கு தடைப்போட்டது. பத்திரிக்கை நிருபரான நான் பல நாட்கள் இரவு வரை வேலை செய்ய வேண்டும். இரவு இரண்டு, மூன்று மணி கூட வீட்டுக்கு வந்திருக்கிறேன். புன்னையுடன் கதவு திறந்து என்னை வரவேற்பாள். ஒரு முறை கூட நான் காலதாமதமாக வந்ததிற்கு திட்டியதில்லை. என்னிடம் ஒர் இரு வார்த்தைகள் பேசி விட்டு தூங்கிவிடுவாள். இருவரும் ஒரே படுக்கையில் தான் படுக்கிறோம். ஆனால், உறவு கொள்வதில்லை.

வர்ஷா எனக்கு கொடுத்த லன்ட்சை எடுத்துக் கொண்டு அவசரமாக என் பத்திரிக்கை ஆபிஸ்க்கு சென்றேன்.

" என்ன சுந்தர் ! இவ்வளவு லேட்டு....??" என்றார் எடிட்டர்.

" ஏன் ஸார் ! கேக்க மாட்டிங்க. வேலைய முடிச்சிட்டு நைட் லேட்டா தான் வீட்டுக்கு போனேன். அதுக்கு பாராட்டாதீங்க. லேட்டா வந்ததுக்கு மட்டும் கேள்வி கேலுங்க..." என்று சகித்துக் கொண்டான்.

" சரி ! கோச்சிக்காத... அந்த பொண்ணுங்க எல்லாம் வைட் பண்ணுறாங்க. சீக்கிரம் போய் கவர் பண்ணு..." என்று சொல்லி எடிட்டர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

தினமும் இப்படி யாரையாவது கவர் பண்ண வேண்டிய வேலையை கொடுத்து விட்டு அவர் போய் விடுவார். எல்லாம் சரி செய்தியையும் சேகரித்த பிறகு வெட்டுவதற்கு மட்டும் சரியான நேரத்தில் வந்துவிடுவார்.

" வா சுந்தர் போவோம்மா... டைம் ஆச்சு..." என்றான் கேமிராமேன்.

" இவன் அடுத்த தொல்லை...." என்று மனதில் நினைத்துக் கொண்டு கேமிராமேனனுடன் சென்றேன்.

எங்கள் அலுவலக விருந்தினர் அறையில் காத்திருந்த பெண்களிடம் பேட்டி எடுப்பதற்காக அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்றோம். மொத்தம் ஆறு பெண்கள் இருந்தார்கள். அனைவரும் பாலியல் தொழில் செய்பவர்கள். பாலியல் தொழிலாளர்களை பற்றி ஒரு செய்தி தொகுப்புக்காக அவர்களை அழைத்திருந்தோம். பொதுவாக இது போன்ற விஷயங்களுக்கு நிருபர்கள் தேடி செல்வார்கள். என் எடிட்டருக்கு இது போன்ற விஷயங்களில் அனுபவம் அதிகம். அவர்களை அலுவகத்திற்கே அழைத்து வந்து பேட்டி எடுக்க வைத்துவிட்டார்.

அந்த ஆறு பெண்களில் இரண்டு பெண்கள் அதிக கவர்ச்சியுடன் உடை அணிந்திருந்தனர். எங்கள் இருவரையும் 'உறவுக்கு' அழைப்பது போல் அவர்கள் பார்வை இருந்தது. நான் அதை பொருட்படுத்தவில்லை. ஆனால், கேமராமென் அந்த இரண்டு பெண்களை வலைத்து வலைத்து போட்டோ எடுத்தான். எப்படி எடுத்தாலும் பத்திரிக்கையில் போடும் போது முகத்தை மறைத்து தான் போடுவோம். இருந்தாலும், புகைப்படம் எடுப்பது எங்கள் சம்பிரதாயம்.

ஒரு வழியாக பாலியல் தொழிலாளர்களை பேட்டி எடுத்து விட்டு நான் அந்த அறையை விட்டு வெளியே வந்தேன். பேட்டி கொடுத்ததற்காக எடிட்டர் அந்த பெண்களுக்கு ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்து அனுப்பினார்.

அவர்கள் கூறியதை செய்தியாக தொகுத்து எடிட்டருக்கு அனுப்பினேன். எல்லாம் வேலை முடிவதற்குள் மாலை ஆறு மணியானது. இன்றாவது வீட்டுக்கு சீக்கிரம் செல்லலாம் என்று வண்டி எடுக்க சென்றேன். என் செல்போன் மணி ஒலித்தது. எடுத்தேன்.

" ஹலோ... சுந்தர் இருக்காருங்களா.." எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல்.

" ஆமாங்க.... சுந்தர் தான் பேசுறேன். சொல்லுங்க என்ன விஷயம்..." என்றேன்.

" என் பேரு ரம்யா. நீங்க பாலியல் பத்தின செய்தி போட போறதா கேள்வி பட்டேன். அத பத்தி உங்க கிட்ட பேசனும்...." என்றாள்.

இவளும் ஒரு பாலியல் தொழிலாளியாக தான் இருப்பாள். பேட்டிக் கொடுப்பதால் நூறு ரூபாய் வருகிறது என்றால் சும்மாவா ???

"ஸாரி மேடம்...! இப்போ தான் ஆறு செக்ஸ் வொர்க்கர் இன்டர்வியூ எடுத்து நீயூச் கம்போஸ் பண்ணேன். அடுத்த வீக் வேணும்னா நா உங்கள கான்டக்ட் பண்ணுறேன்..." என்றேன்.

" நான் செக்ஸ் வொர்க்கர் இல்ல.... லெஸ்பியன் !" என்றாள்.

எனக்கு தூக்கி வாறி போட்டது. 'பாலியல்' பற்றின செய்தி என்றவுடன் 'செக்ஸ் வொர்க்கர்' மட்டும் தான் நினைவுக்கு வருகிறார்கள். ஓர் இன சேர்க்கை ( லெஸ்பினயன், கே ) போன்றவர்கள் ஏன் நினைவுக்கு வருவதில்லை என்ற கேள்வி எனக்குள்ளே கேட்டு கொண்டேன். ஒரு பெண் தான் விபச்சாரி என்று சொல்வதை விட 'லெஸ்பியன்' என்று சொல்லுவதற்கு அதிக துணிச்சல் வேண்டும். கண்டிப்பா இந்த பெண்ணை இன்டர்வியூ எடுத்தே ஆகனும் என்று தோன்றியது.

" உங்கள எங்க பார்க்கலாம்...." என்றேன்.

" நுங்கபாக்கம்ல இருக்குற இஸ்பானி சென்டர்க்கு வர முடியுமா..." என்றாள்.

" பக்கத்துல தான் இருக்கீங்களா... நான் பத்து நிமிஷத்துல வந்திடுறேன்...." என்று சொல்லி வண்டியை எடுத்தேன். அவளிடம் என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்பதை மனதில் ஒரு முறை சொல்லிக் கொண்டே வந்தேன். பத்து நிமிடத்தில் வர இடத்திற்கு ஐந்தே நிமிடத்தில் வந்து விட்டேன்.
இஸ்பானி சென்டரில் பல அழகான பெண்கள் நின்றுக் கொண்டு இருந்தார்கள். செல்போனுக்கு கால் வந்த நம்பருக்கு தொடர்பு கொண்டேன். என் எதிரில் நின்ற ஒரு பெண் தன் செல்போனை எடுத்தாள்.

" ஹலோ நான் ரம்யா பேசுறேன். வந்துடீங்களா....!!" என்றாள்.

அந்த பெண் தான் ரம்யா என்று உறுதி செய்துக் கொண்டேன்.

பக்கத்தில் இருப்பவளுக்கு போன் போட்டு அம்பது பைசா தண்டம் என்று நினைத்துக் கொண்டேன். அங்கு இருந்த ஒரு காபி ஷாப்பில் இருவரும் சென்று அமர்ந்தோம். சிம்ரன் தேகமும், ஸ்ரீ தேவி முகமும், ரம்பா உதடும் என்று மொத்த கோடம்பாக்கமே அவள் உருவத்தில் வந்து நின்றது. "ச்சே... போன வாரம். சினிமா கவரேஜ் பண்ணதுல இருந்து வர்ணனையில கூட சினிமா நடிகை தான் வரனுமா !" என் மனதில் நினைத்துக் கொண்டேன்.

" நீங்க எப்போ இருந்து லெஸ்பியனா இருக்கீங்க....?" என்றேன்.

எத்தனை வருஷமா எழுதுறீங்க, டான்ஸ் அடுறீங்க என்று கேள்வி கேட்டு தொடங்கி எனக்கு அதே மாதிரியான கேள்வி தான் அவளிடமும் வந்தது.


(தொடரும்.....
கொஞ்சம் பெரிய கதை என்பதால் அடுத்த பதிவில் முடிவடையும் )

LinkWithin

Related Posts with Thumbnails