அவ்வை சண்முகம் சாலையில் இருக்கும் அ.தி.மு.க தலைமை செயலகம் அருகில் இருக்கிறது மதுரை பாண்டியன் மெஸ்.
மதியம் சாப்பாடு ரூ.90 மட்டும் தான். அசைவ உணவகத்தில் வெறும் சாப்பாடு மட்டும் எப்படி சாப்பாடுவது ? கொஞ்சம் சிக்கன், மட்டன் சேர்த்து கொண்டால் தானே முழுமையான சாப்பாட்டாக இருக்கும்.
இங்கு ஒரு விஷயம். அன்று சனிக்கிழமை. Officialy நான் Non-Veg சாப்பிடவதில்லை. இருந்தாலும், சைவ சாப்பாடு சாப்பிடவா இங்கு வந்தோம். மட்டன் சுக்கா, மட்டன் கோலா உருண்டை சொன்னேன். சாப்பிடும் போது எதோ குறையுதே என்று தோன்றியது. ஆமாம், ஒரு ஆம்லேட் ப்ளிஸ்.
இருவர் சாப்பிடுவதை நான் ஒருவன் சாப்பிடுகிறேன் என்பதை பக்கத்தில் இருப்பவரின் ரியாக்ஷேனில் தெரிந்தது. இருந்தாலும், கவலையில்லாமல் ஒரு கட்டுகட்டினேன். மொத்தம் பில் ரூ.335 மட்டும் தான்.
ராயப்பேட்டை வழியாக செல்பவர்கள் ஒரு முறை மதுரை பாண்டியன் மெஸ் சென்று சுவைத்துப் பாருங்கள்.
ஒருவனுக்கு அலுவலகத்தில் வேலை கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் எல்லாம் கிடைத்த மாதிரி. அதில் வரும் வருமானத்தில் தனது குடும்ப சந்தோஷத்தை கவனித்து கொள்ள முடியும். தேவைகளை நிறைவேற்றி கொள்ள முடியும். கடைசிக் காலத்திற்கு திட்டமிட முடியும். ஆனால், அதே அலுவலக வேலை அவனுக்கு மன அழுத்தத்தையும் கொடுக்கும். குடும்ப சந்தோஷத்தையும் கெடுக்கும். இன்றைய காலக்கட்டத்தில் அலுவலக வேலை, குடும்ப வாழ்க்கையை சிதைத்து கொண்டிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. இரண்டையும் சமமாக நடத்துபவனால் மட்டுமே வெற்றிக்கரமாக வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும்.
அப்படி பலரது வாழ்க்கையை தீர்மானிக்கும் அலுவலகத்தை சுற்றி நடக்கும் கதை தான் “Office”.
அலுவலகத்தில் வீட்டுக்கு வரும் கிம் தனது அம்மா, மனைவி, மகன் என்று மொத்த குடும்பத்தையும் சுத்தியலால் அடித்து கொலை செய்து தலைமறைவாகிறான்.
அடுத்த நாள் காவலர்கள் அவன் வேலை செய்த அலுவலகத்தில் அவனைப் பற்றி விசாரிக்கிறார்கள். யாரும் அவனைப் பற்றி தவறாக சொல்லவில்லை. எந்த விதமான கெட்டப் பழக்கமோ, கள்ளத் தொடர்போ இல்லை. அலுவலகத்தில் அடுத்த சீனியர் மேனேஜராக வரக்கூடிய லிஸ்டில் இருப்பவன். பணியின் அழுத்தம் காரணமாக இப்படி செய்திருக்கலாம் என்று ஆரம்பத்தில் போலீஸ் சந்தேகப்படுகிறது.
அதே அலுவலகத்தின் ஒப்பந்த ஊழியராக இருக்கும் மி-ரே தனது வேலை நிரந்தத்திற்காக கடுமையாக உழைப்பவள். விசாரணையின் போது தனது வேலையை காப்பாற்றிக் கொள்ள மி-ரே கிம்மைப் பற்றி எதுவும் சொல்லாமல் மறைக்கிறாள்.
சீனியர் மேனேஜர் சேலஸ் ரிப்போர்ட் தயாரிக்க வேண்டிய வேலையை கிம்மிடம் கொடுத்திருந்தார். இப்போது அவன் இல்லாததால் கிம்முக்கு அடுத்தப்படியாக இருப்பவனிடம் இந்த வேலையை கொடுக்கிறார்.
காவலர்கள் விசாரணையின் போது கொலை நடந்த அன்று அலுவலகத்தின் ரெக்கார்ட்டான சி.சி.டி.வி காமிரா புட்டேஜ்யை பார்க்கிறார்கள். அதில், தனது குடும்பத்தை கொலை செய்த கிம் மீண்டும் அலுவலகத்திற்கு வந்தது தெரிகிறது. ஆனால், மீண்டும் அலுவலகத்தை விட்டு செல்லவில்லை. அப்படியென்றால் அவன் அலுவலகத்திற்குள் எங்கையோ மறைந்திருக்கிறான்.
அந்த சமயத்தில் சேல்ஸ் ரிப்போர்ட் தயாரிக்க வேண்டியவன் கொல்லப்படுகிறான். மீட்டிங் நடக்கும் இடத்தில் அவனது பிணம் கிடக்கிறது. தொடர்ந்து சேல்ஸ் ரிப்போர்ட் தயாரிக்கச் சொன்னப் பெண்ணும் இறக்கிறாள். கிம் தான் கொலை செய்திருப்பான் என்று அலுவலகத்தில் இருப்பவர்கள் சந்தேகப்படுறார்கள். தொடர்ந்து கொலை செய்யும் கிம் மி-ரேவை பார்க்கும் போது அன்போடு பேசுகிறான். அவனை பார்க்கும் போது வரும் அதிர்ச்சியில் காவலர்களையோ, மற்றவர்களையோ தொடர்பு கொள்ள முடியவில்லை.
கிம் எதற்காக இத்தனை கொலை செய்ய வேண்டும் ? நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டுக்கும், கொலைக்கும் என்ன சம்மந்தம் ? ஒப்பந்த ஊழியரான மி-ரேவிடம் மட்டும் எதற்காக பேசுகிறேன் ? என்பதை அறிந்துகொள்ள படத்தை டவுன்லோட் செய்து/ DVD வாங்கி பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
வழக்கமான சைகோ த்ரில்லர் வகை கதை தான். ஆனால், திரையில் காட்டிய விதத்தை பாராட்டியாக வேண்டும். படத்தில் பெரிய முடிச்சுகள் கிடையாது. யார் கொலை செய்கிறார் என்பதை ஒரு கட்டத்தில் எளிதில் யுகித்துவிடலாம். ஆனால், படம் பார்க்கும் பார்வையாளர்கள் தங்களுக்குள்ளே ஆயிரம் முடிச்சு அவர்களாகவே போட்டுக்கொள்வார்கள். அதை எப்படி அவிழ்க்கப் போகிறார் என்ற ஸ்வாரஸ்யத்தையும் வளர்த்துகொள்வார்கள். ஆனால், அது முடிச்சு அல்ல, சாதாரண ஒரு Coincidence என்பதை போல படம் செல்லும்.
உதாரணத்திற்கு, காலை அலுவலகத்தில் எல்லோரும் 9 மணிக்குள் வந்துவிட வேண்டும். நடக்கும் கொலை இரவு 9 மணியாக இருக்கிறது. இதற்குள் எதாரவது தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. அதேப் போல் மீட்டிங் ரூம்மில் அவ்வப்போது தண்ணீர் ஒழுகிறது. அந்த ஓட்டையில் இருந்து தான் ஒரு பிணம் விழுகிறது. அதன் வழியாக தான் கிம் அலுவலகத்திற்குள் வருகிறார் என்று நினைத்தால்… அதுவும் இல்லை. இப்படி நாமே யுகித்துகொண்டு ஸ்வாரஸ்த்தை வளர்த்துக்கொள்ளும் காட்சிகள் நிரம்ப இருக்கிறது.
அலுவலத்திற்குள் த்ரில்லர் கதையை தேடிக் கொண்டிருக்கும் இயக்குனர், உதவி இயக்குனர் கண்டிப்பாக இந்தப் படத்தை பார்க்க வேண்டும்.
வேலையில் மன அழுத்தத்தை ஏற்று கொண்டால் அலுவலகத்தில் சென்று வீட்டுக்கு வரும் வரை மட்டுமல்ல… வீட்டுக்கு வந்த பிறகும் அந்த அழுத்தம் நம்மையும், நம்மை சார்ந்து இருப்பவர்களையும் பாதிக்கும்.
வேலை என்பது வருமானதிற்கு மட்டுமே….நமது வாழ்க்கையை ஆள்வதற்கில்லை.
சென்னையின் இரவு வாழ்க்கையைப் பற்றிய புத்தகம். குடி, செக்ஸ் பற்றி தான் அதிகம் பேசுகிறது. தலைவர் சாரு பேசாததா என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு பெண் இவ்வளவு வெளிப்படையாக சொல்லும் போது இந்தப் புத்தகம் அதிக முக்கியத்துவம் பெருகிறது.
தான் குடிப்பதாக இருந்தால், தனது பார்டனை குடிக்கக்கூடாது என்று சொல்லிவிடுவாராம். செக்ஸின் போது இருவருமே போதையில் இருந்தால் முழுமையான உறவு பெற முடியாது என்பதை கூறுகிறார். ( நான் உடன்படாத கருத்து. செக்ஸ் இருவருமே சுயநினைவில் அனுபவிக்க வேண்டிய ஒன்று. ஒருவர் போதையில் சுயநினைவில்லாமல் இருக்கும் போது செக்ஸ் என்பது கற்பழிப்புக்கு சமம்.)
இப்படி நூல் முழுக்க கருத்தளவில் நீங்கள் மறுக்கும் பகுதிகள் ஏராளமாக இருக்கிறது. ஆனால், ஒரு பெண் குடியின் ரசனையோடு எழுதியதால் எனக்கு இந்தப் புத்தகம் பிடித்திருந்தது. வாசிக்கும் போது இரண்டு பேக் அடிக்க வேண்டும் என்று கூட தோன்றியது.
ஒரு முறை ஜெயமோகன் தமிழை ஆங்கிலத்தில் எழுதலாம் என்று சொல்லி சர்ச்சையை கிளப்பியது நினைவில் இருக்கலாம். ‘கேளிக்கை இரவுகள்’ ஆங்கிலத்தை தமிழில் எழுதிய நூல். அதிகமான ஆங்கில வார்த்தை தவிர்த்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.
முகம் தெரியாத ’ நக்ஷத்ரா’ வுக்கு என் வாழ்த்துகள்.
**
கேளிக்கை இரவுகள்
- நக்ஷத்ரா
- Rs.50
- மின்னம்பலம் வெளியீடு
சிறுவர் போராளியை பற்றிய கதை. கொள்கை, அரசியல், யுத்தம் என்று எதுவும் தெரியாத சிறுவர்கள் தவறான வழிக்காட்டுதலின் பெயரால் ஆயுதங்களை தேர்வு செய்யப்படும் போது அவர்கள் வாழ்க்கை பார்க்கக் கூடாத பல விஷயங்களை பார்க்கிறார்கள். அந்த வயதில் கிடைக்க வேண்டிய பல விஷயங்களை இழக்கிறார்கள். அப்படி சந்தர்ப்பத்தால் ஆயுதம் ஏந்திய சிறுவன் அகுவைப் பற்றிய படம் இது.
பெயரிடப்படாத ஆப்பிரிக்க நாடு. உண்மையில் அந்தா நாட்டின் பெயர் தேவையில்லை. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கும் ஒரே அரசியல் தான். தீவிரவாதி குழுக்கள் அரசுக்கு எதிராக இயங்கவதும், பொது மக்களை மிரட்டி உடைமைகளை பிடுங்குவதும், பொதுமக்களின் நிலத்தை அபகரிப்பதும் என்று மக்களுக்கு கஷ்டத்தை கொடுப்பார்கள். இன்னொரு பக்கம், அரசாங்கத்தின் இராணுவம் தீவிரவாதிகளை பிடிக்க வேண்டும் என்பதற்காக பொது மக்கள் இருக்கும் பகுதியை ஆக்கிரமிப்பதும், தீவிரவாதிகளிடம் யுத்தம் நடந்தவனம் இருப்பார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலை நடுவில் ஒரு கிராமம் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அந்தப் பெயரிடப்படாத நாட்டின் கிராமத்தில் சிறுவர்களை போல் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. இராணுவ வீரர்களிடம் தங்களது குப்பை பொருளை விற்பனை செய்யும் அளவிற்கு சுட்டியானவர்கள். குறிப்பாக நாயகன் சிறுவன் ‘அகு’ மிகவும் துறுதுறுவாக விளையாடுபவன். தனது பேற்றோர்கள், பெரிய சகோதரன் என்று அவனது வாழ்க்கையில் மகிழ்ச்சி சூழ்ந்து கொண்டிருந்தது.
எவ்வளவு நாட்கள் தான் எல்லையோர கிராமத்தை மகிழ்ச்சியாக விட்டு வைப்பார்கள். போராளிகளுக்கும், இராணுவத்திற்கும் நடக்கும் போராட்டத்தில் கிராம மக்களை பாதுகாப்பு நலன் கருதி கிராமத்தை விட்டுச் செல்லச் சொல்கிறார்கள். வேறு வழியில் இல்லாமல் பெண்களையும், குழந்தைகளையும் மட்டும் அனுப்பி வைத்து தங்களது கிராமத்தை ஆண்கள் காப்பாற்ற நினைக்கிறார்கள். ஆனால், கிராமத்தை ஆக்கிரமித்த இராணுவத்தினர் தங்கியிருந்த ஆண்களை யாரும் அந்த கிராமத்து மக்கள் என்று நம்பவில்லை. தீவிரவாதிகள் என்று சந்தேகித்து சரமாரியாக சுட்டு தள்ளுகிறார்கள்.
தந்தை, சகோதரன் இழந்த சிறுவன் அகு தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள காட்டுப் பக்கம் ஒதுங்குகிறான். அங்கிருக்கும் தீவிரவாதிகளிடம் தஞ்சமடைந்த அவன், அவர்கள் செல்லும் ஆயுதப் போராட்ட வழியில் பயணிக்க நிர்பந்திக்கப்படுகிறான். அவர்கள் ஆணைக்கு ஏற்ப கொலையும் செய்கிறான்.
ஒரு கொலை செய்துவிட்டோம் என்ற குற்றவுணர்வில் இருக்கும் போது பாலியல் தொல்லைக்கு ஆளாகிறான். அடுத்த நாள் ஒரு இடத்தை ஆக்கிரமிக்கும் போது அவன் முன் ஒரு தாய் கற்பழிக்கப்படுவதைப் பார்க்கிறான். அதை தடுக்க முடியாத அவன் அந்தப் பெண்ணை கொலை செய்கிறான். நாளுக்கு நாள் அவனுள் மிருகம் வளர்வதை அவன் உணர்கிறான்.
ஒரு போராட்டத்தின் போது தனது சக நண்பன் ஸ்டைக்காவையும் இழக்கிறான். போராட்டக் கூட்டத்தில் இருந்து தப்பிக்கவும் முடியாமல், தூப்பாக்கி ஏந்தியப்படி கமாண்டர் சொல்வதை செய்ய வேண்டிய சூழ்நிலை, அரசியல் மாற்றத்தால் அவனது கமாண்டருக்கு இருக்கும் ஆதரவு குறைகிறது. குழு தலைமை அவனது பதவியை பறித்து வேறு ஒருவனை கமாண்டராக நியமிக்கிறார். இதை விரும்பாத தீவிரவாதக் குழுவின் கமாண்டர் புதிதாக நியமனம் செய்தவனை சூழ்ச்சியால் கொன்று, தனது குழுவை தக்கவைத்துக்கொள்கிறான்.
நாட்கள் செல்ல செல்ல… தூப்பாக்கி தோட்டாக்கள் இல்லாமல், குறைந்த உணவோடு அரசியல் ஆதரவில்லாமல் அந்த தீவிரவாதக் குழுவால் இயங்க முடியவில்லை. கமாண்டரை எதிர்த்து குழு கலைந்து சென்று இராணுவத்திடம் சரணடைகிறார்கள். இராணுவத்தின் மறுவாழ்வு மையத்தில் அகு மீண்டும் பழைய சிறுவனாக அங்கிருக்கும் சிறுவர்களோடு விளையாடுகிறான்.
ஆப்பிரிக்க நாட்டின் தீவிரவாதி குழுக்களில் மட்டுமல்ல…. உலகம் முழுக்க இருக்கும் தீவிரவாத அமைப்பில் சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ஹிட்லரின் இராணுவத்தில் கூட சிறுவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் பழிவாங்கும் உணர்ச்சியை அவர்களுடைய பாலியத்தை அழித்து தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் கூட்டம் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது.
சிறுவர்கள் ’ஆயுத போராட்ட வாழ்க்கை’யை அவ்வளவு எளிதில் ஏற்பதில்லை. குடும்பம், மகிழ்ச்சி, விளையாட்டு, கொண்டாட்டம், குதுகலம் என்று எல்லாம் ஒரே நாளில் தொலைந்தப் போது, எல்லா கதவுகளும் அடைத்தப்பிறகு இருக்கும் ஒரே கதவாக ‘ஆயுதப் போராட்டம்’ மட்டும் தான். கண்ணுக்கு தெரிந்த கதைவை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிறுவர்கள் தள்ளப்படும் போது தான் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள்.
விரும்பி தேர்வு செய்யாத ஒரு விஷயத்தை வாழும் போது அந்த சிறுவர்களுக்கு இருக்கும் மன அழுத்தம், உளவியல் சிந்தனை என்று படம் முழுக்க ‘அகு’ என்ற சிறுவன் மூலம் நம்மால் உணர முடியும்.
அமெரிக்காவில் புலம்பெயர்ந்த நைஜிர்யா நாட்டை சேர்ந்த Uzodinma Iweala என்பவர் எழுதிய ”Beasts of No Nation” நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். பல திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்றுயிருக்கிறது.
ஒருவன் எவ்வளவு திசை மாறினாலும், மிருகமாக திரிந்தாலும்… நாம் அடிப்படையில் மனிதர்கள். அதை உணர்ந்த நிமிடமே நம்முடைய பாதையை மாற்றி அமைத்துக் கொண்டு பயணிக்க முடியும் என்பதை இந்தப்படம் காட்டுகிறது.
ஒரு பாடலுக்கு உயிர் கொடுப்பதில் இருவரின் முக்கிய பங்கு இருக்கிறது. ஒருவர் இசையமைப்பாளர். மற்றொருவர் பாடலாசிரியர்.
இருவரும் தான் ஒரு பாடலுக்கான Creators.
அந்த வகையில் ‘பாடகர்’ என்பவர் இசையமைப்பாளர் சொன்னதை செய்ய வேண்டும். பாடலாசிரியர் எழுதிய வார்த்தைகளை சரியாக உச்சரிக்க வேண்டும். அதில் பாடகர் தனது Creative தன்மை அவர்களின் அனுமதியில்லாமல் உள்ளே புகுத்தமுடியாது. அவருடைய Creative மூளைக்கு வேலை கிடையாது.
தயாரிப்பாளர், இயக்குநர் இசையமைப்பாளரின் இசை பயன்படுத்துவதற்கு தான் சம்பளம் கொடுக்கிறார். அவரது கற்பனையையோ, படைப்பையோ முழுமையாக வாங்கியவர்கள் என்று கருதமுடியாது.
படத்தின் சொந்தக்காரர்களாக அவர்கள் பாடலின் இசையை ஏற்கலாம், ஏற்காமல் போகலாம், படத்தில் இருந்து நீக்கலாம். ஆனால், தங்களுக்கு தான் சொந்தம் என்று தயாரிப்பாளர், இயக்குநர் உரிமை கேட்க முடியாது.
இளையராஜா தனது பாடலுக்கு சொந்தம் கொண்டாடுவதும் அதற்கான ராயல்டி கேட்பது தவறில்லை. அது படைப்பாளிக்கான உரிமை.
ஆனால், அதில் பாடலாசிரியருக்கும் பங்கு இருக்கிறது என்பதை அவரால் மறுக்கமுடியாது. பெரும்பாலான இளையராஜா இசையில் பாடல் எழுதியது அவரது சகோதரன் கங்கை அமரனாக இருந்தாலும், வைரமுத்து, இன்னும் சில பாடலாசிரியர்கள் பாடல் எழுதியிருக்கிறார்கள்.
தனக்கு கிடைக்கும் ராயல்டியை இளையராஜா உரிய முறையில் பாடலாசிரியர்களுக்கு கொடுக்க வேண்டும். கொடுப்பார் என்று எதிர்ப்பார்க்கிறேன்.
“இதுக்காடா இவ்வளவு ஆஸ்கர் விருது கொடுத்தாங்க” என்று தோன்றியது என்று சொல்லலாம். இதுப் போன்ற படங்கள் தமிழில் நூறுக்கு மேல் வந்திருக்கிறது.
க்ளைமாக்ஸ் காட்சியில் நாயகி இப்படியெல்லாம் நடந்திருந்தால் என்று கற்பனை செய்து பார்க்கும் போது அவருக்குள் இருக்கும் காதலை உணர முடிந்தது. அதை தவிர்த்து இந்தப்படத்தில் பெரிதாக என்னை கவரவில்லை.
தமிழ் படங்களுக்கு இணையாக ஐந்து பாடல்கள் வேறு இருக்கிறது. பாடல்களை விட நாயகன், நாயகி நடனம் நன்றாக இருந்தது.
Living together காதல் கதை என்றால் “No Strings Attached” படத்தின் அளவுக்கு கூட இல்லை. இரண்டு கலைஞர்களுக்கான காதல் கதை என்று எடுத்துகொண்டால் "The Artist" படத்தில் பாதிக் கூட இல்லை.
La La Land ஒ.கே என்று சொல்லும் அளவுக்கான படம். ஆஸ்கருக்கான படம் இல்லை.
La La Land வை ஒப்பிட்டால் எனக்கு ’வின்னை தாண்டி வருவாயா’ படம் மிகவும் பிடித்திருந்தது. வாழ்க கௌதம் மேனன் !!
எப்போதும் சமோசா, பஜ்ஜி என்று ஒரே மாதிரியான சிற்றுண்டி உண்கிறோம். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று டயட்-இன் (Dietin Vegetarian Restaurant ) உணவகத்திற்கு நுழைந்தேன்.
சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவு முறை. மெனுக்காடு எடுத்ததுமே என் கண்ணில் பட்டது. வாழைப்பூ வடை தான்.
ஒரு ப்ளேட் சொன்னேன். நாம் ஆர்டர் சொல்லும் போது தான் செய்ய தொடங்குவார்கள். அதனால் கொஞ்சம் காத்திருப்பு அவசியம்.அது வரை கடைக்காரரிடம் பேசிக் கொண்டு இருந்தேன். கொஞ்ச நேரத்தில் வாழைப்பூ வடை (Nos.4) வந்தது. வாழைப்பூவுக்கான கசப்பு மிக குறைவாகவும், வடை சாப்பிட்ட திருப்தியும் இருந்தது.
திடீர் என்று இரவு டிபனை இங்கையே முடித்துவிட்டால் என்ன என்று தோன்ற, ஒரு செட் அடை சொல்லலாம் என்று கூறினேன். நவதானிய அடை.
மொத்தம் ரூ.140ல் அன்றைய இரவு டிபன் முடிந்தது.
ஒரு Changeக்கு வித்தியாசமான உணவு சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு முறை இங்கு முயற்சி செய்துபார்க்கலாம். பாரம்பரிய உணவு, இயற்கையான உணவு விரும்புபவர்கள் அவசியம் செல்ல வேண்டிய இடம் டயட்-இன் என்று சொல்வேன்.
இன்று ஒரு பா.ஜ.க நண்பரிடம், “என்னங்க உங்க ஆளு இல. கணேசன் காஷ்மீர தியாகம் பண்ணலாம் சொல்லாரு” என்றேன்.
அவர் கோபமாக, “யோவ். அவரு எப்பய்யா அப்படி சொன்னாரு...?”
”ஆமாங்க... ’ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமென்றால் ஒரு மாநிலத்தை தியாகம் செய்யலாம்’ சொன்னாரே!”
“அவரு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக சொன்னாரு... நீங்க இல்லாத கதை ஏன் கட்டுறீங்க...?”
“மாநிலத்த தியாகம் பண்ணனும் முடிவு பண்ணிட்டீங்க... அது தமிழ்நாடா இருந்தா என்ன, காஷ்மீரா இருந்தா என்ன...? ”
“உங்கள மாதிரி ஆளுங்க தான், கருத்த திசைத்திருப்பி பிரச்சனைய உருவாக்குறீங்க...”
“ஏன் கருத்த திசைத்திருப்புற Copyrights முழுக்க உங்ககிட்ட மட்டும் தான் இருக்கா ? “ என்றேன்.
அதற்கு மேல் அவர் பேசவில்லை. அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார்.
**
எங்கள் அலுவலகத்தில் வட மாநிலத்தை சேர்ந்த ஒருவன், “உங்க ஊரில சாமியார்களுக்கு இவ்வளவு மரியாதையா? பிரதமர் எல்லாம் வந்து பார்க்குறாங்க.” என்று தனது சக நண்பரிடம் கேட்டிருக்கிறார்.
“அப்படியெல்லாம் இல்ல. அந்த சாமியார் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் இருக்கு. அவரு அவ்வளவு பெரிய ஆளு இல்ல” என்று அந்த நண்பர் பதிலளித்திருக்கிறார்.
“அப்போது எதுக்காக கவர்மெண்ட் பஸ்ல அந்த சாமியார் படம் மாட்டியிருக்கு” என்று வட மாநிலத்தை சேர்ந்தவன் கேட்க, அந்த நண்பர் அதிர்ந்துவிட்டார்.
”எதோ நோட்டீஸ், விளம்பரம் ஒட்டியிருக்கும். நீ தப்பா புரிஞ்சிருப்ப...” என்று சொல்ல, அவன் ஆணித்தரமாக எல்லா பஸ்ஸிலும் அந்த சாமியார் போட்டோ பார்த்திருப்பதாகக் கூறினான்.
ஒரு நிமிடம் யோசித்த நண்பர் Googleல் ஒரு படத்தை தேடிக் காட்ட “இவர் படமா பாரு?” என்று கேட்க, “ஆமாம்.” என்று வட மாநிலத்தவன் பதிலளித்தான்.
“அடப்பாவி ! இது திருவள்ளுவர் படம்டா..” என்று நண்பர் கூறினார்.