“நான் சீர்திருத்தங்களின் ஆதரவாளன்தான். ஆனால், சீர்திருத்தம் என்ற பெயரில் இந்து மதத்தின் நம்பிக்கைகளைச் சீர்குலைக்கப் பார்ப்பதை வேடிக்கை பார்க்கமாட்டேன்”
– இது பாலகங்காதர திலகர் கூறியது.
இந்து மதமாக பார்க்கும் போது ஆயிரம் சர்ச்சைகள். உள்குத்து, வேறுபாடு, பிரிவினை நிறைய இருக்கிறது. ஆனால், இந்துத்வம் ஜாதிகளையோ, அதில் இருக்கும் உட்பிரிவையோ ஆதரிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் உருவ வழிப்பாட்டைக்கூட ஆதரிப்பதில்லை. எல்லோரும் ‘இந்து’ என்ற ஒற்றைக்குடைக்குள் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறது. தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் ’இந்துத்வம்’ என்பது மதம் அல்ல… அது வாழ்வியல் முறை. இந்து மதத்தினர் மட்டும் தான் பின்பற்ற வேண்டும் இல்லை. இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் கூட பின்பற்றலாம்.
கேட்க நன்றாக தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது ஏன் இந்துத்வ கொள்கையை சுற்றி இத்தனை சர்ச்சைகள். எதிரான இத்தனை கருத்துகள். இந்துத்வத்தை இந்துக்களே பலர் ஏன் எதிர்க்கிறார்கள்.
காரணம், இந்துத்வத்தை முழுமையாக உள்வாங்காமல் ”நான் இந்துத்வவாதி” என்று சொல்லிக் கொள்பவர்கள். உதாரணத்திற்கு, இந்துத்வம் ஜாதி அடையாளத்தை ஆதரிப்பதில்லை. ஜாதியையும் ஆதரிப்பதில்லை. ஆனால், நிஜத்தில் அப்படி இல்லை. ‘நான் பிராமணன்’, ‘நான் தேவர்’, ‘நான் கவுண்டர்’ என்ற சாதிய அடையாளத்தை காட்டிக் கொண்டு, பெருமையாக நினைப்பவர்கள் தான் ‘இந்துத்வம்’ பேசுகிறார்கள். அதாவது, ‘நான் இந்து’ என்ற கருத்தை விட ‘நான் இன்னார் ஜாதியை சேர்ந்தவன்’ என்பதை காட்டிக் கொள்வதில் அவர்களுடைய எண்ணமாக இருக்கிறது.
அரசியல் சட்டப்படி ‘தலித்’துகள் ‘இந்து’வாக கருதப்படுகிறார்கள். ஆனால், நிஜத்தில் அவர்களுக்கான உரிமை பல இடங்களில் மறுக்கப்படுகிறது. அதற்கு, காரணமாக தங்களை மேல் ஜாதி என்று நினைத்து கொள்பவர்கள். தன்னை ‘மேல் ஜாதி’ என்று கருதுபவன் ‘இந்துத்வத்தை’ பேசும் போது, அவன் மீது இருக்கும் வேறுப்போடு இந்துத்வத்தின் மீதும் சேர்ந்து வேறுப்பாக மாறுகிறது.
மொத்தத்தில் இந்துத்வ தியரியில் பல நல்ல விஷயங்கள் இருக்கிறது. அதை தவறாக புரிந்துகொண்டு பின்பற்றுபவரை பார்ப்பதால், இந்துத்வத்தை புரிந்துகொள்ளும் முயற்சியை பலர் கைவிடுகிறார்கள். தவறாக புரிந்துக்கொண்டவர்களால் ‘இந்துத்வம்’ தவறாக பரப்பப்படுகிறது. இந்துத்வம் தவறாக தெரிகிறது. அதற்கு காரணம், இந்துத்வ எதிரிகள் அல்ல. இந்துத்வத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்கள் அல்ல. இந்துத்வ ஆதரவாக செயல்படுகிறோம் என்று சொல்பவர்கள்.
இதை நான் சொல்லும் போது இந்துத்வத்தை தவறாக புரிந்துகொண்டவர்கள் இந்துத்வத்தில் மட்டும் தான் இருக்கிறார்களா? இஸ்லாமிய மதத்தில் இல்லையா ? கிறிஸ்துவத்தில் இல்லையா ? என்று என்னை இந்துத்வவாதிகள் கேள்விக்கேட்கலாம்.
இந்துத்வவாதிகள் அடுத்த பிரச்சனை இது தான். அவர்களை விமர்சிக்கும் போது அதற்கான பதில் வரலாது. அதே கேள்வியை எதிர் கேள்வியாக கேட்பார்கள். குறிப்பாக கேள்வி கேட்பவன் இஸ்லாமியன், கிறிஸ்துவன் அல்லாமல், நாத்திகன், திராவிட கொள்கை ஏற்ற இந்துவாக இருந்தாலும் கூட அவனைப் பற்றி, அவன் கொள்கையைப் பற்றி பேசாமல் விவாதத்தில் பங்குபெறாத முஸ்லிம், கிறிஸ்துவத்தை வம்புக்கு இழுப்பார்கள்.
அவர்களின் கொள்கையை முழுமையாக புரிய வைக்கும் முயற்சியை விட இஸ்லாம், கிறிஸ்துவத்தை விமர்சிப்பதில் அதிக கவனத்தை செலுத்துவது ஹிந்துத்வவாதிகளின் அடுத்த பிரச்சனை. அதைவிட ‘எல்லோரும் சமம்’, ‘ஒன்றே தெய்வம்’ என்று நினைக்கும் செக்குலர்களை சேர்த்து விமர்சித்து வம்புக்கு இழுப்பது. இதனால், இந்துத்வவாதிகள் மத ஒற்றுமையில் விரும்பாதவர்கள் என்ற பிம்பத்தை சாமான்யர்கள் மத்தியில் அவர்களே உருவாக்கி கொள்கிறார்கள்.
இந்துத்வத்தைப் பற்றிய தெளிவு ஏற்படுத்தாமல், அதற்கான கட்டிடம் கட்டும் முயற்சியை தான் இந்துத்வவாதிகள் பல வருடங்களாக செய்து வருகிறார்கள்.
*
இப்படி பல வருடங்களாக சர்ச்சைகளோடு இயங்கி, வளர்ந்து வந்த இந்துத்வ இயக்க வரலாற்றை ஒரு வருட கடின முயற்சியால் ஆர்.முத்துக்குமார் பதிவு செய்திருக்கிறார்.
இந்த புத்தகம் ஆர்.எஸ்.எஸ் தொடக்கத்தில் தொடங்கவில்லை. ஹெட்கேவார் பேசும் முன்பே பலர் இந்துத்வத்தை பற்றி பேசியிருக்கிறார்கள். அதனால், சுவாமி தயானந்த சரஸ்வதியில் இருந்து இந்துத்வ இயக்க வரலாறு தொடங்குகிறது. ஆரிய சமாஜத்தின் தொடக்கத்தில் இருந்து வாசகன் பயணம் செய்கிறான்.
இந்து மதத்தில் பல தெய்வங்கள் இருப்பதை தவிர்த்தால் மட்டுமே இந்துக்கள் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற விரஜானந்தரின் கருத்தையும் இந்த நூல் பதிவு செய்கிறது. லாலா லஜபதி ராய், பாலகங்காதர திலகர், சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் இந்துத்வத்தின் அபிமானிகளாகவே இருந்திருக்கிறார்கள்.
இந்துத்வ கொள்கை பரப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தொடங்கிய ஹெட்கேவார், “ஆர்.எஸ்.எஸ். இந்துத்வ இயக்கத்தின் முத்திரை அல்ல அது தான் அவர்களின் முகவரி” என்கிறார். அவர்களுக்கான சட்டத்திட்டங்களும் உருவாக்குகிறார்.
இப்படி, சிறுக சிறுக இந்துத்வ கொள்கையை இந்தியா முழுக்க பரப்பிக் கொண்டு இருந்தவர்கள் ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரியாக பார்க்கத் தொடங்கியது காந்தி படுகொலையில் தான். இந்துத்வ அனுதாபியான பட்டேல் ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்கும் அளவிற்கு கொண்டு சென்றது. அவர்களின் முன்னேற்றத்திற்கு அவர்களாகவே தோண்டிய புதைக்குழி ‘காந்தி படுகொலை’.
இதற்கு, வரலாற்று ரிதியாக அவர்கள் எவ்வளவு விளக்கம் கூறினாலும், சாமாதானம் செய்தாலும் அது மன்னிக்கப்படாத குற்றமாக கருதப்படுகிறது. அதை உணராமால் செய்தது மிகப்பெரிய தவறு.
1961ல் நடந்த இந்தியா – சீனா போரில் ஆர்.எஸ்.எஸ் தங்கள் தேசப்பற்றை காட்டினர். நேரு நட்பு நாடு என்று நினைத்த சீனா முதுகில் குத்த, எதிரி என்று நினைத்த ஆர்.எஸ்.எஸ் களப்பணியில் உதவி செய்கிறது. ஆர்.எஸ்.எஸ் கடின முயற்சியால் அவர்கள் மீது இருந்த தடை விலகியது. இந்திய சுதந்திரத்தின அணி வகுப்பில் சேர்க்கப்பட்டார்கள்.
*
இன்று வரை, அவர்கள் மீது பல விமர்சனங்கள் இருக்கிறது. அவர்கள் பல தவறு செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தேசப்பற்று சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. யுத்தக்காலத்தில் தங்களுக்கு எதிரான மத்திய அரசுக்கு ஆதரவு தந்திருக்கிறார்கள். யுத்தக்களத்திற்கு சென்று சேவை செய்திருக்கிறார்கள்.
அது இருக்கட்டும். பாதிக்கப்பட்ட எல்லை வீரர்களுக்கு சேவை செய்வது தேசப்பற்று என்றால், இந்திய எல்லைக்குள் பொருட்கள் நாசம் செய்யலாமா ? இஸ்லாமியர்கள் நடத்தும் வணிக வலாகத்தை தாக்கலாமா ? இது இந்திய வளர்ச்சியை பாதிக்கும் என்பது தெரியாதா ? உண்மையில் அதற்கு நியாயமாக பதில் அவர்களால் அளிக்க முடியாது. எந்த நாச வேலைகளை யார் செய்தாலும் நியாயமான காரணம் கிடையாது என்பது உண்மை.
முதல் ஐந்நூறு பக்கங்கள் இந்துத்வ வரலாற்றை விறுவிறுப்பாக பேசும் இந்தப்புத்தகம், ஜனதாக் கட்சி தொடங்கியதும் கொஞ்சம் சோர்வாக செல்கிறது. பா.ஜ.க கட்சி பற்றி தொடங்கியதும் இயக்க வரலாறாக இருந்த நூல். அவர்களின் தேர்தல் அரசியல் வரலாறாக மாறிவிடுகிறது. பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தில் எப்படி ஈடுப்பட்டார்கள், யாரோடு எப்படி கூட்டணி வைத்துகொண்டார்கள், தங்கள் கொள்கையில் எப்படி சமரசம் செய்து கொண்டார்கள் என்ற விபரம் தான் அதிகமாக இருக்கிறது.
பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்.எஸ்.எஸ் எந்த அளவுக்கு உதவினார்கள், அவர்களின் சமரசத்திற்கு ஆதரவாக இருந்தார்களா போன்ற விபரங்கள் கொஞ்சம் குறைவாக இருக்கிறது.
பாபர் மசூதி தொடங்கும் போது கொஞ்சம் விறுவிறுப்பு எடுக்க, 1996ல் தேர்தல் தொடங்கியது மெதுவாக செல்கிறது. குஜராத் கலவரம் மீண்டும் விறுவிறுப்பு எடுக்கிறது.
**
இந்த நூல்… இந்துத்வத்திற்கு ஆதரவாகவோ, எதிராகவோ இல்லை என்பதை குறிப்பிட வேண்டும். இந்துத்வ வரலாற்றை தெரிந்து கொள்ள நினைக்கும் இந்துத்வ ஆதரவார்களும், எதிர்த்து பிரச்சாரம் செய்யபவர்களும், இந்துத்வத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள நினைப்பவர்களும் வாசிக்கலாம்.
இந்திய இறையான்மை இஸ்லாமியர்கள் வெடிகுண்டால் பாதிக்கப்படுகிறது என்று சொல்லும் இந்துத்வவாதிகள், அவர்கள் கையால் இருக்கும் கத்தியாலும் பாதிக்கப்படுகிறது என்ற உண்மையை உணர வேண்டும்.
அவர்கள் வெடிகுண்டு எடுத்ததை கேட்காமல், நான் கத்தி எடுத்தது உனக்கு தவறாக இருக்கிறதா ? என்று இந்துத்வவாதிகளிடம் கேள்வி வரலாம்.
அதற்கு பதில் ‘இந்த நூல் விமர்சனம்’ இத்தோடு முடிவடைந்தது என்பது
**
இந்துத்வ இயக்க வரலாறு
– ஆர்.முத்துக்குமார்
- Rs.999
1 comment:
இந்துத்துவத்தைப் பற்றித் தவறான பல கருத்துக்கள் இன்று நம்மிடையே நிலவிவருகிறது. இந்துத்துவம் என்பது பிற மதங்களையும் அவற்றின் கோட்பாடுகளையும் எதிர்ப்பதல்ல; காவி அரசியலும் இந்துத்துவக் கோட்பாடுகளும் ஒன்றல்ல. இன்றைய நிலையில் இந்துத்துவம் என்பது ஒரு சில கட்சிகளால் வெறும் ஓட்டுவேட்டைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சரியான புரிதலின்மையால் பிற சமூகத்தினரும், மதத்தினரும் அதை எதிர்த்துவருகின்றனர்.
Post a Comment