சென்ற சனிக்கிழமை பள்ளி நண்பர்கள் சந்திப்பு நடந்தது. சென்ற வருடம் செப்டம்பரில் நடந்த முதல் நிகழ்வில் 19 பேர் கலந்துக் கொண்டோம். இந்த முறை ஒன்பது பேர் மட்டுமே !!
எண்ணிக்கை முக்கியமில்லை. பள்ளி நண்பர்களின் சந்திப்பு தான் மிக முக்கியமாகனது.
பள்ளிக்காலத்தில் எனக்கு இருந்த முகத்தை இது போன்ற நிகழ்வுகள் தான் நினைவுப்படுத்துகிறது.
நான் எப்படி இருந்தேன் என்பதை அவர்கள் சொல்லும் போது தான் நான் எப்படி மாறியிருக்கிறேன் என்று உணர முடிகிறது. என்னை நானே சுய பரிசிலனை செய்ய வேண்டியதாக இருக்கிறது.
நான் மட்டுமல்ல... பள்ளியில் இருப்பது போல் யாராலும் கடைசி வரை இருக்க முடியாது.
ஒவ்வொரு மாற்றத்திற்கும் நம்மை சுற்றியிருக்கும் சொந்தம், உறவு, அலுவலகம், வியாபாரம் என்று பல காரணங்கள் இருக்கிறது.
வாழ்க்கையில் சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற்போல் மாறித்தான் ஆக வேண்டும். நாம் மாறாமல் இருந்தால் ஏமாற்றப்படுவோம் என்பது தான் நிதர்சன உண்மை.
இந்த நிகழ்வின் போது சா.கந்தசாமியின் “தொலைந்து போனவர்கள்” மனதில் வந்து போனது.
தாமோதரன் தனது பள்ளி நண்பர்களை மீண்டும் சந்தித்து, பள்ளி நாட்களில் எடுத்துக் கொண்ட புகைப்படம் போல் ஒன்று எடுத்துக் கொள்ள விரும்புகிறான். ஆனால், பள்ளி நாட்களில் இருந்த நட்பு அப்படியே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேலைகள். எதிர்பாராத நட்பின் சந்திப்பைக் கூட அலட்சியமாக பார்க்க வைக்கிறது.
பாவம் தாமோதரன். அவம் மட்டும் அப்படியே இருக்கிறான் என்று நினைக்கும் போது, ராமசாமி பாத்திரம் தோள் மேல் கை போடுகிறான். “ச்சீ கைய எடு” என்று சொல்லும் வாக்கியத்தில் அவனும் பழைய நண்பனாக இல்லை என்றே தெரிகிறது.
நகர வாழ்க்கையிலும், பொருளாதார வாழ்க்கையிலும் எத்தனையோ நண்பர்கள் இருப்பார்கள். உண்மையில் அவர்களோடு நாம் நாமாக இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. ஆனால், பள்ளி, கல்லூரி காலத்து நண்பர்களிடம் நாம் நாமாக நடந்துக் கொள்ள முடியும். அப்படி கிடைத்த வாய்ப்பிலும் நம்முடைய தற்போதைய ஸ்டேடஸ், பணப்பலத்தை காட்ட நினைப்பவர்கள் தன்னுடைய முகத்தை தொலைக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை தான் காட்டுகிறது.
பள்ளி நண்பர்கள் சந்திப்பில் வர முடியாமல் போக நியாயமான காரணம் இருக்கலாம். ஆனால், இதுப் போன்ற சந்திப்பில் கலந்துக் கொள்ளும் போது நமக்கு உற்சாகம் பிறக்கும். மற்ற வேலையில் உத்வேகமாய் செயல்பட முடியும் என்பது அனுபவப் புர்வமாக உணர்கிறேன்.
இவ்வளவு சொல்லும் நான் அடுத்த நிகழ்வுக்கு வர முடியாமல் போகலாம். ஆனால், அப்படி ஒன்று எக்காரணத்திற்காகவும் நடந்து விடக் கூடாது என்பது தான் என் விருப்பம்.
No comments:
Post a Comment