வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, January 27, 2014

6174 - க.சுதாகர்

சென்ற புத்தகக் கண்காட்சியில் பெரும்பாலும் நாவல், சிறுகதைகளாக வாங்கினேன். ஆனால், சரித்திரம் சார்ந்த நூல்கள் எழுத வேலையிருந்ததால், அதை சார்ந்த புத்தகங்களை தேடி படிக்க வேண்டியதாக இருந்தது. பல புத்தகங்கள் படிக்க படாமல் இருந்தது.

இந்த புத்தகக் கண்காட்சி முடிவதற்குள் சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகத்தை படித்ததாக வேண்டும் என்று எடுத்த முதல் புத்தகம் Sudhakar Kasturi யின் 6174.



சுஜாதா இல்லாத குறையை நிறப்பியிருக்கிறார். இதை விட பெரிய வார்த்தை அவரை பாராட்ட எனக்கு கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை விறு விறுப்பு. கடைசியில் ஆங்கிலப் பட பாணியில் இரண்டாம் பாகத்திற்கு ஒரு நாட் வைத்து முடித்திருப்பது க்ளாஸ் !!

 ஒரு திரைப்படமாக வரக் கூடிய நாவல் என்று சொல்லலாம்.

பிஸிக்ஸ் பிராட்டிக்கல்ஸில் மனப்பாடம் செய்து எழுதியவர்கள் (என்னை உட்பட) இந்த நாவலில் வரும் விளக்கங்கள் கொஞ்சம் புரிவது கடினம். கிரிஸ்டல், பிரிஸம் என்றாலே அலருபவர்கள் அந்த பகுதியை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் படிக்கலாம்.

6174 - எண்ணில் பெருமை சொல்லும் போது வியக்க வைக்கிறது. பல பகுதிகளை படிக்கும் போது “இது உண்மை தானா ?” என்று இணையத்தை தேடுகிறோம்.

சரித்திர நாவல் எழுதுபவர்கள் அதிகமாக தகவல் திரட்டி எழுத வேண்டும். ஆனால், அறிவியல் கதைகளில் ஒரு இரு விஷ்யங்களை வைத்து எழுதிவிடலாம். அறிவியல் நாவலுக்கு சுதாகர் சரித்திர நாவலுக்கு நிகராக உழைத்திருக்கிறார் என்று சொல்லலாம். அதற்கான ஆதாரங்களை பின் இணைப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

வாழ்த்துக்கள் சுதாகர் !!

இணையத்தில் வாங்க.....

Tuesday, January 21, 2014

பெரியார் ரசிகன் - யுவ கிருஷ்ணாவின் விமர்சனம்

நீங்கள் நாத்திகரோ ஆத்திகரோ பிரச்சினையில்லை. தமிழர் என்றால் உங்களுக்கு பெரியார் தவிர்க்க முடியாதவர். நாத்திகர்கள் பலரும் பெரியாரை கடவுளாக்கி வழிபட ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், ஆத்திகர்கள் பெரியாரின் தாக்கத்தால் அடையாளச் சிக்கல் அவஸ்தையில் அலைக்கழிக்கப் படுகிறார்கள்.

இந்த சுவாரஸ்யமான முரணை களமாக்கி நாவல் ஆக்கியிருக்கிறார் குகன்.


எம்.ஜி.ஆர் ரசிகன், சிவாஜி ரசிகன், ரஜினி ரசிகன், கமல் ரசிகன், விஜய் ரசிகன், அஜீத் ரசிகன் என்று கேள்விப்பட்டிருப்போம். இந்நாவல் பெரியார் ரசிகனைப் பற்றியது. பெரியாருக்கு தொண்டர்தான் உண்டு. ரசிகன் இருக்க முடியுமா என்று கேட்டால் ஏன் இருக்கக்கூடாது என்கிற கேள்வியை எழுப்பி, சுவாரஸ்யமான சமகால வரலாற்றை புனைவில் முயன்றிருக்கிறார் குகன்.

இளம் தலைமுறை எழுத்தாளர்களின் இம்மாதிரியான துணிச்சலான முயற்சிகள்தான் எதிர்கால தமிழ் இலக்கியத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. எழுத்துப்பிழை, எடிட்டிங் பிரச்சினைகள் உள்ளிட்ட சில குறைகளை களைந்துப் பார்த்தால் ‘பெரியார் ரசிகன்’ குறிப்பிடத்தக்க சமீபத்திய நாவல்களில் ஒன்று.

நன்றி : யுவகிருஷ்ணா ( https://www.facebook.com/photo.php?fbid=10203079572257225&set=a.10201891742002211.1073741826.1443523801 )

இணையத்தில் வாங்க...

சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க...

டிஸ்கவரி புக் பேலஸ் - 307- 308, 353-354
நிவேதிதா புத்தகப் பூங்கா - 671
டிங்கு புக்ஸ் - 751

Friday, January 17, 2014

ராயல்டி பிரச்சனை !

ஒரு விஷயத்தை தெளிப்படுத்திவிடுகிறேன். ’தி இந்து’ வில் வந்திருப்பது மகா மொக்கையான கட்டுரை. பதிப்பாளர் - எழுத்தாளர் பிரிச்சனை இரண்டு பக்கம் சரியாக அலச வேண்டும். இந்து கட்டுரை 1% கூட செய்யவில்லை. அந்த கட்டுரையை தூக்கிப் போட்டுவிட்டு பிரச்சனைக்கு வருவோம்.

இன்றைய சூழ்நிலையில் புத்தகம் கொண்டு வருவது மிக பெரிய விஷயமில்லை. அதை சரியாக சந்தைப்படுத்தவும், வாசகர்களின் நம்பத்தன்மையை பெருவது தான் மிகப் பெரிய விஷயம். அதற்கு பதிப்பாளரின் உதவித் தேவை. நல்ல புத்தக கொண்டு வர பதிப்பாளருக்கு எழுத்தாளர் உதவி தேவை.

புத்தகங்களுக்கு ராயல்டி பிரச்சனை அனைத்து பதிப்பகம் - எழுத்தாளர் மத்தியில் நடந்துக் கொண்டு இருக்கும் விஷயம். இரண்டு பக்கமும் பரஸ்பர நம்பத் தன்மை வரும் வரையில் ஓயப்போவதில்லை.

எழுத்தாளர் தரப்பில் பலர் பேசிவிட்டார்கள். பதிப்பாளர் சரியான புத்தக விற்பனை எண்ணிக்கை கொடுப்பதில்லை, ராயல்டி கொடுப்பதில்லை, முதல் பதிப்பு என்று தொடர்ந்து இரண்டு, மூன்று வருடம் வெளியிட்டு வருகிறார்கள். ஒரு எழுத்தாளனாக எனக்கு இந்த பாதிப்பு இருக்கிறது.

என்னுடைய முதல் சிறுகதை தொகுப்பு ‘நடைபாதை’(2008) வனிதா பதிப்பகம் வெளியிட்டது. இன்று வரை ஒரு பைசா கூட ராயல்டி தரவில்லை. அந்த புத்தகத்திற்கு அரசு நூலக ஆணையில் 1000 பிரதிகள் சென்ற விபரம் எனக்கு தெரியும்.

 ராயல்டி பற்றி மறை முகமாக கேட்ட போது, பிரதிகள் இன்னும் விற்பனையாகவில்லை என்றனர்.

“எத்தனை பிரதிகள் விற்பனையாகவில்லை” என்று கேட்டேன்.

“400” என்றனர்.

“ நானே வாங்கிக் கொள்கிறேன். கழிவு விலையை போட்டுக் கொடுங்கள்” என்றேன்.

அத்தனை பிரதிகளை ரூ.7000 வாங்கினேன். நானே அதை விற்பனை செய்ததில் ரூ.8240 கிடைத்தது. கையில் நான்கு, ஐந்து பிரதிகள் மட்டுமே இருக்கிறது. முதலீட்டு போக ரூ.1240 என்னுடைய ராயல்டி என்று நான் நினைத்துக் கொண்டேன்.

வனிதா பதிப்பகம் மீது இன்று வரை எனக்கு எந்த வருத்தமோ, கோபமோ இல்லை. இப்போதும், மயிலைவேலன் அவர்களை பார்த்தால் நன்றாக பேசுவேன். அதன்பின், நான் எழுதிய புத்தகத்தை அவருக்கு கொடுக்கவில்லை. நானே புத்தகம் போட “நாகரத்னா பதிப்பகம்” தொடங்கினேன். அப்போது தான் பதிப்பாளர் கஷ்டம் எனக்கு புரிந்தது.

நான் பதிப்பாளராகி புத்தக சந்தையை தெரிந்துக் கொண்டேன். பபாஸி உறுப்பினர், நூலக ஆணை போன்ற சில விஷயங்கள் மட்டும் இன்று வரை எனக்கு பிடிப்படவில்லை. நேர்மையற்ற முறையில் என்னை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. அதனால், நான் பதிப்பு தொழிலில் இருந்து இப்போது விலகியிருக்கிறேன்.

”பதிப்பாளர்கள் ராயல்டி வழங்கவில்லை” என்று கூறும் எழுத்தாளருகளுக்கு ஒரு விஷயம் சொல்லிக் கொள்கிறேன். உங்களின் புத்தகத்தை நீங்களே போட்டுப் பாருங்கள். அப்போது தெரியும் பதிப்பாளர் தரப்பில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள்.

புத்தகத்தோடு எழுத்தாளரின் பெயரையும் சேர்த்து தான் பதிப்பகம் பிரமோட் செய்கிறார்கள். எழுத்தாளனை பிராண்டாக மாற்றும் பதிப்பகத்திற்கு எழுத்தாளன் எதுவும் தருவதில்லை.

"சாரு ’ராஸலீலா’ நன்றாக விற்பனையானது எனக்கு ராயல்டி தரவில்லை” என்கிறார். அவரின் மற்ற புத்தகங்கள் விற்பனையாகாமல் நஷ்டத்தை யார் ஏற்றுக் கொள்வார். உயிர்மை “சாரு” வை பிராண்டாக மாற்றியதை கிழக்கு பயன்படுத்தியது. இது உதாரணம் மட்டுமே. உடனே, நான் Manushya Puthiran க்கு வக்காளத்து வாங்குகிறேன் என்று திசைத்திருப்ப வேண்டாம்.

புரியும் படி சொல்வதென்றால் பதிப்பாளர் X என்பவர் எழுத்தாளர் Y என்பவரின் இரண்டு புத்தகம் போட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு புத்தகம் லாபம், இன்னொரு புத்தகம் நஷ்டம். பதிப்பாளர் எழுத்தாளருக்கு ராயல்டி வழங்கலாமா என்பதை நீங்கள் தான் நேர்மையாக சொல்லுங்கள்.

என்னளவில் எனக்கு வழங்கப்படும் 7.5% - 10% ராயல்டி சரிதான். ஒரு வேளை நாளை பதிப்பாளரோடு பிரச்சனையென்றால் என் புத்தகங்களை வாங்கிக் கொண்டு, களத்தில் இறங்கி விற்பனை செய்ய எனக்கு தெரியும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. புத்தகம் விற்பனை செய்வதில் “எழுத்தாளன்” என்ற ஈகோ எனக்கு என்றும் இருந்ததில்லை.

மற்ற எழுத்தாளர்களையும் இதையே செய்யுங்கள் என்று நான் சொல்லவில்லை. நீங்கள் உங்கள் பிரச்சனை பேசும் முன்பு எதிர் தரப்பில் இருக்கும் பிரச்சனையைப் புரிந்துக் கொள்ளுங்கள் என்று தான் கேட்கிறேன்.

ஒரு பதிப்பகம் நடத்த அலுவலகம், அச்சு செலவு, வேலை ஆட்களுக்கு சம்பளம், புத்தகங்கள் எடுத்து வரும் வண்டி செலவு, புத்தகக் கண்காட்சிக்கு ஆகும் செலவு, வெளியூரில் புத்தகக் கண்காட்சி என்றால் தங்கும் அறை, சாப்பாட்டு செலவு என்று பதிப்பகங்கத்திற்கு ஏகப்பட்ட செலவுகள் இருக்கிறது. இத்தனை செலவுகளும் புத்தக விற்பனையில் வருவதை ஈடுக்கட்ட வேண்டும்.

அதற்காக பதிப்பகங்கள் எல்லாம் உத்தமப் புத்திரர்கள் என்று சொல்லவில்லை. இன்று, புத்தகத்துறை வளராமல் இருப்பதற்கு முன்னனி பதிப்பகங்கள் என்று மார்தட்டிக் கொள்பவர்கள் தான் காரணம். வாசகர்களுக்கு தேவையான நூல்களை போடுவதில்லை, தவறான நூல்களை லஞ்சம் கொடுத்து நூலகத்திற்கு அனுப்புவது, வாசகர்களின் கருத்துக்கு மதிப்பு, புது வாசகர்களை உருவாக்காமல் இருப்பது போன்ற விஷயங்களில் தொலைநோக்கு பார்வையில்லாமல் செயல்படுகிறார்கள்.

நாளை, புத்தகத்துறை அழிந்தால் பதிப்பாளர்கள் தான் காரணமாக இருக்க முடியும். வாசகர்கள் அல்ல.

இதை இன்னும் முழுமையாக நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால், பத்து வருடம் முன் தொடங்கிய பதிப்பகத்தில் இருந்து பேசக் கூடாது. நூறு வருடம், பவள விழா கொண்டாடிய பதிப்பகத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

ஏன்னென்றால் இந்த பிரச்சனைக்கு ஆணிவேர் அங்கு இருந்து தான் தொடங்குகிறது.

Thursday, January 16, 2014

மண்ட்டோ படைப்புகள்

ஒரு எழுத்தாளன் வாழ்வாதாரத்திற்கு வணிக ரீதியாக என்ன தான் எழுதி கூவித்தாலும், தான் எழுத்தாளனாக வாழ்ந்ததிற்கு பல ஆண்டுகள் தன் பெயரை பேசுவது போன்ற ஒரு படைப்பிலக்கியத்தை படைக்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். அப்படி படைப்பிலக்கியத்தை படைத்து என்ன சாதித்துவிட போகிறோம் என்பவர்களுக்கு சாதித்துக் காட்டிய மண்ட்டோவின் படைப்புகள் எடுத்துக்காட்டாக இருக்கும்.


இந்திய – பாகிஸ்தான் பிரிவினை முன் பிறந்த படைப்பாளியான மண்ட்டோ, அரசியல் சூழ்நிலையால் பாகிஸ்தான் நாட்டை தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருந்தது. பிரிவினை முன்பு 3 முறையும், பிரிவினை பிறகு பாகிஸ்தானில் 3 முறையும் தனது படைப்புக்காக சிறை சென்றவர்.

பிரிவினைப் போது ஏற்ப்பட்ட வலியும், வேதனைகள் மட்டுமல்லாமல், வன்முறையில் ஈடுப்பட்டவர்களின் குற்றவுணர்வையும் தனது படைப்பின் பிரதிபலித்திருக்கிறார்.

“என் கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என்கதைகளில் எந்தத் தவறும் இல்லை” என்கிறார் மண்ட்டோ. தன் படைப்பு மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறார்.

ஒவ்வொரு கதையை கனத்த இதயத்தோடு கடந்து சென்று அடுத்த கதையை சென்றேன். ஒவ்வொரு கதைகளிலும் ஐம்பது வருடக் காலக்கட்டத்தை நினைவுப்படுத்தவில்லை. இப்போதுக் கூட பொருந்தும் வகையாக சம்பவங்களை நினைக்க வைக்கிறது.

 நண்பர் Prince Ennares Periyar “திற" ( Open it) என்ற மண்ட்டோவின் சிறுகதையை மையமாக வைத்து ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார். இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்கு பதிலாக குஜராத் இனக் கலவரத்தை களமாக மாற்றியிருக்கிறார். காலங்கள் மாறினாலும், பின்னனி மாறினால் மனிதனுக்கு இருக்கும் மிருக குணமும், அதனால் மற்றொரு மனிதனுக்கு ஏற்படும் வலியும் மாறுவதில்லை என்பதை இந்த குறும்படம் சொல்கிறது. 

சர்ச்சை செய்து விளம்பரம் தேடிக் கொள்ளும் படைப்பாளிகளின் படைப்பு சில நாட்களிலே நீர்த்து போகும். ஆனால், மண்ட்டோ போன்றவர்களின் படைப்புகள் இன்னும் ஐம்பது வருடங்களுக்கு மேல் இருக்கும். விவாதிக்கப்படும்.

இணையத்தில் வாங்க.. 

Wednesday, January 15, 2014

சினிமா 1913-2013 – 3. திரையரங்குகள் தந்தை சாமிக்கண்ணு வின்செண்ட்

இன்று சினிமாவில் கமல், ரஜினி படம் வெளிவருகிறது என்றால் நான், நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். காரணம், போட்ட பணத்தை ஒரு வாரத்தில் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கை. ஆனால், சினிமா என்பது வியாபாரமாக இல்லாத காலத்தில், வியாபாரம் தெரியாதவர்கள் மத்தியில் மக்களிடம் எப்படி சினிமாவை கொண்டு சென்று இருப்பார்கள் என்பதை ஆராய வேண்டிய ஒன்று.

3டி, அரோ 3டி, டிஜிட்டல் என்று பல வகை திரையரங்குகள் இருக்கிறது. ஆனால், ஆரம்பக்காலத்தில் படங்கள் ஓடியது டென்ட் திரையரங்குகளில் தான். அந்த டென்ட் கொட்டையில் படங்களை எடுத்து மக்களுக்கு கொண்டு சேர்த்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்கள்.

ஒவ்வொரு மொழியின் திரைப்படங்களுக்கு ஒரு தந்தையிருக்கிறார். ஆனால், தென்னிந்தியாவில் சினிமாவை திரையரங்கு மூலம் கொண்டு சேர்த்த ஒரு தந்தை இருக்கிறார். அவர் தான் ”சாமிகண்ணு வின்செண்ட்”. 



அன்றைய காலத்தில் சினிமாவின் முக்கிய இடமாக கோவை நகரம் இருந்தது. 1905ல் ரயில்வே ஊழியராக இருந்த சாமிக்கண்ணு வின்செண்ட் அவர்கள் ’டு பாண்ட்’ என்ற பிரென்ச்காரரை சந்தித்தார். அவரிடம் இருந்து படங்களை திரையிட ஒரு பிலிம் புடோஜெக்டரையும், பிரென்ச் படமான "Life of Jesus Christ" வாங்கிக் கொண்டார். அந்த படத்தை ஊர் ஊராக சென்று திரையிட தொடங்கினார்.

குறைவான மக்கள் மட்டுமே படம் பார்க்கக் கூடிய புரோஜக்டர் மூலம் படம் திரையிடப்பட்டது. மக்கள் படத்தை பார்க்க ஆர்வமாக வந்தனர். குறிப்பாகம் ’ஏசு’ வரும் காட்சியை பிரம்பித்தனர். அப்போது படம் திரையிடுவதற்கு இடம் ஒன்று தான் மிக பெரிய குறையாக இருந்தது.

பெரிய இடத்தில் படத்தை திரையிட்டால் இன்னும் மக்கள் வருவார்கள் என்று திட்டமிட்டு, சாமிகண்ணு வின்செண்ட் தனது குழுக்களை கொண்டு மக்கள் படங்களை பார்க்க தற்காலிக டெண்ட் திரையரங்குகளை உருவாக்கினார். தென் இந்தியாவில் முதல் டூரிங் டாக்கிஸ் இப்படி தான் உருவானது.

பொதுவாக இது போன்ற டூரிங் தியேட்டர்கள் கொண்டு வரும் திரைப்படங்கள் டெண்ட் தியேட்டரில் திரையிடப்படும். சுமார் 1000 பேர் அமர்ந்து பார்க்கலாம். படத்தை 2 வாரம் ஓட்டுவார்கள். அதன் பிறகு அந்த படத்தை எடுத்துக் கொண்டு வேறு ஊருக்கு சென்று படம் திரையிடுவார்கள்.

ஒவ்வொரு முறையும் படத்தை திரையிட ஏற்பாடு செய்வதற்கு பதிலாக, நிரந்தரமாக திரையிட ஒரு தியேட்டரை உருவாக்க நினைத்தார். கோவையில் அதற்கான இடமும் சாமிகண்ணுக்கு கிடைத்தது.

1917ல் தென்னிந்தியாவில் முதல் நிரந்தர திரையரங்கான வெரைட்டி ஹால் என்ற திரையரங்கு உருவாக்கி படங்களை திரையிடத் தொடங்கினார். ( இந்த காலக்கட்டத்தில் சென்னை கெய்ட்டி, கிரவுன் தியேட்டர் எல்லாம் டெண்ட் திரையரங்கமாக இருந்தது.)

இன்றும், கோவையில் இந்த சாலையின் பெயர் வெரைட்டி ஹால் சாலை. ஆனால், வெரைட்டி ஹால் திரையரங்கில் தற்போதிய டிலைட் தியேட்டர் !!!

வெரைட்டி ஹாலுக்கு கிடைத்த வர வேற்பைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஊரிலும் நிரந்த திரையரங்குகள் உருவாக்க தொடங்கியது.

உதகமண்டலம், மதுக்கரை, ஈரோடு, அரக்கோணம் போன்ற படகுதிகளோடு நின்றுவிடாமல் கேரளாவிலும் பல திரையரங்குகள் தொடங்கினார் சாமிகண்ணு வின்சென்ட். இவர் தமிழகத்தோடு படத்தை திரையிடுவதை நிறுத்தாமல் ஆப்கானிதானில் பெஷாவர், பாகிஸ்தானின் லாகூர், பர்மாவின் ரங்கூன் என்று தெற்காசிய முழுக்க பயணம் செய்து படங்களை திரையிட்டார்.

பல படங்களை வெளிநாட்டில் இருந்து வர வழைத்து திரையிட்டார். பிறகு, படம் தயாரிப்பதிலும் இறங்கினார். ஆனால், படம் விநியோகத்தில் வெற்றிகரமாக செயல்பட்ட சாமிக்கண்ணு பட தயாரிப்பில் வெற்றிப் பெற முடியவில்லை. அதனால், பட விநியோகத்தில் அதிக கவனம் செலுத்தினார்.

இந்த காலக்கட்டத்தில் தமிழில் முதல் பேசும் படமான, தென்னிந்தியாவில் இரண்டாவது பேசும் படமான எச்.எம்.ரெட்டி இயக்கத்தில் “காளிதாஸ்” படம் வெளியானது. ரூ.8000 செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூ.75000 வசூலானது. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் டி.பி.ராஜலஷ்மி. பின்னாளில், இவர் “சினிமா ராணி” என்ற அழைக்கப்பட்டார். தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குனரும், பெண் தயாரிப்பாளரும் இவரே !!!

பேசும் படங்களுக்கு கிடைத்த ஆதரவை உணர்ந்த சாமிகண்ணு செண்டரல் ஸ்டுடியோவோடு சேர்ந்து “வள்ளி திருமணம்” (1933) படம் எடுத்தார். “காளிதாஸ்” படத்தில் நாயகியாக நடித்த டி.பி.ராஜலஷ்மி இந்தப் படத்திற்கும் நாயகியாக நடித்தார்.

இந்த படமும் வசூலில் சக்கை போடு போட்டதால், பலர் பேசும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கினர். அதே ஆண்டில் தான் தென்னிந்தியாவின் கடைசி மௌனப்படமான “மார்தாண்ட வர்மன்” வெளியானது.

சாமிகண்ணுவை தொடர்ந்து ”முதலாளி” என்று அழைக்கப்படும் டி.ஆர்.சுந்தரம் அவர்கள் சேலத்தில் மார்டன் தியேட்டர் தொடங்கி (1935) சினிமாவுக்கு தமிழகத்தில் புதிய அடையாளமாக மாறினார்.

இன்று சினிமாவை பார்க்க பலர் படையெடுத்து வருவது முக்கிய காரணம் அன்று சாமிகண்ணு வின்செண்ட் சினிமாவை பிரோஜெட்டர் தூக்கிக் கொண்டு ஊர் ஊராக படங்களை திரையிட்டதால் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

கட்டுரைக்கு உதவியது : 
இந்து ஏப்ரல் 30, 2010 மற்றும் மார்ச் 22, 2011
பேசாமோழி – ஆவணப்படம். இயக்குனர் செந்தமிழன்

நன்றி : உரத்த சிந்தனை, ஜனவரி, 2014

Monday, January 13, 2014

பெரியார் ரசிகன் - சில எதிர்வினைகள்

மூன்று மாதம் முன்பு டிஸ்கவரி புக் பேலஸில் ஒரு மாதப் பத்திரிக்கை விஷயமாகத் தான் அருள் செல்வன் என்பவரை சந்தித்தேன். ஒரு மணி நேரம் மேல் பேசினோம்.



நாங்கள் பேசிய பதினைந்தாவது நிமிடத்தில் இருந்து மாத பத்திரிக்கை பற்றி மறந்து திராவிடத்தைப் பற்றியும், அதன் வளர்ச்சி, இப்போதைய பார்வை போன்ற பொது விஷயங்களை விவாதிக்க தொடங்கினோம்.

இந்த இடத்தில் அருள் செல்வனின் பின்னனி சொல்லிவிடுகிறேன். அவரின் தாத்தா சிவாஜி நடித்த “பராசக்தி” பாடல் எழுதியவர். திராவிட பின்னனியில் இருந்து வந்தவர்.



பேசிக் கொண்டு இருக்கும் போது எனது “பெரியார் ரசிகன்” நாவலைப் பற்றி பேசினார். எனக்கு வியப்பாக இருந்தது. நாவல் வந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. அடுத்த அடுத்த நூல்கள் எழுதும் வேலையில் இருந்ததால் “பெரியார் ரசிகன்” நாவலுக்கான வெளியிட்டு விழாக் வைக்கவில்லை. முகப் புத்தகத்தில் ஒரு ஸ்டேடஸ் மட்டும் போட்டேன். கொஞ்ச நாட்களுக்கு பிரோபைல் போட்டோவாக அட்டைப்படத்தை வைத்திருந்தேன். அருள் செல்வன் முகப் புத்தகத்தில் இல்லை.

பேசும் போது, “ கடவுள் மறுப்பு கொள்கை ஏற்றுக் கொள்வது என்பது எளிதான விஷயமில்லை. பெற்றோர்கள், உறவினர்கள் எல்லோரையும் பகைத்துக் கொள்வதற்கு சமம். மனதில் மிக பெரிய போராட்டம் நடத்திய பிறகே கடவுள் மறுப்பை பேசுவதற்கு துணிச்சல் வரும். உங்கள் நாவலில் சரியாக கையாண்டு இருக்கிறீர்கள்” என்றார்.

”பெரியார் ரசிகன்” என்று தலைப்பு வைத்ததும் பெரியாரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு அல்லது குறிப்பு எழுதியிருப்பதாக பலர் நினைத்தார்கள். இது ”நாவல்” என்று சொல்லுவதற்காகவே வெளியிட்டு விழா வைக்க வேண்டும் என்று இருந்தேன். பல வேலைகளின் நடுவில் என்னால் அதைப் பற்றி சிந்திக்க முடியவில்லை. எந்த விளம்பரமும் இல்லாமல் ஒரு நாவலை வாசித்து கருத்து கூறுவது மிக பெரிய விஷயம்.

அதன் பிறகு மாத பத்திரிக்கை தொடங்கும் முயற்சி கைவிடப்பட்டது. அவரை தொடர்பு கொள்ளவில்லை. ஆனால், அவரின் விமர்சனம் எனக்கு முக்கியமாக இருந்தது.

அன்று அவரிடம் பேசும் போது அண்ணாவின் அரசியல் குருவான பி.பாலசுப்பிரமணியனை பற்றி எழுதிக் கொண்டு இருப்பதாகவும், விரைவில் விகடன் பிரசுர வெளியிடாக வரப் போகிறது என்று கூறினார்.


இந்த புத்தகக் கண்காட்சியில் விகடன் அரங்கில் அவர் எழுதிய “அண்ணாவின் அரசியல் குரு” புத்தகம் பார்த்தப் போது அவரின் விமர்சனமும் நினைவு வந்தது.

யுவகிருஷ்ணாவும் “பெரியார் ரசிகன்” நாவலை படித்து “முதல் நாவல் போல் இல்லை. விரைவில் உங்கள் நாவலைப் பற்றி விமர்சனம் எழுதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த வருடம் நான் எழுதிய ஐந்து புத்தகங்கள் வந்திருந்தாலும், படைப்பிலக்கியம் சார்ந்து வந்த ஒரே நூல் “பெரியார் ரசிகன்” என்பதால் எனக்கு இந்த நூல் மிகவும் முக்கியமானது.

சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம் : 

நிவேதிதா புத்தகப் பூங்கா - 671
டிஸ்கவரி புக் பேலஸ் - 307- 308, 353-354 

இணையத்தில் வாங்க... 

Thursday, January 2, 2014

கர்ணனின் கவசம் - கே.என்.சிவராமன்

சுவாரஸ்யம் மட்டுமே குறிக்கோளாக மனதில் வைத்து எழுதப்பட்ட நாவல்.

மகாபாரத பாத்திரங்களோடு சரித்திர பாத்திரங்கள் சேர்ந்து இந்த நாவலில் வருகிறார்கள். இது உண்மையா ? பொய்யா ? என்ற கேள்வி கேட்டாமல் கடந்து விடுகிறோம்.

இது ஒரு Magical Fiction வகை நாவல் என்பதால் கிருஷ்ணரும் துணை பாத்திரமாக வருகிறார். பகுத்தறிவுக்கு விடைக் கொடுத்து விட்டு லாஜிக் பார்க்காமல் வாசிக்கவும்.

எல்லா பாத்திரங்களும் கர்ணனின் கவசத்தை நோக்கி தான் பயணிக்கிறது. இதில் யார் நல்லவர் கெட்டவர் என்பதை பிரிப்பது கடினமான விஷயம். எல்லா பாத்திரங்களுமே சமமாக கையாளப்படுவதால் இவர் தான் நாயகன், நாயகி என்று சொல்லிவிட முடியவில்லை. தாராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், அவர் தான் நாவலில் நாயகி என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யார் என்ன சொன்னாலும் கேட்கும் பாத்திரமாகவே வருகிறார்.

இந்த நாவலில் அநியாயத்திற்கு அதிக பாத்திரங்கள். கொஞ்சமாவது மகாபாரதம் தெரிந்தவர்களால் மட்டுமே பாத்திரங்களை புரிந்துக் கொள்ள முடியும்.

“போதிதர்மரோட ஒண்ணு விட்ட தம்பியோட பரம்பரைல வந்தவன் தான் வஜ்ஜிரபாகு. போதிதர்மரோட பங்காளிங்க என் மகன் கர்ணன் சேர்ந்து வித்தை கத்துக்கிட்டாங்க…” – இது போன்ற பக்கத்துக்கு ஒரு முறையாவது சரித்திரத்தையோ, மகாபாரதத்தையோ சொல்லுவது கொஞ்சம் அலுப்புட்டுகிறது.

பல பாத்திரங்கள் ”இங்கு தான் இருக்க வேண்டும்”, “இப்படி தான் நினைக்கிறேன்” என்ற அடிப்படையிலே அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறார்கள். அவர்களுக்கான புத்திசாலித் தனம் தெரியவில்லை. ஒரு இடத்தில் மட்டும் ஃபிபொனசி தியரி மூலம் தடையை கடப்பதை கதாபாத்திரங்கள் ஆதித்யா புத்திசாலி தனம் தெரிகிறது. மற்ற இடங்களில் எல்லாம் மந்திரம், தந்திரம் தான் காப்பாற்றுகிறது.

ஒரு முடிச்சு அவிழ்ந்தது என்று நினைக்கும் போது, ‘இல்லை’ அது ஒரு Backup என்று கூறி மீண்டும் அந்த முடிச்சு இருப்பதாக சொல்கிறார். சுவாரஸ்யத்திற்காக நாவலில் முடிச்சுகள் இருப்பது சிறப்பு தான். ஆனால், பக்கத்துக்கு பக்கம் ஏகப்பட்ட முடிச்சுகள். படித்து முடித்த பிறகு அத்தனை முடிச்சுகளும் அவிழ்ந்ததா என்று தெரியவில்லை.

இந்த நாவலை முடிக்கும் போது அவசர அவசரமாக முடித்திருக்கிறாரோ என்ற உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.

”இன்றைய தேவை தமிழில் ஒரு டேன் பிரவுன்” என்று ஜெயமோகன் கூறியது போல், கே.என்.சிவராமன் தமிழில் டேன் பிரவுனாக வளம் வருவார் என்பதற்கு இந்த நாவல் அச்சாராம். வாழ்த்துக்கள் சிவராமன் !!!

இணையத்தில் வாங்க....
http://www.wecanshopping.com/products/கர்ணனின்-கவசம்.html

LinkWithin

Related Posts with Thumbnails