வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label பெரியார் ரசிகன். Show all posts
Showing posts with label பெரியார் ரசிகன். Show all posts

Tuesday, July 7, 2015

பெரியார் ரசிகன் – வசீகரனின் எதிர்வினை

அன்புக்குரிய குகனுக்கு வணக்கம்,

தங்களது “பெரியார் ரசிகன்” என்ற 160 பக்க புதின நூலை படித்து மகிழ்ந்தேன். இது தங்களின் முதல் புதினம் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் எந்தவித சிந்தனைத் தடுமாற்றமும் இன்றி கதையை சொல்லிக் கொண்டு போகும் கலை தங்களுக்கு கைவந்து இருக்கிறது. எழுத்தாளன், கவிஞன் ஆவதற்கென்றே தமிழ்மொழி மீது ‘ஈர்ப்பு’ கொண்டு குறுகிய காலத்தில் கற்று தேறி உள்ளீர்கள் என்பதை எண்ணி வியந்து பாராட்டுகிறேன்.


கதை நூலுக்கு “பெரியார் ரசிகன்” என்ற பெயர் பொருத்தமில்லை என்பது என் கருத்து. பெரியாரை நேசிக்கும் ஒரு மனிதரின் எண்ண மன ஓட்டத்தை கதையாகப் பதிவு செய்து இருக்கின்றீர்கள். இதுவும் நல்ல உத்தி தான். அவனுடைய பள்ளிப் பருவத்தில் இருந்து தொடங்கி தந்தையை இழந்து மாமாவின் ஆதரவோடு வாழ்க்கைப் போராட்டத்தில் குதித்து நீந்திச் சென்று கொண்டிருக்கும் காட்சிகளில் ஆரம்ப அத்தியாயங்கள் கடந்து செல்கின்றன. ஒன்றாவது அத்தியாயத்துக்கு ‘முன்னதாக முன்னுரைப் போன்று சுழியம் அத்தியாயமாக ஒர் அத்தியாயத்தை இணைத்து இருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது. ஆனால், அந்த அத்தியாயம் தேவையற்றது. நீக்கி இருக்கலாம்.

முதல் அத்தியாயத்தில் தன் கதையை கூறும் துவங்கிச் செல்கிறது. 1950 குடியரசு தின தொடக்க நாளன்று நாயகன் பிறப்பதாக அமைத்து இருப்பது அதைத்தொடர்ந்து காலக்கட்டத்தை நிறுவும் வகையில், அண்ணாவின் வெற்றி, மரணம், இந்திரா காந்தியின் மறைவு, எம்.ஜி.ஆர் மறைவு என்று அழகாகச் சொல்லிக் கொண்டு போகிறீர்கள். போற்றுகிறேன். ‘இந்த உலகத்தில் இன்று நான் சிறைப்பட்டேன்’ என்று தன் பிறப்பைச் சுட்டிக்காட்டியிருப்பது பாராட்டத்தக்க வரி. 

ஒவ்வொரு அத்தியாயமும் தொடங்கி எதையோ சுவையாகச் சொல்லிக் கொண்டே போனாலும் கூட கதை எதை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது என்பதை நெடுநேரம் யூகிக்கவே முடியவில்லை என்பது புதினத்தின் குறையாகவே தெரிகிறது. ஒவ்வொரு அத்தியாத்தையும் போரடிக்காமல் கொண்டு சென்ற காரணத்தினால் வாசகன் சலிப்படைவதில் தப்பிக்கிறான். ஒரு புதினத்துக்கு குறைந்த பட்ட கால்பங்கு நகர்வுக்கு பின்பாவது அதன் மைய இழை கோடிட்டுக் காட்டப்பட்டால், அதன் விறுவிறுப்பு மேலோங்கி நிற்கும். அந்த உத்தியை தாங்கள் பின்பற்றாத காரணத்தினால் சற்று உப்பு உறைப்பு குறைகிறது என்பதை சொல்லித் தான் ஆக வேண்டியிருக்கிறது. 

ஒரு சராசரி மனிதனின் சமாளிப்புகளுடான சம்பவங்களே இந்தக் கதையின் மையம் என்று தாங்கள் நேரில் விளக்கம் தந்து இருந்தீர்கள். அதை ஏற்கிறேன். எந்த ஒரு மனிதனும் திரைப்பட நாயகன் மாதிரி எல்லா விசயங்களிலும் அசகாய சுரனாக இருந்து விட முடியாது என்ற கண்ணோட்டத்தில் படிக்கிற போது ஒரு வாசகன் நிச்சயம் இந்தப் புதினத்தைப் போற்றி ஓரிடத்தில் தருவான். 

ஆங்காங்கே பகுத்தறிவுக் கேள்விகளை, கடவுள் மறுப்புச் சிந்தனைகள் பதிவு செய்து கொண்டு செல்கிறீர்கள். நாயகன் பெரியாரின் ரசிகனாக மாறுகிறான் என்பதை பதிவு செய்யப்படுவதற்குள்ளேயே பாதிக்கதை கடந்தோடிவிடுகிறது. துணிச்சலாக நிமிர்ந்து நின்று தாலிகட்டாமல் பகுத்தறிவு திருமணம் செய்து கொள்வதும், அதையே பின்பற்றி தன் மகனது திருமணத்தை நடத்தி வைப்பதுமாக சென்ற நாயகன், மகள் திருமணத்தில் ஒரு தந்தையாக மட்டும் நின்று தடுக்கிவிழுந்து விடுகிறார் என்பதையே உச்சக்காட்சியாக பதிவு செய்து இருக்கிறீர்கள். அதையே கதையில் போக்கில் அந்த உயர்குல சம்மந்தி சொல்கிற நிபந்தனைகளுக்கெல்லாம் சிறு திருத்தமும் கூட சொல்லாமல், எல்லாம் விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏன் என்பது புரியவில்லை. தன் சொந்தக்கருத்தை பதிவு செய்யாமல் ஒரு பகுத்தறிவாளனால் விட்டுக் கொடுக்க முடியும் என்பதும் பகுத்தறிவுக் கேள்வி தான். 

மாண்டவர் மீண்டும் வந்து தனக்கே மகனாக மகளாக பிறப்பார் என்பது ஒரு பகுத்தறிவாளனின் நம்பிக்கையாக இருக்க முடியாது. ஆனால் இந்த ’பெரியார் ரசிகன்’ தானே அதை நம்பிக்கையுடன் கூறி ஏற்கிறார். அம்மாவே மகளாக வந்து பிறந்து இருப்பதாகச் கூறுகிறார். அது ஆன்மிக நம்பிக்கை என்பதே உண்மை. நிறைவு வரியில் கூட, “அப்பா எனக்கு மகனாகப் பிறப்பார்” என்று நாயகரின் மகள் கூறுவதாக நிறைவு பெறுவதும் பகுத்தறிவுக்குப் பொருந்துவது எப்படியோ தெரியவில்லை. ஆனால், தன் கொள்கைகளை தன் மகளுக்காக விட்டுக் கொடுத்து அடக்கி வைத்திருந்த ஆத்திரமே அவரது மரணமாக வெளிப்பட்டுள்ளது என்பது கதைக்கு சரியான நிறைவு தான். 

மாமா, தமிழாசிரியர், இஸ்லாமிய நண்பன், கிறிஸ்துவ நண்பன், பிராமண காதலி என்று பல்வேறு பாத்திரப் படைப்புகள் கதையை நகர்த்திச் செல்ல உதவி இருக்கின்றன. பல சூழல்களில் திறமையான வாதங்களால் கதையை அழகாக நகர்த்திச் செல்லும் உத்தி உங்களுக்கு கைவசம் வந்து இருக்கிறது. 

பெரியாரின் கொள்கைகளை பதிவு செய்து ஒரு புதினம் எழுதுவது என்பது ஒரு கடினமான செயல். அதை சுலபமாகவும், துணிச்சலாகவும் செய்து இருக்கின்றீர்கள். பாராட்டிப் போற்றுகிறேன். 

தங்களது அடுத்த புதினம் இதனினும் சுவை கூடி அமையும் என்பது திண்ணம். இந்நூல் பல பதிப்புகள் காண்ட்டும். 


நன்றி. 
வாழ வளர்க வெல்க, 

வசீகரன்
பொதிகை மின்னல், ஆசிரியர் 
30.6.2015




Thursday, February 6, 2014

பெரியார் ரசிகன் - கோவி லெனின் விமர்சனம்

காதல், குடும்பச்சூழல், வாழ்க்கைச் சுமைகள் உள்ளிட்ட வழக்கமான பிரச்சினைகளே என்றாலும் கதையை நகர்த்திச் செல்வதென்னவோ மனித மனிதுக்குள் நடக்கும் ஆத்திக-நாத்திக மோதல்தான். அதுதான், குகன் எழுதியுள்ள ‘பெரியார் ரசிகன்‘ புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. (உதயகண்ணன் வெளியீடு- பெரம்பூர்- சென்னை- 600 011- தொடர்புக்கு, 94446 40986 விலை ரூ.100)

சிறுவயதில் அப்பாவை இழந்து, நிர்கதியாய் தவிக்கும் நாயகனும் அவன் அம்மாவும் மாமாவின் உறுதுணையால் வாழ்க்கையை எதிர்கொள்வதும், அந்த நாயகன் சட்டக்கல்வி பயிலும்போது, காதல் வயப்படுவதும், தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு அந்தக் காதல் சரிவராது என அதனை உதறுவதும், பின்னர் தன் விருப்பத்திற்குரிய முறையில் திருமணம் செய்துகொண்டு, வாழ்க்கையைத் தொடர்வதும், அந்த வாழ்க்கை அவனது விருப்பம்போல அமைந்ததா என்பதும்தான் குகன் எழுதியுள்ள ‘பெரியார் ரசிகன்’ நாவல். 160 பக்கங்களில் கதையை நிறைவு செய்திருக்கிறார். அது முழுமையாக எல்லாவற்றையும் விளக்குகிறதா, முன்முயற்சியாக இருக்கிறதா என்பதை வாசகர்கள் தீர்மானிக்க வேண்டும்.

கதை வழியாக காலத்தைப் பதிவு செய்கிறார் குகன். வரலாற்றைத் தொட்டுச் செல்கிறார். அரசியல் நிகழ்வுகளையும் அது ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையும் குறிப்பிடுகிறார். சிற்றுண்டி கடை நடத்துவதன்றி வேறெந்த பொதுநோக்கும் இல்லாத மாமாவுக்குள் அறிஞர் அண்ணா ஏற்படுத்தும் தாக்கம், மாமா சொன்ன வேலைகளை செய்தபடி, அம்மாவின் நலன் காக்கும் நாயகனுக்குள் பெரியார் ஏற்படுத்தும் மாற்றம், உடன்படிக்கும் பிராமணப் பெண் மீதான காதல் அவனுக்குள் உருவாக்கும் விவாதம், திராவிட இயக்கம் சார்ந்த தனது கொள்கைகளுக்கும் நடைமுறை வாழ்வுக்குமான மோதல்கள்-முரண்பாடுகள் என குகன் பல புள்ளிகளைத் தொடுகிறார். எந்த இடத்திலும் கதையின் ஓட்டம் தடைப்பட்டுவிடக்கூடாது என்கிற கவனம் அவருக்கு இருப்பதைப் படிக்கும்போது உணரமுடிகிறது.

அண்ணா ஆட்சிக் காலத்தில் சுயமரியாதை திருமணச் சட்டம் கொண்டுவரப்பட்டது பற்றி இக்கதையில் மாமாவுக்கும் மருமகனான நாயகனுக்கும் உரையாடல் நடக்கிறது.

“தாலி இல்லாம கல்யாணம் நடந்தா புருஷனுக்கு ஏதாச்சும் ஒண்ணு ஆனாகூட இந்த சமுதாயத்துல எப்பவும் போல ஒரு பொண்ணால நடமாட முடியும். கல்யாணமாகி புருஷன் செத்து தாலி இல்லாம நடந்து போனா பொண்ணுங்கள இந்த சமுதாயம் எவ்வளவு கஷ்டப்படுத்தும்னு எனக்கு தெரியும். உங்க அம்மா எவ்வளவு அவமானப்பட்டான்னு அவளுக்குத்தான் தெரியும்” என்று உருக்கமான குரலில் (மாமா) பேசினார்.

விதவையான அம்மா சில சமயம் நடக்கும்போது (எதிரில் யாரேனும் வந்தால்) தெருவிலிருந்து ஒதுங்கிக்கொள்வார். உணவகம் வைத்த காலத்தில் காலையில் அந்தப் பக்கமே போகமாட்டார். மதியம்தான் செல்வார். காலையில் ‘விதவை’ முகத்தில் விழிக்க பலர் யோசிப்பார்கள் என்பதற்காக அம்மா இப்படி செய்திருக்கிறார் என்பதை இப்போதுதான் என்னால் (மருமகன்) புரிந்துகொள்ள முடிந்தது.

“தாலி ஒண்ணு இல்லைன்னு வச்சிக்கோ, சமுதாயத்துக்கு முன்னாடி விதவ பொண்ணும், கல்யாணமான பொண்ணும் ஒரே மாதிரிதான் தெரிவாங்க. அவங்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கும். இதுதான் நா புரிஞ்சுக்கிட்டது” என்று அண்ணாவின் சுயமரியாதை சட்டத்தை (மாமா) விளக்கினார்.”

இப்படி கதைப்போக்கில் பல உரையாடல்கள் செல்கின்றன. தன் கொள்கைக்கும் குடும்ப வாழ்க்கைக்குமான மோதல்களின்போது நாயகனின் குரல் வலிந்து ஒலிக்கிறது. “கடவுளை வணங்குபவர்கள், கடவுள் தன்னை சோதிப்பதாகச் சொல்வார்கள். ஆனால், திராவிடக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களை சுற்றியிருப்பவர்கள் சோதனை செய்கிறார்கள். பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையை (நான்) ஏற்றுக்கொண்டதால் உறவினர்கள் எத்தனை பேர் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். எத்தனை பேர் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். மனைவி, பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்குத் தினமும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். இத்தனையும் கடந்துதான் ஒருவன் சுயமரியாதைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறான் என்பதை இந்த சமூகம் உணரும்போதுதான், சுயமரியாதைக்காரர்களை மதிப்பார்கள்” என்கிறது நாயகனின் குரல்.

சமூகத்தின் அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் அந்த சமூகத்தின் நலனுக்காகவும் உயர்வுக்காகவும் தன்நிலையில் உறுதியாக இருந்து சிந்திப்பவனும் உழைப்பவனும்தான் உண்மையான சுயமரியாதைக்காரன். அதற்காகத்தான் இந்தக் கதையின் நாயகன் சந்திரசேகர் என்கிற ‘சந்திரு’வின் வாழ்க்கைப் போராட்டம் அமைந்திருக்கிறது. எந்தளவில் ஒரு சுயமரியாதைக்காரனால் வெற்றிபெறமுடிந்தது என்பதைக் கதை நிறைவு செய்கிறது.

புதிய முயற்சி, நல்ல முயற்சி என்கிற வகையில் இந்தப் படைப்பை வரவேற்கவேண்டும். எழுத்துப்பிழைகளைக் கவனிக்க வேண்டிய பக்கங்கள் நிறைய இருக்கின்றன. அடுத்த முயற்சிகளில் அவை களையப்படும் என்ற நம்பிக்கையுடன் இளம் எழுத்தாளர் குகன் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கிறது.

நன்றி : கோவி.லெனின்
http://www.kavvinmedia.com/BlogDetails.aspx?PostID=705

இணையத்தில் வாங்க....
www.wecanshopping.com/products/பெரியார்-ரசிகன்.html

Tuesday, January 21, 2014

பெரியார் ரசிகன் - யுவ கிருஷ்ணாவின் விமர்சனம்

நீங்கள் நாத்திகரோ ஆத்திகரோ பிரச்சினையில்லை. தமிழர் என்றால் உங்களுக்கு பெரியார் தவிர்க்க முடியாதவர். நாத்திகர்கள் பலரும் பெரியாரை கடவுளாக்கி வழிபட ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், ஆத்திகர்கள் பெரியாரின் தாக்கத்தால் அடையாளச் சிக்கல் அவஸ்தையில் அலைக்கழிக்கப் படுகிறார்கள்.

இந்த சுவாரஸ்யமான முரணை களமாக்கி நாவல் ஆக்கியிருக்கிறார் குகன்.


எம்.ஜி.ஆர் ரசிகன், சிவாஜி ரசிகன், ரஜினி ரசிகன், கமல் ரசிகன், விஜய் ரசிகன், அஜீத் ரசிகன் என்று கேள்விப்பட்டிருப்போம். இந்நாவல் பெரியார் ரசிகனைப் பற்றியது. பெரியாருக்கு தொண்டர்தான் உண்டு. ரசிகன் இருக்க முடியுமா என்று கேட்டால் ஏன் இருக்கக்கூடாது என்கிற கேள்வியை எழுப்பி, சுவாரஸ்யமான சமகால வரலாற்றை புனைவில் முயன்றிருக்கிறார் குகன்.

இளம் தலைமுறை எழுத்தாளர்களின் இம்மாதிரியான துணிச்சலான முயற்சிகள்தான் எதிர்கால தமிழ் இலக்கியத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. எழுத்துப்பிழை, எடிட்டிங் பிரச்சினைகள் உள்ளிட்ட சில குறைகளை களைந்துப் பார்த்தால் ‘பெரியார் ரசிகன்’ குறிப்பிடத்தக்க சமீபத்திய நாவல்களில் ஒன்று.

நன்றி : யுவகிருஷ்ணா ( https://www.facebook.com/photo.php?fbid=10203079572257225&set=a.10201891742002211.1073741826.1443523801 )

இணையத்தில் வாங்க...

சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க...

டிஸ்கவரி புக் பேலஸ் - 307- 308, 353-354
நிவேதிதா புத்தகப் பூங்கா - 671
டிங்கு புக்ஸ் - 751

Monday, January 13, 2014

பெரியார் ரசிகன் - சில எதிர்வினைகள்

மூன்று மாதம் முன்பு டிஸ்கவரி புக் பேலஸில் ஒரு மாதப் பத்திரிக்கை விஷயமாகத் தான் அருள் செல்வன் என்பவரை சந்தித்தேன். ஒரு மணி நேரம் மேல் பேசினோம்.



நாங்கள் பேசிய பதினைந்தாவது நிமிடத்தில் இருந்து மாத பத்திரிக்கை பற்றி மறந்து திராவிடத்தைப் பற்றியும், அதன் வளர்ச்சி, இப்போதைய பார்வை போன்ற பொது விஷயங்களை விவாதிக்க தொடங்கினோம்.

இந்த இடத்தில் அருள் செல்வனின் பின்னனி சொல்லிவிடுகிறேன். அவரின் தாத்தா சிவாஜி நடித்த “பராசக்தி” பாடல் எழுதியவர். திராவிட பின்னனியில் இருந்து வந்தவர்.



பேசிக் கொண்டு இருக்கும் போது எனது “பெரியார் ரசிகன்” நாவலைப் பற்றி பேசினார். எனக்கு வியப்பாக இருந்தது. நாவல் வந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. அடுத்த அடுத்த நூல்கள் எழுதும் வேலையில் இருந்ததால் “பெரியார் ரசிகன்” நாவலுக்கான வெளியிட்டு விழாக் வைக்கவில்லை. முகப் புத்தகத்தில் ஒரு ஸ்டேடஸ் மட்டும் போட்டேன். கொஞ்ச நாட்களுக்கு பிரோபைல் போட்டோவாக அட்டைப்படத்தை வைத்திருந்தேன். அருள் செல்வன் முகப் புத்தகத்தில் இல்லை.

பேசும் போது, “ கடவுள் மறுப்பு கொள்கை ஏற்றுக் கொள்வது என்பது எளிதான விஷயமில்லை. பெற்றோர்கள், உறவினர்கள் எல்லோரையும் பகைத்துக் கொள்வதற்கு சமம். மனதில் மிக பெரிய போராட்டம் நடத்திய பிறகே கடவுள் மறுப்பை பேசுவதற்கு துணிச்சல் வரும். உங்கள் நாவலில் சரியாக கையாண்டு இருக்கிறீர்கள்” என்றார்.

”பெரியார் ரசிகன்” என்று தலைப்பு வைத்ததும் பெரியாரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு அல்லது குறிப்பு எழுதியிருப்பதாக பலர் நினைத்தார்கள். இது ”நாவல்” என்று சொல்லுவதற்காகவே வெளியிட்டு விழா வைக்க வேண்டும் என்று இருந்தேன். பல வேலைகளின் நடுவில் என்னால் அதைப் பற்றி சிந்திக்க முடியவில்லை. எந்த விளம்பரமும் இல்லாமல் ஒரு நாவலை வாசித்து கருத்து கூறுவது மிக பெரிய விஷயம்.

அதன் பிறகு மாத பத்திரிக்கை தொடங்கும் முயற்சி கைவிடப்பட்டது. அவரை தொடர்பு கொள்ளவில்லை. ஆனால், அவரின் விமர்சனம் எனக்கு முக்கியமாக இருந்தது.

அன்று அவரிடம் பேசும் போது அண்ணாவின் அரசியல் குருவான பி.பாலசுப்பிரமணியனை பற்றி எழுதிக் கொண்டு இருப்பதாகவும், விரைவில் விகடன் பிரசுர வெளியிடாக வரப் போகிறது என்று கூறினார்.


இந்த புத்தகக் கண்காட்சியில் விகடன் அரங்கில் அவர் எழுதிய “அண்ணாவின் அரசியல் குரு” புத்தகம் பார்த்தப் போது அவரின் விமர்சனமும் நினைவு வந்தது.

யுவகிருஷ்ணாவும் “பெரியார் ரசிகன்” நாவலை படித்து “முதல் நாவல் போல் இல்லை. விரைவில் உங்கள் நாவலைப் பற்றி விமர்சனம் எழுதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த வருடம் நான் எழுதிய ஐந்து புத்தகங்கள் வந்திருந்தாலும், படைப்பிலக்கியம் சார்ந்து வந்த ஒரே நூல் “பெரியார் ரசிகன்” என்பதால் எனக்கு இந்த நூல் மிகவும் முக்கியமானது.

சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம் : 

நிவேதிதா புத்தகப் பூங்கா - 671
டிஸ்கவரி புக் பேலஸ் - 307- 308, 353-354 

இணையத்தில் வாங்க... 

LinkWithin

Related Posts with Thumbnails