வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label Silent Movie. Show all posts
Showing posts with label Silent Movie. Show all posts

Wednesday, January 15, 2014

சினிமா 1913-2013 – 3. திரையரங்குகள் தந்தை சாமிக்கண்ணு வின்செண்ட்

இன்று சினிமாவில் கமல், ரஜினி படம் வெளிவருகிறது என்றால் நான், நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். காரணம், போட்ட பணத்தை ஒரு வாரத்தில் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கை. ஆனால், சினிமா என்பது வியாபாரமாக இல்லாத காலத்தில், வியாபாரம் தெரியாதவர்கள் மத்தியில் மக்களிடம் எப்படி சினிமாவை கொண்டு சென்று இருப்பார்கள் என்பதை ஆராய வேண்டிய ஒன்று.

3டி, அரோ 3டி, டிஜிட்டல் என்று பல வகை திரையரங்குகள் இருக்கிறது. ஆனால், ஆரம்பக்காலத்தில் படங்கள் ஓடியது டென்ட் திரையரங்குகளில் தான். அந்த டென்ட் கொட்டையில் படங்களை எடுத்து மக்களுக்கு கொண்டு சேர்த்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்கள்.

ஒவ்வொரு மொழியின் திரைப்படங்களுக்கு ஒரு தந்தையிருக்கிறார். ஆனால், தென்னிந்தியாவில் சினிமாவை திரையரங்கு மூலம் கொண்டு சேர்த்த ஒரு தந்தை இருக்கிறார். அவர் தான் ”சாமிகண்ணு வின்செண்ட்”. 



அன்றைய காலத்தில் சினிமாவின் முக்கிய இடமாக கோவை நகரம் இருந்தது. 1905ல் ரயில்வே ஊழியராக இருந்த சாமிக்கண்ணு வின்செண்ட் அவர்கள் ’டு பாண்ட்’ என்ற பிரென்ச்காரரை சந்தித்தார். அவரிடம் இருந்து படங்களை திரையிட ஒரு பிலிம் புடோஜெக்டரையும், பிரென்ச் படமான "Life of Jesus Christ" வாங்கிக் கொண்டார். அந்த படத்தை ஊர் ஊராக சென்று திரையிட தொடங்கினார்.

குறைவான மக்கள் மட்டுமே படம் பார்க்கக் கூடிய புரோஜக்டர் மூலம் படம் திரையிடப்பட்டது. மக்கள் படத்தை பார்க்க ஆர்வமாக வந்தனர். குறிப்பாகம் ’ஏசு’ வரும் காட்சியை பிரம்பித்தனர். அப்போது படம் திரையிடுவதற்கு இடம் ஒன்று தான் மிக பெரிய குறையாக இருந்தது.

பெரிய இடத்தில் படத்தை திரையிட்டால் இன்னும் மக்கள் வருவார்கள் என்று திட்டமிட்டு, சாமிகண்ணு வின்செண்ட் தனது குழுக்களை கொண்டு மக்கள் படங்களை பார்க்க தற்காலிக டெண்ட் திரையரங்குகளை உருவாக்கினார். தென் இந்தியாவில் முதல் டூரிங் டாக்கிஸ் இப்படி தான் உருவானது.

பொதுவாக இது போன்ற டூரிங் தியேட்டர்கள் கொண்டு வரும் திரைப்படங்கள் டெண்ட் தியேட்டரில் திரையிடப்படும். சுமார் 1000 பேர் அமர்ந்து பார்க்கலாம். படத்தை 2 வாரம் ஓட்டுவார்கள். அதன் பிறகு அந்த படத்தை எடுத்துக் கொண்டு வேறு ஊருக்கு சென்று படம் திரையிடுவார்கள்.

ஒவ்வொரு முறையும் படத்தை திரையிட ஏற்பாடு செய்வதற்கு பதிலாக, நிரந்தரமாக திரையிட ஒரு தியேட்டரை உருவாக்க நினைத்தார். கோவையில் அதற்கான இடமும் சாமிகண்ணுக்கு கிடைத்தது.

1917ல் தென்னிந்தியாவில் முதல் நிரந்தர திரையரங்கான வெரைட்டி ஹால் என்ற திரையரங்கு உருவாக்கி படங்களை திரையிடத் தொடங்கினார். ( இந்த காலக்கட்டத்தில் சென்னை கெய்ட்டி, கிரவுன் தியேட்டர் எல்லாம் டெண்ட் திரையரங்கமாக இருந்தது.)

இன்றும், கோவையில் இந்த சாலையின் பெயர் வெரைட்டி ஹால் சாலை. ஆனால், வெரைட்டி ஹால் திரையரங்கில் தற்போதிய டிலைட் தியேட்டர் !!!

வெரைட்டி ஹாலுக்கு கிடைத்த வர வேற்பைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஊரிலும் நிரந்த திரையரங்குகள் உருவாக்க தொடங்கியது.

உதகமண்டலம், மதுக்கரை, ஈரோடு, அரக்கோணம் போன்ற படகுதிகளோடு நின்றுவிடாமல் கேரளாவிலும் பல திரையரங்குகள் தொடங்கினார் சாமிகண்ணு வின்சென்ட். இவர் தமிழகத்தோடு படத்தை திரையிடுவதை நிறுத்தாமல் ஆப்கானிதானில் பெஷாவர், பாகிஸ்தானின் லாகூர், பர்மாவின் ரங்கூன் என்று தெற்காசிய முழுக்க பயணம் செய்து படங்களை திரையிட்டார்.

பல படங்களை வெளிநாட்டில் இருந்து வர வழைத்து திரையிட்டார். பிறகு, படம் தயாரிப்பதிலும் இறங்கினார். ஆனால், படம் விநியோகத்தில் வெற்றிகரமாக செயல்பட்ட சாமிக்கண்ணு பட தயாரிப்பில் வெற்றிப் பெற முடியவில்லை. அதனால், பட விநியோகத்தில் அதிக கவனம் செலுத்தினார்.

இந்த காலக்கட்டத்தில் தமிழில் முதல் பேசும் படமான, தென்னிந்தியாவில் இரண்டாவது பேசும் படமான எச்.எம்.ரெட்டி இயக்கத்தில் “காளிதாஸ்” படம் வெளியானது. ரூ.8000 செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூ.75000 வசூலானது. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் டி.பி.ராஜலஷ்மி. பின்னாளில், இவர் “சினிமா ராணி” என்ற அழைக்கப்பட்டார். தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குனரும், பெண் தயாரிப்பாளரும் இவரே !!!

பேசும் படங்களுக்கு கிடைத்த ஆதரவை உணர்ந்த சாமிகண்ணு செண்டரல் ஸ்டுடியோவோடு சேர்ந்து “வள்ளி திருமணம்” (1933) படம் எடுத்தார். “காளிதாஸ்” படத்தில் நாயகியாக நடித்த டி.பி.ராஜலஷ்மி இந்தப் படத்திற்கும் நாயகியாக நடித்தார்.

இந்த படமும் வசூலில் சக்கை போடு போட்டதால், பலர் பேசும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கினர். அதே ஆண்டில் தான் தென்னிந்தியாவின் கடைசி மௌனப்படமான “மார்தாண்ட வர்மன்” வெளியானது.

சாமிகண்ணுவை தொடர்ந்து ”முதலாளி” என்று அழைக்கப்படும் டி.ஆர்.சுந்தரம் அவர்கள் சேலத்தில் மார்டன் தியேட்டர் தொடங்கி (1935) சினிமாவுக்கு தமிழகத்தில் புதிய அடையாளமாக மாறினார்.

இன்று சினிமாவை பார்க்க பலர் படையெடுத்து வருவது முக்கிய காரணம் அன்று சாமிகண்ணு வின்செண்ட் சினிமாவை பிரோஜெட்டர் தூக்கிக் கொண்டு ஊர் ஊராக படங்களை திரையிட்டதால் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

கட்டுரைக்கு உதவியது : 
இந்து ஏப்ரல் 30, 2010 மற்றும் மார்ச் 22, 2011
பேசாமோழி – ஆவணப்படம். இயக்குனர் செந்தமிழன்

நன்றி : உரத்த சிந்தனை, ஜனவரி, 2014

Tuesday, December 17, 2013

சினிமா 100 (1913 - 2013) - 2. நடராஜ முதலியார்

சென்ற தொடரில் இந்திய அளவில் மௌனப்படங்களுக்கு பங்கு அளித்த முக்கிய பிரமுகர்கள், படங்களைப் பற்றி பார்த்தோம். ஆனால், மொழிவாரியாக சினிமாவை கொண்டு செல்ல முடியவில்லை. எப்படி இந்திய சினிமாவின் தந்தை பால்கே என்று சொல்கிறோமோ, அதேப் போல் ஒவ்வொரு மொழியிலும் சினிமாவை வளர்த்த முக்கிய நபர்கள் இருக்கிறார்கள்.


தமிழ் சினிமாவின் தந்தையாக கருதப்படுபவர் ஆர்.நடராஜ முதலியார். தானுந்து (Automobile) வியாபாரியாக வாழ்க்கையை தொடங்கிய இவர், பால்கே எடுத்த படங்களால் ஈர்க்கப்பட்டார். தானும் தென்னகத்தில் சினிமா கலையை வளர்க்க வேண்டும் என்று அதற்கான முயற்சியில் இறங்கினார்.

சில நண்பர்களை மூலம் முதலீட்டை திரட்டி, புரசைவாக்கத்தில் உள்ள மில்லர்ஸ் ரோட்டில் திரைப்பட ஸ்டூடியோ ஒன்றை தொடங்கினார். தென்னகத்தில் முதல் திரைப்பட ஸ்டூடியோ இது தான். ஸ்டூடியோவோடு நின்றுவிடாமல் திரைப்படம் எடுக்கும் முயற்சியிலும் ஈடுப்பட்டார்.

1916ல், இவர் எடுத்த “கீச்சக வதம்" படம் தான் தென்னிந்தியாவின் முதல் படம் என்று சொல்லலாம். அன்றைய தேதியில் இந்த உருவாக்க ஆன மொத்த செலவு ரூ.35000 மட்டும் தான். அதன் வெற்றியை தொடர்ந்து லவக்குசா, ருக்மணி சத்யபாமா, மயில் ராவணா போன்ற பல மௌனப்படங்களை எடுத்திருக்கிறார் என்று பல படங்களை தயாரித்தார். பல புராணக் கதைகள் தென்னகத்தில் மக்கள் நடராஜ முதலியார் உதவியால் படமாக பார்த்தனர்.

மௌனம் படம் என்பதால் ஹிந்தியிலும் வெளியிடுவதில் சிரமமில்லை. தலைப்பு பலைகை மட்டும் ஹிந்தியில் எழுதி வெளியிட்டனர். நடராஜ முதலியார் படங்களுக்கு ஹிந்தி எழுத்து பலகை எழுதியவர் மகாத்மா காந்தியின் கடைசி மகனும், ராஜஜியின் மருமகனுமான தேவதாஸ் காந்தி அவர்கள். சினிமாவுக்காக உழைத்த நடராஜ முதலியார் தனது மகனை ஒரு தீ விபத்தில் இழந்தார். அதுவும் தன் ஸ்டூடியோவில் நடந்த தீ விபத்து. மகனை இழந்து, ஸ்டூடியோ பாதிக்கப்பட்டத்தில் மனதளவில் நடராஜ முதலியார் நோடிந்து போய்விட்டார். தன் ஸ்டூடியாவை முடிவிட்டு சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

இவரது திரைப்படங்களால் பலர் ஈர்க்கப்பட்டுயிருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் ஜே.சி.டேனியல்.

 ஜே.சி.டேனியல் மலையாள திரையுலகில் தந்தையாக கருத்தப்படுபவர். மலையாளத்தின் முதல் படமான “விகதகுமரன்” எடுத்தவர். திருவனந்தப்புரம் நேஷ்னல் பிக்சார்ஸ் என்ற பெயரில் ஸ்டூடியோ தொடங்கியவர். அதுவரை புராண கதைகளே படமாக்கி வந்திருந்தனர். இவர் தான் முதன் முதலில் சொந்தக்கதை உருவாக்கி படமாக எடுத்தார்.

மலையாளத் திரையுலகத்தின் தந்தை என்று போற்றப்படும் ஜே.சி..டேனியல் “ஒரு தமிழர்” என்பது குறிப்பிடதக்கது. தமிழ் நாட்டில் தனக்கு வாய்ப்பு கிடைக்காததால், கேரளா சென்று படம் எடுத்தார். இன்று தென்னகத்தில் தரமான படங்கள் என்று சொன்னால் மலையாளப் படங்கள் என்று சொல்லும் அளவிற்கு மலையாள திரையுலகம் இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் தெலுங்கு திரையுலகின் தந்தையான வெங்கையா நாயுடு பெயரில் தெலுங்கு திரையுலக வாழ்நாள் சாதனையாளருக்கு "நந்தினி வருது" நிகழ்ச்சியில் விருது வழங்கப்படுகிறது. அதேப் போல், ஜே.சி.டானியல் நினைவாக கேரள அரசு வாழ்நாள் சாதனை விருது முத்த கலைஞர்களுக்கு வழங்குகிறார்கள். ஆனால், அவர்களுக்கு முன்னோடியாக இருக்கும் நடராஜ முதலியார் பெயரில் ஒரு விருது வழங்கப்படவில்லை.

அதேப் போல், இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை மராத்தியில் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். மலையாள சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் ஜெ.சி.டெனியல் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக வெளிவந்திருக்கிறது.
சினிமா நூற்றாண்டை அமோகமாக கொண்டாடிய நாம் தமிழ் சினிமாவின் தந்தையான நடராஜ முதலியாரின் வாழ்க்கை வரலாற்றை எப்போது திரைப்படமாக எடுக்கப் போகிறோம் ? குறைந்தப் பட்சம் தமிழ் சினிமாவில் பணியாற்று சினிமாத்துறையினர்களுக்காவது தமிழ் சினிமாவின் தந்தைப் பற்றி தெரிந்திருக்குமா ?

(நன்றி : நம் உரத்தசிந்தனை மாத இதழ், டிசம்பர் )

Thursday, November 14, 2013

சினிமா 100 (1913 - 2013)

சலனப்பட காலங்கள் 

சினிமா - அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை கொண்டாடக் கூடிய ஒரே விஷயம். ஒவ்வொரு பிரிவினருக்கு ஒவ்வொரு ரசனை இருந்தாலும், சினிமாவை ஒதிக்கிவிட முடியாதபடி நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக கலந்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு முதல்வர்களை தந்ததும், கோடிஸ்வரர்களை தெருவுக்கு கொண்டு வந்தது சினிமா தான். பொழுதுபோக்குக்கும் சரி, குடும்பத்துடன் செல்வதற்கும் சரி, தனிமையை மறப்பதற்கும் சரி சினிமா பலரின் தோழனாக இருக்கிறது.

இப்படிப்பட்ட சினிமா நூறு ஆண்டுகள் கடந்திருக்கிறது மிகவும் பிரமிப்பான விஷயம். எத்தனையோ தொழிற்துறை நூறு ஆண்டுகளை கடந்திருக்கிறது. சினிமாவுக்கு முன்பு தோன்றிய தொழிற்துறை இன்றும் இருக்கிறது. ஆனால், சினிமா நூற்றாண்டை கொண்டாடுவது போல் வேறு எந்த துறையை கொண்டாடியதில்லை. கொண்டாடப் போவதுமில்லை. காரணம், மற்ற தொழிற்துறையை விட சினிமா பல முதலாளிகளை உறுவாக்கியிருக்கிறது. தன் வரலாற்றை சரியாக பதிவு செய்து வளர்ந்த ஒரே துறை சினிமா மட்டும் தான்.


அழுது சத்தம் போட்டுக் கொண்டே பிறக்கும் குழந்தைப் போல் சினிமா தோன்றவில்லை. சினிமாவின் பிறப்பு மௌனமாக முறையில் தான் இருந்தது. திரையில் படம் பார்ப்பவர்களுக்கு சிறு சத்தம் கூட திரையில் இருந்து கேட்காது. ஓளியை மட்டும் பதிவு செய்யும் சாதனமாக தான் சினிமா தோன்றியது.

முதன் முதலில் இந்தியாவில் திரையிடப்பட்ட படம் ”ஸ்ரீ புண்டலிக்’ என்னும் மராத்தியில் எடுக்கப்பட்ட சலனப்படம் தான். மே 18, 1912ல் தாதாசாகேப் டோர்ன் என்பவர் மும்பையில் முதல் முதலாக படத்தை திரையிட்டார். இதில் பணியாற்றிய கெமிராமேன் ஜான்சான் வெள்ளையன் என்பதாலும், படத்தின் வேளைகள் முழுக்க முழுக்க லண்டனில் நடந்ததாலும் இதை முதல் இந்திய சினிமாவாக யாரும் கருவதில்லை.

முதல் இந்திய சினிமாவாக நாம் சொல்வது மராத்தியில் தாதாசாகேப் பால்கே அவர்கள் இயக்கிய “ராஜா ஹரிசந்திரா” படம் தான். மே 3, 1913ல் மும்பையில் திரையிடப்பட்டது. ஒரே ஒரு பிரதி மட்டும் எடுக்கப்பட்டு திரையிட்டனர். வியாபார ரிதியாகவும் இந்த படம் மிக பெரிய வெற்றிப் பெற்றது.

ராஜா ஹரிசந்திரா படத்தின் வெற்றிக்கு பிறகு மோகினி பஸ்மசூர், சத்தியவான் சாவித்திரி, லன்கா தாஹன், ஸ்ரீ கிருஷ்ண ஜென்மா போன்ற படங்களை பால்கே இயக்கினார். ஹிந்துஸ்தான் பிலிம்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். இந்தியாவுக்கு சினிமாவை அறிமுகப்படுத்திய பால்கே, தனது நிறுவனம் நஷ்டத்தில் முழ்கி கையில் பணமில்லாமல் இறந்தார்.

சினிமாவில் வாழ்நாள் சாதனையானையாளர்களுக்கு பால்கே நினைவாக “தாதாசாகேப் பால்கே” விருது வழங்கிவருகிறோம். இந்திய சினிமாவின் தந்தையாக பால்கேவை தான் நாம் கொண்டாடுகிறோம்.

இந்திய சினிமா எடுத்தத்தில் பால்கே எப்படி மிக முதன்மையாக திகழ்ந்தாரோ ஜம்ஷத்ஜி ப்ராம்ஜி மதன் படத்தை தயாரிப்பதிலும், விநியோகம் செய்வதிலும் மிக முக்கியமானவர். எல்பின்ஸ்டோன் பயாஸ்கோப் என்று நிறுவனத்தின் மூலம் பல குறும்படங்களை தயாரித்திருக்கிறார். அல்பர்ட் தியேட்டரை தொடங்கினார். முதல் பெங்காலிப் படத்தை தயாரித்தப் பெருமையும் இவரையே சாரும்.

பால்கே, ஜம்ஷத்ஜி இருவரால் சினிமாவை வட இந்தியாவில் பரப்ப முடிந்த அளவிற்கு, தென்னிந்தியாவில் பெரிதும் பரப்ப முடியவில்லை. தென்னிந்தியாவில் சினிமாக் கலை பரவியதற்கு மிக முக்கியமானவர் ரகுபதி வெங்கையா நாயுடு. தெலுங்கு திரையுலகின் தந்தையாக திகழ்கிறார். வருடந்தோறும், ஆந்திர அரசு வழங்கும் நந்தி விருது விழாவில் திரைப்பட கலைஞர்களுக்கு “ரகுபதி வெங்கையா” விருது வழங்கி வருகிறது.

அண்ணா சாலையில் இருக்கும் கெய்டி தியேட்டர், புரசையில் இருக்கும் க்ளோப் தியேட்டர், மிண்ட் தெருவில் இருக்கும் க்ரவுன் தியேட்டர் என்று சென்னையில் இருக்கும் பல முக்கிய தியேட்டர்கள் இவரால் நிறுவப்பட்ட வை. கஜேந்திர மோட்சம், நந்தனார் போன்ற படங்களை தயாரித்திருக்கிறார்.

சினிமாத் துறை இந்தியாவில் வளர்வதை கண்ட வெள்ளையர்கள் 1927ல் இந்திய சினிமா அமைப்பை உருவாக்கினர். ஆனால், இந்திய சினிமா வளர்ச்சிக்கு உதவுவதற்கு பதிலாக வெள்ளையர்கள் தங்கள் படங்களை கொண்டு செல்வதில் தான் அதிக கவனம் செலுத்தியது. அதனால், இந்த அமைப்பு விரைவிலே கலைக்கப்பட்டது.

இந்திய சினிமா வளர்ச்சிக்கு மிக ஆரம்பப் புள்ளியாக இருந்தது மௌனப்படங்கள் என்பது மறுக்க முடியாது. ஆனால், அதை நாம் பாதுகாக்கவில்லை என்பது தான் வரலாறு சொல்கிறது.

சமிபத்தில் தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்த சினிமா நூற்றாண்டு நிகழ்ச்சியில் 1913ல் எடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் சினிமா என்று சொல்லப்படும் “ராஜா ஹரிசந்திரா” படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. நாற்பது நிமிடங்கள் உள்ளப் படம் வேறும் இருபது நிமிடங்கள் தான் பார்க்க கிடைத்திருக்கிறது. மற்ற பகுதிகள் எல்லாம் அழிந்துள்ளது.

அதே நிகழ்ச்சியில், 1903ல் எடுக்கப்பட்ட “The Great Train Robbery" என்ற அமெரிக்கப் படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டதை பார்த்தேன். 14 நிமிடங்கள் எடுக்கப்பட்ட படம். எந்த பகுதியும் பாதிக்கப்படவில்லை.

இந்தியாவில் 1936 முன்பு வரை 1500 சலனப்படங்கள் வந்துள்ளது. அதில் “மார்த்தாண்ட வர்மன்” என்ற படம் மட்டும் தப்பி பிழைத்து புனே திரைப்பட காப்பகத்தில் இருப்பது 'தமிழ் ஸ்டூடியோ' அருண் கூறினார். 23 வருட வரலாற்றை காப்பாற்ற முடியாமல் இந்திய சினிமாத்துறை இருந்துள்ளது. சினிமா நூற்றாண்டை கொண்டாடும் இந்நேரத்தில் சினிமாவை தந்த முன்னோர்களின் பொக்கிஷத்தை நாம் இழந்திருக்கிறோம் என்பதை நாம் வருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அசையும் படங்கள் மக்கள் மனதில் அதிக வரவேற்பு பெற்றாலும், ரசிகர்களுக்கு எதோ ஒரு குறை இருந்துக் கொண்டு தான் இருந்தது. அதைக் குறையை நீக்க பேசும் படம் இந்திய சினிமாவில் மெல்ல அடியெடுத்து வைத்தது.

இன்னும் பேசுவோம்.

(நன்றி : நம் உரத்தசிந்தனை மாத இதழ், நவம்பர் )

Monday, August 5, 2013

சார்லி சாப்பிளின் “A Dog’s Life”

தெருவோரம் வாழ்பவனின் வாழ்க்கை நாய்யின் அன்றாட வாழ்க்கையை விட மிக வேதனையானதாகவே இருக்கிறது. குப்பையில் உணவை தேடும் நாயின் சராசரி குணமாக பார்க்கப்படுகிறது. ஆனால், அதே உணவை ஒரு மனிதன் பசிக்காக தேடினால் அவனை பரிதாபமாக கூட பார்க்கப்படுவதில்லை. குப்பைகளை கலைத்துப் போடும் தேச விரோதியாக தான் தெரிகிறான். அவனின் பசியை விட தெருவின் சுத்தம் கேட்டு விட்டதே என்று பலரின் எண்ணமாக இருக்கிறது. இப்படி தெருவோரம் வாழ்பவனின் வாழ்க்கையை நகைச்சுவையாக எண்பது ஆண்டுகள்ளுக்கு முன் தனது “A Dog’s Life” மூலம் பதிவு செய்தவர் சார்லி சாப்பிள்.



தெருவோரம் வாழும் சாப்பிளின் பல நாய்களுக்கு நடுவில் மாட்டி தவிக்கும் ஒரு குட்டி நாயை காப்பாற்றுகிறார். ஓடிய கலைப்பில் நாய்யும், சாப்பிளும் ஒரு உல்லாச விடுதிக்குள் நுழைய அங்கு வேலை செய்யும் பெண்ணை பார்த்து மயங்குகிறார். அவளுக்கு விருப்பமில்லாத வேலையாக இருந்தாலும், தன் வேலைக்காக அவரிடம் பேசுகிறாள். ஆனால், பணம் இல்லாத காரணத்தால் சாப்பிளின் அந்த உல்லாச விடுதியில் இருந்து விரட்டப்படுகிறார். அந்த பெண்ணின் வேலை பரிக்கப்படுகிறது.

வெளியே வந்த சாப்பிளின், நாய்யும் தெருவில் உறங்குகின்றனர். நாய்யின் உதவியால் சாப்பிளுக்கு பண பர்ஸ் கிடைக்கிறது. அந்த பணத்தை கொண்டு மீண்டும் அந்த உல்லாச விடுதிக்கு செல்கிறார். அப்போது அவன் பார்த்த பெண் தன் துணிமணிகளை எடுத்து கிளம்புவதாக இருந்ததாள். அந்த பெண்ணை விடுதியின் வாடிக்கையாளராக உள்ளே அழைத்து சென்று குளிர்பானம் தரச் சொல்கிறான். தன்னிடம் பணம் இருப்பதை காட்டுகிறான். அப்போது, அங்கு இருக்கும் சில கயவர்களால் பரிக்கப்படுகிறது.

மீண்டும் அந்த பணத்தை அடைந்து, அந்த பெண்ணுடன் தோட்டம் அமைத்து உல்லாசமாக வாழ்க்கிறான். அவனுடன் இருந்த நாய்யும் தன் குட்டிகளுடன் உல்லாசமாக ஒரு குழந்தைப்போல் சாப்பிளின் வீட்டில் இருப்பதை படம் முடிகிறது.

சாப்பிளின் உலக அளவில் ஏன் பேசப்படுகிறார் என்பதற்கு இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு. சாப்பிளின் முதல் தேசியப்படம் இது தான். சினிமாக்காரர்களுக்கு உலக இயக்குனர்கள் பலரை தெரியாமல் இருக்கலாம். ஆனால், சாமான்யனுக்கு கூட தெரிந்த இயக்குனராகவும், நடிகராகவும் இருந்தவர் சார்லி சாப்பிள்.

ஆரம்பக் காட்டியிலே, தன்னையும் நாய்யும் ஒப்பிட்டு இரண்டு பேரும் ஒரே வாழ்க்கை வாழ்வதை சுட்டிக் காட்டிவிடுகிறார். அதேப் போல், அவர் வேலைக்கு செல்ல விரும்பதாவனாக கூட காட்டவில்லை. வேலை தேடும் போட்டியில் வெற்றி பெற முடியாமல் விரக்தியில் திரும்புகிறார். செல்வம் புழங்கும் அமெரிக்காவில், வேலை தேடி அலயும் அபலத்தை இந்த காட்டியில் காட்டுகிறார் சாப்பிளின்.

நாயை உள்ளே அனுமதிக்காத விடுதியில் தன் பெண்ட்டுக்குள் நாயை போட்டு செல்வதும், தன் பணத்தை திருடபவனிடம் இருந்து பணத்தை திரும்ப பெருவதும், தன்னை பார்த்து கண்ணடிக்கும் பெண்ணை அப்பாவித்தனமாக கைக்குட்டையால் துடைக்க செல்வதும் என்று சாப்பிளின் நகைச்சுவை முத்திரைகள்.

சாப்பிளினின் திரைப்படங்கள் விவாதிக்கப்பட்ட அளவிற்கு, அவரது குறும்படங்கள் விவாதிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. அந்த காலத்தில் ஒரு படம் இருபது நிமிடம் தான் எடுத்தனர். இன்றைய காலக்கட்டத்தில் இதை நாம் குறும்படமாக பார்க்கிறோம். தன்னுடைய திரைப்படங்களை விட குறும்படத்தில் தான் அதிக விஷயத்தை முன் வைத்திருக்கிறார் என்பதை அவரது ஒரு சில குறும்படங்களின் புரிந்து கொண்டேன்.

சார்லி சாப்பிளின் குறும்படங்களை பற்றி மேலும் பார்க்கலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails