வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, July 27, 2012

மரியம் மிஸ்

ஏன் மரியம் மிஸ் இப்படி நடந்துக் கொள்கிறார்கள் ? எவ்வளவு கஷ்டப்பட்டு தேர்வு எழுதினேன். பிரசாத்துக்கு மட்டும் முழுசாக பத்து மதிப்பெண் போட்டிருக்க, எனக்கு மட்டும் 2 மதிப்பெண்.

மரியம் மிஸ் ஒவ்வொரு வகுப்பிலும் படிக்கிற பையன், படிக்காத பையன் என்று இரண்டாக பிரித்துவிடுவார். அப்படி அவர் மனதளவில் பிரித்துவிட்டால், வருடம் முடியும் வரை அவர் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ள மாட்டார். அவர் பார்வையில் நான் படிக்காத பையன். படிக்கிற பையன் பேப்பரில் பார்த்து அதிக மார்க் போடுவார். என்னைப் போன்ற படிக்காத பையன் தப்பி தவறி நன்றாக எழுதினால் கூட குறைவான மார்க்கில் இருந்து கொஞ்சம் அதிகமாக போடுவார். அவ்வளவு தான்.


இந்த தேர்வுக்கு கஷ்டப்பட்டு தேர்வுக்கு வரக்கூடிய முக்கியமான கேள்கிகளை படித்து வந்தேன். என் நேரம். நான் படிக்காத கேள்விகள் வந்து தொலைத்தது. வழக்கம் போல் முன் பக்கம் அமர்ந்திருக்கும் நன்றாக படிப்பவன் பிரசாத் பேப்பரை காப்பி அடித்து எழுதினேன். அப்படி இருந்தும், மரியம் மிஸ் இருக்கும் ஒரு தலை பட்சத்தால் இந்த முறையும் பெயிலாகிவிட்டேன்.

ஐந்து மதிப்பெண் இருந்தால் போதும், பாஸ்ஸாகி விடுவேன். பேப்பரில் கையில் வைத்திருந்த போது, என் அருகில் வந்த பிரசாத் “என்ன பிரதாப் ! எவ்வளவு மார்க் ?” என்றான்.

அதிக மதிப்பெண் எடுத்தவர்களின் தொல்லையே இது தான். அடுத்த தேர்வு வரை அவர்கள் செய்யும் அலும்பு தாங்க முடியாது. என் பேப்பரை வாங்கி பார்த்தான்.

”என்னடா ! கரேட்டா தானே எழுதியிருக்க... “ என்றான்.உன்ன பார்த்து தானே எழுதினேன். கரேட்டா இல்லமா எப்படி இருக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

“மரியம் மிஸ் கிட்ட பேசி நான் மார்க் வாங்கி தரேன் வா !” என்று அவனாகவே மிஸ்ஸிடம் அழைத்து சென்றான். எதோ பாஸ்ஸானால் சரி தான்.

“மிஸ் ! பிரதாப் கரேட்டா தான் எழுதியிருக்கான். கம்மியா மார்க் போட்டிருக்கீங்க !!” என்று என் பேப்பரை கொடுத்தான்.

இதுவே நான் கொடுத்திருந்தால் என் பேப்பரை வாங்கிக் கூட பார்க்க மாட்டார்கள். படிக்கும் பையன் பேப்பர் கொடுத்தாலே மிஸ்ஸிடம் தனி மரியாதை தான். இரண்டு மூன்று பேப்பரை நன்கு ஏற இறக்க பார்த்தார். தான் ஏன் சரியான பதிலுக்கு குறைந்த மதிப்பெண் போட்டிருக்கிறோம் என்ற சந்தேகம் மிஸ்ஸுக்கு வந்ததிருக்கும்.

பிரசாத் இடது கையில் இருக்கும் அவனது பேப்பரை வாங்கி என் பேப்பரோடு ஒப்பிட்டு பார்த்தார்.

“ஏன்டா ! பிரசாத் பேப்பர பார்த்து காப்பி அடிச்சதும் இல்லமா. மார்க் கேக்க அவனை கூட்டிட்டு வர...”

படிக்கிற பையனுகளிடம் பிரச்சனையே இது தான். நமக்கு நல்லது செய்றேன் சொல்லி வம்பில் மாட்டிவிடுவார்கள்.

“ உன்ன அப்படியே விட்டுருலாம் பார்த்தேன். நட பிரின்ஸ்பல் ரூமுக்கு...”

Tuesday, July 24, 2012

மாற்றம் தந்த இந்திய சினிமா : 1. அக்ரஹாரத்தில் கழுதை

ஜான் ஆப்ரகாம் இயக்கிய ‘அக்ரஹாரத்தில் கழுதை’ படத்தை பார்க்க ஏற்பாடு செய்த தமிழ்ஸ்டுடியோ அருணுக்கும், ’பெரியார் கழக’ பிரின்ஸூக்கும் எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பதிவு ’அக்ரஹாரத்தில் கழுதை’ படத்தின் பற்றிய விமர்சனமே தவிர ஜான் ஆப்ரகாம்மின் ஆளுமையை விமர்சிக்கும் அளவிற்கு எனக்கு தகுதியில்லை என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்லூரி விடுதியில் கழுதை வைக்கக் கூடாது என்று நடுத்தர வயது பேராசிரியர் நானுவிடம் (நாராயணசாமி) சொல்ல, இரண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு தன் கிராமத்தில் கழுதையை விட செல்கிறார். பேராசிரியர் கழுதையை மூட்டை கட்டுவதில் இருந்து, பஸ்ஸில் பயணம் செய்யும் வரை கழுதையோடு அவரும் ஒதுக்கப்படுகிறார். ஊருக்குள் பேராசிரியர் மாட்டு வண்டியில் நுழையும் போது பிணத்தின் முன் ஆடியப்படி சவ ஊர்வலம் செல்கிறது.



நானு அக்ரஹாரத்தில் தன் அப்பா, அம்மாவிடம் கழுதை தன்னை தேடி வந்த கதையை சொல்கிறான். கழுதையை பராமரிக்க ஒடுக்கப்பட்ட ஊமைப்பெண்ணை வேலைக்கு வைக்கிறான். தன் கழுதை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லி பணம் கொடுத்து, ஊருக்கு செல்கிறான். நானு ஊருக்கு சென்றதும், அக்ரஹாரத்து விஷம சிறுவன் ஒருவன் செய்யும் வேலையால் ஒவ்வொரு முறையும் பழி கழுதை மீது வந்து விழுகிறது.

நானு ஊர் திரும்பியது அக்ரஹாரத்தில் கழுதையால் தன்னை திட்டி பேசுவதை சொல்லி அப்பா குறைப்பட்டுக் கொள்கிறார். நடுவில், கழுதையை பார்த்துக் கொள்ளும் ஊமைப்பெண் அந்த கிராமத்தில் இருக்கும் ஒருவனால் வஞ்சிக்கப்பட்டு கர்ப்பமாகிறாள்.

நானுவின் தம்பி தன் மனைவியுடன் வெளியூரில் இருந்து வர, தம்பி மனைவிக்கு வீட்டில் கழுதை இருப்பது பிடிக்கவில்லை. அக்ரஹாரத்தில் தங்கள் வீட்டைப் பற்றி கேவலமாக பேசுவதை சொல்லி கவலைப்படுகிறாள். அவர்களை திருப்திப்படுத்த நானு ஊமைப்பெண்ணின் பொருப்பிலே கழுதையை விட்டு செல்கிறான்.

ஊமைப்பெண் கர்ப்பமான நிலையிலும் கழுதைக்கு தேவையான உணவு வைக்கிறாள். சில மாதம் கழித்து ஊருக்கு திரும்பும் நானு, ஊமைப்பெண் அக்ரஹாரத்தில் இருப்பவர்கள் கழுதையை உள்ளூர் சலவை தொழிலாளியிடம் கொடுத்துவிட்டதாக சொல்கிறாள். இந்த நிலையிலும், நானு கர்ப்பமான ஊமைப் பெண்ணைப் பற்றி நானு விசாரிக்கவில்லை. கர்ப்பத்திற்கு காரணம் யார் என்று கேட்கவில்லை.

நானு சலவைத் தொழிலாளியிடம் இருந்து கழுதையை வாங்கி மீண்டும், ஊமைப்பெண்ணிடம் கொடுத்து விட்டு ஊருக்கு செல்கிறான். கர்ப்பமான ஊமைப்பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறக்கிறது. அடுத்த நாள், கோயிலில் இறந்த சிசு கிடப்பதை ஒரு பிராமினர் பார்க்கிறான். அக்ரஹாரத்தில் இருப்பவர்கள் ஊமைப்பெண்ணின் பாட்டியை விசாரிக்க, கழுதை தான் இறந்த சிசுவை கோயிலில் போட்டதாக சொல்கிறாள்.

முதலில், நம்ப மறுக்கும் அக்ரஹாரத்தினர்கள் பிறகு கூலி ஆட்களை வைத்து அந்த கழுதையைக் கொள்ள சொல்கிறார்கள். ஊருக்கு திரும்பும் நானுவிடம், விஷம சிறுவன் கழுதை கொன்றதை கூறுகிறான். இறந்த கழுதை உருவம் அக்ரஹாரத்து பிரமனர்களுக்கு தெரிவதாகவும், அதற்கு கோயில் கட்ட முடிவு எடுத்திருப்பதாகவும் சொல்கிறான். கழுதையை கொல்ல சொன்ன பிரமனரே கழுதை தெய்வ அம்சம் கொண்டதை சிலாகித்து பேசுவதை நானு கேட்கிறான்.

நானு ஊமைப்பெண்ணை தேடி செல்ல, அவள் கழுதையின் தலை மண்டை ஓட்டை கொடுக்கிறாள். நானு கழுதையின் மண்டை ஓட்டை ஒடுக்கப்பட்ட கூட்டத்தினரிடம் கொடுக்க, அவர்கள் மனிதர்கள் சவ ஊர்வலத்தில் ஆடுவது போல் கழுதை மண்டை ஓட்டை நடுவில் வைத்து ஆடுகிறார்கள்.

இறுதியில், நானுவும், ஊமைப்பெண்ணும் அக்ரஹாரத்துக்கு தீயிட்டு கொளுத்துகிறார்கள்.

தேசிய விருதுப் பெற்ற இந்த படம் இரண்டும் முறை தூர்தர்ஷனில் போடுவதாக அறிவிக்கப்பட்டு அன்றைய ஜானதிபதி வெங்கட்ராமனால் தள்ளி வைக்கப்பட்ட செய்தியை ஆர்.ஆர். சீனிவாசன் கூறினார். வெளியான புதிதில் பல விமர்சனங்கள் சந்தித்ததையும் கூறினார். தகவலுக்கு நன்றி சீனிவாசன் !!!

படம் திரையிட்ட முடிந்த பிறகு பல விமர்சனங்கள் மனதில் எழுந்திருக்கும். காலத்தில் நலம் கருதி அவை எல்லாம் விவாதிக்காமல் இருந்துள்ளது என்று தோன்றுகிறது.

இறந்த சிசுவை பாட்டி தூக்கி செல்ல, அடுத்த நாள் கோயிலில் சிசு கிடக்கிறது. அப்படி என்றால் பிணத்தை எடுத்து சென்ற பாட்டி ஏன் கோயிலில் போட வேண்டும் ? பிரமனர்கள் செய்யும் தவறை கழுதை மீது போடுவது போல், ஊமைப்பெண்ணின் பாட்டி செய்கிறாள். கிழவியை தவிர்த்து அக்ரஹாரத்தில் இருப்பவர்கள் மட்டும் தண்டிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் ?

ஒடுக்கப்பட்ட பிரிவில் சேர்ந்த பெண், மூன்று முறை கைப்பிடித்து இழுத்தால் ஆசைக்கு இனங்கிவிடுவாளா ? தந்தை பெயர் தெரியாமல் பிறக்க போகும் குழந்தையை நினைத்து வருந்துவது போல் ஒரு காட்சிக் கூட இல்லையே !! ஒடுக்கப்பட்டவர்கள் கற்பைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று சொல்லும் எண்ணத்தை உருவாக்குகிறது.

பார்ப்பனர்களின் பழக்க வழக்கங்களை துணிச்சலாக விமர்சனம் செய்து காட்சிப்படுத்தியதில் ஜான் ஆப்ரகாம் பாராட்டு பெற்றாலும், ஊமைப்பெண் பாத்திரப்படைப்பில் பல விமர்சனங்களுக்கு ஆளாகிறார்.

ஒரு கழுதையை கொன்றதிற்காக அக்ரஹாரத்தை எரிக்கும் பேராசிரியரும், ஊமைப்பெண்ணும்… அது வரை காட்டிய பாத்திரப்படைப்பையே சந்தேகிக்க வைக்கிறது. பேராசிரியராக வரும் எம்.பி.சீனிவாசன் மிகவும் அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்கும் பாத்திரமாக வருகிறார். கழுதை கொன்ற செய்தியை கேட்கும் போது கூட முகத்தில் பெரிய அதிர்ச்சியோ, பதட்டமோ, கோபமோ காட்டவில்லை. அப்படிப்பட்டவர் மனதில் அக்ரஹாரத்தை எரிக்க கூடிய வன்மத்தை ஏற்றுக் கொள்ளுபடியாக இல்லை.

அதேப் போல், ஊமைப்பெண் தன்னை ஏமாற்றி குழந்தை கொடுத்தவனை எதுவும் செய்யாமல் இருக்க, பணத்திற்காக பாரமரித்த கழுதையை கொன்றதற்காக அக்ரஹாரத்தை எரிப்பது ஏற்றுக் கூடியதாக இல்லை.


’வேதம் புதிது’ படத்தை சென்சார் போர்ட்டுக்கு போட்டு காட்டிய பிறகு, பாரதிராஜாவிடம் “படம் நல்லா இருக்கு, எதுக்கும் இந்த படத்த காஞ்சி சங்கரசாரியாருக்கு போட்டு காட்டுங்க…” என்றார்களாம். அதற்கு பாரதிராஜா, “காஞ்சி சங்கரசாரியார் எப்போ சென்சார் போர்ட் மெம்பரானாரு…” என்றார். தனது நிலையில் மிகவும் தீவிர இருந்தார் பாரதிராஜா.

‘வேதம் புதிது’ படத்திற்கு முன்பே ‘அக்ரஹாரத்தில் கழுதை’ படம் வெளிவந்துள்ளது. அப்படியென்றால், எந்த அளவிற்கு பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டை ஜான் ஆப்ரகாம் எதிர்க் கொண்டு இட்ருப்பார் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.  தேசிய விருதுப் பெற்றும், தூர்தரிஷனின் போட அனுமதிக்க வில்லை. இது பார்ப்பனியர்களின் ஆதிக்கமே தெரிகிறது.

கண்டிப்பாக அன்றைய காலக்கட்டத்தில் மிக துணிச்சலான படம் தான். பார்ப்பனர்களை சாடியதற்காக இந்த படத்தை பாராட்டலாமே தவிர கொண்டாடும் கூடிய படைப்பாக இந்த காலத்தில் தெரியவில்லை.

**

ஒவ்வொரு மாதம் மூன்றாவது சனிக்கிழமை அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி யில் ”மாற்றம் தந்த இந்திய சினிமா” நிகழ்வு நடக்கும். நண்பர்களுடன் அவசியம் கலந்துக் கொள்ளவும்.

Wednesday, July 18, 2012

பசியில்ல...!!

 குழந்தை பிறந்தவுடன் கணவர்-மனைவி இருவருக்குள் ஒரு சிறுமன பிரிவு ஏற்ப்படும். குழந்தை பார்த்துக் கொள்வதில் சண்டை வரும் என்பார்கள். ஆனால், எங்கள் வீட்டில் குழந்தை பிறந்ததும் எனக்கும், என் அம்மாவுக்கும் தான் பிரிவு ஏற்ப்பட்டது.

என் பெற்றோருக்கு ஒரே மகன் நான். எனக்கு மழை பிடிக்கும் என்பதாலோ என்னவோ ‘வருண்’ என்று பெயர் வைத்தனர். ’பசி’ எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது. பசி எடுக்கும் முன்பே சரியான நேரத்தில் சாப்பாடு வைத்துவிடுவார்கள். சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் ஏதாவது நொறுக்கு தினி வேறு. அம்மாவிடம் "பசியில்ல" என்ற வார்த்தை சொன்னது தான் அதிகம்.



எனக்கு நல்லது என்பதை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்வார்கள். அவர்களுக்கு பிடித்தது எல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். ஆனால், எனக்கு பிடித்தது எது என்று அவர்கள் கேட்டதில்லை. அவர்களுக்கு பிடித்தது எனக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையை காப்பாற்ற அவர்களுக்கு பிடித்ததை எல்லாம் எனக்கு பிடித்ததாக மாற்றிக் கொண்டேன். என் திருமணம் உட்பட !

என்னுடன் படித்தவர்கள் எல்லோரும் காதல் திருமணம் செய்துக் கொள்ள நான் பெற்றோர்கள் பார்த்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டேன். அப்பாவின் விருப்பத்தை விட அம்மாவின் விருப்பம் தான் எனக்கு மிக முக்கியமாக தெரிந்தது. அம்மாவுக்கு அந்த பெண்ணை பிடித்ததால் திருமணத்திற்கு சம்மதித்தேன். திருமணம் ஆன புதிதில் மாமியார் – மருமகளுக்குள் பெரிதாக சண்டை வந்ததில்லை. எல்லாம் எனக்கு குழந்தை பிறந்தவுடன் மாறும் என்று எதிர்பார்க்கவில்லை.

என் மனைவி குழந்தையை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்பதில் ஆரம்பித்தது சண்டை. யாரும் பிறக்கும் போதே அம்மாவாக, அப்பாவாக பிறப்பதில்லை. குழந்தைகள் கற்க கற்க நாமும் பெற்றோராக ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம். வயதான பெற்றோருக்கு பொருந்தும்.

”டேய் வருண் ! அவ என்ன குழந்தைக்கு சரியா பால் கொடுக்க மாட்டேங்கிறா ?”.

மனைவியை கேட்டால், “இப்ப தான் ஒரு மணி நேரம் முன்னாடி கொடுத்தேன். அவங்க தூங்கிட்டு இருந்தாங்க. அடுத்த வாட்டி பால் கொடுக்கும் போது அவங்கள எழுப்பி பால் கொடுக்குறேன்.” என்பாள்.

வழக்கமாக எல்லார் வீட்டில் நடக்கும் சண்டை தான். இரண்டு சம வயதில் இருக்கும் பெண்களுக்கு ஒத்துவராத போது, 20 வருட வயது இடைவேளை இருப்பவர்களுக்குள் எப்படி ஒத்துவரும்.

அப்பா எப்போதும் அம்மா பக்கம் தான். ரிட்டையர்ட் ஆனவருக்கு மனைவியின் ஆறுதல் அவருக்கு அதிகமாக தேவைப்பட்டது.அம்மாவிடமும், மனைவியிடமும் சேர்ந்தாற்போல் நல்ல பெயர் எடுத்த எந்த ஆண்மகன் உலகில் இல்லை என்பதால், நானும் 'நல்ல பெயர்' வாங்க முயற்சியில் ஈடுப்படவில்லை. அவர்களின் சண்டைக்குள் நுழைவதுமில்லை.

அடுத்த பிரச்சனை சமையல் கட்டில் தொடங்கியது. ஆரம்பத்தில், அம்மா மட்டுமே சமைப்பாள். கொஞ்ச நாட்களில் என் மனைவியும் சேர்ந்து சமைக்க தொடங்க, சுத்தமாக சமையல் அறையை வைத்துக் கொள்ளவில்லை. என் மனைவி சமையல் சரியில்லை என்று இன்னொரு பிரச்சனை. முதலில் அம்மா சமையல் மட்டும் தான் இருந்தது. இப்போது, அம்மா, மனைவி இருவர் சமையல். ஒருவர் சாதம் வைத்தால், மற்றவர் சாம்பார் வைப்பார். இருவர் போட்டியில் சாப்பாடு எவ்வளவு கேவலமாக இருந்தாலும், நானும், அப்பாவும் சாப்பிட பழகிக் கொண்டோம்.

ஆபிஸில் இருந்து வீட்டுக்கு வந்ததும் அம்மா பிரச்சனை ஆரம்பிப்பாள்.

“ஏம்மா நிம்மதி கெடுக்குற ?” கோபத்தில் கேட்டதற்கு, “பெத்த மகனோட நிம்மதிய அம்மா கெடுப்பாங்களா ? “ எங்கள் சண்டைக்குள் அப்பா நுழைவார்.

பெத்த மகனுக்கு பால் கொடுக்கவில்லை என்று அம்மா சண்டை போடுபொதெல்லாம் அப்பா அமைதியாக இருப்பார். ஒரு கட்டத்தில் சண்டை வரும் போதெல்லாம் எங்கள் தனிக்குடித்தனம் போக சொல்லி மேலும் பிரச்சனை வெடிக்கும்.

அப்பா, “நானா உன்ன வீட்ட விட்டு போக சொல்ல மாட்டேன். நீயா போகுறது உன் இஷ்டம்” என்பார்.

என் மனைவி, “உங்க அப்பாவுக்காக பொருத்துக்கலாம். பேரன் இல்லாம உங்க அப்பாவுக்கு கஷ்டமா இருக்கும். அவங்க ஒரே பையன தனிக்குடித்தனம் கூட்டிட்டு போன நாளைய சொந்தக்காரங்க என்ன தான் தப்பா பேசுவாங்க. உங்க அம்மா பண்ணது பெரிசா தெரியாது.” என்றாள்.

அப்பாவும், என் மனைவியும் தனிக்குடித்தனம் போக விரும்பினாலும், எங்கள் சொந்தக்காரர்கள் யாரும் தவறாக பேசக்கூடாது என்ற எண்ணம் தான் அதிகமாக இருந்தது.

ஒவ்வொரு சமயமும் சண்டையில் முடிவில் தனி குடித்தனம் பிரச்சனை ஆரம்பிக்கும். போக போக... “தனிக் குடித்தனம்” போக வைக்கவே பிரச்சனைகள் வெடிக்கும். இவர்கள் பிரச்சனையில் நான்கு வருடங்கள் போனதே தெரியவில்லை. வேலையில் அதிகம் கவனம் செலுத்தமுடியவில்லை. ஒரு கட்டத்தில் என் சொந்த வீட்டுக் கூட எனக்கு வாடகை வீடாக தெரிந்தது. வீட்டு செலவுக்கு நான் கொடுக்கும் பணம்…. ‘வாடகை’ எனக்கு தோன்றியது. அம்மாவிடம் பணத்தை கொடுத்து வந்த நான் என் அப்பாவிடம் மாத பணத்தை கொடுத்தேன். ஏதாவது ஒரு பிரச்சனை வெடிக்க, வீட்டில் இருப்பது எனக்கும் பிடிக்காமல் போனது. தனியாக சென்று விடலாம் என்பது தான் சரியான முடிவு.


அப்பா அப்போது சொன்ன அதே பதில் தான். என் மனைவி அப்பாவுக்காக ஆரம்பத்தில் சொன்னவள், “உங்க வீட்டு ஆளுங்கல கூப்பிட்டு தனிக்குடித்தனம் போவோம். தனியா போனதுக்கு அப்புறம் நான் தான் ப்ளான் பண்ணி உங்கள தனியாக கூட்டிட்டு வந்தேன் சொல்லுவாங்க”. அவளுக்கும் வீட்டில் இருக்க விருப்பமில்லை. என் மனைவிக்கு ஒரே பிரச்சனை. தன்னை யாரும் தப்பாக சொல்லிவிடக் கூடாது.

அம்மாவுக்கு மருமகளோடு ஒத்துபோகமாட்டேன் என்ற ஈகோ. நான் மனைவி சொல் பேச்சு ஆடுகிறேன் என்பாள். சொல்லப்போனால், திருமணத்துக்கு பிறகு தான் என் இஷ்டப்படி இருக்க தொடங்கினேன். நான் அம்மாவிடம் பேசும் போது, மனைவியை ஒரு வார்த்தைக் கூட பேசவிட மாட்டேன்.

“பொம்மளைய பேசவிட்டு வேடிக்கை பாக்குறான்” இன்னொரு வார்த்தை அம்மா வாயில் இருந்து பேச்சு வரும். ஆனால், அப்பா அம்மாவை பேச தடுப்பதில்லை.

ஒரு சமயத்தில், “ எத்தன வாட்டி வீட்ட வீட்டு போக சொல்லுறது. ரோஷம் கெட்டவன். இங்கையே தங்கி தின்னுக்கிட்டு இருக்குறது. அம்பளையா நீ “ என்று கேட்டாள் அம்மா. அதன் வார்த்தை அர்த்தம் புரிந்து தான் பேசுகிறார தெரியவில்லை. வார்த்தைகள் கொட்டிக் கொண்டே இருந்தாள். வாழ்க்கையே வெருத்து போவதுப் போல் இருந்தேன்.

எதனால் நான் அம்மாவுக்கு எதிரியாக தெரிகிறேன் ? நான்கு வருடங்களாக அம்மாவிடம் பேச்சை குறைத்த நான் ஒரேடியாக வெருக்க தொடங்கிவிட்டேன். நான் தனி குடித்தனம் செல்ல முடிவு எடுத்து, நண்பர்கள் ஒரு சிலரிடம் வீடு பார்க்க சொன்னேன். இரண்டு நாட்கள் கழித்து அப்பா, " நான் இருக்குற வைக்கும் இந்த வீட்டுல இருங்க. அதுக்கப்புறம் உங்க இஷ்டப்படி இருங்க."

அவரிடம் என்ன சொல்லுவது ? நாங்கள் என்னவோ தனிக்குடித்தனம் போக துடிப்பது போல் அப்பா பேசினார். இவ்வளவு உயிராக வளர்த்த அம்மா என்னை ஒரேடியாக வெருக்கிறார். அம்மாவை சமதானப்படுத்த முடியாத அப்பா, ஒவ்வொரு முறையும் என்னை சமாதானம் படுத்தினார். ஒவ்வொரு முறையும் நான் சமாதானம் ஆகும் போதும், அடுத்த அவமானத்திற்கு தயாராக வேண்டியதாக இருந்தது.

என்னுடைய கோபத்தை அம்மாவின் சமையல் மீது காட்டினேன். அம்மா சமைப்பதை தவிர்த்து, மனைவி சமைப்பதை மட்டும் சாப்பிடுவேன். என் மகனின் பள்ளி விடுமுறையில், என் மனைவி மகனுடன் அவள் அம்மா வீட்டு சென்றாள். அம்மாவின் சமையலைத் தான் சாப்பிட்டாக வேண்டும். வெளிப்படையாக அம்மாவின் சமையலை சாப்பிடாமல் இருக்க முடியாது. அப்படி செய்தால், அடுத்த பிரச்சனை தொடங்கும். வெறுப்போடு குறைவாக சாப்பிட்டேன்.

சிறு வயதில் அம்மாவின் பாசத்தால் குறையுள்ள சாப்பாட்டை ருசித்து சாப்பிட்டேன். இப்போது, ருசியாக இருந்தாலும் அம்மாவின் சாப்பாடு எனோ பிடிப்பதில்லை. அம்மாவின் நான்கு வருட வார்த்தைகளும், சண்டைகளும் அம்மாவிடம் எனக்கு பெரிய இடைவேளையை உருவாக்கிவிட்டது.

அலுவலக வேலை இரவு 11 மணி வரை வேலை செய்து வீட்டுக்கு வந்தேன். சாப்பிடக் கூட நேரமில்லை. அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் எந்த ஓட்டலும் இல்லை. எல்லாம் முடி இருந்தது. வீட்டுக்கு வந்ததும் ஏதாவது சாப்பிடலாம் என்று இருந்தேன்.

அம்மாவிடம் " பசிக்குது சாப்பாடு இருக்கா ? " கேட்டால் எதாவது எடுத்துக் கொள்ள தோன்றியது. எனக்கு அம்மா இப்போது மூன்றாவது மனுஷி தான். கதவை திறந்தது, " ஏன் இவ்வளவு நேரம். ஏதாவது சாப்பிட்டியா ? " என்று அம்மா கேட்டாள்.

" ஆபிஸ் வேலை ஜாஸ்தி. அங்கையே சாப்பிட்டேன்." என்றேன்.

 என் முகத்தை பார்த்து கண்டு பிடித்து விட்டார் என்று நினைக்கிறேன்.


 "சாப்பிட நா ஏதாவது செஞ்சி தரட்டா ?" என்றாள்.

உள்ளுக்குள் ஒரு மாதிரியாக இருந்தது.

”பசியில்ல..." என்றேன்.

Friday, July 13, 2012

பில்லா - 2 (திரை விமர்சனம்)

பொதுவாக தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் என்பது அறிதான ஒன்று. அதிசய மனிதனின் பிறகு வந்த ‘நாளைய மனிதன்’, நான் அவன் இல்லையில் இரண்டாம் பாகத்தின் தோல்விக்கு பிறகு இரண்டாம் பாகம் முதல் படத்தின் வெற்றியின் பெயரை கெடுப்பதுப் போல் தான் இருந்து வந்தது. ஆனால், முனி - 2 (காஞ்சனா) இந்த சினிமா சென்டிமென்ட்டை உடைத்து, மற்றவர்களையும் இரண்டாம் பாகம் எடுக்க தூண்டியுள்ளது. இந்த சமயத்தில் பில்லா - 2 வந்துள்ளது. இதில் இவர்கள் வெற்றிப் பெற்றார்களா இல்லையா என்ற கேள்விக்கு ஒரளவுக்கு வெற்றிப் பெற்றுயிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.


"நாம வாழுறதுக்காக... யார வேண்டுமானாலும் கொல்லாலாம்" என்ற முதல் பாகத்தின் வசனத்தை மைய கருவாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

அகதியாக தமிழகத்துக்கு வரும் பில்லா, வைரக்கடத்தல், போதை கடத்தல் என்று... கடைசியில் ஆயுத கடத்தல் செய்கிறான். அவன் வளர வளர எதிரிகள் பெறுகிறார்கள். அதனால், படம் முழுக்க அஜீத் யாரையாவது சுட்டுக் கொண்டே இருக்கிறார். யாராவது இறந்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த இரண்டும் இல்லை என்றால்... டூ பீஸ் கவர்ச்சியில் பெண்கள் வருகிறார்கள். இறுதியில், பில்லா தன் எதிரிகளை எல்லாம் கொன்றாரா என்பது க்ளைமாக்ஸ்.

படம் முழுக்க அஜீத்தின் ஆதிக்கம். அஜீத்துக்கு பழகிய வில்லன் பாத்திரம் தான். இதில் அன்டர் பிளே செய்திருக்கிறார். (Coat, cooling glass விடுவதாக இல்லை). அகதி பாத்திரத்தில் அஜீத்துக்கு எடுப்பட வில்லை. முகத்தில் சோகமோ, வருத்தமோ பெரிதாக இல்லை. ஆனால், அதன் பின் வரும் காட்சிகளுக்கு சரியாக உணர்ந்து நடித்திருக்கிறார்.

படத்தின் நாயகி என்று யாருமில்லை. பாடலுக்குக் கூட ‘நாயகி’ என்று சொல்லப்படுபவர்கள் பயன்ப்படுத்தவில்லை. கவர்ச்சிக்கு என்று ஒரு பெரிய குப் பெண்களை இறக்கியிருக்கிறார்கள். எந்த பெண்ணின் முகத்தை பார்க்க தோன்றவில்லை. (முகத்த தவிர மத்தது காட்டுன என்ன பண்ணுறது !! )

முன்பாகம் (prequel) என்பதை தமிழ் சினிமாவில் பிளாஷ் பேக்காக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், பிளாஷ் பேக்காக சொல்ல வேண்டிய கதையை ஒரு படமாக எடுத்து இருக்கிறார்கள். (இரண்டாம் பாகம் என்றால் முதல் பாகத்தின் தொடர்ச்சியை எடுக்க வேண்டும் என்று இல்லை. அதன் முந்தைய பகுதியைக் கூட படமாக்கலாம் என்பதை இந்த படம் காட்டியுள்ளது.)



படத்தின் மிக பெரிய ப்ளஸ் என்று சொன்னால் வசனம் தான். ( வாழ்த்துக்கள் இரா.முருகன் சார். கமலின் "உன்னைப் போல் ஒருவன்" மறைக்கப்பட்ட உங்கள் பெயர் இதில் தெரியும் என்று நினைக்கிறேன்.)

 “போராளிக்கும் தீவிரவாதிக்கும் ஒரே வித்தியாசம்… ஜெய்க்கிறது. ஜெய்ச்சிட்டா போராளி....”

“இறங்கி வேல செய்றவனுக்கும், உக்காந்து வேல வாங்குறவனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.” 

இளவரசு "நீ ரொம்ப பேராசப்பட்டுற" என்று சொல்லும் போது, " இது பேராச இல்ல... பசி" என்று சொல்லும் இடமாகட்டும்.

வில்லன், “I made two mistakes. One, i believed him. Another one, i didnt believe him (Ajith).” போன்ற வசனங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

அடுத்த ப்ளஸ். இரண்டாம் பகுதி. முதல் பாதியில் மெதுவாக நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் வேகமாக செல்கிறது. முதல் பாதியில் அஜீத் கடத்தல்க்காரனாக மாறும் காட்சிகள் மெதுவாக தெரிந்தாலும் நன்றாக உள்ளது.

தீம் ம்யூசிக்கை தவிர பாடல்கள் பெரிதாக கவரவில்லை. ( உண்மையை சொல்ல வேண்டும் என்றால், ரசிகர்களின் சத்தத்தில் கேட்கவில்லை).

மருந்துக்குக் கூட காமெடி இல்லை. அதிக வன்முறை, அதிக கவர்ச்சியால் குடும்பத்துடன் என்று பார்க்க முடியாது. ( அதான் போஸ்டர்ல A certitifcate போட்டிருக்காங்களே !)

ப்ளஸ் 

1.அஜீத்தின் Transformation scenes. (அவசரத்துக்கு தமிழ் வார்த்தை கிடைக்கல.)
2. இரண்டாம் பகுதி வேகம்.
3.ரத்தின சுருக்கமான வசனங்கள்.
4. முதல் முன்பாகம் தமிழ்ப்படம் (First Tamil prequel movie).

மைனஸ்

1. அகதி பாத்திரத்தில் பொருந்தாத அஜீத்தின் அறிமுகம்.
2. வேற்று மொழி வசனங்கள். சில இடங்களில் சப் டைட்டில் கூட இல்லை.
3.அதிக வன்முறை, அதிக கவர்ச்சி.
4. பல கோடி மதிப்புள்ள ஆயுதங்களை இரண்டு பேர் கடத்துவது. உலகளவில் ஆயுத வியாபாரம் செய்பவன் கோட்டைக்குள், மூன்று பேர் நுழைந்து துப்பாக்கியால் சுடுவது போன்ற பழைய சினிமா சண்டைக் காட்சிகள்.

கொஞ்சம் மெனகெட்டு இருந்தால் நல்ல Gangster படம் கிடைத்திருக்கும்.

Friday, July 6, 2012

என் விகடனில் என்னுடைய வலைப்பூ !!!

இந்த வாரம் ஆனந்த விகடனில் (என் விகடன் - சென்னை பதிப்பு) என்னுடைய வலைப்பூ இடம் பெற்றுள்ளது.



Tuesday, July 3, 2012

பெல் அடிச்சாச்சு - குறும்படம்

‘பெல் அடிச்சாச்சு’ என்ற குறும்படம் பார்த்தேன். மூன்று நிமிடம்தான் ஓடுகிறது. திங்கள்கிழமை காலை பள்ளிக்கு செல்ல அடம் பிடிக்கும் சிருவனை, திட்டி பள்ளிக்கு செல்ல சொல்கிறாள் அம்மா. தூக்க கலக்கத்தில் இன்று, ஞாயிறு பள்ளி இல்லை என்கிறான். ஆனால், அம்மா அவனை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு அனுப்புகிறாள். அவன் பள்ளிக்கூடம் செல்கிறான். பள்ளிக்கூடம் முன் உள்ள சிறுவர் விளையாட்டு மைதானத்தில் விளையாடிவிட்டு மகிழ்ச்சியாக வகுப்புக்கு செல்கிறான்.

அப்போது, “பெல் அடிச்சாச்சு...” சீக்கிரம் கொடுடா” என்ற குரல் கேட்டு கற்பனையில் இருந்து மீள்கிறான். முதலில் இடம் பெற்றா காட்சிப் போல் அவன் அம்மா எழுப்ப, பள்ளியில் கடலை விற்க செல்கிறான். ஆம் ! அவன் பள்ளிக்கூடம் முன் கடலை வியாபாரம் செய்யும் தொழிலாளி முதலாளி. கல்வி கற்க ஆசைப்படும் சிறுவனின் கனவு தான் கதை. ஒரே காட்சியை இரண்டு முறை காட்டி வேறு வேறு பரிமாணத்தில் கொடுக்கிறார் இயக்குனர் அருண்குமார்.


குழந்தையை படிக்க வைக்க குழந்தை தொழிலாளிகளை வேலையில் அமர்த்துவது தவறு என்கிறோம். ஆனால், குழந்தை முதலாளிகளை எப்படி படிக்க வைப்பது ? என்பதை இயக்குனர் புரிய வைக்க முயன்றிருக்கிறார். இன்னும் கொஞ்சம் கூடுதல் செலுத்தி சொல்லி இருக்கலாம்.


(நன்றி : பொதிகை மின்னல், ஜூன்,2012)
.

LinkWithin

Related Posts with Thumbnails