வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label America. Show all posts
Showing posts with label America. Show all posts

Monday, August 11, 2014

இராக் : அமெரிக்காவின் மௌனம் கலைந்தது !!

திரைப்படங்களுக்கு இரண்டாம் பாகம் வருவது போது, இன்று ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் இரண்டாம் பாகம் வரத் வந்துக் கொண்டு இருக்கிறது. சதாம்மை அழித்ததோடு இராக்கில் தங்கள் பணி முடிந்தது என்று அமெரிக்கா இராணுவம் மூட்டைக் கட்டிக் கொண்டு தங்கள் நாட்டுக்கு திரும்பிவிட்டார்கள். தங்களுக்கு சாதகமான ஷியா முஸ்லிம் தலைமையிலான ஆட்சி அமைந்தது, குர்துஸ்தான் தன்னாட்சியானது என்று எல்லாம் சுபமயமாகும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், நடந்தது நடப்பது எல்லாம் நேர் எதிர்.

Islamic State of Iraq and the Levant (ISIL) என்று அழைக்கலாம். Islamic State of Iraq and Syria (ISIS) என்று அழைக்கலாம். சுருக்கமாக ISIS என்று கூட அழைக்கலாம். எப்படி அழைத்தாலும் இவர்களின் நோக்கம் லெபனான், சைப்ரஸ், சிரியா, பாலஸ்தீன், ஜோர்டன், இஸ்ரேல், துருக்கியின் சில தென் பிராந்தியங்களை உள்ளடக்கிய பகுதிகள் ஒருங்கிணைத்து ”இஸ்லாமிய தேசம்” உருவாக்க வேண்டும் என்பது தான்.

இன்னொரு ஜிஹாத்தி அமைப்பு தான். ஆனால், மற்றவர்களை போல் இவர்கள் என்று நினைத்து விட முடியாது. இவர்கள் முன்வைக்கும் கனவு “”இஸ்லாமிய தேசம்” தான் பலரை ஈர்க்கிறது.

கூகிள் இணையத்தில் ‘isis’ என்று அடித்து பார்த்தால் எகிப்திய காலத்து காவல் தெய்வத்தின் பெயர் வந்து நிற்கும். அதை வழிபடும் முறை, அதன் அருள், பாரப்பரங்கள் எல்லாம் சொல்லும். அதை அடுத்து இப்போது வரும் இன்னொரு லிக் இராக்கில் இருக்கும் “ISIS” அமைப்பைப் பற்றியதாக இருக்கும்.

இவர்களின் பிராதான நோக்கம் இராக்கையும், சிரியா, இன்னும் பல இஸ்லாமிய நாடுகளை கலந்தடித்து ஒரு அகண்ட இஸ்லாமிய தேசத்தை உருவாக்க வேண்டும். இராக், சிரியா இரண்டுமே இஸ்லாமிய தேசம் தான்.

ஒரு மதத்தில் சேர்ந்தவர்கள், உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்று தோன்றலாம். அனால், இரண்டு தேசத்திலும் பெரும்பான்மை ஷியா முஸ்லீம் சேர்ந்தவர்கள். ISIS அமைப்பு சன்னி முஸ்லிம் அமைப்பு.

சன்னி முஸ்லிம். இராக் ஐந்தில் ஒரு பங்கு தான். சன்னி முஸ்லீம் சேர்ந்த சதான் ஹூசைன் மட்டும் அங்கு அதிபர் பதவி ஏற்கவில்லை என்றால், இவர்கள் ஆயுத ஏந்தி இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். அமெரிக்கவால் ஷியா முஸ்லிம் ஆட்சி அமைந்த பிறகு சன்னி முஸ்லிம்களை ராணுவ, அரசு வேளை ஒதுக்காமல் இருந்திருந்தால் இவர்கள் ஆயுதம் சண்டையிட்டுயிருக்கமாட்டார்கள் என்று வாதிடலாம். அந்த அமைப்பு இத்தனைப் ஷியா முஸ்லீம்களை கொன்று குவித்திருக்க மாட்டார்கள் என்று பேசலாம். முடிந்த சம்பவங்களுக்கு இப்படி பல யூகங்கள், கருத்துக்கள் சொல்லிக் கொண்டு இருப்பதில் எந்த பலனுமில்லை. நடந்துக் கொண்டு இருக்கும் மரணங்களை யாராலும் தடுக்க முடியாது.

ISIS அல் கொயிதாவின் மறு உருவமா, ஆசிர்வாதம் பெற்ற அமைப்பா, நெருக்கமான தொடர்பு உடையவர்களா என்று அமெரிக்க உளவுத்துறை மண்டையை உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஒன்று உறுதி. இவர்களின் செயல்பாடுகள் இரண்டு அமைப்புகளுக்கும் அவர்களின் சாயல் இருக்கிறது. இவர்கள் இராக்கின் அல் கொயிதா !!

*

இரண்டு ப்ளாஷ்பேக்

அல் கொயிதாவின் நட்பு அமைப்பான தாலிபன் ஆகஸ்ட் 8, 1998ல் மஸார் ஏ ஷரீஃப்ல் 8000 பேரை சுட்டு கொன்றுள்ளார்கள். இறந்தவர்கள் பெரும்பாலும் ஷியா முஸ்லிம்கள். அல் கொயிதாவோ, மற்ற அமைப்போ தாலிபனின் இந்த செயலை கண்டித்ததாக தெரியவில்லை. (உபயம் பா.ராவின் ’தாலிபன்’ நூல்)

சதாம் ஹூசைன் காலம். பாக்தாத்துக்கு வடகிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் இரான் எல்லையோரம் இருக்கும் ஹல்ப்ஜா என்கிற குர்திஷ் நகரம். இராக் இராணுவம் சுற்றி வளைத்து குண்டு மழைகளை பொழிந்தது. வீடுகள், சாலைகள் அனைத்தையும் அழித்தது. ரசாயன ஆயுதங்களாளும் தாக்கினர். ஐயாயிரம் பேர் மேல் இறந்தனர். பதினெட்டாயிரம் பெயர் மேல் பாதிக்கப்பட்டனர். அனைவரும் ஷியா முஸ்லிம் பிரிவினை சேர்ந்தவர்கள். 

சதாம் காலத்தில் ஷியா வகுப்பினர் கொத்து கொத்துக்காக கொல்லப்பட்டது ஒரு உதாரணம். சந்தேகமே இல்லாத ஒரு இனப்படுகொலையை சதாம் அப்போது செய்திருக்கிறார். (உபயம் பா.ராவின் ’சதாம் ஹூசைன் வாழ்வும் இராக்கின் மரணமும்’ நூல்) 

சதாம் ஹூசைன் பத்து வருடம் முன் கலாவதியான பெயர் தான். அவர் இறந்து ஏழு வருடங்களாகிவிட்டது. ஆனால், அவர் விட்டு சென்ற எச்சம், அறிவிக்கப்பட்டாத வாரிசுகாளத் தான் இந்த ISIS அமைப்பாக செயல்ப்படுகிறது.

ISISயின் எழுச்சி, தாக்குதல், படுகொலைகள் பார்த்து அமெரிக்காவுக்கு கலங்கி போய்யிருப்பது மறுக்க முடியாது. மத்திய கிழக்கில் இவர்கள் ஆதிக்கம் வளரத் தொடங்கினால், இஸ்ரேல் போன்ற தேசத்தில் ஆபத்து நிச்சயம். அதனால், ISIS தங்கள் சமூகத்தை சார்ந்தவர்களை காக்க வந்த ஆபத்தாண்டனாக தெரியலாம்.

காஸா காப்பாற்றப்படலாம். அங்கு நடக்கும் இனப்படுகொலை தடுக்கப்பட்டும். ஆனால், ஷியா முஸ்லீம், கிறிஸ்த்துவர்கள், மற்ற மதத்தினர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்பது கேள்விக்குறி தான். கொசுவுக்கு பயந்து வீட்டை எரிக்கும் கதையாக மாறலாம். இன்னொரு இனப்படுகொலை அரங்கேறாது என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

முன்பு அமெரிக்க தனது படையை அனுப்பாமல் இருந்ததற்கு பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் போன்ற பல பிரச்சனைகள் உள்ளுக்குள் இருந்தது (இப்போதும் இருக்கிறது). ஆனால், யுத்தம் என்பது அவர்களுக்கு சக்கரை பொங்கல். அதை அவர்கள் விட மாட்டார்கள். அப்படி இருந்தும் அமெரிக்கா தனது இராணுவத்தை அனுப்பாமல் மௌனமாக இருப்பது முக்கியக் காரணம் இருக்கிறது.

ஆட்டம் நடந்துக் கொண்டு இருப்பது சன்னி முஸ்லிம் vs ஷியா முஸ்லிம். ISIS சன்னி முஸ்லிம். இராக் அரசு, இராக் இராணுவம் ஷியா முஸ்லிம். அண்டை நாடுகளான சிரியா, லெபானன் பெரும்பான்மை ஷியா மக்கள். ஷியா அரசு. ஒரு போதும் ISIS ஆதரவு தர மாட்டார்கள். லெபானனில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பும் ISISவை ஆதரிக்கவில்லை.

இராக்கில் தங்கள் வேலை முடிந்த கையோடு Round 2வில் ISISயின் அடுத்த டார்கெட்டாக சிரியா இருக்கும். அங்கு உள்நாட்டு கலவரம் நடப்பதாலும், அதிபர் பதவியை விட்டு பஷர் அல் ஆஸாத் இறங்க மாட்டேன் அடம் பிடிப்பதாலும் ISISயின் டார்கெட் சுலபமாக இருக்கலாம். ISISயின் நடவடிக்கையால் உலகளவில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு நடுவில் பெரிய பிரிவினையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது அமெரிக்காவுக்கு லாபமே !!

அமெரிக்கா தனது இராணுவத்தை அனுப்பினால், ஆட்டம் அமெரிக்கா vs இஸ்லாமியர்கள் என்று மாறிவிடும் என்று யோசித்தது. அமெரிக்கா இஸ்லாமியர்களுக்கு எதிராக போரிடுகிறார்கள் என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்படலாம். இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்கப்படலாம். அதனால், அமெரிக்கா எந்த சேதாரம் இல்லாமல் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தது.

ஆனால், இப்போது அமெரிக்கா அந்த மனநிலையில் இல்லை.

காரணம், ஒவ்வொரு வெற்றியிலும் இராக்கின் இராணுவ ஆயுதங்களை கைப்பற்றி போர் செய்கிறார்கள். ஆதாவது, அமெரிக்க இராக்க்கு அனுப்பிய இராணுவ ஆயுதங்களை கைப்பற்றுகிறார்கள். இராக் இராணுவமும் அவர்கள் பெறும் வெற்றியைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஒரு நாட்டின் இராணுவம் எந்த வேகத்தில் பாக்தாத்தை நெருங்க முடியுமோ அந்த அளவுக்கு ISIS வேகமாக நெருங்கியதை உதாரணமாக சொல்லலாம். இப்போது ISIS அடுத்த டார்க்கெட் குர்துஸ்தான் !!

பல போராட்டங்களுக்கு பிறகு குர்துஸ்தான் தன்னாட்சி அடைந்திருக்கிறது. அதை இழந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். ISISயை எதிர்த்து முழு மூச்சோடு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ISIS தாக்குதலில் இஸ்லாமியர்களோடு பல கிறிஸ்துவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் அவர்கள் பெரும் வெற்றி ஆயுதப்பலமாக மாறிவருகிறது. குர்துஸ்தான்னில் இருக்கும் அமெரிக்க தூதுரகத்தில் இருப்பவர்களுக்கும் பிரச்சனை. இனி அமைதியாக இருந்தால் நல்லது இல்லை. தங்கள் விமானத்தை அனுப்பி தாக்குதல் நடத்த தொடங்கியிருக்கிறார்கள்.

அமெரிக்கா ISISவுக்கு எதிரான தாக்குதல் குர்து வீரர்களுக்கு உத்வேகமாய் அமைந்திருக்கிறது. தங்களுக்கு பின் அமெரிக்கா ஆதரவு இருக்கிறது என்ற நம்பிக்கையில் ISISவை எதிர்த்து போரிட தொடங்கியிருக்கிறார்கள்.

எண்ணெய் அரசியலில் மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்காவோடு கூட்டு என்பது சாத்தியமில்லை தான். ஆனால், யுத்த அரசியலில் எதுவும் சாத்தியம்.

கட்டுரைக்கு உதவியது 

பா.ராகவன் நூல்கள் – 
1. ஆடிப்பாரு மங்காத்தா 
2. சதாம் ஹூசைன் வாழ்வும் இராக்கின் மரணமும் 
3. தாலிபன் 

இணையதளம்

http://en.wikipedia.org/wiki/Islamic_State_of_Iraq_and_the_Levant
http://www.independent.co.uk/news/world/middle-east/iraq-crisis-american-intervention-against-isis-boosts-kurdish-morale-as-president-obama-launches-more-air-strikes-9659493.html http://edition.cnn.com/2014/08/09/world/meast/iraq-crisis/
http://www.vox.com/2014/8/7/5980595/iraq-crisis-bombing

Monday, November 11, 2013

சிரியா - இன்னொரு இராக் வேண்டாம் !

எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா சிரியாமீது போர் தொடுக்கலாம் என்றிருந்த நிலையை மாற்றி பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் என்று இரு நாடுகளையும் மேஜைக்கு முன்னால் எதிரெதிரே அமர வைத்ததில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினின் பங்கு முக்கியமானது. சிரிய அரசு தன் வசமுள்ள ரசாயன ஆயுதங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அழித்துவிடவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் இப்போது போர் மேகங்கள் கலைக்கப்பட்டுள்ளன.

சிரியா தனது சொந்த மக்கள்மீது ரசாயனத் (விஷவாயு) தாக்குதல் நடத்தி 1300ம் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கிறது என்பதுதான் அமெரிக்காவின் குற்றச்சாட்டு. ‘ரசாயன ஆயுதம் கூடாது’ என்னும் சிவப்புக் கோட்டை சிரியா தாண்டிவிட்டதால் துருப்புகளை அனுப்பவேண்டிய தேவை எழுந்துள்ளது என்று தன் தரப்பை நியாயப்படுத்தியது அமெரிக்கா.


2011 தொடங்கி பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு சிரியாவின் அதிபர் பஷர் அல் ஆசாத் காரணமாக இருந்துள்ளார் என்பதை நிச்சயம் மறுப்பதற்கில்லை. இனப்படுகொலையை நோக்கி சிரியா நகர்ந்து சென்றுகொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை.

சிரியா என்பது ஆசாத் குடும்பத்தின் சொத்தாகவே திகழ்கிறது. 1971ல் சிரியாவின் அதிபராக ஆசாத்தின் தந்தை ஹஃபிஸ் அல் ஆசாத் பொறுப்பேற்றுக் கொண்டார். முப்பது வருடங்கள் பதவி அனுபவித்த கையோடு, தனது அதிபர் பதவியை மகன் பஷர் அல் ஆசாத்திடம் ஒப்படைத்துவிட்டார் அவர். இவர் கடந்த பதிமூன்று வருடங்களாக அதிபராக இருந்து வருகிறார். தேர்தல், ஜனநாயகம் ஏதுமின்றி சிரியா மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு வருடங்களாக, ஆசாத் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை அடக்க ஆசாத் அரசு அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது. இதற்காகவே உலக நாடுகளில் இருந்து தனது போருக்கான ஆயுதங்களை சிரியா அரசு வாங்கியிருக்கிறது.

இங்கேதான் அமெரிக்க நுழைகிறது. பல வருடங்களுக்கு முன்பு இரான் மீது யுத்தம் நடத்த அமெரிக்க சொன்ன அதே காரணத்தைத் தற்போது சிரியாவுக்கும் சொல்லியிருக்கிறது அமெரிக்கா. ஆனால் இரானுக்கும் சிரியாவுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. அமெரிக்காவின் தலையீட்டை சிரியா மக்களே ஆதரிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அமெரிக்கர்களுக்கு இந்தப் போரில் உடன்பாடு இல்லை என்பது தெரிகிறது. அமெரிக்க செனட் உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலும், அமெரிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அமெரிக்காவின் போர் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ராணுவ நடவடிக்கைக்கான தீர்மானம் தோல்வியடைய, வேறு வழியின்றி பின்வாங்க வேண்டியதாகிவிட்டது.

உண்மையில் இந்தப் போரில் அமெரிக்காவுக்கு கூட விருப்பமில்லை. இருந்தாலும் தனது வல்லரசு மிதப்பை விட்டுக் கொடுக்காமல் சிரியாவை மிரட்டிப் பார்க்க விரும்பியிருக்கிறது. இரண்டு வருடங்களாக பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டபோது அமைதி காத்த அமெரிக்கா திடீரென்று இப்போது எதிர்ப்பதற்கும் மிரட்டுவதற்கும் காரணம் எண்ணெய் என்றும் சொல்லலாம். ஆனால், அதுதான் முக்கியக் காரணம் என்றால், உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோதே அமெரிக்கா தலையிட்டிருக்கும். இரண்டு வருடங்கள் அமைதியாக இருந்திருக்கிறார்கள். ஏன்?


ஆரம்பத்திலேயே அமெரிக்கா தலையிட்டிருந்தால், இஸ்லாமிய விரோத மனப்பான்மை, எண்ணெய் வளத்துக்கான ஆசை போன்றவை பகிரங்கமாகத் தெரிந்திருக்கும். எனவே நேரடியாக இறங்காமல் உள்ளூர் போராளிகளை ஆசிர்வதித்து அரசுக்கு எதிராகக் கலகம் செய்ய தூண்டிவிட்டது அமெரிக்கா. இப்போது, சிரியா அரசு தனது தாக்குதல் மூலம் சிரியப் போராளிகளை ஒரளவுக்கு அடக்கிவிட்டது. அதனால் விழித்துக்கொண்டது அமெரிக்கா. ஆசாத்தின் ஆட்சி மட்டுமல்ல அவர் குடும்பத்தின் ஆட்சியும் தொடரக்கூடாது என்று விரும்பிய அமெரிக்கா தலையிடுவதற்கு இதுவே தருணம் என்று முடிவு செய்தது.

சரி, அமெரிக்காவுக்கும் சிரியாவுக்கும் இடையிலான இந்த மோதலில் ரஷ்யா எப்படி வந்தது? ரஷ்யா, 2000 முதல் 2010 வரை சிரியாவுக்கு 1.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியுள்ளது. தங்களது முக்கிய வாடிக்கையாளராக இருக்கும் சிரியாவைக் காக்கும் பொறுப்பு ரஷ்யாவுக்கு இருக்கிறது. போர் இல்லாவிட்டாலும் ஆயுதங்களுக்கான தேவை எப்போதும் இருக்கும் என்று ரஷ்யாவுக்குத் தெரியும். காரணம், மத்தியக் கிழக்குப் பகுதியில் ஓயாமல் பதற்ற நிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அமெரிக்கா எது செய்தாலும் அதை எதிர்ப்பது சீனாவின் கொள்ளை என்பதால் இந்த முறையும் சிரியா மீதான அமெரிக்காவின் தலையீட்டை சீனா எதிர்த்துள்ளது. கண்டனமும் தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை சிரியாவில் என்ன நடந்தால் எனக்கென்ன என்று இனியும் இருந்துவிடமுடியாது. சிரியாவில் யுத்தம் மூண்டால் கச்சா எண்ணெய் அதிகரிக்கும். இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவடையும். அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும். பெட்ரோல் மானியச் சுமை அழுத்தும். மானியத்தைக் குறைக்க விலையை உயர்த்தினால் பணவீக்கம் ஏற்பட்டு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும். மொத்தத்தில், இந்தியப் பொருளாதாரம் பாதிப்படையும். சிரியா யுத்த அபாயம் வெளிப்பட்ட அன்றே சென்செக்ஸ் பங்குச்சந்தை 700 புள்ளிகள் வரை சரிந்தது. ஒருவேளை யுத்தம் நடந்தால், மோசமான விளைவுகளை நாம் சந்திக்க வேண்டி வரும்.

அப்படி எதுவும் நேராது, சிரியா யுத்த அபாயம் நீங்கிவிட்டது என்கிறார்கள் சிலர். ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் எதிர்ப்பை மீறி அமெரிக்காவால் முன்னேறமுடியாது. ஐ.நாவின் ஒப்புதலும் கிடைக்காது. இங்கிலாந்து பின்வாங்கிவிட்டது. எப்படி மூளும் யுத்தம் என்கிறார்கள் இவர்கள்? இன்னொரு பிரிவினரோ தற்போது நிலவுவது தாற்காலிக அமைதியே என்று எச்சரிக்கிறார்கள். ரசாயன ஆயுத ஒப்பந்த விஷயத்தில் சிரியா ஒத்துழைப்பு தராது என்றும் அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் திருப்பித் தாக்கலாம் என்றும் இவர்கள் அஞ்சுகிறார்கள்.

இதற்கிடையில் பல லட்சக்கணக்கான சிரிய மக்கள் அகதிகளாக மாறியுள்ளனர். அவர்களைக் குடியமர்த்துவது சிரியாவுக்கு மட்டுமல்ல சுற்றியுள்ள நாடுகளுக்கும் மிகப் பெரிய சவாலாக இருக்கப்போகிறது. வேறு எதற்காக இல்லாவிட்டாலும் இந்த ஒரு காரணத்துக்காகவே உலக நாடுகள் தலையிட்டு போரைத் தவிர்க்கவேண்டும் என்னும் கோரிக்கை பலம் பெற்றுவருகிறது. இந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டால் இன்னொரு இராக் உருவாவதை யாராலும் தடுக்கமுடியாது.

(நன்றி : ஆழம், அக்டோபர் இதழ்)

Wednesday, October 23, 2013

பிராட்லி மேனிங் - ஓர் அமெரிக்க வீரனின் கதை

நீங்கள் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் தலைமை அதிகாரி ஒருவர் கொலை செய்வதை நீங்கள் பார்த்து விடுகிறீர்கள். அதை வெளியிலும் சொல்லிவிடுகிறீர்கள். கொன்றவரை விட்டுவிட்டு சாட்சி சொன்ன உங்களுக்கு 136 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுத்தால் எப்படி இருக்கும்? ஏதோ ஒரு பின்தங்கிய நாட்டில் அல்ல, உலகின் மிக முன்னேறிய பணக்கார நாடான அமெரிக்காவில்தான் இப்படியொரு தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. பலிகடா, இருபத்தைந்து வயது பிராட்லி மேனிங்.


தன்னைச் சுற்றி தவறுகள் நிகழும்போது நியாயமாக இரு விஷயங்களை ஒருவர் செய்யவேண்டும். ஒன்று, அந்த இடத்தில் இருந்து விலகிச் செல்லவேண்டும். அல்லது, தவறுகளை அம்பலப்படுத்தவேண்டும். பிராட்லி மேனிங் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார். அதனால்தான் அவருக்கு இத்தனை பிரச்னைகளும். கம்ப்யூட்டர் ஹாக்கிங்கில் வல்லவர் மேனிங். தன்னுடைய தந்தையைப் போல் தானும் கப்பல் படையில் பணியாற்றி நாட்டுக்குச் சேவை செய்யவேண்டும் என்னும் விருப்பத்தின் காரணமாகப் பணியில் இணைந்திருக்கிறார். ஆனால் அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடுகளைக் கண்டு இவருக்குப் பெருமித உணர்வு வரவில்லை. மாறாக, மாபெரும் அநியாயத்துக்கு நாமும் துணை போகிறோம் என்னும் குற்றவுணர்வே ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்க ராணுவச் செயல்பாடுகளின் இருண்ட பக்கத்தைத் தரிசிக்கும் வாய்ப்பு பிராட்லி மேனிங்குக்குக் கிடைத்தது. 2007ல் பாக்தாத்தில் விமானத் தாக்குதல் மூலம் பொது மக்களும் இரண்டு ஆப்கன் பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டது, 2009ல் கிரானி பகுதியில் விமானத் தாக்குதல்மூலம் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது போன்ற பல சம்பவங்கள் குறித்த ஆதாரங்கள் அவருக்குக் கிடைத்தன. மேலும், ஆப்கனிஸ் மற்றும் இராக் போர் ஆவணங்களும் சிக்கின. ‘அமெரிக்கா நடத்திய தாக்குதல் வீடியோ என்னை பதறச் செய்தது. சிறு குழந்தைகள் எறும்புகளை நசுக்கி விளையாடுவது போல் விமானத்தில் இருந்தபடியே பொது மக்கள்மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்’ என்று ஒருமுறை பேட்டியில் கூறினார் மேனிங். இந்த உண்மைகளை எப்படி உலகுக்குக் சொல்வது என்று தவித்த பிராட்லிக்கு விக்கிலீக்ஸின் தொடர்பும் கிடைத்தது.

2010ல் அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக இருந்தது தாலிபனோ, ஹமாஸோ இல்லை. விக்கிலீக்ஸ்தான். மேனிங்கிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆவணங்களை ஒவ்வொன்றாக அவர்கள் இணையத்திலும் பிற பத்திரிகைகளிலும் வெளியிடத் தொடங்கினார்கள். பல நாடுகளில் பணிபுரியும் அமெரிக்கத் தூதர்கள் அந்தந்த நாட்டின் அரசியல் சூழல் குறித்து என்னென்ன செய்திகளை தங்கள் அரசுக்கு அனுப்பினார்கள் என்பது விக்கிலீக்ஸ்மூலம் தெரியவந்தது. அமெரிக்கா குறிப்பிட்ட ஒரு நாட்டை எப்படிப் பார்க்கிறது என்பதையும் இந்த கேபிள்களில் இருந்து தெரிந்துகொள்ளமுடிந்தது.

பிராட்லி கசியவிட்ட ஒவ்வொரு ஆவணமும் அமெரிக்காவின் போர்க்குற்றத்தை நிரூபிக்கும் ஆதாரமாகத் திகழ்ந்தது. இந்த ஆதாரங்களால் அமெரிக்காவின் மதிப்பு உலகளவில் சற்றே சரிந்தது உண்மைதான் என்றாலும் அமெரிக்கா ஒரு போர்க்குற்றவாளி என்று யாரும் வாதிடவில்லை. ‘போர் குற்றம்’ என்ற வார்த்தை போரில் தோல்வி அடைந்தவர்கள் மீதே பாயும் என்பதுதான் வரலாற்று உண்மை. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி முதல் இன்று ஈழத்தில் தோல்வியுற்ற விடுதலைப் புலிகள் வரை இதற்கு உதாரணங்கள் காட்டமுடியும். அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்தப் பின்னணியில் அமெரிக்கா பிராட்லி மேனிங்கைக் கைது செய்து வழக்கு தொடர்ந்தது. மொத்தம் 22 வழக்குகள் அவர்மீது தொடுக்கப்பட்டன. அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்புத் தளத்தை அத்துமீறி பார்வையிட்டது, ரகசியமாக பதிவு செய்தது, ரகசியங்களை வெளியிட்டது என்று ஒரு பெரிய பட்டியல் தயார் செய்யப்பட்டது.

ஏழு லட்சம் கேபிள்களை பிராட்லி மேனிங் கசியவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 2010ல் இராக்கில் இன்டெலிஜன்ஸ் அனலிஸ்டாகப் பணியாற்றியபோது சில வீடியோ ஆதாரங்களையும் இவர் பிரதி எடுத்துக்கொண்டாராம். இவை விக்கிலீக்ஸில் பின்னர் வெளிவந்தது. மேற்படி குற்றங்களுக்காக அவருக்கு எதிராகப் பதிவான 22 வழக்குகளில் 18 குற்றங்களை பிராட்லியே ஒத்துக்கொண்டதால் நீதிபதிக்கும், அமெரிக்க அரசுக்கும் சுலபமாகி விட்டது. ஒவ்வொரு குற்றத்துக்குமான தண்டனைக்காலத்தைக் கூட்டியபோது 136 வருட சிறைவாசம் கிடைத்தது. அதையே தீர்ப்பாக வெளியிட்டார்கள். பின்னர் தண்டனைக்காலம் 90 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. எளிதில் வெளியில் வந்துவிடமுடியாதபடி அவர்மீது தேச விரோதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை நாம் இங்கே கவனிக்கவேண்டும்.

அமெரிக்காவின் உளவு நிறுவனமான என்.எஸ்.ஏ. தனது குடிமக்கள் உள்பட பல நாட்டு மக்களின் தகவல் பரிமாற்றங்களை வேவு பார்க்கிறது என்பதை ஆதாரபூர்வமாகக் கண்டறிந்து அம்பலப்படுத்திய எட்வர்ட்ஸ்நோடென் அமெரிக்காவில் இருந்து தப்பி ரஷ்யாவில் தஞ்சமைடைந்தார். ஆனால் மேனிங்குக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. கைது செய்யப்பட்டுவிட்டதால் அடைக்கலம் தேடுவதற்கான முயற்சிகளிலும் அவரால் இறங்கமுடியவில்லை. ஸ்நோடென், அசாஞ்சே போன்றோருக்கு இருந்ததைப் போன்ற பொதுமக்கள் ஆதரவு மேனிங்குக்கு இல்லை என்பதையும் நாம் இங்கே ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

‘உண்மையை வெளியே கொண்டு வந்ததற்காக என் வாழ்நாள் முழுக்க சிறையில் இருக்கவேண்டிவந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை’ என்று முன்னர் சொல்லியிருந்தார் மேனிங். அவர் சொன்னது இன்று பலித்துவிட்டது. குறுகலான ஓர் அறையில் நிர்வாணமாக நிறுத்திவைத்தது, உறக்கமில்லாமல் அலைக்கழித்தது என்று உடல்ரீதியிலும் மனரீதியிலும் ஏராளமான துன்பங்களை அனுபவத்திருக்கிறார் மேனிங். இனி எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் அவர் சிறையில்தான் கழிக்கவேண்டியிருக்கும். பொய்கள் ஆட்சி செய்யும் காலத்தில் உண்மையைச் சொல்வதைப் போன்ற ஒரு பெரும்தவறு இருந்துவிடமுடியாது.

(நன்றி : ஆழம், செப்டம்பர் இதழ்)

LinkWithin

Related Posts with Thumbnails