எப்பொதெல்லாம் பதிப்பகம் தொடங்கும் ஆசை வருகிறதோ, அப்போதெல்லாம் ‘நாகரத்னா பதிப்பகம்’ சார்பாக வெளியிட்டப் புத்தகங்களை பார்ப்பேன். மீண்டும் பதிப்பகம் தொடங்கும் ஆசை பறந்துவிடும்.
கடந்த இரண்டு மூன்று மாதமாக மீண்டும் பதிப்பகம் தொடங்க வேண்டும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம், நான் எழுதி கொடுத்த நூல்களை பதிப்பகங்கள் உரிய நேரத்தில் வெளியிடாமல் இருப்பது தான். ஏறக்குறைய எட்டு நூல் நான்கு பதிப்பகத்திடம் வெளியிடப்படாமல் இருக்கிறது. எப்போது வெளியிடுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாத ரகசியம்.
இதனால், அடுத்த எழுதிய இரண்டு நூலை எந்தப் பதிப்பகத்திடமும் கொடுக்கவில்லை. மீண்டும் பதிப்பகம் தொடங்கி நாமே வெளியிடலாமா என்ற சிந்தனை வருகிறது. பணம் பிரச்சனை இல்லை. அச்சடிக்கும் நூல்களை வைப்பதற்கு இடம் இல்லை. முந்தைய நூல்கள் இடத்தை ஆக்கிரமித்து இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் படித்த புத்தகங்கள் வைப்பதற்கு கூட இடமில்லாமல், நாகரத்னா பதிப்பக நூல்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டியதாக இருக்கிறது. அதையும் மீறி சென்னை மழையில் சில நூறு பிரதிகள் பாதிக்கப்பட்டது. அப்படியாவது புத்தகம் செல்கிறதே என்று நினைத்து சந்தோஷப்படும் மனநிலை இருக்கிறேன்.
பதிப்பகம் தொடங்கும் ஆசை குறைத்துக் கொள்வதற்காக, என் வீட்டை ஆக்கிரமித்திருக்கும் நாகரத்னா புத்தகத்தை எண்ணிக்கை வெளியிடுகிறேன்.
2012ல் வெளிவந்த புத்தகங்கள் Stock விபரங்கள்…
கேபிளின் கதை – 748
என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிக்குமார் - 596
பிணம் தின்னும் தேசம் – 412
விழிப்பறி கொள்ளை – 333
2010ல் வெளிவந்த புத்தகங்கள் Stock விபரங்கள்…
டைரிக்குறிப்பு காதல் மறுப்பும் – 524
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் – 258
2010 முன்பு வெளியிட்ட நூல்கள்…
எனது கீதை – 488
என்னை எழுதிய தேவதைக்கு - 56
நாகரத்னா பதிப்பகத்தில் 300-500 பிரதிகள் அச்சத்தடித்த நூல்கள் லாபம் தரவில்லை என்றாலும், பெரிய நஷ்டம் கொடுக்கவில்லை. மேல் குறிப்பிட்ட அனைத்து நூல்களும் 1000 பிரதிகள் அடித்தது. நஷ்டம் ஏற்படுத்தியதை விட இடம் ஆக்கிரமிப்பை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
என் புத்தகம் இத்தனை பிரதிகள் விற்பனையாகியிருக்கிறதா என்று எழுத்தாளர்கள் சந்தோஷப்பட வேண்டாம். என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிக்குமார், லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும், என்னை எழுதிய தேவதைக்கு… இந்த மூன்று நூல் மட்டும் தான் எனக்கு Breakeven கொடுத்தது (லாபம் இல்லை என்பதை கவனத்தில் கொள்க).
சென்னை மழையில் கொஞ்சம், சில புத்தக விற்பனையாளர் ஸ்வாகா செய்தது கொஞ்சம் என்று காணாமல் போன பிரதிகளை கணக்கில் கொண்டு வரவில்லை. அதுவெல்லாம் போக கையில் இத்தனை பிரதிகள் இருக்கிறது. இதையெல்லாம் எப்படி காலி செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.
சென்னை புத்தகக் கண்காட்சி நெருங்கி வருவதால், பல எழுத்தாளர்கள் சொந்தப் பதிப்பகம் தொடங்குவார்கள். அவர்களுக்கு ஒரு ப்ரீ அட்வைஸ்… 1000 பிரதிகள் அடிக்க வேண்டாம். அதே சமயம் POD மூலம் 200-300 பிரதிகள் அடிக்க வேண்டாம். 500 பிரதிகள் அச்சடித்து என்னால் விற்பனை செய்ய முடியும் நம்பிக்கை இருந்தால் மட்டுமே பதிப்பகம் தொடங்கலாம். இந்த நம்பிக்கையில் கொஞ்சம் குறைவதாக உங்களுக்கு தோன்றினாலும், உங்கள் பழைய பதிப்பகத்தோடு சமசரமாக சென்று கொடுக்கும் ராயல்டியை வாங்கிக் கொள்ளுங்கள்.
ராயல்டி பிரச்சனைக்காக வேறு பதிப்பகம் சென்று, இரண்டு மூன்று பதிப்பகம் மாற்றி… கடைசியில் பழைய பதிப்பகத்திடம் சரணடையும் கதை இங்கு ஆயிரம் உண்டு. ( பல பிரபல எழுத்தாளர் ஒரு ரவுண்ட் அடித்து, கடைசியில் தங்கள் பழைய பதிப்பகத்தில் தஞ்சமடைந்திருப்பதை கவனத்தில் கொள்க !)
இந்த பதிவில் எனது எழுத்தாளர்களை குறைச் சொல்ல விரும்பவில்லை. அது என் நோக்கமுமில்லை. பதிப்பகம் தொடங்குவது விளையாட்டான விஷயமில்லை. வரும் லாபத்தை விட இரண்டு மடங்கான உழைப்பை கொட்ட வேண்டும். நஷ்டத்தை விட அதிகமாக நம்மை பாதிப்பது விற்பனையாக புத்தகங்கள். இந்த இரண்டு விஷயத்தை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்.
பதிப்பகம் தொடங்குவது… வியாபாரிகளின் வேலை. வியாபார சிந்தனையில்லாத எந்த எழுத்தாளரும் பதிப்பகம் தொடங்கினால் நிலைமை இதுவாக தான் இருக்கும்.
பின்குறிப்பு : இந்த பதிவை எழுதிய நான் விரைவில் புது பதிப்பகம் தொடங்கினால், அதற்கு காரணம் நானல்ல… என் பதிப்பகங்கள் .
3 comments:
பதிப்பகம் தொடங்க வாழ்த்துகள்
எனக்கும் பதிப்பகம் தொடங்க ஆசை. அகாடமி நூல்களை மட்டும் வெளியிட ஒரு பதிப்பகத்தை தொடங்கலாம்னு இருக்கேன்.
பதிப்பகம் பதிவு செய்யும் வழிமுறைகள் என்ன? மாவட்டத்தில் எங்கு பதிவு செய்ய வேண்டும் என்ற விவரங்களை பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
Post a Comment