எனது புத்தக அலமாறியில் நான் வாசிக்காமல், என் மனைவி வாசித்த ஒரே புத்தகம் துர்கா ஸ்டாலின் அவர்கள் எழுதிய “அவரும் நானும்” தான்.
என் மனைவி வாசித்து விட்டு அதிலிருக்கும் பல நிகழ்வுகளை சிலாகித்து கூறினார். Audio Bookஆக என் மனைவி மூலம் கேட்டுவிட்டதால், அந்த புத்தகம் படிக்கும் சுவாரசியம் எனக்கு குறைந்துவிட்டது. போதக்குறைக்கு Youtubeல் சரண்யா பொன்வண்ணன் இந்த புத்தகம் குறித்து பேசிய வீடியோ எனக்கு போட்டு காண்பித்தார். துர்கா ஸ்டாலினுக்கு பெரிய விசிறியாக என் மனைவி மாறிவிட்டார்.
அரசியல் தலைமைக்கு இந்திரா காந்தி, ஜெயலலிதாவையும், தொழிலதிபர்களுக்கு இந்திரா நூயி போன்ற பெண்களை முன் மாதிரியாக சொல்வார்கள். ஆனால், ஒரு குடும்ப தலைவியாக யாரையும் இங்கு முன் மாதிரியாக சொல்வதில்லை. அப்படி ஒருவரை சொல்ல வேண்டுமென்றால் நிச்சயம் ’துர்கா ஸ்டாலின்’ அவர்களை சொல்லலாம்.
பகுத்தறிவு தலைவர் வீட்டில் கடவுள் நம்பிக்கையுள்ள மருமகளாக அடியெடுத்து வைத்து, தனது கடவுள் நம்பிக்கை சோதனைக்குள்ளாகும் என்று அஞ்சியிருப்பார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. கலைஞரும் சரி, ஸ்டாலினும் சரி தங்கள் கொள்கையை வீட்டில் சொல்லியிருப்பார்கள், திணிக்கவில்லை. மேடையில் மட்டும் பெண் உரிமையைப் பற்றி பேசாமல் தங்கள் வீட்டு பெண்களுக்கு முழு சுதந்திரத்தை கலைஞரும், ஸ்டாலினும் கொடுத்திருக்கிறார்கள். (தம் வீட்டு பெண்களை அடிமையாக நடத்தும் ஆணாதிக்க மனோபாவம் கொண்டவர்களுக்கு இது புரியாது.)
பல முறை தலைவரின் பகுத்தறிவும், தனது மனைவியின் கடவுள் நம்பிக்கையையும் விமர்சனத்திற்குள்ளாகும் போதுகூட தனது மனைவியை கோயிலுக்கு போக வேண்டாம் என்று சொன்னதில்லை. பலர் விமர்சிப்பார்கள் என்று தெரிந்தும், தனது மனைவியை அத்திவரதரைப் பார்க்க அனுமதித்தார்.
”நம் வீட்டு பெண்களை மனுஷியாக நடத்தினால், அவர்கள் நம்மை கோபுரத்தில் அமர வைப்பார்கள்” என்று ஒரு படத்தில் வசனம் வரும். அது இன்று ஸ்டாலின் பதவியேற்கும் போது துர்கா ஸ்டாலின் சிந்திய ஆனந்த கண்ணீரில் தெரியும்.
தி.மு.கவின் வெற்றிக்காக பலர் உழைத்திருக்கலாம். ஆனால், ஸ்டாலின் அவர்கள் பதவியேற்கும் நாளுக்காக பல வருடங்களாக பக்கபலமாக இருந்தவர் துர்கா ஸ்டாலின் அவர்கள்.
இன்று ஸ்டாலின் பதிவியேற்கும்போது துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் சிந்தும்போது எனது மனைவியின் ஆனந்தத்தை பார்த்தேன். ஒரு குடும்ப தலைவியின் வெற்றியை என் மனைவி கொண்டாடுவதை புரிந்தது. என் மனைவியைப் போல் சில பெண்கள் துர்கா ஸ்டாலின் அவரது புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்வதைப் பார்த்தேன்.
கலைஞரின் குடும்ப அரசியலை விமர்சனம் செய்யும் வேலையில் அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அழகியலை நீங்கள் ரசிக்க மறந்திருப்பீர்கள். குமுதம் youtubeக்காக துர்கா ஸ்டாலின் கொடுத்த பேட்டியைப் பார்க்கவும்.