’பாபநாசம்’ படம் வெளிவந்த சமயம்.
ஒரு பெண் எழுத்தாளரிடம் பேசும் போது அவர் கூறியது,
“பாபநாசம் தவறான கருத்த சொல்லுது. தான் குளிக்கிறத படம் எடுத்தவன நினைச்சு அந்த பொண்ணு எதுக்கு பயப்படனும். எதுக்காக கொலை செய்யனும்? தான் குளிக்கிறத அனுமதியில்லாம படம் எடுக்குற ஆண்ணுக்கு இல்லாத வெக்கமும் பயமும், பெண்ணுக்கு எதுக்கு வரனும்? இதுல அந்தப் பொண்ணு மேல என்ன தப்பு இருக்கு? தப்புயில்லாத போது எதுக்கு பயப்படனும்”
“அந்த வீடியோ வந்தா தன் குடும்பத்துக்கு அவமானம் நினைக்கிறது இயல்பு தானே!” என்றேன்.
“அந்த அவமானத்த இன்னும் எத்தன நாளைக்கு இந்த சினிமா விதைக்கப் போகுது. அவள் அனுமதியில்லாம எடுக்குற வீடியோவுக்கு அவ எப்படி பொறுப்பாக முடியும். வீடியோ எடுத்தவன திட்டனும். போலீஸ் கம்ளைண்ட் கொடுக்கனும். அப்படிதான் படம் எடுக்கனும். அப்போதான் இந்த நிலமை மாறும்.” என்றார்.
ஒரு வேலை ’பாபநாசம்’ படத்தில் அந்தப் பெண் தைரியமாக இருந்திருந்தால்…
”உனக்கு தெரியாம. நீ குளிக்கிறத வீடியோ எடுத்திருக்கேன். நான் சொன்னப்படி கேக்கலனா… நான் நெட்டுல போட்டுடுவேன்.”
“போட்டுக்கோ போடா…” என்று அந்தப் பெண் தைரியமாக சொல்லி அவள் வேறு வேலை பார்க்க சென்றிருந்தால், அவன் இணையத்தில் வீடியோவை பகிர்ந்திருப்பான். தைரியமானப் பெண் கண்டிப்பாக காவல்துறைக்கு புகார் கொடுத்திருப்பாள். இன்னும் தைரியமானப் பெண்ணாக இருந்திருந்தால், அவன் இணையத்தில் ஏற்றும் முன்பே புகார் கொடுத்திருப்பாள்.
வீடியோ எடுத்தவன் கைது செய்யப்பட்டிருப்பான். அவனுடைய குடும்பம் ஊர் முன்னால் அசிங்கப்பட்டிருக்கும்.
இணையத்தில் ஏற்றப்பட்ட குளிக்கும் வீடியோவை இரண்டு நாட்களில் நீக்கிவிடலாம். அதை எடுத்தவன் வாழ்நாள் முழுக்க பெற்றவர்களை கூட சந்திக்க முடியாமல் தவத்திருப்பான்.
அன்று அந்தப் பெண் எழுத்தாளர் சொன்னதை பொள்ளாச்சி கற்பழிப்பு சம்பவத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கிறேன். நான்கு பேர் கைதால் இந்தப் பிரச்சனை முடியப் போவதில்லை. இன்னும் நமக்கு தெரியாமல் எங்கோ ஒரு பெண்ணுக்கு அநீதி நடந்துகொண்டுதான் இருக்கிறது.
பொள்ளாச்சி சம்பவத்தை ஒரு தந்தையாக எதோ ஒரு நாள் செய்தியாக இதை கடந்துப் போகமுடியாது.
ஒரு வேலை காதலிக்கும் போது, அந்தப் பெண் அனுமதியோடு எடுத்த வீடியோவை வைத்து மிரட்டினால்… அந்தப் பெண் பயப்பட்டுதான் ஆக வேண்டுமே ! என்று நீங்கள் கேட்கலாம்.
அந்தப் பெண் காதலித்த நபர் தவறானவன். அந்த போலி காதலின் மிரட்டலுக்கு பயப்படுவதை விட பெற்றோர்களிடம் சொல்லி இரண்டு அடி வாங்கிகொள்வது நல்லது. அந்த பிரச்சனையில் மீண்டு வர வழி கிடைக்கும்.
போலீஸோ அல்லது அடியாளோ வைத்து மிரட்டினால் வீடியோ எடுத்தவனே தனது மொபைலிலிருந்து டெலிட் செய்வான். அதையும் மீறி அவன் வெளியிட்டால் என்ன செய்வது? சொந்த கணக்கில் tweet போட்டதை Admin போட்டதாக சொல்லும் உலகத்தில் வாழ்கிறோம். அந்த வீடியோவில் நீங்கள் இல்லை என்று மறுப்பது பெரிய விஷயமில்லை.
Good Touch, Bad Touch சொல்லிக் கொடுப்பது போல் இந்த டிஜிட்டல் உலகத்தில் பெண் பிள்ளை தைரியத்தை அதிகமாக சொல்லி வளர்க்க வேண்டும். ஒரு முறை இதுப் போன்ற ஆட்களின் மிரட்டலுக்கு பயந்தால், உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தை அவன் தீர்மானிப்பான் என்பதை புரிய வைக்க வேண்டும்.
பெண்களுக்கு தெரியாமல் பெண்களை வீடியோ எடுத்ததில் அவர்களின் தவறேதுமில்லை. ஆனால், மோசடி ஆட்களின் மிரட்டலுக்கு அடிபணியும் போது தான் பெண்களின் வாழ்க்கைக்கான தவறுகள் தொடர்கிறது. இதை பெண் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.
”உன் அனுமதியில்லாம இல்ல அனுமதியோட… உன்ன போட்டோ, வீடியோ எடுத்தா அதுக்கு நீ பொறுப்பு இல்ல. தைரியமா இரு. எங்க கிட்ட வந்து சொல்லு.” என்று பெண் பிள்ளைகளுக்கு தைரியம் கொடுப்பது பெற்றோர்களின் கடமை.
”ஒரு பெண்ணை அவள் அனுமதியில்லாமல் வீடியோ/போட்டோ எடுத்தால், உன்ன அரஸ்ட் பண்ணி ஜெய்யில போடுவாங்க. உன் வாழ்க்கையே பொய்விடும்” என்று ஆண் பிள்ளைகளுக்கு பயமுறித்து வளர்க்க வேண்டும்.
தைரியமாக வளர்க்க பெண் பிள்ளைகளை பயமுறுத்தி வளர்ப்பதும், தவறு செய்ய பய முறுத்தாமல் ஆண் பிள்ளைகளை தைரியமா வளர்க்கும் வரை இந்தப் பிரச்சனைகள் தொடரும்.