வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, December 30, 2011

உலக சினிமா : Dr.Babasaheb Ambedkar

ஒவ்வொரு வருடமும் தூர்தர்ஷனில் அல்லது ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் 'காந்திஜி' படம் போடுவார்கள். ஒரு வெள்ளையன் காந்தியாக நடித்திருந்தாலும் காந்தியின் வரலாற்று படமாக அதை போற்றி டி.வியில் போட்டுக் கொண்டுயிருக்கிறார்கள். 1982 ல் வெளிவந்த காந்தி திரைப்படம், எத்தனை முறை தொலைக்காட்சியில் போட்டியிருப்பார்கள் என்று கணக்கே இல்லை. காந்தியை பற்றியும் அவரது கொள்கையை பற்றியும் மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று பிரச்சாரமாக 'காந்தி' படம் இருக்கிறது. ஆனால், அம்பேத்கரை பற்றி 2000ல் வெளியான படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று விரல் விட்டு எண்ணிவிடலாம்.

மகாராஷ்ட்ரா அரசின் நிதி உதவியோடு 1998ல் எடுக்கப்பட்ட 'அம்பேத்கர்' திரைப்படம் 2000ல் தான் வெளிவந்தது. 1998ல் சிறந்த கலைப்படத்திற்கும், சிறந்த நடிகர் ( மம்மூட்டி) க்கான தேசிய விருதை இந்த படத்திற்கு கிடைத்தது. மற்ற கலைப் படம் போல் இல்லாமல் அம்பேத்கர் படம் வசூலிலும் ஒரளவு நன்றாகவே இருந்தது.



காந்தி, அம்பேத்கர் இரண்டு படங்களிலும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றை தான் பதிவு செய்கிறது. காந்தி படத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அம்பேத்கர் படத்தில் பல உண்மைகள் வெட்டப்பட்டுள்ளது.

‘காந்தி’ படத்தில் காந்தி வில்லன் என்று எடுத்துக் கொண்டால் வெள்ளையன். அவனை விரட்டி அடிப்பதே காந்தியின் போராட்டமாக இருக்கும். ஆனால், அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றில் வில்லன் என்று எடுத்துக் கொண்டால் அது ‘காந்திஜி’ தான். இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு வெள்ளைக்காரனே சிறப்பு சலுகை தர முன்வந்தும், காந்திஜி அதை எதிர்க்கிறார். தன் உயிரை ஆயுதமாக்கி பூனா பேக்ட் ஒப்பந்தத்தில் அம்பேத்கரை கையெழுத்திட வைக்கிறார்.

அம்பேத்கர், காந்தி இருவருக்குள் பல பணிப் போர் இருக்கிறது. ஆனால், 3 மணி நேர திரைப்படத்தில் ஓரளவு பதிவு செய்திருக்கிறார். சரி.. படத்திற்கு வருவோம்.

தலித்தை இந்து மதத்தில் இருந்து பிரித்து விட்டால் எதிர்காலத்தில் இந்தியாவில் இந்து மதம் சிறுபான்மையினராக மாறிவிடுமோ என்று காந்தி அஞ்சுகிறார். அதே சமயம் தலித்துக்கு இழைக்கப்படும் கொடுமைகள் சரியாக காலமாகும். அதுவரை பொறுமையாக இருங்கள் என்கிறார். இன்று வரை, பல கிரமங்களில் அந்த காலத்திற்காக தான் காத்திருயிருக்கிறார்கள்.

மழைக்கு கோயிலுக்குள் ஒதுங்கிய தலித்தின் மரணத்தில் கதை தொடங்குகிறது. அமெரிக்காவில் தன் பட்டப்படிப்பு படிக்கும் அம்பேத்கர் அமெரிக்காவில் வாழும் கருப்பர்களையும், இந்தியாவில் வாழும் தீண்டாமையை ஒப்பிட்டு பேசுகிறார். பரோடா அரசு நிதி உதவியில் படிக்கும் அம்பேத்கர் தன் படிப்பு முடித்ததும் பத்து வருடம் பரோடா மஹானத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை. ஆனால், படிப்பு முழுமை பேராமலே பரோடா அரசுக்கு வேலை செய்ய அழைப்பு வருகிறது.

தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்ததால் வீடு கிடைக்காமல் அவதைப்படுவதும், தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் மரியாதை இல்லாமல் நடத்துவதும், தூசிப்படிந்த அறை தங்குவதும் போன்ற அவமானங்களை சந்திக்கிறார். பின்பு, பரோடா மன்னர் பத்து வருடம் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்திக் கொள்கிறார். தன் மனைவி ரமாபாய்யுடன் வறுமையில் வாடுகிறார். தன் நான்கு குழந்தைகளை இழக்கிறார்.

வழக்கறிஞர் பட்டம் பெற்ற அம்பேத்கர் தன் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறார். தீண்ட தகாதவர்களை அணியாக திரட்டி மகாத்தில் இருக்கும் குளத்தில் நீர் குடிக்கிறார். பிராமினர் சஹரபுத்தேவுடன் சேர்ந்து மனு தர்மத்தை எரிக்கிறார். அனைத்து ஐரோப்பிய சைமன் கமிஷனில் பம்பாய் மகான அமைப்பு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். அம்பேத்கர் காங்கிரஸ் பற்றி தன் அதிருப்தி கருத்துக்களை தெரிவிக்கிறார். இதை கேள்வி பட்ட காந்தி அம்பேத்கரை பார்க்க அழைக்கிறார்.

காந்தி, அம்பேத்கர் சந்திப்பில் இருந்து அக்‌ஷன் படத்திற்கு உண்டான விருவிருப்பு இந்த கலை படத்தில் இருக்கிறது. காந்திக்கு எதிராக பல வசனங்கள் இந்த படத்தில் பார்க்க முடிந்தது.

“He is not Mahatma. He is an moderm politican"

" மகாத்மா வருவார்கள். போவார்கள். ஆனால் காலம் காலமாக தீண்டப்படாதவன் தீண்டப்பட்டாமல் ஒதுக்கப்படுகிறான்"


காந்தியிடம் " அடிக்கடி உண்ணாவிரதத்தை ஆயுதமாக பயன்படுத்தாதீங்க..."

இன்னும் பல வசனங்கள் இருந்திருக்கும் என்றே நினைக்க்க தோன்றுகிறது. சென்சார் போர்ட்டின் கை வண்ணம் தெரிகிறது.

காந்தி, அம்பேத்கர் முதல் சந்திப்புக்கு பிறகு, காந்தி தன் காரியதரிசியிடம் “ என்னது அம்பேத்கர் மார் இனத்தை சேர்ந்தவரா ? நான் அவரை பிராமனர் என்று நினைத்தேன். நீங்கள் ஏன் சொல்லவில்லை” என்று கோபப்படுகிறார். இந்த வசனத்தில் பல அர்த்தங்கள் உள்ளது.

தனி நாடு கேட்கும் ஜின்னாவிடம் தன் அதிருப்தியை தெரிவிக்கிறார். காங்கிரஸ் உறுப்பினர் இல்லாத அம்பேத்கர், காந்தி சிபாரிசால் முதல் சட்ட அமைச்சராக பொறுப்பேற்கிறார். ( காந்தி அம்பேத்கர் பெயர் சொல்லும் போது, நேருவின் முகம் மாறுவதை சற்று உண்ணிப்பாக கவனிக்க வேண்டும்). இந்து மதத்தை புரக்கணிக்க போவதாக அறிவிப்பு விட, ஒவ்வொரு மதத்தினரும் அம்பேத்கரை தங்கள் மதத்திற்கு அழைக்கிறார்கள். குறிப்பாக, கிறித்துவ மதத்தினருக்கு அம்பேத்கர் கேட்கும் கேள்வி சென்சார் போர்ட் வெட்டாமல் விட்டதை பாராட்டியாக வேண்டும்.

தனது உடல்நலம் கவனித்துக் கொள்ள சாராத கபீரை மணந்துக் கொள்கிறார். சுதந்திர இந்தியாவின் சட்டங்கள் வகுக்கிறார். இந்து கோட் சட்டத்தை கொண்டு வர நினைக்க, போதிய ஆதரவு இல்லாதததால் அந்த சட்டம் அமலாக்க அவரால் முடியவில்லை. தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார். இந்து மதத்தின் அதிருப்தியால் ஐந்து லட்ச ஆதரவாளர்களோடு புத்த மதத்தை தழுவிகிறார்.

புத்தகர் மதம் தழுவிய இரண்டு மாதத்தில் இறந்து விட்டதாக எழுத்துக்கள் வர படம் முடிகிறது. இன்னும் பல இடங்கள் தீண்டாமை உள்ளது என்பதையும் படம் முடிவில் எழுத்துக்களை ஓட விட்டிருக்கிறார்கள்.

இந்த படம் மக்களிடம் கொண்டு செல்லாமல் இருந்ததற்கு இரண்டு காரணம். ஒன்று, அரசு தயாரிப்பு. இன்னொரு, நான் சொல்ல வேண்டியதில்லை. பலருக்கு தெரிந்த காரணம் தான்.

இப்படத்தை விமர்சனம் செய்வதை விட பலருக்கு கொண்டு செல்வதே நோக்கம் என்பதால், படத்தில் பணியாற்றிய இயக்குனர், நடிகர் பற்றி அதிகம் குறிப்பிட விரும்பவில்லை.

இப்படம் இணையத்தில் இருப்பதை பரிந்துரை செய்த நண்பர் கார்க்கிக்கு என் நன்றிகள் பல..

இந்த படத்தை முழுமையாக பார்க்க...

Thursday, December 29, 2011

ஐரோம் ஷர்மிளா : மணிப்பூரின் இரும்பு பெண்மணி

தாழ்த்தப்பட்டவன் ஆயுதம் எடுத்தால் நக்ஸலைட். தமிழன் ஆயுதம் எடுத்தால் விடுதலை புலி. இன்று தேசிய அளவில் இப்படி பலரது எண்ணங்கள் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. அகிம்சை அறிமுகப்படுதிய இந்தியாவில் மக்கள் ஏன் வன்முறையில் இறங்குகிறார்கள் ? என்று காந்தி ஆதரவாளர்கள் வக்கனையாக பேச தெரியும். அன்னா ஹசாரே உண்ணா விரதத்திற்கு கூட்டமாக சென்று ஆதரவு அளிக்க தெரியும். ஊடகத்தில் அகிம்சையை பற்றி பேச தெரியும். ஆனால், இவர்களுக்கு முன்பு பதினொரு வருடங்களாக தன் இளமையை தொலைத்து ஒரு பெண்மணி தன் மாநிலத்திற்காக போராடி வருகிறாள். அவளுக்காக குரல் கொடுக்கவோ, ஆதரவு தெரிவிக்கவோ யாருமில்லை. வருடத்துக்கு ஒரு முறை, ஷர்மிளா பத்து வருடம் உண்ணாவிரதம் முடித்துவிட்டார், பதினொரு வருடம் முடித்துவிட்டார் என்று செய்தி வெளியீடுவது சடங்காகவே இருக்கிறது. அவர் போராட்டத்திற்கு பெரிய முன்னேற்றமில்லை.

மணிப்பூர். இந்தியாவின் கிழக்கு பக்கத்தில் இருக்கும் ஓரமான மாநிலம் மட்டுமல்ல. இந்திய அரசு ஓரம் கட்டிய மாநிலம். இயற்கை வளம். அழகான தேயிலை தோட்டம். வடகிழக்கில் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்று. இப்படி பல வர்ணனை வார்த்தைகள் மணிப்பூரை சொல்கிறார்கள். ஆனால், அந்த மாநிலம் பிரிவினைவாதிகளிடமும், இந்திய இராணுவத்திடமும் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறது. ஆயுதம் தாங்கிய பிரிவினைவாதிகள் மணிப்பூர் கிராமத்து மக்களை மிரட்டி தங்களுக்கு தேவையான உணவு, பணம் வாங்கிவருகிறார்கள். அவர்களை பிடிக்க முடியாத இந்திய இராணுவம் உதவி செய்த மக்களை வன்கொடுமை செய்திருக்கிறது. உள்ளூர் காவல்துறையினரும் ஒன்றும் செய்ய முடியாதவர்களாக நிற்கின்றனர்.



அப்பாவி மக்களை சுட்டு, அவர்களை பிரிவினைவாதிகள் என்று சொல்லி ஒவ்வொரு பிணத்தையும் இந்திய இராணுவம் கணக்கு சொல்லியது. பெண்களை கற்பழித்து, பிறகு தங்கள் தோட்டாக்கள் மூலம் பெண்ணுறுப்பை அழித்தனர். இந்திய சட்டமும் அதற்கு உதவியாகவே இருந்தது. தட்டிக் கேட்கவும் முடியாது. கேட்டாலும், தீவிரவாதியாக சித்தரிக்கப்படுவார்கள். கிட்டதட்ட, ஜனநாயக நாட்டில் இராணுவ ஆட்சி நடக்கும் மாநிலமாக மணிப்பூர் இன்று வரையும் இருந்து வருகிறது.

இந்திய இராணுவம் நடந்த பல தாக்குததில் ஒரு தாக்குதல் மலோம் கிராமத்தை அதிர வைத்தது. பஸ்க்காக காத்திருந்த பத்து கிராமத்தினரை பிரிவினைவாதிகள் என்று சொல்லி இந்திய இராணுவம் சுட்டு தள்ளியுள்ளது. இறந்த பத்து அப்பாவினர் குடும்பத்திற்கும் அரசிடம் இருந்து எந்த ஆதரவும் இல்லை. அவர்களுக்கு நியாயமும் கிடைக்கவில்லை. இவர்களுக்கு நியாயம் கிடைக்க, இது போல் சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க இந்திய அரசு மணிப்பூரில் இருக்கும் இராணுவத்தை திரும்ப அழைக்க வேண்டும். விராசனை இல்லாமல் கொல்லப்படுவதை திருத்த வேண்டும் என்று துடித்து எழுந்து தனி பெண்ணாக களத்தில் குதித்தார் ஐரோம் ஷர்மிளா.

மனித வெடி குண்டாக மாறவில்லை. துப்பாக்கி எடுத்து யாரையும் சுடவில்லை. தன் உடல் தான் ஆயுதம். காந்தி வழி தான் சிறந்த வழி. நவம்பர் 2, 2000 இந்திய அரசுக்கு எதிராக உண்ணா விரதத்தை மேற்க் கொண்டார். ’தற்கொலை முயற்சி’ என்று அவரை அரசு கைது செய்தது. காவலில் இருக்கும் போது இறந்து விடக் கூடாது என்பதற்காக வலுக்கட்டாயமாக உணவு குழாய் பொருத்தினர்.

தான் இறந்து போராட்டத்தில் வெற்றிப் பெற முடியாது அவரும் ஏற்றுக் கொண்டார். இன்றளவும், உணவு, தண்ணீர் இல்லாமல் உணவு குழாய் மூலம் வாழ்ந்து வருகிறார்.

ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்த பதினொரு ஆண்டுகள் பல முறை தற்கொலை முயற்சி (IPC 309) சட்டத்தில் கைது செய்து உள்ளது. ஆனால், இந்திய அரசு இராணுவத்தை திரும்ப பெற யோசித்ததுக் கூட இல்லை. காந்தி வழியில் நியாயம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டம் நடத்துகிறார்.

பல மாதர் சங்கங்கள் ஷர்மிளா போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளது. 2005 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு ஷர்மிளா பெயர் பரிசிலனை செய்யப்பட்டது. மணிப்பூரின் ”இரும்பு பெண்மணி” என்று பலராலும் போன்றபடுகிறார்.

ஊடகங்கள் அண்ணா ஹசாரேவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஐரோம் ஷர்மிளாவுக்கு கொடுக்கப்படவில்லை. ஹசாரே கேட்கும் லோக் பால் மசோதாவை விட ஷர்மிளாவின் கோரிக்கை மிகவும் மலிவானது. இந்திய அரசு இராணுவத்தை திரும்ப பெற வேண்டும். ஆனால், அதற்காக அவர் பதினொரு வருங்களாக காத்துக் கொண்டு இருக்கிறார்.

ஹசாரேவுக்கு குரல் கொடுக்கும் தோழர்கள் இவருக்கும் கொஞ்சம் கொடுங்கள்.

Wednesday, December 28, 2011

நாகரத்னா பதிப்பகத்தின் புது வெளியீடுகள் !

சென்னை புத்தக கண்காட்சி நெருங்க நெருங்க, எல்லா பதிப்பகங்களும் மண்டை உடைத்துக் கொள்வது “அடுத்து நாம் என்ன புத்தகம் போட வேண்டும்?” என்பது தான். பதிப்பாளரிடம் அதிகம் கேட்கப்படும் கேள்வி, “ என்ன புத்தகங்கள் வெளியீட போறீங்க?” என்பது தான்.

நான் அதிகம் மண்டை உடைத்துக் கொள்ளவில்லை. காரணம், பதிப்பகத்தை தொழிலாக நினைக்கவில்லை. பதிப்பகத்தில் நான் அதிகம் கவனம் செலுத்தவில்லை. இரண்டாவது கேள்விக்கு பதில் இரண்டு புத்தகம். இரண்டுமே கவிதை.

விழிப்பறிக் கொள்ளை - உமா சௌந்தர்யா
பக். 80, விலை. ரூ.40



ஒரு பதிப்பகம் கவிதை நூல் வெளியீட முடிவு செய்ய பிறகு, கண்டிப்பாக ஒரு காதல் கவிதை தொகுப்பு நூல் அவர்கள் வெளியீட்டு பட்டியலில் இருப்பது நல்லது. புத்தக கண்காட்சிக்கு காதல் கவிதைக்கு என்று ஒரு தனி இளைஞர்கள் கூட்டம் வருகிறது. யார் எழுத்தாளர்கள் என்று பார்ப்பதில்லை. காதல் கவிதை புத்தகங்களை வாங்கிவிடுகிறார்கள் அல்லது அங்கேயே முழுமையாக படித்து வைத்து விடுகிறார்கள்.

அப்படி காதல் கவிதை வெளியீடலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது நண்பரும் குறும்படம் இயக்குனருமான பொன்.சுதா மூலம் அறிமுகமானவர் உமா சௌந்தர்யா அவர்கள். “காதல் கவிதை” நூல் என்றது பெரும்பாலும் ஆண்கள் தான் எழுதியிருக்கிறார்கள். பெண்கள் பார்வையில் காதல் கவிதை நூல்கள் மிக குறைவாகவே வந்துள்ளது.

காதல் கவிதை பெண் பார்வையில் படிக்கும் போது ஸ்வாரஸ்யமாக உள்ளது. குறிப்பாக தொகுப்பில் என்னை கவிர்ந்த கவிதை.

எனக்காக நீ செய்த
எதுவும் எனை
வசீகரிக்கவில்லை
எல்லாம்
எனக்காகவே செய்தாய்
என்பதைத் தவிர.

**

நுணலும் தன்
வாயால் கெடும்
நானும்தான் உன்
காதலை சம்மதித்து


ஆண் பார்வையில் வெற்றி பெறும் காதல் கதை, பெண் பார்வையில் வெற்றி பெறுவதில்லை. (உதாரணம், அழகி, பூ படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்). காதல் ஆண் கோணத்தில் வாசித்த வாசகர்களுக்கு பெண் கோணத்தில் இருந்து வாசிக்க இந்த கவிதை புத்தகம் உதவும் என்று நம்புகிறேன்.

பிணம் தின்னும் தேசம் - கருவை சு.சண்முகசுந்தரம்
பக். 80, விலை. ரூ.40



ஈழப் போர் முடிந்து விட்டது என்று எதிரிகள் குரல் எழுப்பினாலும் இன்னும் முடியவில்லை என்று தமிழகத்தின் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஈழ தொடர்பான கட்டுரை நூல் அல்லது விமர்சன நூல் கொண்டு வர வேண்டும் என்று எண்ணிய போது, தம்பி கனியம் செல்வராஜ் மூலம் அறிமுகமானவர் கருவை சு.சண்முகசுந்தரம்.

கவிதை நூல் என்று சண்முகசுந்தரம் சொல்லும் போது நான் ஆர்வமில்லாமல் இருந்தேன். அவர் எழுதியதை வாங்கும் போது கூட எனக்கு ஆர்வமில்லை. படித்தவுடன் கண்டிப்பாக இந்த நூலை நான் தான் வெளியீட வேண்டும் என்று முடிவே செய்துவிட்டேன். பல பக்கங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளை விட, இவரின் ஐந்து வரி கவிதைகள் இதயத்தை பதம் பார்த்துவிடுகிறது.

குறிப்பாக கீழ் காணும் கவிதைகள்...

மனைவியைப் பிரிந்து
துறவு பூண்டான்
புத்தன்
பூட்டிய வீட்டிற்குள்
அத்துமீறும்
புத்தனின் பிள்ளைகள்

**

பசி வந்தால்
பத்தும் மறக்குமாம்
மறக்கவில்லை
நாங்கள்
தனிநாடு.

**

தமிழன் என்பதால் தாக்கப்பட்டோம்
அதைக்கண்டு
நாங்கள் வளர்த்த மாடுகள்
”அம்மா!” வென்று கத்தி
கண்ணீர் வடித்தன.

மாடுகளையும்
அவர்கள்
விட்டபாடில்லை.

**

இன்னும் பல கவிதைகள் தொட்டாக்களாக வரவிருக்கிறது.

“ஓயாத அலை” என்ற தலைப்பில் வந்த கவிதை தொகுப்பை, “பிணம் தின்னும் தேசம்” என்று தலைப்பை மாற்றினேன். நெல்லை ஜெய்ந்தா, அப்துல் காதர் அவர்கள் அணிந்துரையை பக்கத்தின் காரணமாக குறைக்க வேண்டியதாக இருந்தது. மற்றப்படி, சண்முகசுந்தரத்தின் படைப்பில் பதிப்பாளராக நான் கை வைக்க மனம் வரவில்லை. நாகரத்னா பதிப்பகத்தில் வெளிவந்த நூல்களில் எனக்கு மிகவும் மன நிறைவு கொடுத்த நூல் "பிணம் தின்னும் தேசம்” தான். கண்டிப்பாக இந்த நூலுக்கு ஒரு விருது உண்டு என்று என் உள்மனம் சொல்கிறது.

***

இரண்டு கவிதை நூலும், சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. நூல் வெளியீட்டு பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

நூல் வாங்க விரும்புபவர்கள் tmguhan@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Monday, December 26, 2011

காதல் பயணங்களில்.... – கு.சுரேஷ்

அன்புள்ள கு.சுரேஷ் அவர்களுக்கு,

தங்கள் அனுப்பிய கடிதமும், கவிதை புத்தகமும் கிடைத்தது. நூல் அனுப்பியதற்கு நன்றி.

கல்லூரி படிப்பு முடித்ததும் குறுகிய காலத்தில் புத்தகம் வெளியீட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். பல இடங்களில் உங்களின் கல்லூரி காதல் அழகாய் தெரிகிறது.

குறிப்பாக சில கவிதைகள்...

சந்திப்பு சலனமாகிறது (பக்.21)

முழுமையாய்க் காதலைச் சொன்னவள்
முதன் முதலாக என் காதலுக்கு
முடிவுரை எழுதிவிட்டாள்...

Pg.22
திருமணப் பத்திரிக்கையுடன்
என்னைப் பார்க்க வந்தவள்
என் காதல் பத்திரத்தைத் திருப்பி தந்துவிட்டாள்...
ஒரு இடைவேளையில் இந்தச்
சந்திப்பு சலமாகிறது

ஒரு செவ்விதழ் (pg. 30)

வேஸ்ட் பேப்பருக்குள்
ஒரு வேட்பு மனு
அவள் காதல் கையொப்பத்துடன்...

வார்த்தைகள் நடுவில் வண்ணங்கள்
சிதறிக்கிடந்தன என் இதயத்தின்
குப்பைத் தொட்டியில்...

நானும் – அவளும் (பக்.41)

அவள் தோன்றி – அவளுடன்
இன்னொரு காதலும் தோன்றியது
நான் இல்லாமல்...

மேல் சொன்ன கவிதைகள் என்னை கவர்ந்தாலும், ஒரு சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன். நூல் வடிவ அமைப்பு மிக சுமாராக உள்ளது (முன் அட்டையில் உங்கள் பெயர் இருப்பது கூட தெரியவில்லை). போதுவாக இதுப் போன்ற காதல் கவிதை நூல்களுக்கு கவிதைக்கு தகுந்தால் போல் படங்கள் இருப்பது நல்லது. வாசகனை வாங்க இது போன்ற படங்கள் மிகவும் உதவும்.

நெடுங்கவிதைகளை விட நான்கு வரி கவிதைகள் தான் அதிகம் வாசகர்கள் விரும்புவார்கள். நான் மேற்கோள் காட்டிய கவிதையே அதற்கு உதாரணம்.

எல்லா கவிதைகளும் ஆண் பார்வையில் இருந்த கவிதை, “கல்லறை பதிவு” கவிதை மட்டும் ஏன் திடீர் என்று பெண் வடிவில் மாறியது என்று தெரியவில்லை. நூல் தொகுக்கும் போது ஒத்த கருத்துள்ள கவிதைகளை தேர்வு செய்யுங்கள்.

எழுத்துக்களில் மிகவும் கடினமானது எழுத்துக்களை கோர்த்து கவிதை வடிவம் தருவது தான். ஆனால், பலர் முதல் நூலாக கவிதை நூல் எழுத தான் ஆசைப்படுகிறார்கள். அதையே தான் நீங்களும் முயற்சித்துள்ளீர்கள். உங்கள் முயற்சித்துக்கு என் வாழ்த்துக்கள்.
கவிதை என்ற குறுகிய வட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல், சிறுகதை, கட்டுரை என்று உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

அன்புடன்,
குகன்

**

வெளியீடு
கு.சுரேஷ்
சேனை தலைவர் மண்டபம்,
கட்த்தூர் (அஞ்சல்)
பாப்பிரெட்டிபட்டி (வட்டம்),
தருமபுரி மாவட்டம்.
பேசி : 04348 - 241169
விலை. ரூ.30/- பக் : 48

Friday, December 23, 2011

போராளிகளின் துப்பாக்கி வரிகள் - செந்தமிழன் சீமான்

தம்பி சண்முகசுந்தரத்தின் கவிதை வரிகளில் “போராளிகளின் துப்பாக்கிகளில் இருந்து வரும் தோட்டாக்களுக்கு நிகரான வலிமை கொண்டுள்ளன”. எட்டிப் பார்க்கும் தூரத்தில் இருக்கும் நம் சொந்தங்களின் அவலங்களைத் தீர்க்க முடியவில்லையே என்ற இயலாமையில் மண்ணுக்கேற்ற வீரமும் மானமும் தம்பியின் கவிதைகளில் இயல்பாய் இருக்கின்றன.

நான் சிறுவயதில் என் சொந்த மண்ணிலிருந்து என் ஈழ உறவுகளை எப்படிப் பார்த்தேனோ அதே பார்வையில் என் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இந்த கவிதை வரிகள் அமைந்துள்ளது.
முகவை மண்ணின் உப்புக்கலந்த காற்று என் உறவுகளின் உணர்வை பிரதிபலிக்கும். அந்த உப்புக்கான உணர்ச்சியோடு தம்பியின் கவித்துவம் அமைந்துள்ளது.

ஓயாத அலைகளென ஆரம்பித்து ‘சங்கார நிசமென சங்கே முழங்கு’ என்று என் மூத்தவன் பாரதிதாசன் சொல்லுவதைப் போல் ஈழ மக்களின் போராட்டங்களின் நியாயங்களையும் தீர்வையும் அழகாய் சொல்லியுள்ளார்.

”எத்தனை உயிர்களை கொடுத்தோம்
இன்னும்
எத்தனை உயிர்களை வேண்டுமென்றாலும்
கொடுப்போம்
ஒருபோதும் நிற்காது
ஓயாத அலைகள்”


என்று தமிழரின் வீரத்தைப் பறைசாற்றியுள்ளார்.

காந்தி தேசம் கொடுத்த ஆயுதத்தில் புத்த தேசம் குண்டு போட்டு கொன்றது காந்தியும், புத்தனும் குற்றவாளிகளாய், தமிழ் மக்களின் நீதிமன்றத்தில், காந்தியும் புத்தனும் எங்களுக்கு உதவவில்லை. அதனால் தான் பகத்சிங்கை துணைக்கு அழைத்தோம் என்று நம் பக்கத்தில் உள்ள நியாயத்தையும் காந்தி தேசத்திலிருந்து புத்த தேசத்திற்குச் சொல்லியுள்ளார்.

சிங்களவின் இனப்பசிக்கு எங்களின் உரிமைகளை இழிந்தோம், உடமைகளை இழந்தோம், உயிரையும் கொடுத்தோம். ஆனால், இன்னும் இந்த தேசங்களின் தனி நாடு கேட்பது தவறென்கிறது என்பதை தம்பியின் வரிகள் அழகாய் சொல்லுகிறது.

“தனிநாடு கேட்பது தவறா ?
அப்படியானால்
உலக நாடுகளே ஒன்றினையுங்கள்”


தம்பியின் இந்த வரிகளில் எங்களின் கோபமும் எங்களின் நியாயமும் தென்படுக்கின்றது.

தம்பி உன் உணர்வுகளோடு இறுதியாய் எங்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தைப் போல் அழகாய் இந்த கவிதைகளுக்கு முடிவுரை கொடுத்துள்ளாய்.

”இன்று
நாளை
நாளை மறுநாளென்று
என்றேனும்
ஒரு நாள்
நடைமுறைக்கு வரும்
தனி நாடென்னும்
நேற்றைய தீர்மானம்”


என்று தம்பி சண்முக சுந்தரத்திற்கு வாழ்த்துக்கள்.

என்றும் உங்கள் அன்பு உடன்பிறப்பாய்,
சீமான்

**

நாகரத்னா பதிப்பக சார்பில் கருவை சு.சண்முகசுந்தரம் எழுதிய "பிணம் தின்னும் தேசம்" - ஈழ கவிதை நூலுக்காக செந்தமிழன் சீமான் அவர்கள் எழுதிய அணிந்துரை.

LinkWithin

Related Posts with Thumbnails