Tuesday, February 23, 2010

உலக சினிமா : Osama



1996 ஆண்டுக்கு பிறகு முழுக்க முழுக்க ஆப்கானில் எடுக்கப்பட்ட முதல் படம்.

சிறு வயதில் பெற்றோர்கள் பெண் குழந்தைக்கு ஆண் வேஷம் போட்டு அழகு பார்ப்பார்கள். ஆனால், ஒரு தாய் தன் பாதுகாப்புக்காக மகளுக்கு ஆண் வெஷ்மிடுகிறாள். அதுவே அந்த சிறுமியின் வாழ்க்கையை திருப்பி போடுவது தான் Osama படத்தின் கதை.

ஒரு சிறுவன் சிறிய சாம்பிராணி டப்பாவுடன், " இது உங்கள் துரதிஷ்டத்தை போக்கும். பணம் கொடுங்கள்" என்று கேட்கிறான். அப்போது, 12 வயது சிறுமியும், அவள் அம்மாவும் பயந்து பயந்து செல்கிறார்கள். அப்போது அங்கு நீல நிற பர்தா அணிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் " வேலை வேண்டும்" என்று கோஷமிட்டுக் கொண்டு வருகிறார்கள். அப்போது ஜீப்பில் வரும் தாலிபன் இயக்கத்தை சேர்ந்தவர்கள், தூப்பாக்கியால் சுட்டும், தண்ணீரைப் பீர்ச்சியடித்தும் ஊர்வலத்தை கலைக்கிறார்கள். ஒரு சில பெண்கள், குழந்தைகள் இறக்கிறார்கள். பல பெண்கள் கைது செய்யப்படுகிறார்கள். இதை எல்லாம் வெளி நாட்டு நிருபர் தன் கெம்ராவில் படம் பிடிக்கிறார்.


தாலிபான் ஆட்சியில் பெண்கள் வேலைக்கு போகக்கூடாது. ஆண் துணையில்லாமல் வெளியே வரக் கூடாது. அப்படியே ஆண் துணையுடன் வந்தாலும் உடல் முழுக்க மறைத்து பார்தா அணிந்து வர வேண்டும். இந்த கட்டுபாடுகளுக்கிடையே ஆண் துணையில்லாமல் பாட்டி, அம்மா, மகள் மூவரும் வருமானத்திற்கு கஷ்டப்படுகிறார்கள். காபூல் யுத்தத்தில் கணவனை இழந்த பெண்ணிடம் பாட்டி தன் பேத்திக்கு ஆண் வேஷம் போடலாம் என்கிறாள். முதலில் பயந்தாலும், பிறகு சிறுமியின் முடியை வெட்டி தன் கணவன் உடையை போடுகிறாள். அதன் பின் தன் கணவனின் நண்பன் கடையில் தங்கள் நிலைமையை சொல்லி அவர் தேனீர் கடையில் வேலைக்கு சேர்க்கிறாள். ஒவ்வொரு நாளும் அந்த சிறுமி பயந்து பயந்து தன் வீட்டுக்கும், வேலைக்கும் சென்று வருகிறாள்.

ஒரு நாள் ஆயுதம் ஏந்திய தாலிபன்கள் சிறுவர்கள் அழைத்து இராணுவ படையில் சேர்க்கின்றனர். இதனால், சிறுவன் வேஷத்தில் இருக்கும் சிறுமியையும் இழுத்து செல்கிறார்கள். தந்தையின் நண்பராலும் அதை தடுக்க முடியவில்லை. அழைத்து சென்ற சிறுவர்களுக்கு உடைகள் கொடுத்து தாலிபான்களாக மாற்றுகிறார்கள். பயிற்சியின் போது சிறுவர்கள் அவளை " பொண்ணு..." என்று கேலி செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவள் பருவமடைந்து பெண் என்று காட்டிக் கொடுத்துவிடுகிறது.

அந்த சிறுமி கைது செய்யப்பட்டு பொதுமக்கள் குழுமியிருக்கும் நீதி மறத்துக்கு இழுத்து வரப்படுகிறாள். அப்போது பெண்கள் ஊர்வலத்தை படம் பிடித்த வெளி நாட்டு நிருபரை துப்பாக்கி சுட்டு கொல்கிறார்கள். அந்த சிறுமியை சாகும் வரை கல்லால் அடிக்க சொல்லும் போதும் எழுபது வயது முல்லா ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவள் மன்னிக்கப்படுகிறாள். அந்த கிழவருக்கே சிறுமையை திருமணம் செய்து வைப்பதாக அறிவிக்கப்படுகிறது.

சிறுமி மறுத்தும் அவளை மாட்டு வண்டியில் முல்லா அழைத்து சென்று தன் வீட்டில் பூட்டி வைக்கிறான் கிழவன். சிறுமி உள்ளே சென்றதும் கிழவரின் மூன்று மனைவிகள் அவளை சோகமாக பார்க்கிறார்கள். சிறுமியை முதலிரவுக்காக அலங்கரிக்கும் போது கிழவனின் மனைவிகள் தங்கள் சோகக் கதையை சொல்கிறார்கள். இதையெல்லாம் கேட்டு சிறுமி அழுகிறாள்.

அன்று இரவு புது மாப்பிள்ளை போல் வரும் முல்லா அந்த சிறுமியை தன் அறைக்கு அழைத்துக் கொண்டு செல்கிறான். முதலிரவு முடிந்து வெளியே வரும் முல்லா வெது வெதுப்பான நீரில் குளிக்க, உள்ளே சிறுமி அழுகிறாள். அவள் பன்னிரண்டு வயதுச் சிறுமியாக ஸ்கிப்பிங் ஆடும் காட்சிகள் தோன்றி மெல்லிய இசையோடு படம் முடிகிறது.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். தாலிபன் பெண்களுக்கு மரணத்தை விட கொடுக்கப்படும் கொடுமையான தண்டனை திருமணம் என்று இந்த படம் காட்டுகிறது.

தாலிபான் ஆப்கானை ஆக்கிரமித்த பிறகு அவர்களின் சுதந்திரம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த படம் பதிவு செய்துள்ளது. குறிப்பாக கல்யாண வீட்டில் பெண்ணாக உடை அணிந்து கொண்டாட்டம் நிரம்பி இருக்கும் போது தாலிபான்கள் வந்ததும் மரண வீடு போல் பெண்கள் கூடி ஒப்பாரி வைப்பது நெருடலான இடம்.

உலகின் எந்த இடத்தில் ஆக்கிரமிப்பு நடந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்ணும், அவளின் கற்பும் தான். இந்த படத்தில் பார்க்கும் பார்வையாளருக்கு வலியை கொடுப்பதால் யார் நடிப்பையும் நம்மால் ரசிக்க முடியவில்லை. பெண் உரிமை, விடுதலை என்று பேசும் நம் நாட்டில் பெண் ஒரு கை பொம்மையாக இந்த நூற்றாண்டிலும் கருதப்படும் உண்மை எற்றுக் கொள்ள மனத்துக்கு கஷ்டமாக இருக்கிறது.

இந்த படத்தை இயக்கியவர் சித்திக் பர்மக். ஆப்கானில் பிறந்த இவர் திரைப்படக்கலையில் முதுகலை பட்டம் பெற்றவர். ஆப்கானில் தாலிபான் அதிகாரத்து வந்ததும் இவர் வீட்டில் கேமராவையும், படங்களையும் அழித்தனர். அதனால், பாகிஸ்தானுக்கு தப்பித்துப் போய் அங்கு வானோலி நாடகத்தில் நடித்தார். பத்திரிகையில் படித்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தன் முதல் படமாக Osama வை எடுத்தார். இந்த படம் 2003 ல் வெளியாகி கோல்டன் குளோப் விருது மற்று கேன்ஸ் திரைப்பட விழாவின் பரிசையும் பெற்றுள்ளது.

3 comments:

க.இராமசாமி said...

அருமையான விமர்சனம் குகன்.

சமா.இளவரசன் said...

வணக்கம்... இது உண்மையின் விமர்சனம்
http://ulagacinema.blogspot.com/2007/09/osama.html

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

LinkWithin

Related Posts with Thumbnails